இரண்டு மாதங்களை எட்டிப்பிடிக்கப்போகின்றன, ‘கொரோனா’வின் கோரத்தாண்டவத்தை நாம் மரணத்தோடு இணைத்து பார்த்து அஞ்சி அஞ்சி வாழ்ந்த நாட்கள். மரணம் சில வேளைகளில் எம்மை அழைத்துச் சென்று விடும் என்பதற்காக அனைவருமே வீடுகளின்; உள்ளே தங்கியிருக்கவில்லை. மக்கள் மட்டுமே மருத்துவ உலகத்தையும் ஆட்சியில் உள்ளவர்களையும் நம்பிய வண்ணம் இருந்தனர்.
ஆனால் . அரியாசனங்கள் ஆட்டம் எடுத்தன. அரசியல் தலைமைகள், மருத்துவத்துறையின் உயர் அமைப்புக்கள், விஞ்ஞானிகளின் அரங்குகள், வைத்தியசாலைகளின் பணியாற்றும் வைத்தியப் பெருந்தகைகள், தாதிகள் மற்றும், குழுக்களாக இணைந்து நின்று இரவு பகலாக, பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களைக் காக்க எங்கள் உயிர்களை பணயம் வைக்கின்றோம் என்ற வைராக்கியமான வார்த்தைகள்..
இவ்வாறு தான் எமது கடந்து போன ‘கொடிதான’ நாட்கள் எமக்குத் தெரிந்தன.
அரசாங்கங்களின் ‘கஜானா’ களில் நிதி இருந்ததோ என்னவோ, தேச மக்களின் துயர் துடைக்க ஒவ்வொரு நாடும் தன்னால் இயன்றளவிற்கு உதவிகளை வழங்கி நின்றன. ஒவ்வொரு நாட்டு அமைச்சரவையிலும் மாநிலங்களின் அமைச்சரவையிலும் பணியாற்றிய சுகாதார அமைச்சர்கள் , அவர்களின் செயலாளர்கள், அதே போன்று, பொதுச் சுகாதார அமைப்புக்களின் அதிகாரிகள் என அனைவருமே நான்கு திசைகளிலிருந்தும் வரும் தகவல்களையும் பாதுகாப்பு உபகரணங்களையும் தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு, இந்த ‘கொடிய நோயை’ விரட்டி அடிக்கவும், தம் மக்களைக் காப்பாற்றவும் இதய சுத்தியோடு பணியாற்றினர்.
ஆனால் உலக மக்களில், இந்த கொடிய நோயினால் இறப்பு வரைக்கும் அழைத்துச் செல்லப்படடவர்களின் எண்ணிக்கை, மூன்று இலட்சத்தை எட்டிவிடுமோ என்ற ஏக்கம் அனைவரிடமே காணப்படுகின்றது. வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட அங்குள்ள மருத்துவ துறை சார்ந்த அறிவு ஆற்றல் எதுவுமே இந்த கொடிய நோயைக் கட்டுப்படுத்தும் வலிமை கொண்டதாக காணப்படவில்லை.
மற்றவர்களிடம் இருந்து விலகி இருத்தல், பாதுகாப்பு கவசங்களை அணிதல் பொது இடங்களில் ஐந்து பேருக்கு மேல் ஒன்றாக சந்திக்காமல் இருப்பதை உறுதி செய்தல், நோய்க்கான அறிகுறிகள் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்படுதல் போன்ற அறிவுரைகள் சட்டமாக்கப்பட்டு இருந்தாலும் சில நாடுகளில் மேற்கூறிய விடயங்கள் சரியான முறையில் பேணப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் இருந்தன.
இவ்வாறான குறைபாடுகள் அதிகளவில் காணப்பட்டும், அதனால் காவல்துறையினரின் கண்டிப்புக்கும் தாக்குதலுக்கும் ஆளானர்கள் அதிகமாகக் காணப்பட்ட இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் அதிஸ்டவசமாக இறப்புக்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தன.
இவ்வாறிருக்க, இந்த நம்பிக்கைகள் அனைத்தையுமே உடைத்தெறியும் வகையில் மதுபானக் கடைகளிள் கதவுகள் திறக்கப்பட்டதும் அதனால் மதுப்பிரியர்கள் உள்ளே சென்று வாங்கி வந்த பானம் “உள்ளே’ சென்றதும் முன்னர் இருந்த கட்டுப்பாடுகள் அனைத்துமே தகர்த்தெறியப்பட்டதாக எமக்குத் தோன்றின.
உலகின் பல நாடுகளில் மதுப்பிரியர் அதிகமாக இருந்தாலும் தமிழ் நாட்டில் மரண பயத்தையும் மறந்து விட்டு, மதுபானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இலட்சக் கணக்கானவர்கள் வீதிகளில் முண்டியடிக்கும் காட்சிகளை தமிழக தொலைக் காட்சிகளே தெளிவாகக் காட்டி நிறிகின்றன
ஊரடங்கு காரணமாக, மார்ச், 25 முதல், தமிழகத்தில் மதுக் கடைகள் மூடப்பட்டன. மத்திய அரசு, கொரோனாக் கிருமிகள் பாதிப்பு இல்லாத பகுதிகளில், ஊரடங்கை தளர்த்த அனுமதி வழங்கியது. இதையடுத்து தமிழகத்தில், சென்னை உட்பட, வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில், நேற்று மதுக் கடைகள் திறக்கப்பட்டன.
அனைத்து மதுபானக் கடைகளிலும் கூட்டம் அதிகம் இருந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும், 170 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகியுள்ளன என்ற ‘சாதனை’ அறிவிப்பு கூட செய்திகளாகக் காற்றில் பறக்கின்றன.
ஆனாலும், இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து, இந்த பக்கத்திற்குரிய வரிகளை பதிவு செய்கின்ற எமது விரல்கள் எம்மிடம் கேட்கின்றன.
” எதற்காக இந்த அவசரம்? எம் வீட்டுக்; கதவுகளையும் ஆடம்பரப் பொருட்கள் விற்கும் கடைகளின் கதவுகளையும் பூட்டும் படி அல்லவா கேட்டிருந்தீர்கள்? .அவ்வாறிருக்க, இந்த மதுக்கடைகளின் கதவுகளை மட்டும் யார் திறக்கச் சொன்னார்கள்? இந்த விடயத்திலும் அரசியல் இருக்கிறதா? சொல்லுங்கள்….