ஓய்வு நேரத்திலும் உள்ளம் களைப்பான வேளையிலும் திரைப்பட பாடல்களை விரும்பும் நேயர்தம் மனங்களை இன்றளவும் தென்றாலாக வருடும் பாடல்கள் ஏராளம். அவற்றுள் ஒன்றான ‘மாமா மாமா மாமா’ என்ற கூட்டுப் பாடலை டி.எம்.சௌந்தரராஜனுடன் இணைந்து பாடிய ஜமுனா ராணி மே 17-ஆம் நாளில் 83 வயதை எட்டுகிறார்.
பருவ வயதினருக்கான கடிவாளக் கருத்தும் பகடியும் கலந்த வண்ணம் குமுதம் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த கலகலப்பான பாடல் தலைமுறைகளைக் கடந்து இன்றைய இளம் இரசிகர்களைக்கூட முழுதாக கேட்க வைக்கும் ரசனைக் கொண்டது. இந்தப் பாடலுக்கு இசை அமைத்த கே.வி. மகாதேவன்தான், ஜமுனா ராணியின் குரல் வளத்தை நன்றாகப் பயன் படுத்திக் கொண்ட இசை அமைப்பாளர்.
கூட்டுக் குடும்ப வாழ்க்கைக் சுழலால் திருமண வாழ்வைத் தொலைத்தவர் இந்தப் பாடகி. பதினோரு ஆண்டுகளுக்கு முன் மலேசிய நண்பன் அலுவலகத்தில் இவரைச் செவ்வி கண்ட சமயத்தில் இதை மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார் கே. ஜமுனா ராணி.
திருச்சி லோகநாதன், டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எல்.ராகவன். பி.பி.சீனிவாஸ், கண்டசாலா, ஜே.பி.சந்திர பாபு, மொஹிதீன் பாய் உள்ளிட்ட பாடகர்களுடன் இணைந்து அன்பு, காதல், நையாண்டி, தாய்ப்பாசம் உள்ளிட்ட உணர்வையும் தத்துவ சிந்தனையையும் வெளிப்-படுத்தும் வண்ணம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், சிங்களம் ஆகிய மொழிகளில் பல்லாயிரக் கணக்கான பாடல்களைப் பாடியவர் இவர்.
1958-ஆம் ஆண்டில் கவிஞர் கண்ணதாசன் தயாரிப்பில் வெளியான மாலையிட்ட மங்கை என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘செந்தமிழ் தேன்மொழியாள்’ என்னும் புகழ்பெற்ற பாடலைப் பாடியவர் ஜமுனா. இதேப் பாடலை அப்படத்தின் நாயகர் டி.ஆர். மகாலிங்கமும் பாடியிருக்கிறார். ஆனால், ஜமுனாராணியின் அழுத்தமான தமிழ் உச்சரிப்பில் ஒலிக்கும் பாடல் நம்மை மெய்மறக்க வைக்கும். இத்தனைக்கும் இவர், தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்.
திரை இசையில் 1940-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதி முதல் ஐம்பதுகளின் தொடக்க காலம் வரை எம்.எல்.வசந்தகுமாரி, பி. லீலா. ஜிக்கி ஆகியோர் முன்னணிப் பாடகியராக இருந்தனர். 1950-களின் பிற்பகுதியில் பி. சுசீலா, எஸ். ஜானகி ஆகியோர் அறிமுகமாகி முன்னணிக்கு வர ஆரம்பித்தனர்.
இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலம்தான், ஜமுனா ராணி தன் மயக்கும் குரலோடு உலாவந்த வசந்த காலம். இனிமை, நளினம், மென்மை ஆகியவற்றின் கலவையோடு கேட்பவரைச் சொக்க வைக்கும் குரல் – இவரின் குரல்.
‘விடுதி நடனப் பாடல்கள்’ என்றாலே எல்.ஆர். ஈஸ்வரியின் குரல்தான் நம் எல்லோரின் மனக்கண்ணிலும் தென்படும். ஈஸ்வரிக்கு முன்பு இத்தகையப் பாடல்களை பாடிக் கொண்டிருந்தவர் ஜமுனாதான்.
