– நக்கீரன்- கோலாம்பூர்
மலேசிய மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்லத் துளிர்விடுகிறது. இதில் முதல் அம்சமாக, குடியிருப்புப் பகுதி, சாலை உள்ளிட்ட இடங்களில் காவல் துறையினரை எதிர்கொள்ள நேரிடாத பழைய வாழ்க்கையை மார்ச் 18-ஆம் நாளுக்குப் பின் இப்பொழுது(ஜூன் திங்கள் 10 முதல்) வாழத் தொடங்கி உள்ளனர்.
அதைப்போல மூன்று மாதங்களாக தேக்கம் கண்டிருந்த வர்த்தக நடவடிக்கையும் புது நம்பிக்கையுடன் தொடக்கம் கண்டிருக்கிறது. ஆட்கொல்லி கொடுங்கிருமியான கொரோனாவைப் பற்றிய மிரட்சியையும் மருட்டலையும் ஒருபக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு, புது வாழ்க்கைக்கான நம்பிக்கைப் பயணத்தை மக்கள் ஆரம்பித்து விட்டனர்.
அதேவேளை, இந்த ‘கோவிட்-19’ கிருமி தொடர்பான விழிப்புணர்வையும் சுகாதார பாதுகாப்பு குறித்த எச்சரிக்கை அம்சங்களையும் மக்கள் மறக்கவில்லை. அதை, வாழ்க்கையின் ஒரு கூறாக வழக்கப்படுத்திக் கொள்ள பழகிவிட்டனர்.
கடந்த மார்ச் 18-இல் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அறிமுகம் செய்த மலேசிய அரசு, மே 4-ஆம் நாளில் சிற்சில தளர்வுகளை அறிவித்தது. அதைத் தொடர்ந்து வணிக நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள் உட்பட அத்தியாவசியச் சேவைக்கான நிறுவனங்களும் மீண்டும் பணியைத் தொடங்கின.
இந்த நிலைமையில், தற்பொழுது அரசு முழு தளர்வை அறிவித்துள்ளது. மாநிலம் விட்டு மாநிலம் மக்கள் பயணம் செய்வதற்கான தடை அகற்றப்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை வழக்க நிலையை எட்டிப் பார்க்கிறது.. அதேவேளை, மலேசிய அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. முழுத் தளர்வை அறிவித்தாலும், மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை என்னும் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம், முடிதிருத்தும் தொழில்;
1970, 80ஆம் ஆண்டுகளில் பிரபலமான ஹிப்பி பாணி மீண்டும் அறிமுகம் காண்கிறதோ என்ற அளவுக்கு நீண்ட முடியுடன் காணப்பட்ட ஆண்களின் நிலை பரிதாபமாக இருந்தது. இதற்குத்தான் தற்பொழுது தீர்வு பிறந்துள்ளது.
முடிதிருத்தும் கடைகள் திறக்கப்பட்டதும் அதிகமானோர் வரிசையில் நிற்கத் தொடங்கினர். இருந்தபோதும் முடிதிருத்தும் தொழிலாளர்களின் நிலைதான் இக்கட்டாகத் தெரிகிறது. முகக் கவசத்திற்கு மேல் இன்னொரு கவசம் அணிந்து கொண்டு முடி திருத்துவதால் கவசத்தின் உட்பகுதியில் மூச்சுக் காற்றின் வெப்பத்தினால் நீர்த்திவலைகள் ஆவியாகப் படிவதால் சரியாகக் கண் தெரியாத வேளையில் இயல்பாக சுவாசிக்க முடியாமலும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். தவிர, கையில் உறை அணிந்து கொண்டு கத்திரிக்கோலையும் முகச்சவரக் கத்தியையும் கையாளுவதில் தடுமாற்றத்தையும் எதிர்நோக்குகின்றனர்.
