திருநெல்வேலி முக்கூடல் மனுஜோதி ஆசிரமத்தின் சார்பில் புது டில்லியிலுள்ள தனியார் அரங்கில் “ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அமிர்த கீதாயன்” ஹிந்தி பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. சாதி, மதம், இனம், மொழி எனும் பாகுபாடின்றி ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையின் அடிப்படையில் இறை நம்பிக்கை கொண்ட பலர் இந்த இசைத்தட்டு வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர். விழாவில் மனுஜோதி ஆசிரம நிர்வாகி பால் உப்பாஸ் என். லாறி பேசியதாவது: மனுஜோதி ஆசிரமானது இறைவனின் பாதையில் நடக்க வழிகாட்டுகின்றது. ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகளை நாங்கள் பாடல் வடிவில் இன்று வெளியிடுகிறோம்.
மனுஜோதி என்றால் “மனித குலத்திற்கு வழங்கப்படும் தெய்வீக ஒளி” என்று அர்த்தம். அதற்காகவே ஸ்ரீ லஹரி கிருஷ்ணா எங்கள் மனுஜோதி ஆசிரமத்தை 1963 -ல் நிறுவினார். சாதி, மதம், இனம் மற்றும் மதம் எனும் பாகுபாடு இன்றி இறைவனைப் பின்பற்றி நடப்பது எவ்வாறு என்பதை அனைவருக்கும் போதித்து, தெய்வீக அருள் பாலித்தார். இப்புவியில் பிறந்த ஒவ்வொருவரும் பிறருடைய கஷ்டங்களை உணர்ந்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அதுதான் மனித நேயமாகும். அத்துடன் இறைவனுக்குப் பயந்து நடக்க வேண்டும். அதுதான் நமக்கு ஞானத்தைக் கொடுக்கிறது. “எவன் என்னை அறிந்து கொள்ளுகிறானோ அவன் என்னிடமே வந்து அடைகிறான்” என்று கிருஷ்ணர் சொல்லுகிறார். ஒரு காலத்தில் எல்லாரும் தினமும் காலையில் எழுந்தவுடன் வேதங்களை வாசிப்பதும், இறைவனை வழிபடுவதும் வழக்கம். ஆனால் இன்றைக்கு மக்கள் அத்தகைய ஆன்மீக சிந்தனையை மறந்து கொண்டிருக்கிறார்கள்.
நம்முடைய ஆன்மாவுக்கு என்ன தேவை என்பதை அறிய விரும்புகிறதில்லை. எல்லா வேதங்களையும் படிக்கும் போதுதான் இந்த கலியுகத்திலே நமக்குள் வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். நாங்கள் மனுஜோதி ஆசிரமத்திலிருந்து வேதங்களிலுள்ள காரியங்களை எடுத்து, மக்களிடம் “கடவுள் ஒருவரே” என்ற சத்தியத்தை பரப்பி வருகின்றோம். இது ஒரு மதம் அல்ல, இது ஒரு மார்க்கம். மக்கள் வேதங்களைப் படித்து, அதன்படி நடக்க வேண்டும். ஸ்ரீமந் நாராயணர் வேதத்தில் என்ன சொல்லுகிறார் என்றால், நான் கலியை முடிக்க நேரடிடையாக வருவேன் என்று சொல்லுகிறார். அவர் கலியை அழிக்க கல்கி மகா அவதாரம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவாக வந்துள்ளார். கலியுகம் அழிந்து தர்ம யுகம் வரப் போகிறது. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பதை வலியுறுத்திக் கூறிய அநேக மகான்கள் இந்தியாவில் தோன்றி, இறைவன் ஒருவனே எனும் சத்தியத்தை மக்களிடம் அறிவித்தார்கள். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல மக்கள் அதை மறந்து தங்களுக்கென்று மதத்தை உருவாக்கிக் கொண்டார்கள்.
பகவத் கீதையில் கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்று சொல்லப்பட்டது போல, எங்கள் மனுஜோதி ஆசிரமத்தில் நாங்கள் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து, மக்களுக்கு ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றோம். இறைவன் நமக்கு கனிவாக தந்தவைகளுக்கு கைமாறாக நாங்கள் மக்களுக்கு ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். அனைத்து வேதங்களிலும் சொல்லப்பட்டுள்ள ஒரே இறைவனைப் பற்றிய சாராம்ச கருத்துக்களை ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா எங்களுக்கு எடுத்துரைத்தார். அதைப் புத்தகங்களாக அச்சிட்டு, மக்களுக்கு இலவசமாக கொடுத்து வருகின்றோம். ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா மக்களுக்கு அருளிய போதனைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் எடுத்து கூறி வருகின்றோம். மனிதர்களுக்கு சொர்க்கம் மற்றும் நரகம் வழங்குவது தீர்ப்பு நாளின் நாயகனான இறைவனுக்குரியதாக இருப்பதால் நாம் அஹிம்சையைப் பின்பற்ற வேண்டும். எல்லா வேதங்களும் இதைத்தான் சொல்லுகிறது. இறைவன் நமக்களித்த எண்ணற்ற நன்மைகளுக்காக அவருக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். எனவே நம்முடைய எல்லா வேற்றுமைகளையும் மறந்து மகிழ்ச்சியுடன் அந்த “பரிபூரணரின்” கீழ் ஒன்றுபடுவோமாக! ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவைப் பற்றிய புத்தகங்கள் எல்லா மொழிகளிலும் கிடைக்கும்.
தேவைப்படுவோர் எங்கள் மனுஜோதி ஆசிரம முகவரிக்கு எழுதி பெற்றுக்கொள்ளலாம். தர்ம யுகம் அல்லது ராம ராஜ்யம் அல்லது இறைவனுடைய அரசாட்சி இந்த பூமியில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எல்லா வேதங்களையும் படிப்போம்! நமக்குள் சாதி, மத, தேச, மொழி வேறுபாட்டினை ஒழிப்போம் என்றார். இந்நிகழ்வில் பாடகர் பத்மஸ்ரீ அனுப் ஜலோட்டா மற்றும் சாதனா சர்கம் அவர்களின் வாழ்த்து செய்தி அரங்கில் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. டெல்லி, மும்பை, பிலாய், அசாம், ஒடிசா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் அமெரிக்கா, மலேசியா போன்ற இடங்களில் இருந்து வந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் பலர் ஆசிரமத்தின் நிவாகிகளான பால் உப்பாஸ் லாறி, லியோ சி.என்.லாறி ஆகியோரின் மேற்பார்வையில்ல் செய்திருந்தார்கள்.