அத்தகைய வேளையில் ‘மகாதேவி’ படத்தில் இடம்பெற்ற ‘சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே’ என்னும் மிக அருமையான தாலாட்டுப் பாடலை தாய்மை உணர்வு பொங்கப் பாடியவரும் இவரே; அதேப் படத்தில் இடம்பெற்ற இன்னொரு பாடலான ‘காமுகர் நெஞ்சில் நீதியில்லை’ என்னும் பாடலும் இவருக்குப் புகழைத் தேடிக் கொடுத்தது. ஆனாலும், இந்தப் பாட்டிற்கு ஒரு சுவாரசியமான பின்புலம் உண்டு.
இந்தப் பாடலை ஜமுனாராணியைக் கொண்டு பாட வைப்பதில் இசையமைப்-பாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்திக்கு விருப்பமில்லை. ஆனால், இந்தப் பாடலுக்கு ஜமுனா ராணியைப் பரிந்துரைத்த கவிஞர் கண்ணதாசனோ பிடிவாதமாக இருந்தார்.
“இந்தப் பாட்டை ஜமுனா பாடி… அது நன்றாக அமையாவிட்டால் இன்றைய செலவு முழுவதையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். நன்றாக அமைந்துவிட்டால் ஜமுனாவுக்கு சம்பளத்தை இரட்டிப்பாகக் கொடுக்க வேண்டும்” என்று பந்தயம் கட்டி ஜமுனா ராணியைப் பாடவைத்தார் கவியரசர்.
கவிஞரின் நம்பிக்கை பொய்க்கவில்லை.
இசை அமைப்பிற்குப் பின் பாடல் வெகு அற்புதமாக அமைந்து மெல்லிசை மன்னர்கள் இருவரும் மனம் குளிர்ந்தனர். ஜமுனாவிற்கு இரட்டிப்பு ஊதியமும் கிடைத்தது.
‘ராணி சம்யுக்தா’ படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் இவர் பாடிய ‘சித்திரத்தில் பெண்ணெழுதி’ என்னும் பாடல்; தெய்வப் பிறவி’யில் ‘தாரா தாரா வந்தாரா’, ‘காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு’ ஆகிய பாடல்கள்; மன்னாதி மன்னனின் ‘நீயோ நானோ யார் நிலவே’, ‘பாசமலரி’ல் ‘பாட்டொன்று கேட்டேன்’ ஆகிய பாடல்களெல்லாம் மெல்லிசை மன்னர்களான விசுவநாதன்-இராமமூர்த்தி இசையில் ஜமுனாவின் தேன்குரலில் தென்றலாக வந்து தீண்டியவை.
‘உத்தம புத்திர’னில் இடம்பெற்ற ‘யாரடி நீ மோகினி’ என்ற பாடல் ராக் அண்ட் ரோல் பாணியில் அமைந்தது. இசைச் சக்ரவர்த்தி ஜி. ராமநாதனின் இசையில் டி.எம்.எஸ் – ஜிக்கியுடன் இணைந்து இவரும் கலக்கி இருப்பார்.
1960-ல் வெளியீடு கண்ட ‘படிக்காத மேதை’ படத்தில் இடம்பெற்ற ‘பக்கத்திலே கன்னிப் பொண்ணிருக்கு’ என்னும் மருதகாசியின் பாடலை ஏ.எல். ராகவனுடன் சேர்ந்து ‘கண்பார்வை போடுதே சுருக்கு’ என்னும் வரியைத் தொடர்ந்து ஜமுனா போடும் சொடுக்கு… ஒருவித தனி இசை ரகம். அதைவிட அந்தப் பாடலில்
“நானிருக்கும் போது பயமெதற்கு” என்றும்
“நிம்மதியாய் நாமும் இருப்பதற்கு” என்றும்
ஏ.எல். ராகவன் பாடி முடித்ததும்
“ஒஹோஹ்”
என்று ஒருவித ரம்மியமான முறையில் ஜமுனா எழுப்பும் குரல் எப்பொழுதும் மனதைக் கவரக்கூடியது. ஜமுனாவின் அந்த ஓசைக்காகவே அந்தப் பாடலை திரும்பத் திரும்பக் கேட்கலாம்.