போக்குவரத்து நிலையங்களில் மக்கள் கூடத் தொடங்கி விட்டனர். பாதுகாப்பு இடைவெளி நடைமுறைகளை தவறாமல் பின்பற்றிய பயணிகளிடம் உடல்வெப்பம் சோதிக்கப்பட்டது. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை வலுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர இதர பகுதிகளில் போக்குவரத்து வாகங்கள் சீராக இயங்கின. இருந்தாலும் மலேசியாவின் பன்னாட்டு எல்லைகள் தொடர்ந்து மூடப்பட்டு உள்ளன.
நாடு மீட்சியுறும் பாதையில் அடி எடுத்து வைத்திருப்பதால் ஜூன் திங்கள் 24ஆம் தேதி முதல் பள்ளிகளைக் கட்டம் கட்டமாகத் திறக்க அரசு ஆயத்தமாகி வருவதாக கல்வி அமைச்சர் முகம்மது ரட்ஸி முகம்மது ஜிடின் தெரிவித்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இணைய வகுப்புகளின்வழி கல்வியைத் தொடர்ந்து கொண்டு வீட்டோடு முடங்கியிருந்த ஏறக்குறைய 500,000 மாணவர்கள் வகுப்புறை சுவாசத்தை அனுபவிக்க உள்ளனர்.
கொரோனா கிருமி தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கையில் மலேசிய அரசு ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது. இனி, வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் மலேசியர்கள், தத்தம் வீடுகளிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
மூத்த அமைச்சர் இஸ்மாயில் சாஃப்ரி யாக்கோப் இதன் தொடர்பில் சிறப்பு அறிவிப்பைச் செய்தார். அரசு அங்கீகரித்துள்ள தனிமை இடங்களூக்குப் பதிலாக சம்பந்தப்பட்டவர்கள் தங்களின் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.
இவ்வாறு வர்த்தகம், கல்வி, போக்குவர்த்து, மலேசிய மக்களின் பாரம்பரியத் தன்மை உள்ளிட்ட பெரும்பாலான அம்சங்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் வேளையில் மலேசிய தேசிய அரசியல் போக்குமட்டும் வழக்க நிலைக்குத் திரும்பாமல் மேலும் மேலும் முறுகல் நிலையை எட்டி வருகிறது.
அரசியல் நிலைத்தன்மைக்கு பெயர்பெற்ற மலேசியாவில், தற்பொழுது அரசியல் நிலைத்தன்மை கேள்விகுறி ஆகி வருகிறது. தனக்குப் பின் பிரதமராகப் பொறுப்பேற்ற துன் அப்துல்லா அகமது படாவி, டத்தோஸ்ரீ நஜிப் ஆகியோரை நிம்மதியாக ஆளவிடாததைப் போல இப்போதைய பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினையும் நீதிமன்றப் படிகட்டுகளுக்கு இழுத்துள்ளார் மேநாள் பிரதமர் துன் மகாதீர்.
‘பெர்சத்து’ கட்சியின் தலைவர் முகைதீன் யாசின் கட்சியின் செயல் தலைவர் அல்ல என்றும் கட்சியின் பொதுச்செயலாளராக ஹம்சா ஜைனுடினை பிரதமர் முகைதீன் நியமித்தது செல்லாது என்றும், அவர்கள் இருவரின் கட்சி உறுப்பினர் தகுதியை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்றும் முன்னாள் பிரதமர் மகாதீரும் அவரின் ஆதரவாளர்களும் வழக்குத் தொடுத்துள்ளனர்.
இதில், நாட்டின் எட்டாவது பிரதமரான முகைதீன் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் அல்லர் என்பது குறிப்பிடத்தக்கது. மலேசிய அரசியலில் சாந்தியும் சமாதானமும் நிலவி, அனைத்துத் தலைவர்களும் மக்களுக்காகவும் நாட்டு வளர்ச்சிக்காவும் ஒருசேர பாடாற்றும் நிலை வரும் என்று மலேசிய வாக்காளர்களும் பொது மக்களும் காத்துள்ளனர்.