மலேசியாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வெளிநாட்டுத் தொழிலாளர்-களால் பலவகையாலும் சலசலப்பு எழுந்துள்ளது. இதற்கு இடையில் நூற்றுக்கணக்கானோரை கைதுசெய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இந்தோனேசியா, வங்காள தேசம், மியன்மார், நேப்பாளம், பிலிப்பைன்ஸ், வியட்னாம், இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஏறக்குறைய 25 இலட்சம் என்ற அளவில் இருக்கின்றனர். தீபகற்ப மலேசியா, சபா மற்றும் சரவாக் ஆகிய பெரு மாநிலங்களில் இந்தத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
ஆனாலும், இவர்களில் பல இலட்சம் தொழிலாளர்கள் சட்டப்பூர்வ அனுமதியோ அல்லது முறையான ஆவணங்களோ இன்றி இருக்கின்றனர். இவர்களை, கள்ளக் குடியேறிகள் என்று மலேசிய அரசு வகைப்படுத்தி உள்ளது.
இப்படிப்பட்ட, நிலையில் கடந்த பிப்ரவரி மாத பிற்பகுதியில் நாட்டில் உச்சபட்ச அரசியல் குழப்பமும் அதிரடித் திருப்பங்களும் நிலவிய நேரத்தில் ‘சந்தடி சாக்கில் நுழைவதைப் போல’, மியன்மார் நாட்டில் இருந்து ரொஹிங்க்யா முஸ்லிம் அகதிகளை ஏற்றி வந்த ஒரு பெரும்படகு, நாட்டின் வட புலத்தில் உள்ள லங்காவித் தீவுக் கடற்கரைக்கு கமுக்கமாக வந்ததை கடலோர காவற்படையினர் மடக்கினர். (இந்த லங்காவித் தீவு ஒரு நாடாளுமன்றத் தொகுதியாக விளங்குகிறது. இங்குதான் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது).
அந்தப் பிரச்சினை அடங்கிய கொஞ்ச காலத்தில், இந்த நாட்டில் ஏற்கெனவே அகதிகளாக உள்ள ரொஹிங்க்யா அகதிகள் சார்பில், மலேசிய மக்களுக்கு எதிராக சமூக வளைத்தலங்களில் கருத்து பதிவிடப்பட்டது.
இதைக் கண்டு கொதித்தெழுந்த மலேசிய மக்கள், எதிர்வினை ஆற்றத் தொடங்கினர். நாளேடுகளைவிட சமூக வளைத்தளங்களில் இதன் தொடர்பில் வகைதொகையின்றி கருத்துக்கள் பதிவிடப்பட்டதும், ரொஹிங்க்யா அகதிகள் தரப்பில் மன்னிப்பும் வருத்தமும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்தச் சிக்கலை போலீஸ் கையாள ஆரம்பித்ததும் பிரச்சினை அடங்கிப்போனது.
அதற்குள் அடுத்தப் பிரச்சினை தலையெடுத்தது. மலேசியாவில் உள்ள அந்நியத் தொழிலாளர்களில், பெரும்பகுதியினர் நாட்டின் மையப் பகுதியான சிலாங்கூர் மாநிலத்திலும் கூட்டரசுப் பிரதேசமான கோலாலம்பூரிலும்தான் வசிக்கின்றனர் – வேலை பார்க்கின்றனர்.
அதிலும் குறிப்பாக, கோலாலம்பூரில் புகழ்பெற்ற வர்த்தகப் பகுதியான ‘மஸ்ஜித் இந்தியா’ வட்டாரத்தில் உள்ள இரு அடுக்ககங்களில் அதிகமான வெளி-நாட்டுத் தொழிலாளர்கள் இருக்கின்ற நிலையில், அந்த மக்கள்மீது கொரோனா கிருமி தொடர்பான பரிசோதனையை மேற்கொள்ள முயன்றபொழுது, ‘கிணறு வெட்ட பூதம் எழுந்த’ கதையாக பல்வேறு சிக்கல் எழுந்தன.
பிரபலமான ஹனிஃபா பல்பொருள் அங்காடி, அஜுந்தா டெக்ஸ்டைல்ஸ், மெட்ராஸ் ஜுவல்லர்ஸ், பாம்பே ஜுவல்லர்ஸ், மீனா ஜுவல்லர்ஸ் உள்ளிட்ட வர்த்தக மையங்கள் நிறைந்த மஸ்ஜித் இந்தியா பகுதியில் உள்ள ‘மலேயன் மென்ஷன்’, ‘சிலாங்கூர் மென்ஷன்’ ஆகிய இரு அடுக்ககங்களும் பழைய கட்டிடத்தொகுப்புகளாகும். இதேப் பகுதியில் உள்ள ஒரு தமிழ்ப் பள்ளிவாசல்-தான் ‘மஸ்ஜித் இந்தியா’ என்று மலாய் மொழியில் அழைக்கப்படுவதுடன், அதுவே இந்தப் பகுதியின் அடையாளமுமாகி விட்டது.
