‘கொரோனா’ என்னும் கொடிய நோய்கிருமி தற்போது உலகெங்கும் தாண்டவமாடுகின்றது. கற்றவர்கள், விவசாயிகள், மதவாதிகள் ,நாஸ்த்திகர்கள், ஆட்சித் தலைவர்கள் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், செல்வந்தர்கள், என அனைத்து வகையானவர்களை பலி கொண்ட இந்த கொரோனா, தனது கொரில்லாத் தாக்குதல் போன்ற கொடிதான கொலை வெறியை நிறுத்துவதாகத் தெரியவில்லை.
இது வரை உலகெங்கும் உயிரிழந்த இரண்டு இலட்சத்தை எட்டும் உயிர்களுக்கு சொந்தமானவர்கள் மறைந்து விட்டார்கள். இறப்பதை விரும்பாமலே அவர்கள் கொரோனாவினால கொலை செய்யப்பட்டு விட்டார்கள்.
ஆனால், அவர்களது உறவினர்கள், பிள்ளைகள், வாழ்க்கைத் துணைகள், வாரிசுகள், அன்புகொண்டவர்கள் என எத்தனை இலட்சம் பேர் தலையில் இடி விழுந்தது போன்ற கொடிய வேதனையுடன் தங்கள் நாட்களைக் கழிப்பார்கள் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது. இன்னும் ‘கொரோனா’ எம்மைத் துரத்தும் படலம் நிறுத்தப்படவில்லை.
அதற்காக முயற்சிகளில் உலகெங்கும் இலட்சக் கணக்கானவர்கள் இரவு பகலாக உணவை மறந்து தூக்கத்தை அர்ப்பணித்து இயங்கிக் கொண்டு வருகின்றார்கள்.
ஆட்சியில் அமர்ந்திருக்கும் அரசியல் தலைவர்கள் தொடக்கம் அவர்களுக்கு அடுத்து உள்ள அமைச்சர்கள் அதிகாரிகள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், தாதிகள் என எமது பட்டியல் தொடர்ந்து கொண்டே போகின்றது. இந்தப் பட்டியலில் இன்னும் நூற்றுக்கணக்கான தரங்களில் பணியாற்றுகின்றவர்களும் அடங்குகின்றார்கள்.
எவரது சொல்லையும் கேட்காமல் கொரோனா அடம் பிடிக்கின்றது. குறைந்தது இத்தனை மனிதர்களை நாளொன்றுக்கு கொன்றுவிட வேண்டும் என்று துடிக்கின்றது. ஒவ்வொரு நாட்டிலும் ஆட்சித் தலைவர்கள் தொடக்கம் சாதாரண குடிமகன் வரையிலும் காலையில் எழுந்து, அல்லது நள்ளிரவில் தூக்கம் கலைந்து இன்று எத்தனை பேர் கொரோனாவினால் பலியெடுக்கப்பட்டுள்ளார்கள் என்றே கவனிக்கின்றார்கள். எத்தனைபேர் சிகிச்சை வெற்றியளித்து வீடு திரும்பியிருக்கின்றார்கள் என்பதை கவனிப்பதாகவே தெரியவில்லை.
இது இவ்வாறிருக்க, மற்றொரு பக்கத்தில் கொரோனாவினால் இறந்தவர்களை விட உலகெங்கும் பட்டினியால் வாடுகின்றவர்கள் கோடிக்கணககில் வருந்திய வண்ணம் வாழ்நாட்களை எண்ணிக்கொண்டு உள்ளார்கள். அவர்களுக்கு உதவிகளை வழங்க செல்வந்தர்களும் மனிதநேயம் கொண்டவர்களும் ஆதரவுக் கரம் நீட்டுவதை தினமும் நாம் செய்திகள் மூலம் அறிந்து வருகின்றோம். இவ்வாறான நற்காரியங்களால் மனிதம் இன்னும் எங்களோடு சேர்ந்து ப யணிக்கின்றது என்பதை நாம் நன்கு உணர்கின்றோம்.
