ஆன்மிக சிந்தனையாளராக வாழ்வைத் தொடங்கிய பாவேந்தர், தமிழ்ப் பற்றும் மொழிப்பற்றும் மிக்க சுயமரியாதைச் சுடரொளியாகத் திகழ்ந்தார். அப்படிப்பட்ட கவிக்கோமனுக்கு ஓர் ஆசை இருந்தது; அது அவரின் வாழ்நாளில் கடைசிவரை ஈடேறவேயில்லை!.
பெரும்பாவலர், நூலாசிரியர், நூல் பதிப்பாளர், சுதந்திரப் போராளி, பள்ளி ஆசிரியர், விரிவுரையாளர், திரைப்பட பாடலாசிரியர், இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், சட்டமன்ற உறுப்பினர் என்றெல்லாம் உயர்ந்த நிலையில் வாழ்ந்த பாவேந்தர் பாரதிதாசனார் ஓர் எளிய ஆசையை மனிதில் கொண்டிருந்தார்.
பாவேந்தரின் இலக்கியப் படைப்பை எண்ணிப் பார்த்தால் மலைப்பு தட்டும்; அவரின் கவி வண்ணத்திற்கும் கற்பனை வளத்திற்கும் ஈடும் இணையும் இல்லை. வானத்தில் தோன்றும் நிலவை, நாமெல்லாம் நிலவாக மட்டும் பார்ப்போம். ஆனால் அவரோ, அந்த வானிலவைக் கண்டு.. .. ,
வானில் ஒய்யாரமாக உலா வரும் நிலாப் பெண்ணே, நீ உன்னுடைய பொன்னுடலை நீல வண்ண ஆடையால் மறை(உடு)த்துக் கொண்டு ஒளிமிகும் முகத்தை மட்டும் நிலாவென்ற பெயரில் காட்டுகிறாயே, உன்னுடைய உடல் முழுவதையும் காட்டிவிட்டால் அதன் வனப்பிலும் அழகிலும் இந்த உலக மக்கள் காதல் மயக்கம் கொண்டு வீழ்ந்து விடுவார்கள் என்பதால்தானோ முகத்தை மட்டும் காட்டுகின்றாயோ?
விண்வெளிச் சோலையில் மலர்ந்த தனிமலரோ நீ? அல்லது சுத்தமான வெள்ளியில் செய்த பாற்குடமோ? இல்லை அமுதம் ஊற்றெடுக்கும் சுரபியோ? அல்லது காலையில் தகதகக்கத் தோன்றிய சூரியன்தான் கடலில் முழ்கி வெம்மை தணிந்து குளிர்ச்சி அடைந்தபின் தோன்றும் ஒளிவட்டமோ என்றெல்லாம் நிலவைப் பார்த்து மாய்ந்து மாய்ந்து கற்பனை புரிந்த அந்தப் பெருங்கவிவாணர் நிலவைப் பார்த்து புனைந்த பாடல் இதுதான்.. ..
நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலா என்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை!
கோல முழுதும் காட்டிவிட்டால் காதல்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச்
சோலையிலே பூத்த தனிப்பூவோ நீ தான்
சொக்க வெள்ளிப் பால்குடமோ, அமுத ஊற்றோ
காலை வந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்
கனல் மாறிக் குளிர் அடைந்த ஒளிப்பிழம்போ?
இப்படி யெல்லாம் தமிழ் உலகில் இலக்கியப் பெருஞ்சிந்தைதையுடன் உலா வந்த பாவேந்தர், மலேசியாவில் இருந்து ஒரு கைலியை வாங்கி உடுத்த வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தாராம். அந்த ஆவல், அவரின் வாழ்நாளில் நிறைவேறவேயில்ல.
அவருக்கு இந்த ஏப்ரல் 21-ஆம் நாள், 56-ஆம் நினைவு நாள்!.
பாரதியாரைப் போலவே அவரின் இறுதி மரியாதை நிகழ்ச்சியிலும் சொற்பமான அன்பர்களே கலந்து கொண்டனர். 1964-ம் வருடம், ஏப்ரல் திங்கள் இதே நாளில் சென்னைப் பொது மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அவர் இறந்த பின், புதுவை, பெருமாள் கோவில் தெரு இல்லத்துக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. எப்போதும் அவரை அகலாமல் இருந்த சிறு கூட்டத்தினர்தான் அவருடைய இறுதி ஊர்வலத்தில் கண்ணீருடன் முன்னால் நடந்து சென்றனர். பாப்பாம்மாள் கோவில் மயானத்தை அடைந்தபோது, அதிலும் பலர் பாதியிலேயே திரும்பிவிட்டனர். இறுதி வரை இருந்த அன்பர் கூட்டம் இடுகாட்டிலேயே நினைவுக் கூட்டம் நடத்திவிட்டுக் கலைந்தது.
ஆனாலும், அவரின் இலக்கியப் படைப்பும் தமிழியச் சிந்தையும் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் உள்ளன.
நக்கீரன்
கோலாலம்பூர்.