கட்டுப்பாட்டில் உள்ளது.
கோலாலம்பூர், ஏப்.29:
கொரோனா ஆட்கொல்லி கிருமியின் தாக்கம் மலேசியாவில் மெல்லக் குறைந்து வருகிறது; ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளும் வருகிறது. இதன் தொடர்பிலான அண்மைக் கால புள்ளிவிவரத் தகவல் இதைத் தெளிவாக சுட்டிக் காட்டுகிறது. இதற்கெல்லாம் முகாந்திரமான காரணம், பன்னாட்டு சுகாதார அமைப்பேப் பாராட்டிய மலேசிய சுகாதாரத் துறையும் மலேசிய மக்களின் கட்டுப்பாடான வாழ்க்கை முறையும்தான்;
இன்று ஏப்ரல் 29, மாலை 4.40 மணி நிலவரப்படி மலேசியாவில் இதுவரை கொரோனா கிருமித் தாக்குதலுக்கு ஆளானவர்கள் 5,945 பேர். இவர்களில் குணமாகி இல்லம் திரும்பியோர் 4,084 பேர். உலக அளவில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தி, மக்களை முடக்கி வைத்துள்ள இந்தக் கிருமியின் தாக்கத்திற்கு மலேசியத் திருநாட்டில் ஏப்ரல் 28-ஆம் நாள் வரை 100 பேர் இறந்துள்ளனர்.
இன்று புதன்கிழமை, இந்த நோய்க்கு ஒருவரும் பலியாகவில்லை.
அதேவேளை, துள்ளியமான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத இந்தக் கிருமியின் தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை இன்று உயர்ந்து காணப்படுவதாக சுகாதாரத் துறை தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வாரமாக சன்னமாக குறைந்து வந்த இந்த எண்ணிக்கை, ஏப்ரல் 28-ஆம் நாளில் 31-ஆக இருந்தது; இந்த நிலையில், இன்று சற்று வியப்பும் பதற்றமும் ஏற்படும் விதமாக கொரோனா பாதிப்புக்கு இன்று ஆளானோர் எண்ணிக்கை நேற்றைய எண்ணிக்கையைப் போல மும்மடங்கை எட்டி நிற்கிறது; இன்று 94 பேர் கொரோனா-வின் கொடுங்கரங்களில் சிக்கியுள்ளனர்.
ஆனாலும், 94 பேரில் 72 பேர் வெளிநாடுகளில் இருந்து அண்மையில் தாயகத்திற்குத் திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் கடந்த ஜனவரி 25-ஆம் நாளில்தான் முதன் முதலாக கொரோனா கிருமிக்கு ஆளான நால்வர் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள், அனைவரும் வெளிநாட்டு சுற்றுப் பயணியர் ஆவர். சிங்கப்பூரில் இருந்து ஜோகூர் மாநிலத்தின் வழியாக நாட்டிற்குள் நுழைந்த சீன சுற்றுப்பயணிகள், அவர்கள்.
பிப்ரவரி 16-ஆம் நாள், இந்த எண்ணிக்கை 22-ஐத் தொட்டு, முதல் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த எண்ணிக்கை மளமளவென உயர்ந்து பிப்ரவரி 27-இல் ஆயிரத்தைத் தாண்டி அடுத்தக்கட்ட அலையை ஏற்படுத்தியது.
இந்த சந்தர்ப்பத்தில் நாட்டு மக்கள் அனைவரின் பார்வையும் புதிய நிருவாக நகரான புத்ராஜெயாவிலும் பாரம்பரிய நகரமான கோலாலம்பூரிலும் குவிந்தது.
காரணம், தேசிய அரசியலிலும் புதிய அரசாங்கத்திலும் ஏற்பட்ட வரலாறு காணாத அதிரடி திருப்பங்கள்.
நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கில், பிப்ரவரி 22, சனிக்கிழமை எதிரணியைச் சேர்ந்த மலாய்க் கட்சியான அம்னோ, மலேசிய இந்தியர் காங்கிரஸ், மலேசிய சீனர் சங்கம் உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாறி மாறி பிரபல தங்கும் விடுதியில் சந்தித்தது, தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்த, அடுத்த இரு தினங்களில் மகாதீர் முகம்மது பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அதை ஏற்றுக் கொண்ட மாமன்னர் அப்துல்லா ரியாத்துடின் அல் முஸ்தஃபா பில்லா ஷா அக்மட் ஷா அல் முஸ்தஃபா இடைக்கால பிரதமராக தொடரும்படி மகாதீரைக் கேட்டுக் கொண்டார்.
