(அன்னையர் தின சிறப்புச் சிறுகதை)
*மாற்றாந்தாயைப் போன்ற மனம் காகங்களுக்கும் இருந்தால், உலகில் ஒரேயொரு குயில்கூட உருவாக முடியாது.*
“அம்மா.. . அம்மா, இந்த மனுச அம்மாக்களெல்லாம் இன்னைக்கு ரொம்போ உற்சாகமா இருக்காங்களே, ஏன்மா? ஆரவார சத்தமும் அதிகமா கேட்குதே ஏனம்மா?”
குஞ்சுக் குருவியின் கேள்வியைக் கேட்ட தாய்க் குருவி, ஒரு பெருமூச்சு விட்டபடி மெல்லப் பேசத் தொடங்கியது.
“அது ஒன்னுமில்ல புள்ள; இன்றைக்கு மனுச அம்மாக்களெல்லாம் ‘அன்னையர் தின’த்தைக் அனுசரிக்கிறங்க; அதுதான் இந்தக் கொண்டாட்டமெல்லாம்.
“அப்படின்னா என்னம்மா?” – இது குஞ்சுக் குருவியின் அடுத்தக் கேள்வி.
“இப்போ, நான் யாரு உனக்கு?” – தாய்க்குருவி தானும் ஒரு கேள்வியையே பதிலாக முன்வைத்தது
“அம்மா” – குஞ்சுக் குருவியின் பதில் சட்டென வந்து விழுந்தது.
இதைப்போலத்தான், மனித குலத்து பிள்ளைங்களெல்லாம் சேர்ந்து அவங்கவங்க அம்மாவுக்காக ஒரேயொரு நாள் விழா எடுத்து இப்படி பவனி வர்ராங்க; மனித அம்மாவெல்லாம் தங்களின் பிள்ளைகளை பெற்று, வளர்த்து, ஆளாக்கி உருவாக்கி விட்டிருக்காங்க இல்லையா? அந்தக் கடமையையும் தியாகத்தையும் மதிக்கிற விதமா இப்படி கொண்டாடி மகிழுறாங்க; அவ்வளவுதான்?
“அப்படின்னா எங்களைப் போன்ற பறவைப் புள்ளைங்கெல்லாம் சேர்ந்து ஏன்மா அவங்கவங்க அம்மாப் பறவைக்காக அன்னையர் தினத்தைக் கொண்டாடக் கூடாது?”. இப்படி அப்பாவித்தனமான கேள்வியுடன் குஞ்சுக் குருவி தொடர்ந்தது.
என்னமோ மனுச அம்மாக்களுக்குத்தான் அவங்களோட புள்ளைங்க மேல அதிகமா பாசம் இருக்குறதாவும் தங்களோட புள்ளைங்கமீது அவங்களுக்குத்தான் அன்பு மழையைப் பொழியத் தெரியும்ன்னும் இன்னும் என்னென்னவோ சொல்லி அவங்களே அவங்களை பெருமையாப் பேசிக்கிறாங்க; அதனாலதான் கடந்த ரெண்டு மூனு நாளாவே மனுச அம்மாக்களோட மகிழ்ச்சி ஆரவாரம் அதிகமாக இருக்கு தாயீ என்று சொன்ன தாய்க்குருவி, தன் குஞ்சிப் பறவைமீது தன் சிறிய இறக்கையை விசிறியடித்து தன் அன்பை வெளிப்படுத்தியபடி மேலும் தொடர்ந்தது.
