இன்று அகவை 95 காணும் எமது பேரன்பிற்கும் பெரு மதிப்பிற்குமுரிய ராஜராஜஸ்ரீ கீரிமலை நகுலேஸ்வரக்குருக்கள், திருமூலர் வாக்குக்கிணங்க “அன்பே சிவமாய்”அமர்ந்திருப்பவர். ஈழ நாட்டின்முதுபெரும் சிவாச்சாரியாராகப் பிரகாசிக்கும் நகுலேஸ்வரக் குருக்கள்1989ம் ஆண்டு முதன்முதல் இங்கிலாந்து வந்தபோது, பலஇன்னல்களுக்கிடையிலும், பல்லாண்டுகளாகப் பேணிக்காத்து வந்த பழம்பெரும் நகுலேஸ்வர ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்வதற்கு நிதியுதவி சேகரிக்கும் முகமாக ஓர் அமைப்பை ஸ்தாபித்தார்.அந்த கீரிமலை சிவன் கோயில் அறக்கட்டளை இன்றும் இயங்கிக்கொண்டிருக்கின்றது.வைத்தியகலாநிதி சீனியர் நவரத்தினம் அவர்கள் தலைவராகவும், வைத்திய கலாநிதி கந்தையா சிவகுமார் செயலாளராகவும், திரு. இரத்தினம் இராமநாதன் பொருளாளராகவும், திரு. சிவ தம்பு ஒருங்கிணைப்பாளராகவும் கடமையாற்றுகின்றார்கள். அதேசமயம் திரு. ஜெகதீஸ்வரன். திரு. குகனேசன்,திரு.ஜெயக்குமார், திரு.கமலக்கண்ணன் போன்ற பல அன்பர்கள் உதவி புரிகின்றார்கள்.
ஐயா அவர்கள் அகவை 95 காணும் இவ்வேளையில் இந்த வாழ்த்துச் செய்தியைப் பணிவன்போடு சமர்ப்பிப்பதில் நாம் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.
ஐயா அவர்கள் பலமுறைதன் தகப்பனாருக்கு அவர் மரணப்படுக்கையில் இருந்தபோது, ஆலயத்தை எப்படியாவது அதன் பழம்பெருமை துலங்கும் வகையில் மீளக் கட்டியெழுப்புவேன் என்ற நினைவை கண்ணீர் மல்கச் சொல்லியுள்ளார். அந்தப் பயணத்தில் எத்தனையோ தடைகள் ஏற்பட்டும் தன் திட சங்கல்பத்தைத் தளரவிடாது முயன்ற அனுபவங்களை எமக்கு எடுத்துக்கூறுவார். சில சந்தர்ப்பங்களில் “நெடிதுநாள் கூடக்கோயில் நிரம்பிட நினைவாற் செய்த” பூசலாரை நினைத்து நினைத்துஏங்கி வழிபட்ட கதையையும் சொல்வார். இவற்றையெல்லாம் கேட்ட நாம், எமது மூதாதையரை நினைத்தும் வருங்காலச் சந்ததியினர்சிறப்புடன் வாழவேண்டுமென்று பிரார்த்தித்தும் ஐயாவிற்கு இயன்றளவு உதவி செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் பலமுயற்சிகள் எடுத்தோம். வீடுவீடாகச்சென்று நிதி திரட்டினோம், பலவிதமான இசை நாட்டிய நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்தோம். அத்தோடு இலண்டனிலுள்ள பல சைவ ஆலயங்களை அணுகி நிதியுதவி பெற்றோம். ஐயா அவர்கள் பல முறை தனது துணைவியாரோடு இங்கிலாந்து வந்து செல்வதற்கான வசதிகளைச் செய்தோம். இங்கு நடைபெற்ற பல நிகழ்ச்சிகளில் ஐயா நேரில்கலந்து ஆசிகள் வழங்கிப் பங்குபற்றக்கூடியதாகவிருந்தது.
