நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்தன. இந்தநிலையில், சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறித்து மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: மேற்காசிய போர் இந்தியர்களையும் கடுமையாக பாதித்துள்ளது. ஈரான் போரால் எல்.பி.ஜி. தட்டுப்பாடு ஏற்பட்டு உணவகங்கள் உள்ளிட்டை பாதிக்கப்பட்டுள்ளது. சாலையோர உணவகங்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலைமை மோசமடையும் சூழல் உள்ளது.சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஏராளமான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இந்திய விவகாரத்தில் வெளிநாட்டு அதிபர் ஏன் தலையிட வேண்டும்? ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்க அமெரிக்காவின் அனுமதி எதற்கு தேவை? நாம் எந்த நாட்டில் கச்சா எண்ணெய் வாங்க வேண்டும் என்பதை வேறொரு நாடு முடிவு செய்ய வேண்டும்? நாம் எடுக்க வேண்டிய முடிவுகளை அமெரிக்கா எடுக்க மத்திய அரசு அனுமதிக்கிறது என குற்றம் அவர் சாட்டினார்.
இவரது கருத்திற்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பதில் அளித்தார். அதில், வீட்டு உபயோக எரிவாயு விநியோகத்திற்கு முன்னுரிமை தரப்படுகிறது.பீதியால் நுகர்வோர் அதிக சிலிண்டர் வாங்கியதால் விநியோகஸ்தர்களால் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லை. நாட்டுக்கு தேவையான அளவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. எல்.பி.ஜி உற்பத்தி கடந்த சில நாட்களில் 28 சதவீதம் அதிகரித்துள்ளது. விநியோக கால அளவில் மாற்றம் எதுவுமில்லை. இந்தியாவின் எரிபொருள் இறக்குமதியில் 50 சதவீதம் ஹார்மோஸ் நீரினை வழியே நடக்கிறது என்றார்.
