இப்படியாகு,உலகெங்கும் சாதாரண மக்கள் தங்கள் வாழ்வோடும் நோய் தொடர்பான மரண பயத்தோடும் வாழந்து வருகையில் ஆட்சியில் உள்ளவர்கள் கூட வருந்தும் சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன என்பதை செய்திகள் வாயிலாக அறிகின்றபோது, நாமும் அவர்களுக்காக கண்ணீர் விடுவதோ அன்றி கவைலைப்படுவதோ தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.
நாம் வாழும் கனடா தேசத்தின் பிரதமர் உலகெங்கும் நல்லதோர் தலைவராக காட்சி தருகினறார். அவர் எவ்வாறு நல்லவராகத் பணியாற்றினாலும், ‘கொரோவின்’ பிடிக்குள் அகபபட்ட அவரது அன்புத் துணைவியார் நீண்ட நாட்களுக்கு தனித்திருந்து தன்னை குணமாக்கிக் கொண்டார். அந்த தம்பதியினது ஆசைக் குழந்தைகள் கூட தனித்திருந்த வண்ணம் தமது தாய் தந்தையருக்கும் இடையூறு செய்யாமல் இருந்திருக்கின்றார்கள்.
கடந்த ஒரு மாத காலமாக எமது பிரதமர் அவர்கள் தனது குடும்பத்திற்காக வாழாமல், நாட்டு மக்களுக்காகவே வாழ்ந்தார் என்பது நன்கு நிரூபணமாகியது.
ஆனால் தனது துணைவியார் குணமாகி வீடு வந்ததும் பிரதமரும், துணைவியாரும், பிள்ளைகளும் ஒரிரு நாட்கள் தனித்திருந்த தங்கள் நீண்டநாள் பிரிவின் கொடுமையை தணிக்க முயன்ற போது, கனடாவின் தேசிய ஊடகங்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அந்த அரிதான தலைவர் மீது அவதூறான குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினார்கள்.
அப்போது அந்த பெருமகனாம் பிரதமர அவர்களின் கண்களிலே நீர் நிறைந்து வழிந்ததை நாம் கண்டு வருந்தினோம்.
இது போன்றே, நேற்று ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஒரு ஊடகவியலாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஒன்றாரியோ முதல்வர் டக்போர்ட் அவர்கள், தன்னைபற்றிய ஒரு தவறான விமரசனத்தை முன்வைத்த ஆங்கில தினசரி ஒன்றைப் பற்றி குறிப்பிட்ட போது, கண்கள் கலங்கிய வண்ணமும் அவரது வார்த்தைகள் நடுக்கத்தோடு வெளிவந்ததையும் நாம் எம்மில் பலர் அவதானித்து இருக்கலாம்.
இவ்வாறான அரசியல் தலைவர்களையும் மாகாண முதல்வர்களையும் கலங்கவைக்கும் பல சம்பவங்களை நாம் தொடர்ச்சியாகப பார்க்கின்றோம்.
இவை அனைத்தும் எம்மில் பலருக்கும் மிகுந்த வேதனையை அளித்திருக்கும்.
இதைப் போன்றே, நோவோஸ் ஸ்கோசியா மாகாணத்தில் ‘கொலை வெறி’ கொண்ட ஒரு துப்பாககிதாரி, நடத்திய படுகொலைகளினால் அதிர்ந்து போன மக்கள் ஒரு புறம், அந்த மாகாணத்தின் முதல்வர் இன்று ஊடகவியலாளர்களோடு நடத்திய கலந்துரையாடலின் போது கூட கண்ணீர் கண்களில் தோன்றி மறைய வார்த்தைகள் தடுமாறி பதிலளித்த ஒரு கவலைக்குரிய காட்சியை நாம் தொலைகாட்சியில் பார்த்து நாமும் கலங்கினோம்.
“இந்த கொரோனாவின் தாக்குதலால் திண்டாடும் எங்களுக்கு துப்பாக்கித் தாக்குதல்களின் விளைவுகளை எப்படி தாங்கிக் கொள்வது? என்று அந்த மாகாண முதல்வர் ஊடகவியலாளர்களிடம் பகிர்நது கொண்டமையை நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
இதே போன்று இனிவரும் நாட்களில் எத்தனை தலைவர்கள் இவ்வாறு கலங்கவுள்ளார்களோ. வரப்போகும் நாட்களுக்குத் தான அது வெளிச்சம்.!