*-நக்கீரன்* – மலேசியா
ஈழ தேசத்தில் தோன்றி தமிழகத்தில் வாழ்வைத் தொடர்ந்து மலேசியத் திருநாட்டில் மையம் கொண்டு உலகத் தமிழர்களை இணைத்ததுடன் தாய்மொழி உணர்வை உயிரணையக் கருதும் பிரெஞ்சு மொழி மக்களின் தாக்கம் நிலவும் புதுவை மண்ணில் தன் வாழ்வை நிறைவு செய்த தமிழ்த் திருமகன் இர. ந. வீரப்பனார்.
இலங்கையின் மலையக மண்டலத்தில் 1930-ஆம் ஆண்டில் இரத்தினம் – நடேசன் இணையரின் புதல்வராகத் தோன்றிய இர.ந. வீரப்பனார், தமிழர்கள் தங்களின் பெயரில் தலையெழுத்தாக தந்தையின் பெயருடன் தாயின் பெயரையும் இணைத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வை உலகத் தமிழர் மத்தியில் ஏற்படுத்திய நற்றமிழர் இவர்.
உலகம் சுற்றும் வாலிபன் என்னும் திரைப்படத்தில் நான்கைந்து நாடுகளில் சுற்றியிருப்பார் அந்தப் படத்தின் நாயகன் எம்.ஜி.ஆர். உண்மையில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அந்தந்த நிலத்தில் வாழும் தமிழர்களிடம் உறவு பாராட்டியதுடன் இன-மொழி ஆய்வுப்பணியை பேரளவில் மேற்கொண்டு ஆவணப்படுத்தியவர் வீரப்பனார்.
உலக அளவில் தமிழர் பரந்து வாழும் எல்லையைக் கண்டறியும் வேட்கையைக் கொண்டிருந்த இவர், உலகத் தமிழரிடையை ஒருங்கிணைப்பையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தும் நோக்கில் அரசியல் கலப்பற்று உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தைத் தோற்றுவித்ததுடன் அதன் நிறுவனத் தலைவராகவும் மலேசியத் தலைவராகவும் பாரிய பாங்கில் செயல்பட்டவர்.
அதனிலும் குறிப்பாக, மலேசியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் இன்றைய செம்மாந்த நிலைக்கு அடியும் ஆதாரமுமாக இருந்த தமிழாராய்ச்சியாளர் இவர்.
பயண நூல், சிறுகதை, ஆராய்ச்சிக் கட்டுரை, தமிழாய்வுப் பணி, இலக்கிய நாடகம், தமிழர்தம் மொழிப் போராட்டம், உலகத் தமிழ்ப் பண்பாட்டுத் தொடர்பு என்றெல்லாம் 40-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றிய வீரப்பனார், ஒரு தலைசிறந்த இலக்கியப் படைப்பாளர்.
கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகத் தமிழர் குரல் என்னும் பருவ இதழை நடத்திய இவர், பத்திரிகை ஆசிரியராக உருவாகுமுன் பள்ளி ஆசிரியராக விளங்கியவர். உண்மையில், இர.ந. வீரப்பன் ஒரு நல்லாசிரியத் திருமகன். மலேயாவின் ஈச்ச மரத் தோட்டத் தமிழ்ப்பள்ளி, தென்னை மரத் தோட்டத் தமிழ்ப்பள்ளி, இரசாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி, கிள்ளான் மிட்லேண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பந்திங் சுங்கை சோ தமிழ்ப்பள்ளி, காப்பார் நகரத் தமிழ்ப்பள்ளி உள்ளிட்ட தமிழ்ப் பள்ளிகளில் எல்லாம் பணியாற்றி ஓய்வுபெற்ற பின்னரும் தமிழ்ப் பற்றாலும் சமூகக் கடப்பாட்டாலும் இடைநிலைப் பள்ளியில் தமிழ் பயிற்றுவிக்கும் தொண்டை சேவை அடிப்படையில் தொடர்ந்தவர் இவர்.
இவரின் தமிழ்த் தொண்டையும் தமிழ்ப் பற்றையும் பறைசாற்றும் வண்ணம்
தமிழகக் கவிஞர் கதிர் முத்தையனார், இலண்டனைச் சேர்ந்த சுரதா முருகையன் ஆகியோர் நூல் சமைத்துள்ளனர். அத்துடன், இவரின் மகள் முல்லை நாகராசுகூட ‘இர.ந.வீரப்பனார் வாழ்வும் வரலாறும்’ எனும் நூலை எழுதியுள்ளார்.
ஆனாலும் வீரப்பனார் இயற்றிய உலகத் தமிழர், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்க வரலாறு, மலேசியத் தமிழர்கள், இலக்கிய இதயம் போன்ற நூல்களே அவரின் பெருமையை இன்னும் வலுவாக முழங்க வல்லன. இதனிலும் மேலாக, இன்றைய அளவில் உலகத் தமிழரிடையே பண்பாட்டளவிலும் மொழி அளவிலும் ஒரு பிணைப்பு பாலம் ஏற்பட்டிருக்கிறதென்றால் அதற்கான பண்பாட்டு இயக்கத்தை பன்னாட்டு அளவில் தோற்றுவித்தவர்களில் முதலாமவர் இர.ந.வீரப்பன். அவருக்கு ஜூன் 8, பிறந்த நாள். வாழ்க அவரின் புகழ்.
நக்கீரன் – Nakkeeran 013-244 36 24