அரசியலில் தவறு இழைப்போரை அறமே கூற்றுவனாகி தண்டிக்கும் என்று ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரம் தெளிவாக உரைக்கிறது.
சங்க காலத்தில் இறைவன் அல்லது மன்னனையோத்தான் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பெரும்பாலான இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன. ஆனால், கணியனின்(சோதிடனின்) கூற்றை பொய்யாக்கி துறவறம் பூண்ட சேர இளவரசனான இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரம்தான், கோவலன் என்னும் சாதாரண வணிகக் குடிமகனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது.
அந்தக் காப்பியத்தில் பாண்டிய மன்னன், தன் மனைவியின் கால் சிலம்பு காணாமல் போன வழக்கு குறித்து முறையாக ஆராயாமல் தீர்ப்பு வழங்கியதால், பிழைப்பு தேடி வந்த கோவலன் கொல்லப்படுகிறான். அதன் விளைவாக, நெடுஞ்செழிய பாண்டிய மன்னனும் அவனது இல்லாள் கோப்பெருந்தேவியும் அரச சிம்மாசனத்தில் இருந்தவாறே மாள நேரிட்டது. அப்படியும் வஞ்சம் தீராத கண்ணகி, பாண்டிய மன்னனின் அரச நகரான மாமதுரை நகரையை தீக்கிரையாக்கினாள். அதற்கு, அந்த மாதரசியின் கற்பு வலிமை துணை நின்றதாக அந்தக் காப்பியம் சொல்கிறது.
அதைப் போல மலேசிய அரசியலில் சுயநல அரசியலையும் வஞ்சக அரசியலையும் அப்பட்டமாக மேற்கொண்ட துன் டாக்டர் மகாதீர் முகமது தானும் பிரதமர் பதவியை இழந்து, தன் மகனும் மாநில முதல்வர்(மந்திர் புசார்) பதவியை இழக்கக் காரணமாகி விட்டார்.
இந்த இடத்தில்தான் தத்துவ மேதை, பொறியியலாளர், தலைசிறந்த புலவர், தமிழின ஒற்றுமையை முன் மொழிந்த முதல் இலக்கியவானர்(சிலப்பதிகார பெருங்காப்பியத்தை சோழ நாட்டில் தொடங்கி, பாண்டிய நாட்டில் தொடர்ந்து சேர நாட்டில் நிறைவு செய்து, தமிழ் மக்களின் ஒற்றுமையை மறைமுகமாக வலியுறுத்தியுள்ளார் இலக்கிய கோமான் இளங்கோ அடிகள்), அறம் வளர்த்த அரன்மனைவாசி, துறவற வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்தவர், அரண்மனை வாழ்வை துச்சமெனக் கருதி மக்கள் நலம்பாடி வீதி உலா வந்த தமிழவேள் என்றெல்லாம் இன்னும் ஏராளமான பெருமைக்கும் சிறப்புக்கும் உரிய இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தில் பொதிய வைத்துள்ள அர(ரை)சியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்னும் சொற்றொடரை ஒப்பு நோக்க வேண்டி இருக்கிறது.
மலேசியத் திருநாட்டிலும் அப்படி அறம் பிழறிய அரசியலை தொடர்ந்தும் வல்லடியாகவும் மேற்கொண்டதனால் காலமகள் இரண்டவது முறையாக வழங்கிய பிரதமர் பதவியை தேவையின்றி இழந்ததுடன் தன் மகன் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீரும் பதவியை இழக்கக் காரணமாகி விட்டார் அவர். எல்லாவற்றுக்கும் மேலாக, அவர் தலைமைப் பொறுப்பு வகித்த பிரிபூமி கட்சியிலும் அவருக்கு இனி எந்தப் பொறுப்பும் இல்லையென்று தேசிய சங்கப் பதிவகம் இப்போது அறிவித்துள்ளது.
மலேசியா சுதந்திரம் அடைந்தது முதல் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய முன்னணி என்னும் அரசியல் கூட்டணிதான் நாட்டை தொடர்ந்து ஆண்டு வந்தது.
அந்த வகையில் அரசியல் சரித்திரம் படைத்தது மலேசியாவின் தேசிய முன்னணி. அந்தக் கூட்டணியை வழிநடத்தியதுடன் நாட்டில் அரசியல் நிலைத்தன்மைக்கு வழிவகுத்த மலாய் இனக் கட்சியான அம்னோ, உலக அரசியல் வரலாற்றில் சாதனைப் படைத்தது என்றால் அதில் மிகை இல்லை. உலகில், எந்த அரசியல் கூட்டணியும் ஒரு நாட்டை தொடர்ந்து அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்ததாக வரலாறு இல்லை.
