மலேசிய – இந்திய செம்பனைநெய் வர்த்தகம்:
சீர்குலைத்த முன்னாள் பிரதமர்
சீர்செய்த இந்நாள் பிரதமர்
நக்கீரன்
கோலாலம்பூர், மே:28
மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக உறவு நெடிய வரலாற்றைக் கொண்டது. அந்தப் பாரம்பரியம் சிந்தாமல் சிதறாமல் இன்றளவும் தொடர்கிறது; இருநாட்டுத் தலைவர்களும் வழிவழியாக ஆற்றிவரும் பங்களிப்பு, இரு நாடுகளிலும் நிலவும் உள்நாட்டு அரசியலைக் கடந்து கோலாலம்பூருக்கும் புதுடில்லிக்கும் இடையே நீடிக்கும் தூரதக ஒருங்கிணைப்பு; சுமூகமான இருதரப்பு அரச உறவெல்லாம் இதற்குக் காரணம்.
இவற்றையும் கடந்து மலேசியாவின் முதல் நிலை வர்த்தகப் பங்காளியாக இந்தியா தொடர்ந்து பங்காற்றி வருகிறது. அதன் அடிப்படையில், இந்தியாவிற்குத் தேவையான சமையல் நெய்த் தேவையை ஈடுகட்டும் வகையில் செம்பனை கச்சா நெய்யை இந்தியா தொடர்ந்து இறக்குமதி செய்து வந்தநிலையில், கடந்த நான்கு மாதங்களாக அதில் தேக்க நிலை ஏற்பட்டது.
அப்போதைய பிரதமர் துன் டாக்டர் மகாதீர், இந்தியாவை அடுத்தடுத்து சீண்டி வந்த நிலையில் இந்தியா காதும் காதும் வைத்தமாதிரி, உலகின் முதல் செம்பனை உற்பத்தி நாடான இந்தோனேசியா பக்கம் தன் கவனத்தைத் திருப்பியதுடன் மலேசியாவிலிருந்து செம்பனை நெய் இறக்குமதிக்கு மறைமுகத் தடையை விதித்தது.
அந்த முறுகல் நிலையை தற்போதைய பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் இலாவகமாக தீர்த்து வைத்ததுடன், இரு நாடுகளுக்கு இடையேயான செம்பனை கச்சா நெய் வர்த்தகத்தை பழைய நிலைக்கு கொண்டு சென்று, இரு நாடுகளுக்கும் இடையிலான பழைய வர்த்தகத்தை சீர்செய்து நிலைநாட்டி உள்ளார்.
கொடிய ஆட்கொல்லி கிருமியான கொரோனா பாதிப்பு தொடர்பில் நாடே நடமாட்டக் கட்டுப்பாட்டு சூழலில் இருந்த நெருக்கடியான வேளையிலும் மலேசியாவிற்கான இந்தியத் தூதரகத்தின் மூலம் காய்நகர்த்தி குறுகிய காலத்திலேயே இரு நாடுகளுக்கான செம்பனை வர்த்தகத்தை பழைய நிலைக்கு கொண்டு சென்றதன்வழி முகைதீன் தன் ஆளுமையை மறைமுகமாக பறைசாற்றியுள்ளார்.
இடையில் ஏற்பட்ட சிக்கலுக்கான தொடக்கப்புள்ளி கடந்த செப்டம்பர் மாதம் ஐநா மன்றத்தில் தொடங்கியது.
இந்தியாவின் பாஜக அரசு, இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை அகற்றியதன் தொடர்பில் மகாதீர் தெரிவித்த கருத்து புதுடில்லையை மெல்ல சூடாக்கியது.
இந்தியாவின் காஷ்மீர் பிரச்சினை, குரங்கு பிறக்கும்போதே வாலுடன் பிறந்த கதையாக இன்றளவும் தொடர்கிறது. அந்தச் சிக்கல் பவள விழாவை எட்ட இருக்கும் தற்போதைய சூழலில், அந்தச் சிக்கல் நீடிப்பதற்கு இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருதான் காரணம் என்று காங்கிரஸ் எதிர்முகாமைச் சேர்ந்தவர்கள் விமர்சிப்பதுண்டு.
