-நக்கீரன்-கோலாலம்பூர்.
தமிழகத் தமிழர்களுடனும் மலேசியத் தமிழர்களுடன் தொப்புள்கொடி உறவு கொண்டு நட்பு பாராட்டியவரும் இலங்கை தோட்டத் தொழிற்சங்கத் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டைமான இளம் வயதிலேயே அகால மரணமுற்றது உலகத் தமிழர்களை துயரில் ஆழ்த்தியுள்ளது.
1964-இல் பிறந்த ஆறுமுகன் தொண்டமான், தன் தாத்தா, தந்தை ஆகியோர் வழியைப் பின்பற்றி தோட்டத் தொழிலாளர் நலனில் கொண்டிருந்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்வழி அரசியலில் நுழைந்த இவர், 1990 முதல் பொது வாழ்வில் தன்னை இணைத்துக் கொண்டவர். தொடந்து அந்த இயக்கத்தில் நிதிச் செயலராகவும் தொடர்ந்து பொதுச் செயலராகவும் உயர்ந்தார்.
1994 முதல் இலங்கை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து உறுப்பியம் பெற்றுவந்த இந்தத் தலைவர் 55 வயதிலேயே இறக்க நேரிட்டது, இலங்கைத் தமிழர்களுக்கு குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களுகு பெரும் இழப்பாகும்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மேநாள் தலைவரும் மேநாள் அமைச்சருமான சௌமிய மூர்த்தி தொண்டைமானின் பெயரனுமான ஆறுமுகம் தொண்டைமான் மே 26, செவ்வாய்க்கிழமை உடல் நலக் குறைவு காரணமாக இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றத்தைத் தோற்றுவித்தவரும் அதன் நிறுவனத் தலைவருமான சா. ஆ. அன்பானந்தன், நீர்மூழ்கிக் கப்பல் பொறியியலாளரும் ஹிட்லரையே மன்னிப்பு கேட்கவைத்த வீரத்தமிழருமான செண்பகராமன் ஆகியோரின் நினைவு நாளில் ஆறுமுகம் தொண்டைமானும் இணைந்து கொண்டார் போலும்!