மலேசிய இந்தியர்களின் தாய்க் கட்சியான மலேசிய இந்தியர் காங்கிரசும் அறுபது ஆண்டுகளாக அதிகாரக் கட்டிலில் பங்காளித்துவம் பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2018 மேத் திங்கள் 09-ஆம் நாள் நடைபெற்ற நாட்டின் 14-ஆவது பொதுத் தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்பி, தேசிய முன்னணிக்கு விடை கொடுத்து நம்பிக்கைக் கூட்டணி என்னும் புதிய அரசியல் அணியை ஆட்சி பீடத்தில் அமர்த்தினர்.
பொருள் விலையேற்றம், லஞ்சம் ஆகிய இரு அம்சங்களை வெறுத்த மலேசிய வாக்காளர்கள் பெரிய நம்பிக்கையுடன் புதிய ஆட்சிக்கு வழிவகுத்தனர். ஆனால், புதிய ஆட்சிக்கு தலைமையேற்றவரும் பிரதமருமான மகாதீர் முகம்மது, தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி செய்வதற்கு மாறாக முன்னுக்குப் பின் முரணாக பேசவும் செயல்படவும் ஆரம்பித்தார்.
பொது மக்கள் எதிர்கொண்ட அடையாள ஆவண சிக்கல், சாலைப் போக்கு-வரத்து சுங்க வரியை அகற்றுதல், உயர்க்கல்வி மாணவர்கள் எதிர்கொண்ட கடன் பிரச்சினை, விற்பனை சேவை வரி உள்ளிட்ட எத்தனையோ சிக்கல்களை தீர்ப்பதற்குப் பதிலாக.. ..,
நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று நினைக்கவில்லை. அதனால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து விட்டோம் என்றும் தேர்தல் கால வாக்குறுதி என்பது பைபிள் அல்ல என்றும் நாட்டின் நிதி நிலைமை இந்த அளவிற்கு மோசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றெல்லாம் பேசி மக்களை ஏமாற்றமான மனநிலைக்கு ஆளாக்கினார்.
அதைவிட, நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றினால் நான் இரண்டு ஆண்டுகளுக்குத்தான் பதவியில் நீடிப்பேன்; எனக்கும் வயது 90-க்கும் மேலாகி விட்டது; அதனால் ஈராண்டுகளுக்குப் பின் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிடம் பதவியை ஒப்படைப்பேன் என்று தேர்தல் காலத்தில் நறுக்கென்று சொன்ன மகாதீர், பதவிக்கு வந்ததும் அன்வாரிடம் பதவியை ஒப்படைப்பதற்குப் பதிலாக ஏதேதோப் பேசி வந்தார். வாய்ப்பு ஏற்படும்பொழுதெல்லாம் அன்வாரை மறைமுகமாக சாடியும் வந்தார்.
இப்படி நிலையில்லாத ஆட்சியாகவும் எந்த நேரமும் சண்டை ஓயாத அரசியல் பிணக்கு நிறைந்த ஆளுந்தரப்பாகவும் மக்களுக்கு சலிப்பையும் அலுப்பையும் தரக்கூடியதாக நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி நீடித்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 21-ஆம் நாள் நம்பிக்கைக் கூட்டணியில் இடம்பெற்று நான்கு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பிரதமர் பதவி மாற்றம் தொடர்பான ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கும்படி மகாதீரை மற்ற மூன்று கட்சிகளின் தலைவர்களும் வலியுறுத்தினர். இதை மகாதீரால் ஜீரணிக்க முடியவில்லை.
அதற்கு அடுத்த நாள் முதல் மலேசிய அரசியல் கொந்தளிக்கத் தொடங்கியது. மகாதீர் தலைமை வகித்த பிரிபூமி கட்சி ஆளும் கூட்டணியில் இருந்து விலகியது. மகாதீரும் பிரதமர் பொறுப்பில் இருந்து விலகினார். அவர் பதவி விலகியதை அடுத்து ஒருவேளை அன்வார் பிரதமர் ஆகிவிடுவாரோ என்ற அச்சத்தில் ஆளுந்தரப்பின் பெரும்பான்மையைக் குறைக்கும் விதமாகத்தான் மகாதீர் தலைமை ஏற்றிருந்த கட்சி ஆளும் அணியில் இருந்து விலகியதா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
ஆனால், மகாதீரையும் அவரின் மகனையும் தவிர அந்தக் கட்சியைச் சேர்ந்த மற்றவர்கள் எல்லாம் எதிரணியுடன் சேர்ந்து புதிய அணியைத் தொடங்கி, அந்த அணியின் சார்பில்தான் தற்பொழுது அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
பிரிபூமி கட்சியில் மகாதீருக்கு அடுத்த நிலையில் இருந்தத் தலைவரான் டான்ஸ்ரீ முகைதீன் யாசின்தான் இப்பொழுது நாட்டின் எட்டவது பிரதமராக இருக்கிறார். ஆனால், மக்கள் அளித்தத் தீர்ப்புக்கு மாறாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் அணி தாவியதன் விளைவாக கொல்லைப்புற ஆட்சியை அமைத்துள்ளதாக மக்களிடையே கருத்து நிலவுகிறது.
