சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: விவசாயிகள் குறித்து பேசுவதற்கு பிரதமருக்கு தார்மீக உரிமை இருக்கிறதா? தேர்தல் வந்துவிட்டால் பிரதமருக்கு உடனடியாக பாசம் வந்துவிடும். விவசாயிகளுக்காக பிரதமர் மோடி செய்தது என்ன? இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு பா.ஜ.க. ஆட்சியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி உள்ளனர். போராட்டம் நடத்திய விவசாயிகளின் மீது வாகனத்தை விட்டு ஏற்றி 4 பேரை கொன்றதை யாரும் மறந்துவிடவில்லை. திருச்சி கூட்டத்தில் விவசாயிகளின் நண்பன் போல் பிரதமர் கபட நாடகம் போட்டுள்ளார். மதுரை டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்தது. 11 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் சுமார் 1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்ற பிரதமர் மோடியின் வாக்குறுதி என்னவானது? இவ்வாறு அவர் கூறினார்.
