அது ஒண்ணும் இல்ல புல்ல; நம்மைப் போல மனுச அம்மாக்களுக்கும் அவங்களோட புள்ளைங்களுக்கும் பேசிக் கொள்ளத் தெரியும். அத்தோட செய்தித் தாட்களை அச்சடிக்கும் வல்லமை அவங்ககிட்ட இருக்கு இல்லையா? அதுக்கும் மேல வானொலி, தொலைக்காட்சி, அப்புறம் திறன்பேசி மூலமாக புலனம், ட்விட்டர், முகநூல், இப்போ புதுசா ஒரு ‘ஏப்’ வந்திருக்கு டெலிகிராம்’னு; அவற்றின் மூலமா குதூகலமா தகவலைப் பரிமாறியபடி.. ., இங்கமட்டும் இல்லைம்மா; உலகம் முழுதும் உள்ள மனுச அம்மாக்கள் எல்லாருக்குமே விழா எடுத்து இந்த அன்னையர் தினத்தைக் கொண்டாடுறாங்க;
பறவை அம்மாக்கள் மட்டும் என்ன சும்மாவா? நம்ம குருவி அம்மாக்களையே எடுத்துக்கேயேன்; ஏன் என்னையேப் பாரேன். உனக்குந்தான் தெரியுமே. கொஞ்ச நேரத்துக்கும் முன்னால நீ தாகம் எடுத்து கத்திக்கிட்டு இருந்தாய் அல்லவா; நான் எப்படி உன்னோட தாகத்தைத் தீர்த்தேன்னு உனக்கேத் தெரியும்.
நான் என்ன செம்புலயா உனக்கு தண்ணீரை மொண்டு வர முடியும்? இல்ல மனுசங்களைப் போல ரெண்டு கையாளத்தான் தண்ணிய அள்ளிக்கொண்டு வர முடியுமா? என்னோட வாயில் எவ்வளவு தண்ணிய அள்ள முடியுமே அவ்வளவு தண்ணீரை என்னோட அளகால உறிஞ்சிக் கொண்டு வந்து, அதைத்தான் உனக்கு மட்டும் அல்ல; உன்னோட அக்காள், தம்பிக் குருவிக்கெல்லாம் கொடுத்தேன்.
அட, இதை விடு; நீங்களெல்லாம் பொறக்குறத்துக்கு முன்னால, முட்டை இடுவதற்கு கூடு கட்ட எங்கெங்கெல்லாம் அலைஞ்சி திரிஞ்சேன் தெரியுமா? முன்பெல்லாம் ஓட்டு வீடு, கூரை வீடுன்னு எங்க பார்த்தாலும் இருந்துச்சு. இதைப் பத்தி என்னோட அம்மா எனக்கு நெறைய சொல்லி இருக்கிறாங்க.
அங்கெல்லாம் சந்து, பொந்துன்னு நிறைய இடம் கிடைக்கும். வீடுகள்ல இருக்கும் உத்திரம், மாடம்னு அதிகமான இடைவெளி அங்கங்கே இருக்கும். இப்பத்தான் எங்கு பார்த்தாலும் வெண்காரையாலும் இரும்பாலும் ஒரு சின்ன இடுக்குக்கூட இல்லாமல் கட்டடம் கட்டிடுறாங்க இல்லையா?
அதுனால, கூடுகட்டி முட்டையிட இடம் கிடைக்காமல், நானும் உன்னோட அப்பாக் குருவியும் எங்கெல்லாம் தேடித் தேடி அலைஞ்சோம் தெரியுமா?
இப்பொழுது நாம் குடியிருக்கும் இந்த மரத்தில் அப்போது இலையெல்லாம் உதிர்ந்து வெட்ட வெளிச்சமாக இருந்தது. சூரிய வெளிச்சம் அப்படியே அடிக்கும். இரவு நேரத்துல நிலா வெளிச்சம்கூட அப்படியே விழும். இதுல மழை வேறு பெய்ய ஆரம்பிச்சா அவ்வளவுதான். நீங்களெல்லாம் உடனே நனைஞ்சுப் போயிடுவீங்களேன்னு நெனச்சுதான் வேறு இடத்தைத் தேடினோம்.
ஒண்ணும் நடக்கல; கடைசியில், இந்த மரத்திலேயே, இந்தப் பாதுகாப்பான இடத்தை உன்னோட அப்பாக் குருவிதான் அடையாளம் காட்டினாரு.
