ஆலயங்கள், ஆன்மிக தலங்களாகவும் வழிபாட்டு மையங்களாகவும் மட்டுமே இருந்துவிடல் ஆகாது. அவை, சமூக மையங்களாகவும் பரிமாணம் பெற வேண்டும் என்று ஆன்மிக ஆன்றோர்களும் சமூக சான்றோர்களும் பன்னெடுங்காலமாகவே வலியுறுத்தி வருகின்றனர்.
அதற்கு இசைவாக, அண்மைக் காலமாக பெரும்பாலான ஆலயங்கள் கல்விக் கூடங்களாகவும் சமுதாய மையங்களாகவும் மெல்ல மெல்ல மாற்றம் கண்டு வந்த நிலையில், தற்பொழுது கொரோனா ஆட்கொல்லி கிருமியின் தாக்கத்தினால் மக்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதை உணர்ந்த ஆலயங்களின் நிர்வாகத்தினர் அந்தந்த ஆலய சுற்று வட்டாரப் பகுதி மக்களுக்கு உதவிக் கரம் நீட்டி வருகின்றனர்.
இதன்வழி, ஆலயங்கள் உண்மையிலேயே சமூக மையங்களாக உருமாற்றம் அடைந்து வருவதை மலேசியாவில் பரவலாகக் காண முடிகின்றது. இதனால், சம்பந்தப்பட்ட ஆலய சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த நலிந்த மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
குறைந்த வருமானம் பெரும் தரப்பினரும் அவர்களைவிட தினக்கூலித் தொழிலாளர்களை சார்ந்துள்ள குடும்பங்களும் கடந்த மார்ச் மாத பிற்பகுதியில் இருந்து வேலைவாய்ப்பின்மையால் அன்றாட வாழ்க்கைகே மிகவும் பரிதவிக்கும் நிலைக்கு ஆளாகி உள்ளனர்.
வேலை இல்லை; வெளியிலும் நடமாட முடியாத நிலையில் பள்ளிக்குச் செல்கின்ற பிள்ளைகளும் வீட்டோடு முடங்கி இருப்பதால் குடும்பத் தலைவிகள் மிகவும் இக்கட்டான நிலைமையை எதிர்கொண்டுள்ளனர்.
இப்படிப்பட்ட நிலையில் அரசாங்க தரப்பில் செய்யப்படும் உதவி சொற்ப அளவிலேயே இருக்கும் நிலையில், ஆலயங்களின் சார்பில் நல்கப்படும் சமூக உதவியால் மக்கள் சற்றே இளைப்பாறும் நிலையை எட்டுகின்றனர்.
அந்த வகையில், மலேசியாவில் தாய்க் கோயில் எனக் கருதப்படும் அருள்மிகு மாரியம்மன் ஆலய தேவஸ்தானத்தின் சார்பில் அதன் அறங்காவலர் டத்தோ ந.சிவக்குமார் நாட்டின் மையப் பகுதி மாநிலமான சிலாங்கூர் மற்றும் பாரம்பரிய தலைநகரான கோலாலம்பூரில் உள்ள குடியிருப்புப் பகுதிகளைச் சேர்ந்த ஏழைக் குடும்பங்களை அடையாளம் கண்டு சமையல் மற்றும் அடிப்படை உணவுப் பண்டங்களை தொடர்ந்து வழங்கி வருகிறார்.
இதுகாஃறும் ஏறக்குறைய 3,000 குடும்பங்களுக்கு டத்தோ சிவக்குமார் உணவுப் பொருட்களை வழங்கியுள்ளார்.
ஆலயங்களில் திருப்பணி செய்வது, வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்வது ஆகியவற்றுடன் அடித்தட்டு மக்களுக்கு நெருக்கடியான நேரத்தில் உதவிக்கரம் நீட்டுவதையும் இறைக் கடமையில் ஒரு கூறாகக் கருதுவதாகவும் ஏழை மக்களின் முகத்தில் புன்னகையைக் காண்பது மனதிற்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிப்பதால், இந்த சமூக நலத்திட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ளப்போவதாகவும் சிவகுமார் குறிப்பிட்டார்.