இதில், வேடிக்கை என்னவென்றால், இரு வருடத்திற்குள் மத்திய ஆட்சியும் மூன்று மாநில ஆட்சிகளும் மாறுவதற்கு காரணமாக இருந்த பிரிபூமி கட்சி, இன்னமும் நம்பிக்கைக் கூட்டணியில் இருக்கிறது என்று, இப்பொழுது மகாதீர் சொல்வதுதான்.
முன்னதாக 22 ஆண்டுகள் தேசிய முன்னணி சார்பில் பிரதமராக நாட்டை வழிநடத்திய இதே மகாதீர், 2003 அக்டோபர் 31-ஆம் நாள் பதவி விலகியபோது இவருக்குப் பின் அன்வார் பிரதமர் ஆகாதபடி எல்லா ஏற்பாட்டையும் செய்துவிட்டு துன் அப்துல்லா படாவியிடம் பிரதமர் பொறுப்பை ஒப்படைத்தார்.
ஐந்தாவது பிரதமரான படாவி, மகாதீரின் விருப்பப்படி செயல்படவில்லை என்பதால் அவரை நிம்மதியாக ஆள விடாமல் தொடர்ந்து அரசியல் சலசலப்பு செய்து வந்த மகாதீர், 2009 ஏப்ரல் 3-ஆம் நாள் நாட்டின் ஆறாவது பிரதமராக பதவி ஏற்ற டத்தோ நஜீப் துன் ரசாக்கையும் நிம்மதியாக நாட்டை வழிநடத்தி விடவில்லை.
மலேசிய தேசிய அரசியல் நீரோட்டம் மாறிய நிலையில், எதிரணி சார்பில் இதே மகாதீர் மீண்டும் ஏழாவது பிரதமராக வந்த பின்னும் நாட்டில் அரசியல் சலசல்ப்பிற்கு பஞ்சமில்லாமல் இருந்தது.
2003-இல் மகாதீர் பிரதமர் பொறுப்பில் இருந்து விலகியபோது அன்வார் சிறையில் இருந்தார். அதைப்போல 2018-இல் ஏழாவது பிரதமராக இவர் பொறுப்பு ஏற்றபோதும் அன்வார் சிறையில் இருந்தார்.
இப்பொழுது எட்டாவது பிரதமரையும் நிம்மதியாக ஆட்சி செய்யவிட மாட்டார் போலத்தெரிகிறது. அதேநேரத்தில் ஆட்சியை அநியாயமாகப் பறிகொடுத்து விட்டு கடந்த மூன்று மாதங்களாக எதிரணியாக மாறி இருக்கும் நம்பிக்கைக் கூட்டணியிலும் புகுந்து கொண்டு அந்த அணியிலும் இரண்டகம் செய்து கொண்டு எப்படியாவது அன்வாரை காலை வாரிவிடுவது என்ற குயுக்தி மனப்பான்மையில் இருக்கிறார் மகாதீர்.
அன்வார் இப்ராகிம் பிரதமர் பதவியை அடைந்துவிடக்கூடாது என்ற ஒற்றை இலக்கில் கடந்த கால் நூற்றாண்டாக வஞ்சக அரசியல் புரிந்து வருகிறார் மகாதீர். அரசியலில் தான் உயர வேண்டும் என்பதைவிட, அடுத்தவரை அடி அறுக்க முனையும் வஞ்சக அரசியல், இரு பக்கமும் கூர்மையான கத்தியைப் போன்றது.
அதனால்தான் தானும் பதவி இழந்து, தன் மகனின் மாநில முதல்வர் பதவியையும் துறந்து, கட்சிப் பொறுப்பும் இன்றி தனி மரம் என்னும் நிலைக்கு ஆளாகிவிட்டார் மகாதீர்.
அவர் இனியும் தன்னை மாற்றிக் கொள்ளாவிட்டால் இருக்கின்ற மற்றதையும் இழக்க நேரிடும்.
இதுதான் சிலம்பு காப்பியம் சொல்லும் அரசியல் நியதி!!.
-நக்கீரன்