இருந்தாலும் எனக்கு ஒருவித பயம் இருந்துகிட்டே இருந்தது.
ஏன்மா அப்படி?
இப்பொழுது இலையெல்லாம் நிறைய துளிர்விட்டு இந்த மரம் நல்ல அடர்த்தியா இருக்கு. அந்த நேரத்தில் வெளிச்சமா இருந்ததால, கூடு கட்டிடானா, என்ன ஆகுமோன்னு பயந்தேன்.
இந்த குரங்கு அண்ணாக்களுக்காகத்தான் ரொம்போ பயந்தோம். எல்லாக் குரங்கும் அப்படி இல்லை; ஒரு சில குரங்கு அண்ணாக்கள் போகிற போக்கில் எந்த காரணமும் இல்லாமல் அப்படியே நம்முடைய கூட்டைப் பிடிச்சி இழுத்து குலைத்து விட்டுடுவாங்க.
மேலும் இந்த இடம் ரொம்பவும் கீழே இருப்பதால, பாம்புகளுக்கும் பயப்பட வேண்டி இருந்தது. நாங்கள் இரைதேடி வெளியில் போயிருக்கிற நேரம் பார்த்து பாம்புகள் மரத்தில் ஏறி முட்டைய உடைத்து குடிச்சிட்டா என்ன செய்றதுன்னதான் நான் அதிகமாக பயந்துபோனேன்.
நல்லவேளை, அப்படி யெல்லாம் ஒண்ணும் ஆகவில்லை. முட்டை யெல்லாம் விட்டு அடைகாத்து நீங்கள் எல்லாம் பிறந்து நாம் இப்போது மகிழ்ச்சியா இருக்கிறோம்.
என்னவொரு குறையென்றால், உன்னோட அப்பாக் குருவியத்தான் சந்திக்க முடியவில்லை.
எங்கேம்மா நம்ம அப்பா?
அம்மாக் குருவி சொன்னதை யெல்லாம் கேட்டுக் கொண்டே வந்த குஞ்சுக் குருவி இப்படி குறுக்குக் கேள்வி கேட்டது.
அவரு எனக்கும் அப்ப இல்லை புள்ள; உங்களுக்குத்தான் அப்பா. நீங்க ளெல்லாம் பிறக்கும் வரை என்னோடத்தான் இருந்தாரு; அதன் பிறகுதான் எங்கேயோ போய்விட்டாரு. அவர் எவ்வளவு அன்பானவர் தெரியுமா?
இந்தக் கூட்டைக் கட்டும்பொழுது, எனக்குத் தேவையான தளவாட சாமானை யெல்லாம் சளைக்காமல் பறந்து பறந்து எடுத்துவந்துக் கொடுப்பாரு. நீ உட்கார்ந்து இருக்கியே, இந்தப் பஞ்சுகூட உன்னோட அப்பா தேடிக் கொண்டு வந்ததுதான்.
ஒரு முறை அந்தி நேரத்துல எனக்காக ஒரு பூச்சியைக் கவ்விக் கொண்டு வந்தாரு உன்னோட அப்பா. நான், உடனே அடுத்தக் கிளைக்குத் தாவினேன். ஏன்? என்னாச்சு உனக்கு? உனக்குப் பசியா இருக்குமேன்னுதான் இந்தப் பூச்சியோடு வந்தேன் என்று ஒரு காலில் பூச்சியை கவ்விக் கொண்டபடி கேட்டது.
பூச்சியைப் பார்த்ததும் எனக்கு குமட்டிக் கொண்டு வந்தது. நான் இப்பொழுது முட்டை இட்டுக் கொண்டு இருக்கிறேன்ல; அதுனால, அசைவ சாப்பாடெல்லாம் பிடிக்கவில்லை என்றதும், “கொஞ்சம் பொறு; நான் எங்காவது தேடி தானியத்துடன் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு பறக்க ஆரம்பித்தது.