1962-இல் வெளிவந்த ‘பலே பாண்டியா’ படத்தில் மெல்லிசை மன்னர்களின் இன்னிசையில் பி.பி.சீனிவாசுடன் இணைந்து இவர் பாடிய ‘ஆதி மனிதன் காதலுக்குப் பின்’, ‘அத்திக்காய் காய் காய்’ பாடல்கள் இன்றளவும் பசுமையாக இவர் பெயரைச்சொல்லும் பாடல்களாக அமைந்துவிட்டன.
‘கொடுத்து வைத்தவள்’ படத்தில் சீர்காழி கோவிந்தராஜனுடன் இணைந்து ஜமுனாராணி பாடியிருக்கும் ‘பாலாற்றில் சேலாடுது’ என்ற அருமையான டூயட் பாடலை கே.வி. மகாதேவனின் இசையில் கேட்பவர்தம் மனம் தள்ளாடும் வண்ணம் பாடி இருக்கிறார்.
வேதாவின் இசையில் ‘சித்ராங்கி’ படத்தில் டி.எம்.எஸ்.- சுசீலாவுடன் இணைந்து ‘நெஞ்சினிலே நினைவு முகம்’ பாடலில் சோகத்தை அற்புதமாக வெளிப்படுத்தி இருப்பார் ஜமுனாராணி.
‘வளையாபதி’ படத்தில் இடம்பெற்ற ‘குலுங்கிடும் பூவில் எல்லாம்’ என்ற பாடலை டி. எம். சௌந்தரராஜனுடன் இணைந்து ஜமுனா பாடினார். எஸ்.தட்சிணாமூர்த்தியின் இசையில் வெளிவந்த இந்தப் பாடல்தான் ஜமுனா பாடிய முதல் ஜோடிப் பாட்டு.
இசை மேதை சி.ஆர். சுப்பராமனின் இசையில் ‘தேவதாஸ்’ படத்தில் சின்ன வயது பார்வதிக்காக இவர் பாடிய ‘ஓ தேவதாஸ்’ பாடல் இன்றளவும் காற்றலைகளில் பவனி வந்துகொண்டிருக்கிறது. ‘குலேபகாவலி’யில் ‘ஆசையும் என் நேசமும் ரத்த பாசத்தினால் கலங்குவதைப் பாராயடா’ என்னும் பாடலும் இவரை முன்னணிப் பாடகியர் வரிசையில் சேர்த்த பாடல்களில் ஒன்று.
அற்புதமான இந்தப் பாடகியின் குரலை காலவோட்டத்தில் திரை இசையில் யாருமே பயன்படுத்திக் கொள்ளவில்லை. கிட்டத்தட்ட மறந்துபோயிருந்த நேரத்தில் 1987-ல் இளையராஜாவின் இசையில் நாயகன் படத்தில் ‘நான் சிரித்தால் தீபாவளி’ பாடலை எம்.எஸ்.ராஜேஸ்வரியுடன் பாடினார். அதன் பிறகு ‘அண்ணன் என்னடா தம்பி என்னடா’ படத்தில் சந்திரபோஸ் இசையில் ஜிக்கியுடன் இணைந்து பாடிய பாடலுக்குப் பிறகு இந்த இசைக்குயிலின் குரலை கோடம்பாக்கம் பயன்படுத்திக்கொள்ளவில்லை.
சகோதரியின் பிள்ளைகளுக்கும் பேரப் பிள்ளைகளுக்கும் துணையாக இருக்கும் ஜிக்கி, அண்மைக் காலம் வரை இசை நிகழ்ச்சிகளைப் படைத்து வந்தார். மறைந்த பாடகி ஜிக்கியின் நெருக்கமான தோழியான இவர், ஜிக்கியின் பாடல்களையும் பாடி ரசிகர்களுக்கு ஜிக்கியை நினைவுப் படுத்தி வருகிறார்.
ஜிக்கி இன்று 83 வயதை எட்டினாலும் தமிழ்த் திரை உலகில் அவரின் குரல் என்றென்றும் இளமை குன்றாமல் வலம் வந்து கொண்டிருக்கும்.
-நக்கீரன்-மலேசியா.
நக்கீரன் – Nakkeeran 013-244 36 24