-நக்கீரன்- கோலாம்பூர்
மலேசியத் தமிழ் நாளிதழ் வட்டத்தில் ‘ரேடியோ பாலா’ என்று வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட இரா. பாலகிருஷ்ணன், மலேசிய அரச வானொலியான ஆர்.டி.எம். மின்னல் பண்பலை வானொலியை சிற்பி சிலையை செதுக்குவதைப் போல பார்த்துப் பார்த்து செப்பம் செய்தவர்.
அந்த நல்ல மனிதருக்கு மேத் திங்கள் 25-ஆம் நாள் நினைவு நாள்.
அரச வானொலித் தமிழ்ப் பிரிவின் தலைவராக இவர் செயல்பட்ட காலத்தில் ஆங்கிலச் சொற்களையும் கிரந்த(சமற்கிருத) சொற்களையும் தவிர்த்து நல்ல தமிழில் உரையாட ஒலிபரப்பாளர்களை ஊக்குவித்தார்.
1960-ஆம் ஆண்டில் மலேசிய அரச வானொலியில் நிகழ்ச்சி உதவியாளராக பணியில் அமர்ந்த இரா. பாலகிருஷ்ணன், அதே காலக் கட்டத்தில் மலாயாப் பல்கலைக்கழத்தின் தமிழ்ப் பிரிவில் விரிவுரையாளராகவும் சுமார் பத்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்தார்.
வானொலி நிலையப் பணியில் படிப்படியாக உயர்ந்த பாலா, அதன் நிர்வாகத் தலைவராக உயர்ந்த பின் அரசத் தமிழ் வானொலி பிரிவு மறுமலர்ச்சி காண்பதற்கு பலவகையாலும் தன் பங்களிப்பை ஆற்றினார்.
இந்த உலகில் 24 மணி நேர தமிழ் ஒலிபரப்பை வழங்கிவரும் ஒரே வானொலி நிலையம் மலேசிய அரச வானொலிதான். இதன் தொடர்பில் ரேடியோ பாலா ஆற்றிய பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. ஐநா மன்றத்தின் யுனெஸ்கோ அமைப்பு, ஆசிய – பசிபிக் ஒலிபரப்பு பயிற்சிக் கழகத்தின் தலைவராக இரா. பாலகிருஷ்ணனை நியமித்து அவரை பெருமைப் படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மலேசிய இந்தியர் காங்கிரஸ் இயக்கத்தின் மேநாள் தலைவர்களான துன்.வீ.திருஞான சம்பந்தன், டான்ஸ்ரீ மாணிக்க வாசகம், மேநாள் துணைத் தலைவரான ‘மக்கள் தலைவர்’ டான்ஸ்ரீ எஸ்.சுப்ரமணியன், மேநாள் உதவித் தலைவரான டத்தோ கு.பத்மநாதன் ஆகியோருடன் அணுக்கமாக நட்பு பாராட்டிய இரா. பாலகிருஷ்ணன் பத்திரிகைத் துறை ஜாம்பவானான ஆதி.குமணன், டான்ஸ்ரீ எஸ்.சுப்ரமணியன் ஆகியோருடன் இணைந்து மலேசியத் தமிழ் நாளிதழ்களின் வளர்ச்சிக்கு தூணாகத் திகழ்ந்தவர்.
இத்தகைய சிறப்புகளுக்கு சொந்தக்காரரான பாலகிருஷ்னன், மலேசியத் தமிழர்தம் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்றிருப்பார் என்பது திண்னம்.