மாரியம்மன் தேவஸ்தானத்தின் பொறுப்பில் உள்ள கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் ஆலயம், பத்துமலை அருள்மிகு திருமுருகன் ஆலயம், கோலாலம்பூர் அருள்மிகு கோர்ட்டுமலை விநாயகர் ஆலயம் ஆகிய மூன்று பெரிய வழிபாட்டுத் தலங்களைச் சேர்ந்த நாதஸ்வர-தவில் கலைஞர்கள் 25 பேர், தற்பொழுது வருமானம் இன்றி சிரமப்படுவதால் அவர்களுக்கும் உதவி செய்யப்பட்டதாக சிவக்குமார் தெரிவித்தார்.
அதைப்போல சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் சார்பில் மாநில ஆட்சி மன்றத்தில் இந்திய சமுதாயத்தைப் பிரதிநிதிக்கும் கணபதி ராவும் மாநில அரசின் சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள அட்சயப் பாத்திரத் திட்டத்தின்வழி மாநிலத்திலுள்ள ஆலயங்களுக்கு மானியத் தொகை அளித்து வருகிறார்.
இவ்வாறு மானியத் தொகையைப் பெறும் ஆலய நிருவாகத்தினர் தங்களின் சொந்த முயற்சியில் திரட்டும் நிதியையும் சேர்த்து தத்தம் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நலிந்த குடும்பங்களுக்கு அன்றாடத் தேவைக்கான அடிப்படை உதவிகளைச் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் அண்மையில் சிப்பாங் மாவட்டம், சுங்கை பீளேக் என்னும் சிறு பட்டணத்தை ஒட்டியுள்ள அருள்மிகு அதிசய விநாயகர் ஆலயத்திற்கு கடந்த வாரத்தில் வருகை மேற்கொண்டு மானியம் அளித்ததுடன் அந்த ஆலயத்தின் தலைவர் சந்திரன், துணைத் தலைவர் ச.தயாளன் ஆகியோரின் முன்னெடுப்பில் ஏறக்குறைய 230 குடும்பங்களுக்கு ஏற்கெனவே உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதைப் பாராட்டினார்.
பொதுமக்களும் பக்தர்களும் இல்லையென்றால் ஆலயங்கள் வளர்ச்சி காண முடியாது. அப்படிப்பட்ட பக்தர்களுக்கு நெருக்கடியான நேரத்தில் உதவும் நல்லவர்களை பொறுப்பாளர்களாகக் கொண்டிருக்கும் அருள்மிகு அதிசய விநாயகர் ஆலயம் இன்னும் வளர்ச்சி காண வேண்டும் என்று கணபதி ராவ் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றும்போது சொன்னார்.
சிலாங்கூர் மாநில அரசின் உதவியுடன் அட்சயப் பாத்திரத் திட்டத்தின் மூலம் 10,000 குடும்பங்களுக்கு உதவும் திட்டம் தற்பொழுது துரிதமாக மேற்கொள்ளப்படுவதாகவும் கணபதிராவ் மேலும் சொன்னார்.
அதைப்போல பினாங்கு மாநிலத்தில் பிறை வட்டாரத்தில் தெலுக் இண்டா என்னும் பழைய தோட்டப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தின் சார்பிலும் இத்தகைய சமூக நலத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
ஆலயத் திருப்பணிக்காக சேமிக்கப்பட்ட 70,000 வெள்ளியைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த சமூக நலத்திட்டம், இன-சமய வேறுபாடின்றி அனைவருக்கும் மேற்கொள்ளப்பட்டதாக ஆலயத் தலைவர் த.வீரையாவும் செயலாளர் மு.ஞானசேகரனும் தெரிவித்தனர்.
இஸ்லாமிய மக்கள் நோன்பு நோற்கும் இந்த சமயத்தில் இந்தியர்கள் மட்டுமின்றி, மலாய் மக்கள், சீனர்கள், இந்தோனேசியர்கள் ஆகியத் தரப்பினருடன் மியன்மார் மக்களும் கலந்து கொண்டு பயன் அடைந்ததாக வீரையாவும் ஞானசேகரனும் தெரிவித்தனர்.
மொத்தத்தில் ஆலய நிர்வாகத்தினர் காலமறிந்து செய்யும் இந்த சமூக நலத்திட்டத்தால் ஆலயங்கள் சமூக மையங்களாக உருமாறும் அதேவேளை, எளிய மக்கள் பயன்பெறுவது இன்னும் சிறப்பானது.
அடுத்த வாரம் சந்திப்போம்.
அன்பன்
நக்கீரன்
கோலாலம்பூர்.
13-05-2020