கதிரோட்டம்- 22-05-2020
கொடிய ‘கொரோனா” என்னும் கிருமியினால் உண்டாகும் ‘கோவிட்-19 என்னும் ஆபத்தான நோயின் அபாயம் உலகெங்கும் சூழந்துள்ள இந்த வேளையில் உலகில் கனடா ஜேர்மனி இங்கிலாந்து போன்ற நாடுகளின் ஆட்சித் தலைவர்கள் தங்கள் முழுநேர வேலையாகவே மக்களின் நல் வாழ்வுக்காக தங்கள் ஒவ்வொரு நாளையும் அர்ப்பணிக்கின்ற நற்செய்திகள் எங்கள் காதுகளை வந்தடைந்த வண்ணம் உள்;ளன. அவற்றின் உண்மைத் தோற்றங்களை நாம் தொலைக் காட்சிகளில் பார்த்து மகிழந்து அந்தந்த தேசங்களின் தலைவர்களுக்கு எமது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றோம். இந்த வகையில் கனடாவில் வாழும் பல்லின மக்கள் நிதர்சனமாகவே நல்லதோர் ஆட்சியும் நல்லதோர் தலைவனும் எமக்கு கிட்டியுள்ளார். நல்லதோர் நாட்டில் நாம் வாழக்கிடைத்த வாய்ப்பு ஒரு பெரிய வரப்பிரசாதமே என்று மகிழ்ச்சி பொங்க வார்த்தைகளைப் பகிர்ந்து வருகின்றோம்.
இவ்வாறான நிலையில் இலங்கையில் அனைத்துமே தலை கீழாக உள்ளதோ என்று எண்ணுகின்ற வகையில் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் எமக்கு சஞ்சலத்தை ஏற்படுத்துகின்றன.
இலங்கையில் பொதுத்தேர்தலை விரைவாகவே நடத்தி, அதன் மூலம் தானும் தனது சகோதரர்கள் புடைசூழ அந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றி, அதன் மூலம் ஒரு இராணுவ ஆட்சியை நடத்தும் அங்கீகாரத்தைப் பெற்றுவிட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபாய இராஜபக்;ச ‘நோயின் பாதிப்பு வருவதற்கு முன்னரேயே எண்ணியபடி தனது காய்களை நகர்த்திக் கொண்டிருந்தார். ஆனால் கொரோனாவின் அகோரம் ஓங்கி எழுந்து நிற்கையில் அவரது எண்ணம் ஈடேறவில்லை.
இப்போது தேர்தலை நடத்தலாம் என்று ஜனாதிபதியும் அவரது சகாக்களும் கங்கணம் கட்டி நிற்கையில் தேர்தல் ஆணைக்குழு அதற்கு இணங்காமல் மறுப்புத் தெரிவித்து வந்தது. இதனால் கொரோனா என்று கூறி தேர்தலை ஒத்திவைக்க தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என ஜனாதிபதியின் செயலாளர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரோமேஸ் டி சில்வா, உயர்நீதிமன்றில் தெரிவித்தார்.
பொதுத் தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் பிரதம நீதியரசர் தலைமையிலான ஐந்து நீதியரசர்கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் நேற்று 4ஆவது நாளாகப் பரிசீலனைக்கு எடுக்கப்பட்ட போதே அவர் இந்த வாதத்தை முன்வைத்தார்.
தேர்தல் ஆணையக்குழு தொடர்ந்து தேர்தலை ஒத்திவைக்க முடியாது.கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகக் கூறி, தேர்தல் ஆணைக்குழு ஒரு சுகாதாரப் பாதுகாப்பு முறையை வகுத்து தேர்தல்களை நடத்த கவனம் செலுத்தவேண்டும். என்று அவசரப்படுத்தும் வகையில் தனது வாதங்களை ஜனாதிபதியின் சார்பாக எடுத்துரைத்தார்
ஆனால், சர்வதிகார போக்குக்கு எதிராக ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில், முன்னர் நிறுவப்பட்ட சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுக்களின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்கின்ற அதே வேளையில், இதன் நடுநாயகமாக தேர்தல் ஆணையகமும், அதன் மூன்று அங்கத்தவர்களும் செயற்படுவதை இலங்கையில் மட்டுமல்ல உலக நாடுகளே அவதானிக்கின்றன.
மேற்படி மூன்று அங்கத்தவர்களில் ஒருவரான, பேராசிரியர் ரத்னஜீவன் ஹ_ல் எந்தவொரு கட்சிக்கும் சார்பாக செயற்படவில்லை என்று தெரிந்தும் ஜனாதிபதியின் அணியினர் அவர் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றார் என்று கூறிவருவதைக் காணமுடிகின்றது நாடு திரும்பியுள்ள, பேராசிரியர் ரத்னஜீவன் ஹ_லின் புதல்வி, தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார். இதை ஒரு சாட்டாக வைத்துக்கொண்டு, ரத்னஜீவன் ஹ_லின் மீது புதிய அழுத்தங்கள் செலுத்தப்படுகின்றன. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற பயணத்தில் வீதி தடைகளில் அவருக்கு தொல்லைகள் பல கொடுக்கப்பட்டுள்ளன. அவரையும் 21 நாள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கி முடக்க அரசாங்கம் திட்டமிடுவதாக தெரிகிறது.
இவற்றையெல்லாம் பார்க்கையில் கோட்டபாய அணியினருக்கும் உடனடித் தேவைகள், தேர்தலில் வெற்றி, நீண்ட கால ராஜபக்ச ஆட்சியை உருவாக்கி மகிழ்தல், சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலைமையை திணித்து மறைமுகமான இராணுவ ஆட்சியை நடத்துவது. இவைதான் இந்த தேர்தல் ‘ஆசை’ க்கு பின்னால் உள்ள இரசசியம் என்று தான் கருதவேண்டியுள்ளது.