இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; நேற்றைய தினம் திருச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ரூ 5,600 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தேர்தல் நேரம் என்றால் இது போன்ற வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு, எதையும் நிறைவேற்றாமல் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவது பிரதமரின் வாடிக்கையாகும். அதற்கு உதாரணமாக இருப்பது மதுரை எய்ம்ஸ் ஆகும்.
தமிழ்நாடு அரசு மதுரை, கோவை நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடங்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தது. அத்திட்டங்களுக்கு அனுமதி வழங்காமல் நிராகரித்து வஞ்சித்துவிட்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சி பற்றி பிரதமர் முழங்கியிருப்பது வேடிக்கையானது. காலையில் பறிக்கப்படும் மதுரை மல்லி, மாலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கும், அமெரிக்காவின் நியூயார்க் நகரங்களுக்கும் சென்று சேரும் அளவிற்கு வர்த்தகம் மேம்படும் என பிரதமர் மோடி பேசியுள்ளார். இந்திய விவசாய உற்பத்தியையும், தொழில் துறை உற்பத்தியையும் முடக்கும் வகையில், இந்திய விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில், இந்தியாவின் ஏற்றுமதியை சீர்குலைக்கும் வகையில் வரிகள் இல்லா “சுதந்திர வர்த்தக உடன்பாட்டை” டொனால்டு டிரம்பின் மிரட்டலுக்கு அஞ்சி அமெரிக்காவுடனும், ஐரோப்பிய யூனியனுடனும் மேற்கொண்ட மோடி, மதுரை மல்லி ஏற்றுமதியை பற்றி பேசுவது வேதனைக்குரியது. தமிழ்நாட்டிற்கு பிஎம் ஸ்ரீ திட்டம் உட்பட பல திட்டங்களுக்கான நிதியை வழங்காத மோடி, தமிழ்நாடு புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கு ஆளானபோது தமிழ்நாடு அரசு கோரிய நிதியை வழங்காத மோடி, தமிழ்நாட்டின் வளர்ச்சி பற்றி முழங்குவது, சாத்தான் வேதம் ஓதிய கதையாக உள்ளது. ஊழலின் ஊற்றுக் கண்ணாக பாஜக விளங்குகிறது. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத் துறை போன்றவை மூலம், பெரும் தொழில் நிறுவனங்களை மிரட்டி, தேர்தல் பத்திரம் மூலம் ஆயிரமாயிரம் கோடிகளாய் வசூல் வேட்டையை நடத்துகிறது மோடி அரசு. ஊழல் அரசியல் வாதிகளை மிரட்டி, அவர்கள் பாஜகவில் சேர்ந்து விட்டால் அல்லது பாஜக கூட்டணியில் சேர்ந்து விட்டால் அவர்களை புனிதர்களாக்கி விடுகிறது மோடி அரசு. அஇஅதிமுகவையும் வேறு சில ஊழல் கட்சிகளையும் மிரட்டி, உருட்டி தமிழ்நாட்டில் கூட்டணியில் வளைத்துப் போட்டுள்ளார் மோடி. இப்படிப்பட்ட பிரதமர் மோடி, ஊழலைப் பற்றி பேசுவதை மக்கள் காது கொடுத்து கேட்பதே இல்லை. பிரதமர் மோடியின் அமெரிக்க – இஸ்ரேல் ஆதரவு கொள்கையால் நாடு முழுவதும் சமையல் எரியாவு தட்டுப்பாடும், விலை உயர்வும் ஏற்பட்டு மக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். தேநீர் கடைகளும், உணவு விடுதிகளும் மூடப்படுகின்றன. மத்திய மோடி அரசிற்கு எதிரான பேரலை நாடு முழுவதும் வீசுகிறது. பாஜக – அஇஅதிமுகவின் சந்தர்பவாத, என்டிஏ கூட்டணியை தமிழக மக்கள் முற்றிலுமாக நிராகரிப்பார்கள் என்பதை சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளிப்படுத்தும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
