நாந்தான், “அதெல்லாம் வேண்டாம். பொழுது சாய்ந்து விட்டது. காலையில் பார்த்துக் கொள்ளலாம். இந்தப் பூச்சியை நீயே சாப்பிட்டுவிட்டு அடக்கமாயிரு என்றேன்.
மனசு பொறுக்காத ஒங்கப்பா, அப்படீன்னா, ஒரு மின்மினிப் பூச்சியாவது சாப்பிடுறியா என்றதும் எனக்கு கோபம் வந்துவிட்டது. எனக்குத்தான் பூச்சி சாப்பாடெல்லாம் வேண்டாம் என்கிறேன். மேலும், மின்மினிப் பூச்சிகளை எல்லாம் மனிதர்கள் அழிச்சி ரொம்ப காலம் ஆச்சிங்கிறதுகூட உங்க அப்பாவுக்கு தெரியவில்லை. ஒரு சத்தம் போட்டதும், அப்படியே அந்த இடத்துலேயே தூங்க ஆரம்பித்துவிட்டார்.
ம்ம்ம். .. . எல்லாம் இப்ப கனவு போல இருக்கு.
அவர் போனபின் நான் மட்டும்தான் உங்களை கண்ணும் கருத்துமா பாதுகாத்து வளர்த்து வருகிறேன். உங்களுக்கான உணவு, குடிநீர் எல்லாத்தையும் நான்தானே ஊட்டி வளர்க்கிறேன். எனக்கு உதவி செய்ய வேறு யார் இருக்காங்க சொல்லு பார்ப்போம்.
உடம்பு சரியில்லாமல் போனால்கூட உதவிக்கு ஒருவருமில்லை. அப்படி இருந்தும் உங்களை யெல்லாம் ஒரு நாளாவது நான் பட்டினி போட்டிருப்பேனா? ஆனால் இந்த மனித குல அம்மாக்கள் மட்டும்தான் அவர்களின் பிள்ளையைப் பொறுப்போட வளர்க்குறதா சொல்லிக்கிறாங்க.
எங்களைப் போன்ற குருவி அம்மாக்கள் மட்டுமல்ல; இதோ நமக்கு மேல் உச்சிக் கிளையில் இருக்கும் பருந்து அக்கா இருக்கே, அதுவும் தன்னோட குஞ்சுகளை எப்படி கவனிச்சிக்கும் தெரியுமா?
“ ஆனால், அந்தப் பருந்து அக்கா ரொம்போ ஓவரா சீன் போடும்”.
சீன் போடுறதுன்னா என்னம்மா?
இலேசாக சிரித்தபடி கீச்சிட்ட அம்மாக் குருவி, கூடு கட்டுவதற்காக நானும் உங்க அப்பாவும் இடத்தைத் தேடிக் கொண்டு ஒரு நாள் ஒரு தமிழர் வீட்டு வாசல்படிக்கு அருகில் இருந்த உத்தரத்தின்மேல் அமர்ந்து கொண்டிருந்தபொழுது அந்த வீட்டு தொலைக்காட்சிப் பெட்டியில் ஒடிக் கொண்டிருந்த ஒரு திரைப்படத்தைப் பார்த்தபடி கொஞ்சம் இளைப்பாறினோம்.
அப்பத்தான் அதைக் கத்துக்கிட்டோம். அளவுக்கு அதிகமா நடிக்கிறதைத்தான் புள்ள அப்படிச் சொல்றாங்க. அது போகட்டும்.
அந்தப் பருந்து அக்கா இருக்கே, அது ரொம்போ மோசம் தெரியுமா? தரையில் வாழுகிற கோழி அக்காளோட குஞ்சிகளில் இரண்டை அப்படியே தூக்கிக் கொண்டு வந்துவிடும் .