நேருவிற்குப் பதிலாக ஒருவேளை, வல்லப பாய் பட்டேல் பிரதமராக இருந்திருந்தால், அவர் சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் மற்றும் துணைப் பிரதமர் என்னும் வகையில் ஹைதரபாத் சுல்தானான நிஜாமுதீனை அடக்கி ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேசம் உருவாகக் காரணமாக இருந்ததைப் போல, காஷ்மீர் பிரச்சனைக்கும் அப்போதேத் தீர்வு கண்டிருப்பார் என்று சொல்லப்படுவதுண்டு.
நேருவோ, முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருந்த காஷ்மீரை இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில் ஆண்டவர் இந்து மன்னர் என்னும் அடிப்படையில் அவர் இந்தியாவுடன் இணைய விரும்பினாலும் பெரும்பான்மை மக்களின் கருத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் சிறப்பு அதிகாரத்தை அளித்தார். அதற்கு ஏதுவாக அரசியல் சட்டத்திலேயே வகை செய்தார். அதுதான், 370-ஆவது அரசியல் சட்டப்பிரிவு.
அதேவேளை, நேரு திறமை இல்லாதவர் என்று பொருள் கொண்டுவிடக் கூடாது. சமதருமக் கொள்கையையும் சோசலிச பொருளாதாரத்திலும் நம்பிக்கைக் கொண்டிருந்த நேரு, ஜனநாயக மாண்மைப் போற்றும் வகையில்தான் அந்த ஏற்பாட்டைச் செய்தார்.
ஆனால், அவரின் போதாத காலம் பாகிஸ்தானின் தந்தை முகமது அலி ஜின்னாவிற்குப் பின் அந்த நாட்டில் ஜனநாயக ஆட்சியை பாகிஸ்தானிய இராணுவம் தொடர்ந்து தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கத் தொடங்கிவிட்டது. பல வேளைகளில் இராணுவ ஜெனரல்களே புரட்சி செய்து பாகிஸ்தானை ஆண்டுள்ளனர்.
ஜியா வுல் ஹக், அப்போதைய பிரதமர் புட்டோவை வீழத்தியதுடன் உலக நாடுகளின் கருத்தை துச்சமெனக் கருதி அவரைத் தூக்கிலுமிட்டார். அண்மையில்கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் நவாஸ் செரீப்பை சிறைப்படுத்தி இராணுவ ஆட்சியை நடத்தியவர் ஃபெர்வேஸ் முஷாரஃப் என்னும் இராணுவ ஜெனரல்.
இவ்வாறாக தொடர்ந்து இராணுவத்தின் மேலாண்மை இருப்பதால், இந்திய-காஷ்மீர் எல்லையில் கடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கிறது வன்முறை கலந்த தீவிரவாதப் பிரச்சினை. இரு நாடுகளுக்கிடையே போர்களும் மூண்டுள்ளன.
இந்த நிலையில்தான், நாடாளுமன்றத்தில் தனக்கிருக்கும் வலுவான பெரும்பான்மையைப் பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்தையும் பொருட்படுத்தாமல் காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் தரும் 370-ஆவது அரசியல் சட்டப்பிரிவை அகற்றியதுடன் ஃபரூக் அப்துல்லா, மெக்பூபா உள்ளிட்டத் உள்ளூர் தலைவர்களையும் வீட்டுச் சிறைப்படுத்தி அங்கு ஊரடங்கு சட்டத்தையும் நடைமுறைப்படுத்தினார் பிரதமர் மோடி. தகவல் சாதனமும் முடக்கப்பட்டது.