மேற்குறிப்பிட்ட இரு அடுக்ககங்களிலும் பெரும்பாலும் தமிழ்நாட்டு முஸ்லிம்-கள் தஞ்சமடைந்திருந்த ஒரு காலம் இருந்தது. இப்பொழுது, வங்காள தேசம், மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கும் இது அடைக்கல மையமாகிவிட்டது.
இந்தக் கட்டடத் தொகுப்புகளில்தான் காவல் துறையினர், குடிநுழைவுத் துறையினர், ‘ரேலா’ என்னும் தன்னார்வப் படையினர் ஆகியத் தரப்பினரின் ஒத்துழைப்போடு சுகாதாரத் துறை பணியாளர்கள் ‘கோவிட்-19’ கிருமித் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ள முயன்றபோது அதிகமானோருக்கு அந்தக் கிருமித் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு, மஸ்ஜித் வட்டாரமே சுற்றி வளைக்கப்பட்டு முள்வேலி இடப்பட்டு இரவு பகலாக பாதுகாக்கப் பட்டது. அங்கிருந்து ஒருவரும் வெளியேறவோ அல்லது உள்ளே நுழையவோ முடியாதபடி ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த கட்டுக்காவலில் வைக்கப்-பட்டது.
இந்தச் சூழலிலும் அந்த இடத்திலிருந்து மியன்மார், வங்காள தேச நாடுகளைச் சேர்ந்த எழுவர் முள்கம்பி வேலிகளைச் சிதைத்து தப்பிவிட்டனர். கொரானோ கிருமி தொற்றியிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் அந்த எழுவரையும் போலீஸ் தேடி வருவதுதான் தற்போதைய சூடான செய்தி.
இதற்கிடையில் ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக பணிபுரியும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்-கையில் மலேசிய காவல்துறை முனைப்பு காட்டத் தொடங்கியுள்ளது
கோவிட்-19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்-படுவதாக அரசத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புலம்பெயர்ந்தோர் தங்கியுள்ள தடுப்பு முகாம்களில் இருந்து குழந்தைகள் மற்றும் நோய்த்தொற்றால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களை விடுவிக்கு-மாறு ஐக்கிய நாடுகள் சபை மலேசிய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுக்குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ‘ஹுயூமன் ரைட்ஸ் வாட்ச்’ என்னும் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த பில் ராபர்ட்சன், “காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அடைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்கள் மூலமாகவும் சட்டவிரோதமாக பணியாற்றி வரும் வெளிநாட்டு தொழிலாளர்-களின் ஒத்துழைப்பின்மையாலும் இதுபோன்ற நடவடிக்கைகள் மலேசியாவில் நோய்த்தொற்றுப் பரவலை அதிகரிக்க கூடும்” என்று ட்விட்டர் பதிவின்வழி எச்சரித்துள்ளார்.
மொத்தத்தில் கொரோனா கிருமியின் தாக்கம் தற்பொழுது கட்டுப்பாட்டில் இருக்கின்ற வேளையில், தேசிய அரசியல் மெல்ல சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.
மார்ச் முதல் தேதி பிரதமர் பொறுப்பை ஏற்ற டான்ஸ்ரீ முகைதின் யாசின், இன்னும் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை நிரூபிக்காமல் இருக்கிறார். மார்ச் 18-ஆம் நாள் மலேசிய நாடாளுமன்றம் கூட இருக்கின்ற நிலையில், வரும் நாட்களில் மலேசிய அரசியல் பரபரப்பும் ஆர்வமும் மிக்கதாக இருக்கக்கூடும்.
ஆண்ட நம்பிக்கைக் கூட்டணியில் இருந்து பிரிபூமி என்ற கட்சி விலகி, எதிர்க்கட்சியினருடன் சேர்ந்த ஆட்சி அமைத்திருப்பதை மலேசிய மக்கள் இரசிக்கவில்லை. அரசியல் நிலைத்தன்மைக்கு பெயர் பெற்ற மலேசியாவில் குதிரை பேர அரசியல்வாதிகளும் பதவி மோகம் கொண்டவர்களும் சேர்ந்து குந்தகம் புரிந்திருப்பது, மலேசிய அரசியல் நிலைத்தன்மையில் கேள்விக் குறியை எழுப்பியுள்ளது.
அடுத்த வாரம் சந்திப்போம்.
அன்பன்
நக்கீரன்
கோலாலம்பூர்.
6-05-2020