பாவம் அந்தக் கோழி அக்கா. தன்னோட குஞ்சுகளைப் பறிகொசுத்துவிட்டு “கொக்கொக்கொக்கொக்” என்று கதறி அழுவதைப் பார்த்தால் பாவமா இருக்கும்.
இந்தப் பாழாய்ப்போன பருந்து அக்காவுக்கு எந்த நேரமும் அசைவ சாப்பாடுதான் பிடிக்கும். பெரும்பாலும் பழம், தானியம்னு எந்த சைவ சாப்பாட்டையும் விரும்பாது. என்னப் பிறவியோ அது?.
ஆனால், அது தன்னோட குஞ்சுகளை கொஞ்சும்.. . பாரு.. .; அந்த அளவுக்கு பாசத்தைக் காட்டும். தூக்கிக் கொண்டு வந்த கோழிக் குஞ்சுகளை துடிக்க துடிக்க பிய்ச்சி எடுத்து தன்னோட குஞ்சுகளுக்கு கொஞ்சி கொஞ்சி ஊட்டிவிடும்.
அந்தப் பருந்து அக்கா, உருவத்துல எவ்வளவு பெரிசா இருக்கு? இருந்தாலும் அப்படியே தலைகீழா குனிந்து, வளைந்து நெளிந்தெல்லாம் தன்னுடைய குஞ்சுகளுக்கு விளையாட்டு காட்டும். திடீர்னு மேலே பறந்து ஒரு குட்டிக்கரணம் போட்டு அப்படியே பந்தலில் பாய் விரிச்சமாதிரி தன்னோட பெரிய சிறகை விரித்துபடியே வேகமா வந்து கூட்டுல உட்கார்ந்து அப்படியே கூட்டை ஆட்டிவிடும்.
மரத்தின் உச்சியில் இருக்கும் குஞ்சுகெளெல்லாம் பயந்தபடி, “அம்மா” என்று அலறுவதைப் பார்த்து சிரிக்கும் பருந்து, பயப்படாதீங்க புள்ளைங்களா, சும்மா விளையாட்டுக்குத்தான் என்று ஓரக் கண்ணைக் காட்டியபடி சிரிக்கும். அதைப் பார்த்த பருந்து குஞ்சுகளும் ஆனந்தம் கொள்ளும்.
அந்தப் பருந்துக் குஞ்சுகளும் தங்களின் அம்மாவோட அன்பு மழையில் நனைஞ்சி ஆனந்தமா விளையாடுவதைப் பார்க்கும்பொழுது எனக்கும் சந்தோசமா இருக்கும்.
ஆனால், இந்தக் காக்கா அக்கா வெல்லாம் இருக்காங்களே, அவங்களோட பாசத்துக்கு அரவணப்புக்கும் ஈடே இல்லை புள்ள என்று சொன்னதும் குறிக்கிட்ட குருவிக் குஞ்சு,
ஏம்மா, அன்னைக்குத்தான் இந்த காக்கா அம்மாவையெல்லாம் பார்த்து திட்டுனீங்க; இன்னிக்கு அவங்கதான் ரொம்போ நல்லவங்கன்னு சொல்றீங்க. என்னம்மா இது? ஒண்ணும் புரியலியே என்று தடுமாறிய குஞ்சைப் பார்த்து.. ,
வாஞ்சையுடன் தன் சிறுசிறகை விரித்து அன்பு செலுத்தி கீச்சிட்ட சிட்டுக் குருவி, அதுவேறு, இப்பொழுது நான் சொல்ல விரும்பும் செய்தி வேறு என்று சொன்ன தாய்க்குருவியை வியப்புடன் நோக்கியது குஞ்சுக் குருவி.
