எவ்வளவுதான் கூட்டி கூட்டிப் பார்த்தாலும் ஏறக்குறைய 1400 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டதாகக் கருதப்படும் ஆங்கில மொழி, ஒரு சிறு குழு மக்களின் பேச்சு மொழியாகவும் வட்டார அளவில் வரையறுக்கப்பட்ட உள்ளூர் மொழியாகவுமே வெகு நீண்ட காலத்திற்கு இருந்திருக்கிறது.
குறைந்தது நான்காயிர ஆண்டுகளுக்கு முன்பே இலக்கணக் கட்டமைப்பு(தொல்காப்பியம்) இயற்றப்பட்ட தமிழ், கிரேக்கம், இலத்தீன், அரபு, சீனம், ஹீப்ரு, பாரசீகம், சமஸ்கிருத மொழிகள் செம்மொழித் தகுதியைக் கொண்டிருந்த காலத்தில் இருந்த இடமே தெரியாமல் இருந்த ஆங்கில மொழி, இன்றைய காலக்கட்டத்தில் உலகையே ஆளும் மொழியாக இருக்கிறதென்றால் பதினாறாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் தோன்றிய வில்லியம் ஷேக்ஸ்பியர் என்னும் பாவலப் பெருமகன்தான் அதற்கான அடிப்படைக் காரணம்.
150க்கும் மேற்பட்ட மொழிகளில் இருந்து கொஞ்சமும் மனங்கூசாமல் சொற்களை இரவல் பெற்றுக் கொண்டு, குறிப்பாக இலத்தின் மொழியின் பல்லாயிரக் கணக்கான சொற்களைக் கவர்ந்து கொண்டு, தமிழில் இருந்து பன்னூற்று அளவில் சொற்களை கொடையாக பெற்றுக் கொண்டு, கொழு கொழு குழந்தையைப் போல இன்று திகழும் நவீன ஆங்கில மொழிக்கு ஏறக்குறைய 400 ஆண்டுகள்தான் வரலாறு.
1564-இல் பிறந்த ஷேக்ஸ்பியர் இயற்றிய நாடகங்கள், கவிதைகள் உள்ளிட்ட ஏராளமான படைப்புகள் ஆங்கில மொழிக்கு இலக்கிய மேன்மையை உருவாக்கின. குறிப்பாக, காதல் ரசம் சொட்டச் சொட்ட ஷேக்ஸ்பியர் இயற்றிய எண்ணற்ற நாடகங்கள் அரசக் குடும்பத்தினர், பிரபுக்கள் சபையினர் உள்ளிட்ட மேட்டுக் குடும்பங்கள் தவிர பாமரக் குடும்பங்களையும் கவர்ந்தன.
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த உலகில் எந்தப் பல்கலைக்கழகத்தில் நுழைந்தாலும் ஷேக்ஸ்பியரின் பெயரை அறியாமல் ஒரு மாணவன் வெளியே வரமுடியாது. ஆனால், இன்றைய மாணவர்களின் நோக்கும் போக்கும் வேறாக இருக்கிறது. அவர்களுக்கு சமயம்தான் எல்லாவற்றிலும் முதன்மையாக உள்ளது.
தொடக்கத்தில் இலத்தீன், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகள் அறிவியல் துறைக்கு உகந்த மொழிகளாக இருந்தன; பின்னர் ஆங்கிலமும் உருசிய மொழியும் அந்த இடத்தை ஆட்கொண்டன; இன்றளவில் ஆங்கிலம் மட்டுமே தனிப் பெரும் அறிவியல் மொழியாக இருக்கின்றது. அதற்கேற்றாற்போல அறிவியல் மேதைகளும் பெரும்பாலும் ஆங்கில மொழியினரான அமைந்துவிட்டனர். மொத்தத்தில் உலக உலக அரசியலும் வணிகமும் இன்று பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே நடைபெறுகிறது.
தேசியக் கவியாக பல நூற்றாண்டுகளாக ஆங்கிலேயர்களால் கொண்டணைக்கப்படும் ஷேக்ஸ்பியர், ஆங்கில மொழிக்கு உயிர்க் கொடுத்தவன் என்றும் இளமைப் பொங்கும் வாலைக் குமரியைப் போன்ற உடல்வாகையும் அளித்தவன் என்றும் ஆங்கில மக்களால் வணங்கப்படுகிறார்.
பிறந்த நாள் என்று என்பது அறியப்படாத நிலையில், ஷேக்ஸ்பியர் இறந்த நாள் ஆங்கில மொழி நாளாக ஆங்கிலேய மக்களால் கொண்டாடப்படுகிறது.
*ஏப்ரல் 23, ஷேக்ஸ்பியரின் நினைவு நாள்*.
உயர் செல்வாக்கும் செல்வ வலிமையும் பெற்ற மொழியாக இன்று ஆங்கிலம் திகழ்கின்றதென்றால்.., உலக மக்களில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதியினர் ஆங்கில மொழியை தாய்மொழியாகவும் பேச்சு மொழியாகவும் கொண்டிருக்கிறார்கள் என்றால்.., அதற்கான அடிப்படையை உருவாக்கியவர் ஷேக்ஸ்பியர். ஆங்கில இலக்கணம் தோன்றுவதற்கான இலக்கியப் பாட்டையைத் தோற்றுவித்தவரும் இவர்தான்.
இந்த உலகில் கற்றவர்களுடன் மற்றவர்களும் இணைந்து போற்றும் ஓர் இலக்கிய மேதை ஷேக்ஸ்பியர் என்றால் அதில் மிகையில்லை.
நக்கீரன் – Nakkeeran 013-244 36 24