கொல்கத்தா பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் மருத்துவர் ஒருவர் கடந்த ஆகஸ்டு 9-ந் தேதி கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டார். மாநிலத்தை உலுக்கிய இந்த சம்பவம் தேசிய அளவிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. அதேநேரம் மேற்கு வங்காளத்தில் வாரக்கணக்கில் ஆர்ப்பாட்டம், பேரணி, உண்ணாவிரதம் என டாக்டர்கள் போராடினர்.
அவர்களுக்கு ஆதரவாக சினிமாத்துறையினர், விளையாட்டு பிரபலங்கள், சமூக அமைப்புகளும் களத்தில் இறங்கின. மறுபுறம் பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டக்களத்தில் குதித்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தின. அதேநேரம் இந்த கொடூரத்தை ஏற்படுத்திய சஞ்சய் ராய் என்ற தன்னார்வலர் மறுநாளே கைது செய்யப்பட்டார். அந்த மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கடி வந்து செல்லும் அந்த நபர், சம்பவத்தன்று அந்த டாக்டர் தனியாக இருப்பதை பார்த்து இந்த கொடூரத்தை அரங்கேற்றி உள்ளதாக காவல்துறை தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்கின் விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது.
அதைப்போல இந்த விவகாரத்தை தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்த உச்சநீதிமன்றம், பல்வேறு உத்தரவுகளை மாநில அரசுக்கு பிறப்பித்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு சியால்டா மாவட்டத்தின் கூடுதல் மாவட்ட மற்றும் முதன்மை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. தண்டனை தொடர்பான வாதம் நடைபெற்றது. இரு தரப்பு வாதத்தையும் பதிவு செய்த நீதிபதி, அதன்பின் தண்டனையை அறிவித்தார். பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சஞ்சய் ராய்க்கு சாகும்வரை சிறையில் அடைக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதிப்பதாகவும், ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ.17 லட்சம் வழங்கவேண்டும் என மேற்கு வங்காள அரசுக்கு உத்தரவிட்டார்.