ஐயா அவர்கள் ஒரு கட்டிடக்கலை நிபுணர் அல்ல, என்றாலும் அவருடைய நுண்ணறிவை உபயோகித்து இவ்வளவு பெரிய ஆலயத்தை முன் நின்று நிபுணர்கள் வியக்கும் வண்ணம் எமக்கெல்லோருக்கும் எழுப்பித் தந்ததில் அவருக்கு நகுலேஸ்வரப் பெருமானின் பரிபூரண அனுக்கிரகம் இருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது. ஆகமநெறி தவறாது இப்படிப்பட்ட ஒரு சிவாலயத்தை எமக்கு அமைத்துக் கொடுத்தது நம் மூதாதையர் செய்த பூர்வ புண்ணியமே. எத்தனையோ முறை அவர் ஓர் இளைஞனைப் போல கட்டடச் சாளரங்கள் மீது ஏறி நின்று மேற்பார்வை செய்வதை நம்மில் பலர் நேரில் பார்த்திருக்கிறோம். இராணுவத்தினர் என்றாலும் போராளிகள் என்றாலும் சாதுர்யமாக அவர்களுடன் பேசி எடுத்த கருமத்தைச் சிறப்புற முடிப்பதில் அவருக்கு நிகர் அவரேதான்.
கட்டிட வேலைகள் முடிந்ததும் பாரத தேசத்திலிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் அகில இலங்கையிலிருந்தும் அதிசிறந்த சிவாச்சாரியர்களை வரவழைத்து, அத்தோடு பல ஆதீன முதல்வர்களையும், பஞ்ச மேள கெண்டிவாத்திய விற்பன்னர்களையும், ஓதுவார் மூர்த்திகளையும், இசைவல்லுஞர்களையும் வரவேற்று தனது மூத்த குமாரன் பிரதிஷ்டா குருவாகப் பணியாற்ற ஒழுங்குகள் செய்தார். தனது பாரியாருடன் அமர்ந்து அந்தக் கண்கொள்ளாக் காட்சியை அவர் பார்த்தது ஆயிரம் ஆயிரம் பக்தர்களுக்கு வரப்பிரசாதமாய் அமைந்தது.2012ல் நடைபெற்ற இவ்வைபவம் அவர் நமக்கெல்லோருக்கும் கொடுத்த ஒரு கொடையாகும்.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பத்திற்கிணங்க, 113 அடி உயரமுள்ள ஓர் ராஜகோபுரத்தை எழுப்பிப் பொன்னின் குடத்திற்குப் பொட்டிற்றாற்போல 2018ம் ஆண்டு உலகமே வியக்கும் வண்ணம் கோபுர கும்பாபிஷேகத்தை நடாத்தினார்.
அவருக்கு எத்தனையோ ஆண்டுகள் பக்க பலமாகவிருந்த அம்மா சிவபதமடைந்த பின்னர் மனம் தளர்ந்திருந்தாலும் தம்மால் முடிந்தவரை ஆலயப் பொறுப்பைத் தொடர்ந்து நடாத்தி, அண்மையில் மூத்த புதல்வர் சிவஸ்ரீ குமாரஸ்வாமிக் குருக்களுக்கு அன்றாடப் பொறுப்புக்களைக் கொடுத்தார். என்றாலும் விடாது ஆலயத்தை மண்டபம் அமைத்து இன்னும் பெருப்பிக்கும் முயற்சியில் இப்பொழுது கவனம் செலுத்தி வருகின்றார்.
இப்படிப்பட்ட ஒரு மகான் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து எமக்கெல்லாம் தனது அளவற்ற அன்பையும் ஆசிகளையும் வழங்கவேண்டுமென்று நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரப் பெருமானை வணங்குகிறோம்.
தலைவர் வைத்திய கலாநிதி சீனியர் நவரத்தினம் செயலாளர்வைத்திய கலாநிதி கந்தையா சிவகுமார்
பொருளாளர் திரு. வைரமுத்து இராமநாதன் ஒருங்கிணைப்பாளர் திரு. சிவ தம்பு