இந்தக் காகமெல்லாம் எப்பொழுதும் சுத்தபத்தமா இருக்க மாட்டாங்க. இந்தப் பெரிய மரத்துல நாம எத்தனைக் குடும்பம் வசிக்கிறோம். அதைப் பத்தியெல்லாம் கொஞ்சம்கூட நெனச்சிப் பாக்காத இந்தக் காக்கா அன்றைக்கு செத்துப் போன ஒரு எலியை தூக்கிக் கொண்டு வந்து சாப்பிட்டுச்சு; நாற்றம் தாங்க முடியாமல் நாமெல்லாம் எவ்வளவு சிரமப்பட்டோம். நீங்களெல்லாம்கூட காற்று அடிக்கிற திசையப் பார்த்து உட்காந்துக்கிட்டீங்க; அப்படியும் நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை கீழே நிலத்தைப் பார்த்து சாய்த்து வைத்தபடி அப்படியே தூங்கிட்டீங்க. நான், மரத்து உச்சிக்குப் போயி பருந்து அக்காக்கூட கொஞ்சம் பேசிக்கிட்டு காக்கா அக்காவைப் பத்தி புகார் சொன்னேன்.
கேட்டுக் கொண்ட பருந்து அக்காவோ சிரித்ததேத் தவிர ஒன்றும் சொல்ல வில்லை. அப்படியே கொஞ்சம் வாடையெல்லாம் தணிந்தபின் நானும் கூட்டுக்கு வந்தேன். காகத்துக்குப் பிடிச்ச தெல்லாம் அழுகிப் போன மீன், இறந்த எலி, கோழிக் குடல் இதெல்லாம் விருப்பமான உணவா இருக்கும். அது, எதையாவது புடிச்சதை சாப்பிடட்டும். கவலையில்லை; ஆனால்..,
அக்கம் பக்கத்துல குடியிருக்கிறவங்களுக்கு தக்கபடி நடந்து கொள்ள வேண்டும் என்ற நாகரிகம், பண்பாடெல்லாம் அந்தக் காக்கா அக்காக்களிடம் இல்லை என்பதால அன்னைக்கு திட்டினேன் என்பது உண்மைதான்.
அதுக்கு நாம என்னதான் செய்வது?. அதுகளோட பழக்க வழக்கம் அப்படி இருக்கு என்று தொடர்ந்த தாய்க் குருவியை குஞ்சுக் குருவி இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது.
ஆனாலும், காகத்தோட தாய்ப்பாசத்துக்கும் மற்ற பறவைகளோட குஞ்சுகளையும் தன் குஞ்சுகளோட சேர்த்து அரவணைக்கும் தயாள குணத்துக்கும் இந்த உலகத்துல் யாருமே நிகர் இல்லை புள்ள என்று மகிழ்ச்சி பொங்க தன் குஞ்சைப் பார்த்து குருவி சொன்னது.
இந்தக் குயிலக்காவெல்லாம் இருக்காங்களே; அவங்களெல்லாம் பாக்கத்தன் ‘சிக்’கென கட்டுசிட்டா இருக்குறாங்களேத் தவிர அட்டை சோம்பேறிங்க. தான் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கணும்னா அடக்கமா ஒரு கூட்டைக் கட்ட வேண்டியதுதானே?
அந்த சோம்பேறி குயிலக்கா என்ன செய்யும் தெரியுமா?
காக்கா அக்கா அரும்பாடுபட்டு ஒரு அழகான கூட்டைக் கட்டி முட்டையிட்ட பின் இரையைத் தேடி எங்காவது போனா அந்த நேரம் பாத்து, இந்தத் திருட்டுக் குயிலக்கா உடனே அந்தக் கூட்டுல உட்கார்ந்து முட்டையை இட்டுட்டு அப்படியே ஒண்ணும் தெரியாததைப் போல பறந்து போயிடும். ஆனாலும் குயிலக்காவோட பாட்டு எனக்கு ரொம்போ புடிக்கும் புள்ள..