அதேவேளை, அவர் தலைமை வகித்த பெர்சத்து கட்சி, ஆளும் கூட்டணியில் இருந்து விலகியது. இந்தச் சூழலில், தான் மீண்டும் பிரதமர் பொறுப்பை ஏற்க விரும்புவதாகவும் ஆனால், அரசியல் கட்சிகள் சாராது பொதுவான தேசிய அரசாங்கத்தை அமைக்க எண்ணுவதாகவும் மாமன்னரிடம் கோரிக்கை வைத்தார்.
இதற்கிடையில் கடந்த 1995 முதல் பிரதமர் பதவிக்காகக் காத்திருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகில் பிரதமராக முயன்றார். ஆளுந்தரப்பில் போதிய பெரும்பான்மை இல்லாத சூழலில், மகாதீருக்கு இதற்கு முன் ஆதரவு தெரிவித்தவர்கள் எல்லாம் இப்போது பின்வாங்கிவிட்ட நிலையில், அதிரடித் திருப்பமாக ஆளுங்கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற டான்ஸ்ரீ முகைதீன் யாசினுக்கு எதிரணியினர் ஆதரவு தெரிவித்ததால் மாமன்னர் அவருக்கு மார்ச் முதல் நாள் பிரதமராக பதவிப் பிரமானம் செய்து வைத்தார்.
இதற்கான அறிவிப்பை அதற்கு முதல் நாள் பிப்ரவரி 29 சனிக்கிழமை மாலையில் மாமன்னர் அறிவித்த பின்னர்தான் அரசியல் கொந்தளிப்பு அடங்கிப்போனது.
பிரதமர் பதவி ஏற்ற முகைதீன், அமைச்சரவையை அறிவிக்காமல் அமைதி காத்ததால், மழை விட்டும் தூவானம் தொடர்ந்ததைப் போல, மலேசிய அரசியலிலும் மக்கள் மத்தியிலும் ஓர் இனம் புரியாத அமைதியும் எதிர்பார்ப்பும் தொடர்ந்தது.
இதனால், கொரோனா பாதிப்பைப் பற்றி ஒட்டு மொத்த மலேசியாவும் மறந்தே போனது.
ஒருவழியாக மார்ச் 10-ஆம் நாள் புதிய அமைச்சரவையை அறிவித்தார் முகைதீன். மலேசிய வரலாற்றில் இல்லாத அளவிற்கு 70 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றனர். அதன் பின்னர்தான், கொரோனா பற்றிய விழிப்புணர்வுக்கு மலேசிய திரும்பியது.
நிலைமை எல்லை மீறுவதை அறிந்த புதிய அரசு, அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. மார்ச் 18 முதல் இரு வார காலத்திற்கு நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை அரசு பிறப்பித்தது. அந்த ஆணை அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு, தற்பொழுது நான்காவது முறையாக நீட்டிக்கப்பட்டு மே 12-ஆம் நாள் வரை நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை தற்பொழுது அமலில் இருக்கிறது.
மலேசியக் குடிமக்கள் உணவு வாங்கவும் மருத்துவத் தேவைக்கும் அத்யாவசிய பொருள் கொள்வனவுக்கும் தங்கள் வசிப்பிடத்தில் இருந்து 10 கி.மீ. தூரம் வரை பயணிக்க அரசு அனுமதி அளித்தது. ஆனால், ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும் என்ற நிலையில் தற்பொழுது(ஏப்ரல் 29 முதல்) இருவர் பயணிக்க அரசு புதிய அனுமதியை அளித்துள்ளது. ஆனால், இருவரும் ஒரேக் குடும்ப உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் இன்று விதித்துள்ளது. இருந்தாலும் இது மக்களுக்கு ஓரளவு ஆறுதலான விடயம். அதேவேளை, 10 கி.மீ. சுற்றளவு என்றிருந்த வரம்பை 15 கி.மீ. என்று தளர்த்தப்படுவதாக மூத்த அமைச்சரும் பாதுகாப்புத் துறைக்கு பொறுப்பேற்றுள்ளவருமான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று பிற்பகலில் செய்த அறிவிப்பு பொது மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதற்கிடையில் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதும் ஆயிர வெள்ளி அபராதம் அல்லது ஒரு மாத சிறைவாசம் விதிக்கப்படுவதும் தொடர்கிறது. இதுவரை இதன் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் தேசிய அளவில் 21,749 பேர். ஏப்ரல் 28-ஆம் நாள் மட்டும் 643 பேரை காவல் துறையினர் வளைத்தனர்.
நோன்பு மாதம் தொடங்கப்பட்டுள்ள இந்த நிலையில், உலக மக்களைப் போல மலேசிய மக்களும் இந்த கொரோனா தொற்றுக் கிருமி பரவலுக்கு ஒரு முடிவு வராதா என்ற ஆதங்கத்திலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.
அடுத்த வாரம் சந்திப்போம்!
அன்புடன்
நக்கீரன்
கோலாலம்பூர்.