இது குறித்துதான் மகாதீர் கருத்து தெரிவித்தபோது, காஷ்மீரில் பெரும்-பான்மையாக வாழும் முஸ்லிம் மக்கள்மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்-படுகிறது என்றும் ஐநா தலையிட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
அடுத்து மோடி கொண்டு வந்த குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்தும் கருத்து சொன்ன மகாதீர், இந்தியாவில் வாழும் முஸ்லிம் மக்கள்மீது பாகுபாடு காட்டப்படுகிறது என்றார்.
உண்மையில், இதற்கும் வெகுகாலத்திற்கு முன்பிருந்தே மகாதீர்மீது இந்தியா அதிருப்தி கொண்டிருந்தது. நிந்தனை சமயப் பிரச்சாரகரான ஜாஹிர் நாய்க்கிற்கு நிரந்தரக் குடியுரிமை அந்தஸ்து அளித்ததுடன் இந்தியாவில் சட்ட விரோத நாணயப் பரிமாற்றம், தீவிரவாதம் உள்ளிட்ட வழக்குகள் குறித்து தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட நிலையிலும் அவரை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பாதது குறித்து இந்தியா சினத்தை வெளிப்படுத்தாமல் அமைதி காத்து வந்தது.
இவ்வாறாக, அடுத்தடுத்து இந்திய நடுவண் அரசை மகாதீர் கோபப்படுத்தி வந்ததால், வேறு வழியின்றி இந்தியா இந்த முடிவுக்கு வந்தது. அப்போதுகூட சளைக்காத மகாதீர், இந்தியா அப்படி முடிவெடுத்தால் இது குறித்து பன்னாட்டு வர்த்தகத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுப்பேன்; என் மனதில் பட்டதைச் சொன்னேன் அவ்வளவுதான்; தவிர, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், மியன்மார், வியட்நாம், எத்தியோப்பியா, சௌதி அரேபியா, எகிப்து, அல்ஜீரியா, ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தகத்தைப் பெருக்கி இந்தியாவுடனான வர்த்தக இழப்பை ஈடுகட்ட முடியும் என்றெல்லாம் கொக்கரித்தார்.
அதற்குள் அவர் தனக்குத் தானே கண்ணி வைத்துக் கொண்டதைப் போல அன்வாருக்கு பிரதமர் பதவியை சொன்னபடி விட்டுத்தர மனமின்றி என்னென்னவோ சொல்லி, ஏதேதோ செய்து நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியை சிதைத்து விட்டார். தானும் கவிழ்ந்து போனார்.
எல்லாவற்றையும்விட, மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பி, நம்பிக்கையுடன் நம்பிக்கைக் கூட்டணியை ஆட்சியில் அமர்த்தினர். அதற்கு பலனாக, அந்த வாக்காளர்கள் மனதிலும் அவநம்பிக்கையை விதைத்தார் மகாதீர்.
தான் பிரதமராக துணை நின்ற ‘மக்கள் நீதிக் கட்சி’, ‘ஜனநாயக செயல் கட்சி’ ஆகிய இரு கட்சிகளையும் சிதைத்த மகாதீர்.. ., நம்பிக்கைக் கூட்டணி பெயரில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த மகாதீர்.. ., பெரும்பாலான தரப்பினருக்கு அவநம்பிக்கையைத்தான் பரிசளித்தார்.
தற்பொழுது நாட்டின் தேசிய அரசியல் புதிய கோணத்தில் பயணத்தைத் தொடங்கிவிட்ட நிலையில், பிரதமர் முகைதீன் சிர்கெட்ட ஒரு வர்த்தகப் பாதையை கச்சிதமாக செப்பம் செய்துவிட்டார்.
இதனால், தடுமாறிக் கொண்டிருந்த மலேசிய செம்பனைத் தொழில் பிடு நடை போடத் தொடங்கியுள்ளது. செம்பனை கச்சா நெய் டன்னுக்கு 2,400 வெள்ளியை எட்டும் என்று சந்தை மதிப்பீட்டாளர்கள் கணித்திருப்பது அதற்கு சான்று!.
நக்கீரன் – Nakkeeran 013-244 36 24