அவர்கள் ‘ நன்றாக பேசக் கூடியவர்கள்… ‘அவர்களே’ எம்மை வழி நடத்தக்கூடியவர்கள்”
இந்த வரிகள் நாம் இன்று நேற்றல்ல, பல் வருடங்களுக்கு மேலாக எமது காதுகளை வந்தடைந்து தெறித்தவை. இன்றிலிருந்து சுமார் 60-65 ஆண்டுகளாக இவ்வாறான வார்த்தைகளை எமது ஈழத் தமிழ் மக்கள் ஒவ்வொரு தேரதல் காலங்களிலும் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதுண்டு.
இதற்கு காரணங்கள் பல இருந்தன.
அந்த நாட்களில் தமிழ்க் கட்சிகளின் வேட்பாளர்களாக தேர்தலில் குதிப்பவர்களில் பலர் சட்டவாதிகளாகத் தான் இருந்தார்கள். சட்டத்துறை என்பது அவர்கள் வரித்துக் கொண்ட ஒரு தொழில்.
ஒருவர் தான் ஒரு சட்டவாதியாவதற்கு ஏற்ற உயர் கல்வியை கற்பதற்கு அந்நாட்களில் மிகுந்த நிதி தேவைப்பட்டது. மற்றையது கல்வி அறிவு. இதனால் வசதி படைத்தவர்களே உயர் கல்வியைக் கற்று பின்னர் சட்டக் கல்வியை கற்று சட்டவாதிகளாக திகழ்ந்தார்கள்.
பின்னர் அவர்கள் தங்கள் சட்டத் தொழிலை மேற்கொண்டபோது, அவர்களின் வாதத் திறமையினால் பல வாடிக்கையாளர்களைத் தேடிக்கொண்டார்கள். தொடர்ந்;து அவர்களைச் சுற்றி ஒரு ‘பெரிய வட்டம்’ அமைந்து விடும்.
எங்கள் ஊரின் சட்டவாதிகள் அனைவருமே அந்நாட்களில்; ஆங்கிலப் புலமை அதிகம் கொண்டவர்களாக விளங்கினார்கள். சட்டத்துறையில் புகுந்த தாங்கள் வாதாடும் வழக்குகளில் வெற்றிகொள்பவர்களாக விளங்குகின்றவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்தது.
இவ்வாறாக சமூகத்தில் ஒரு ‘நட்சத்திர அந்தஸ்த்து’ அத்துடன் பொருளாதார வளம் ஆகியவற்றை கொண்ட ஒரு சட்டவாதிக்கு தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் இலகுவாகவே கிடைத்துவிடும். இந்த தகைமைகள் மட்டும் தான் எமது தமிழர் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இருக்க வேண்டும் என்று மட்டும் நாம் கூறவில்லை. அவர்களில் பலருக்கு சமூக அக்கறையும் இருந்தது.
இவ்வாறு, சமூக அக்கறையும் ஏனைய சாதகமான தகைமைகளும் கொண்டவர்கள் பொதுத் தேர்தல்களிலும் உள்ளுராட்சித் தேர்தலிகளிலும் போட்டியிடும் சந்தர்ப்பங்களைப் பெற்று வேட்பாளர்களாகத் மக்கள் முன்பாக தோன்றினார்கள். அவர்களிடம் மேடைப் பேச்சு மற்றும் ஆங்கிலப் புலமை ஆகியவை இருந்ததனால் அவர்கள் வெற்றியீட்டினார்கள். கட்சிகளின் தலைவர்களாகவும் உயர்ந்தார்கள்.
நாம் இந்த விடயத்தை இன்றை கதிரோட்டத்தில் எழுதுவதற்கு காரணங்கள் சில உண்டு.
அதில் ஒன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ‘பேச்சாளர்’ என்ற அந்தஸ்த்தைப் பெற்று நிற்கும் சுமந்திரன் அவர்களது சிங்கள மொழியில் வழங்கிய பேட்டி. இந்த ‘விடயம்’ இவ்வாரத்தின் எமது கதிரோட்டத்தில் முக்கியத்துவம் பெற்றிருப்பது ஒன்றும் வியப்பான விடயம் அல்ல. அது எம்மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்பு என்றும் நாம் கருதவேண்டியுள்ளது.
முன்னர் எல்லாம் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு பேச்சாளர்களாக ஒருவருமே இருக்கவில்லை. தலைவர் அமிர்தலிங்கம் கூட்டணி தலைவராக இருந்தபோது அவரே பேசிக்கொள்வார்;. பாராளுமன்றத்திலும் வெளிநாடுகளிலும், நீதி மன்றங்களிலும் அவருக்கு சிங்கம் பேசக் கூடியதா இல்லாவிட்டாலும் அழகிய ஆங்கிலத்தில் அவர் பேச, அது சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டு சிங்கள மக்களாலும் சிங்களத் தலைமைகளாலும் செவிமடுக்கப்பெற்றன.
ஆனால் தற்போது ‘சுமந்திரன்’ விவகாரம். தமிழ் மக்களுக்கு ஒரு “‘பேரிடி’ ஆகவே உள்ளது. இவர் நன்றாகப் பேசுவார். ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் நன்றாக பேசக் கூடியவர் என்று நாம் வழங்கிய நற்சான்றுகள், இன்று எமக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகின்றன என்பது தான் இப்போது எழுந்துள்ள கேள்வி.
சுமந்திரனைப் பொறுத்தளவில் அவருக்கு சிங்கள நண்பர் இருப்பதும் சிங்கள மொழியில் நல்ல ஆளுமை இருப்பதையும் நாம் பாராட்டலாம். மொழி ஆளுமை என்பது பாராட்டப்பட வேண்டியது.
ஆனால் அவரது கருத்துப் பகிர்வுகள், எமது மக்களின் காயங்களுக்கு மருந்து பூசுகின்றதாக இல்லையே என்பது தான் இப்போது உள்ள பிரச்சனையாகும்.
அவருடைய தனிப்பட்ட ஆளுமையும் கருத்துக்களும் எம் மக்கள் மீதும் எம் போன்ற பத்திரிகையாளர்கள் மீதும் திணிக்கப்பட வேண்டியதில்லை என்றே நாம் நினைக்கின்றோம்
அப்படியானால் அவர் தமிழ் மக்கள் சார்ந்த அரசியலுக்கு வராமால் தென்னிலங்கை கட்சிகள் சார்நத அரசியலில் ஈடுபட்டிருக்கலாம். அங்;கே அவருக்கு கிடைக்கின்ற வரவேற்புக்கு ஏற்;ற வகையில் அமைச்சுப் பதவிகள் கூட கிடைக்கலாம். அதற்கு காரணம் அவரது சிங்கள நண்பர்களாகவும் இருக்கலாம்.
ஆனால் எமக்கு ஒன்று மட்டும் வெளி;ப்படையாகவே தெரிகின்றது. ‘அவர்கள்’ நன்றாகப் பேசக்கூடியவர்கள் என்று நாம் வழங்கிய நற்சான்றுகளால் எமக்கு எதிர்காலத்தில் ஒரு பயனும் இலலாமல் போய்விடும் என்பதும் சுமந்திரன்; போன்றவர்களின் கனவுகள் சில வேளைகளில் நிறைவேறுகின்ற போது, நாம்; மீண்டும் தோற்கடிக்கப்பட்டவர்களாக தலைகளைக் குனிந்தவர்களாக இருப்போம் என்பதும்.