குறுக்கிட்ட குஞ்சு, ஆமாம்மா, அந்தக் குயிலம்மாவோட இசை எனக்கும் ரொம்போ புடிக்கும். நீங்க எங்கேயாச்சும் போயிட்டீங்கண்ணா, நான், அக்காள், தம்பி எல்லாம் அந்த குயிலம்மாவோட பாட்டைக் கேட்டுக் கொண்டே தூங்குவோம் என்று சொன்ன குஞ்சுக் குருவியை வருடிக் கொடுத்த தாய்க் குருவி.. .,
ஆமா புள்ள, சில சமயம் மனசுக்கு கவலையா இருந்தா, நானும் குயிலக்காவோட பாட்டைக் கேட்டு கொஞ்சம் ஆறுதல் பெறுவேன். அது போகட்டும்.
இந்தக் காகம் அக்காவை சும்மா சொல்லக் கூடாது. அது கட்டும் கூடு, ரொம்போ அழகாகவும் உறுதியாகவும் இருக்கும். துடைப்பக் குச்சி, இரும்புக் கம்பி இதையெள்ளாம் சேர்த்துக் கொண்டு அழகானக் கூட்டைப் பின்னும் தெரியுமா?
இரையைத் தேடிய பின்,கூட்டுக்குத் திரும்பும் காக்கா அக்காவுக்கு ஒண்ணு ரெண்டு தெரியுமா, அல்லது தன்னோட முட்டைக்கும் குயிலோட முட்டைக்கும் வேறுபாடு தெரியாதான்னு ஒண்ணுமே புரியல புள்ள. காகத்தோட முட்டை, ஒரு மாதிரியான வெளிர் பச்சை ஓட்டுமேல் கரும்புள்ளிகள் இருக்கும்.
சில சமயம் இந்த குயிலக்கா ஒரு போக்கிரித்தனம் பண்ணும் தெரியுமா?
காக்கா அக்கா இட்ட முட்டையில் ஒண்ணை கீழேத் தள்ளிவிட்டுடும். அதற்குப் பின் தன்னோட முட்டையை இடும். கடைசியில என்ன நடக்கும்? குயில் முட்டையையும் சேர்த்து அடைக்காக்கும் காகம், குஞ்சு பொறித்தபின் குயில் குஞ்சையும் சேர்த்தே வளர்க்கும்.
எந்த மனுச அம்மாவாச்சும் இப்படி இன்னொரு பெண்ணோட புள்ளையையும் தன்னோட புள்ளைங்ககூட சேர்த்து வளர்ப்பாங்களா?
அம்மான்னா சும்மா இல்லேடான்னு இந்த மனுசப் புள்ளைங்களெல்லாம் பாடிறாங்களே, சித்தியா இருக்கிற ஓர் அம்மா அல்லது வளர்ப்பு அம்மாவா இருக்குற அம்மா வெல்லாம் அந்தப் புள்ளைங்க மேலே எவ்வளவு கொடுமையைப் புரிவாங்க தெரியுமா?
சாடைப் பேச்சு, மறைமுகப் போக்கு, அடி, குத்து, எத்து, சூடு, பாவம் அந்தப் புல்லைங்க தலையைப் பிடிச்சு சுவத்துல மோதுறது, சுடு தண்ணீரை ஊற்றுவது, கொடுமைப் படுத்தி வேலை வாங்குவது அம்மம்மா சொல்லி மாளாது போ புள்ள. அவுங்க பாசமெல்லாம் அப்பொழுது மட்டும் எங்கே போவுமோ தெரியாது.
தன்னோட புள்ளைங்க மேல காட்டுற அன்புல கொஞ்சமாவது அந்தப் புள்ளைங்கமீதும் காட்டுனா, பாவம் பொழைச்சி போவங்கதானே? ஆனா, அதைப்போல எங்க நடக்குது.
காலங்காலமா பாம்பு கறி சமைச்சிப் போடுவது, பேய் புடுச்சிடுச்சின்னு சொல்லி ஏதாவது வம்பான காரியத்தை செய்து வீட்டைவிட்டு விரட்டுவது என்றெல்லாம் செய்யும் இந்த மனுச சித்திங்களும் மாற்றாந்தாய்களும் காக்கா அக்காங்க கிட்டகூட நெருங்க முடியாது.
