இன்று மே மாதம் 1ம் திகதி. இந்த நாளை நினைக்கும் போதெல்லாம் எமது கண்களுக்கு முன்னாபாக முதலில் தெரிவது சிவப்பு நிறக்;கொடிகளும், அவற்றைக் கைகளில் பிடித்த வண்ணம் அணியணியாக நடந்து செல்லும் விவசாயிகளும் தொழிலாளர்களும் தான்..
தொழிலாளர்களின் விடிவிற்காகவும் அவர்களுக்கு எதிரான முதலாளித்துவத்தின் சுரண்டலையும் அடக்கு முறைகளையும் எதிர்த்து குரல் கொடுத்தும், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வண்ணம் சித்தாதங்களையும், போராடுவதற்காக காரணங்களையும் உள்ளடக்கிய அறிவுபூர்வமான கருத்துக்ளையும் உருவாக்கி அவர்களின் மேம்பாட்டுக்காக உழைத்த முற்போக்கு கொள்கைகளைக் கொண்டு இயங்கும் கட்சிகளின் அல்லது இயக்கங்களின் கொடியே சிவப்பு நிறமுடையதாகும்.
ஆனால் தற்காலத்தில் இந்த மே தினம் அதன் முழுமையான அர்த்தத்துடன் தான் கொண்டாப்படுகின்றதா என்ற கேள்வி எழுகின்றபோது, இப்போதெல்லாம் இந்த ‘ மே தினம்’ அவசியமா என்ற கேள்வியும் எழுகின்றதை நாம் நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.
இலங்கையை எடுத்துக் கொண்டால் அங்கே பச்சைக் கட்சிகள் நீலக் கட்சிகள்; மற்றும் பல நிறங்களைக்; கொண்ட கட்சிகள் எல்லாம் மேதினத்தைக் கொண்டாடுகின்றன. இன்னும் வியப்புக்குரிய விடயங்கள் எவையென்றால், இலங்கையிலும் இந்தியாவிலும் நாம் நேரடியாகக் காண்பது, தொழிலாளர்களின் பிள்ளைகளையும் விவசாயிகளின் பிள்ளைகளையும் இராணுவம் மற்றும் காவல்துறை ஆகிய பணிகளுக்கு அமர்த்தி, அவர்கள் மூலமாக ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிராக குரல் கொடுப்பதையே நசுக்கும் முதலாளித்துவ ஆட்சியாளர்கள், மே தினத்தன்று நன்றாக தூங்கி எழுந்து, கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமதியான உல்லாச வாகனங்களில் வந்து மேடையில் நான்கு புறமும் காற்றாடிகள் சுழன்று அவர்களுக்கு குளிரூட்ட, “தொழிலாளர்கள் வாழ்க!” என்று உரத்துக் கூச்சலிடுகின்றார்கள்.
மேடைகளுக்கு கீழே தொழிலாளர்களின் பிள்ளைகளான படையினரும் காவல்துறையினரும் ஆட்சியாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் வந்து விடக்கூடாது என்பதற்காக காவல் புரிவார்கள்.
இவ்வாறாக, மே தினத்தன்று கூட ஒரு விவசாயியோ அன்றி தொழிலாளியோ மிகவும் உற்சாகத்தோடு தனக்குரிய விழாவை மேதினத்தைப் பார்க்கும் சந்தர்ப்பாங்கள் இல்லை. இதற்கு காரணங்கள் பல உள்ளன.
தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கவென ஆரம்பிக்கப்பட்ட தொழிற் சங்களின் தலைவர்கள் கூட முதலாளித்துவத்தின் பிரதிநிதியாக உள்ள அரசியல்வாதிகளின் கைப்பொம்மைகள் ஆகிவிடுகின்றனர். இதனால் இந்த தொழிற்சங்கங்களின் தலைவர்கள் அரசியலுக்குள் ஈர்க்கப்பட்டு, பின்னாளில் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகவோ அன்றி அமைச்சர்களாகவோ உயரத்திற்குச் சென்று இறுதியில் தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கும் வகையில் செயற்படுகின்றார்கள். இவ்வாறாக உலகின்; பல நாடுகளிலும் இலங்கையிலும் இந்தியாவிலும் நாம் இங்கே குறிப்பிட்ட துரோகங்களைத் தான் தரிசித்து வருகின்றோம்.
அமெரிக்காவில் 1890ஆம் ஆண்டு 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என்னும் கோரிக்கையை வலியுறுத்தியும், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கேட்டும் தொழிலாளர்கள் போராடினர். இதை எதிர்த்து அமெரிக்க அரசு, ஈவிரக்கம் அற்ற தாக்குதலை நடத்தியது. ஏராளமான தொழிலாளர்கள் கொல்லப்ப்ட்டனர்.
உலகத் தொழிலாளர்களின் துன்பத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து, முதலாளிகளை ஒழித்துக்கட்டி தொழிலாளர்கள் ஆட்சியில் அமர்ந்தால்தான் அனைத்துவிதமான துன்பங்களும் தீரும் என்றும், முதலாளிகள் உலக வரலாறின் வளர்ச்சிப் போக்கையே தடுத்து வருகின்றனர் என்றும், இதனை முடிவுக்குக் கொண்டு வரும் வல்லமை தொழிலாளர்களிடம் மட்டும்தான் உள்ளது என்றும் கூறி நின்றார், ஒப்பற்ற பொதுவுடைமைக் கொள்கையை உலகுக்குத் தந்த ஆசான் காரல் மார்க்ஸ்.
ஆனால் அவ்வாறான உழைக்கும் மக்கள் பக்கம் சார்ந்து நின்றும் சிந்தித்தும் செயற்பட்ட மகான்கள்; தோன்றிய நாடுகளில் கூட இன்றும் தொழிலாளர்கள் அடக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வாழ்ந்து வருகின்றார்கள்.
ஆனால், தொழிலாளர்களும் விவசாயிகளும் இன்னும் தமக்குரிய நாளாக இந்த ‘மே தினத்தை’ கொண்டுகின்ற அல்லது ஒன்றாகக் கூடி தமக்காக குரல் கொடுக்கின்ற ஒரு நாளின் புனிதத்தை நாம் இன்றைய நாளில் மரியாதையோடும் உணர்வோடும் வரவேற்க வேண்டும். எம்மைப் போன்ற தோழர்களோடு சேர்ந்து ‘உலகத் தொழிலாளர்களே! ஒன்று சேருங்கள்” என்று உரத்துக் குரல் கொடுக்க வேண்டும்.
அப்போதுதான் அவர்களுக்கு எதிராகத் தொடுக்கப்படுகின்ற அடக்கு முறைகளும் சுரண்டலும் ஓரளவாகினும் குறையும் என்றே நாம் நம்புகின்றோம்.