இவங்களைப் போல மனசு காக்கா அக்காக்களுக்கும் இருந்துச்சுன்னா, உலகுத்துல ஒரே ஒரு குயில்கூட உருவாக முடியாது தெரியுமா?
இது வேறு குஞ்சைப் போல இருக்கேண்ணு காக்கா அக்கா வேறுபாடெல்லாம் பார்க்காது. தாய்ப் பாசத்துடன் எல்லாக் குஞ்சுகளுக்கும் சமமா இரையை பகிர்ந்து கொடுக்கும். கொஞ்ச நாள் ஆனபின் குயில் குஞ்சு பறந்துவிடும். அதோட, அது அசைவ சாப்பாட்டையும் மறந்துடும். குயில் கூட்டத்துல சேர்ந்த குயில் குஞ்சு, தன்னோட உண்மையான அம்மா யாருன்னே தெரியாமலே சொந்தமா வளர்ந்து ஆளாகும்.
நம் பறவை இனத்துல இப்படின்னா, விலங்கு அம்மாக்கள் மட்டும் என்ன குழந்தைப் பாசத்துல சளைச்சவங்களா என்ன?
ஒரு தடவை உன்னோட அப்பாக் குருவியோட வருத்தம் ஏற்பட்டதால நான் கோவிச்சுக்கிட்டு ரொம்ப தூரம் பறந்தேன். கடைசியிலே ஓர் அடர்ந்த காட்டில் இருந்த ஒரு மரத்துல போயி உட்கார்ந்தேன். அப்பாக் குருவியும் பின்னாலேயே வந்து என் பக்கத்துலேயே உட்கார்ந்தாரு. உடனே, கீழேப் பறந்து போயி எனக்கு ஒரு பூச்சியைப் புடிச்சிக்கிட்டு வந்து சாப்பிடக் கொடுத்தது. அதை வாங்கி சாப்பிட்ட எனக்கும் வருத்தம் போயிடுச்சு.
அந்த நேரத்துல நாங்க ரெண்டு பேரும் கீழேப் பார்த்து வியப்படைந்தோம், ஒரு பெரிய அம்மாப் புலி ரெண்டு மூனு குட்டிகளோட சோர்வா படுத்துருந்துச்சி. அப்பத்தான் குட்டிங்க பொறந்துருக்கு. பாவம், அந்த புலித் தாய்க்கு உதவி ஒத்தாசைக்குன்னு யாருமே இல்லை. உணவு, தண்ணீர் கொடுக்க ஒருவரும் இல்லை. அதோட சோடிப் புலியைக்கூட காணோம். அந்த நிலைமையிலும் பசியால செறுமிக் கொண்டிருந்த குட்டிகளை ஒவ்வொண்ணா அரவணைச்சு பால் கொடுத்துச்சி அந்தப் புலி அம்மா..
அம்மாப் புலியும்தான் தன்னோட இரத்தத்தைப் பாலாக்கி குட்டிக்கு கொடுக்குது. ஆனால், மனுச அம்மாக்கள் என்னவோ தாங்கள் மட்டும்தான் புள்ளைக்கு இரத்தத்தைப் பாலாக்கி புகட்டுவதைப் போல பெருமை பேசிக்களேன்னு வியப்பா இருக்கு.
சரி புள்ள, கதைக் கேட்டது போதும். நீ தூங்கு. நான் போயி ஏதாவது வயிற்றுப் பாட்டுக்கு ஏதாவது தேடிப்பார்த்துட்டு வருகிறேன். அதுவரைக்கும் நீங்கள் எல்லாம் பத்திரமா இருக்கணும் தெரியுதா?
குஞ்சுக் குருவி ‘டாட்டா’ காட்டுவதற்குள் தாய்க் குருவி சிறகு விரித்தது.
-நக்கீரன்