கோலாலம்பூர், ஜூன் 17:
கொடிய ஆட்கொல்லி கிருமியான கோவிட்-19இன் பரவலும் தாக்குதலும் தங்கு தடையின்றி உலகெங்கும் தொடர்கின்றது. இந்த நிலையில், கொரோனாவின் எல்லை தொடர்ந்து விரிவடைவதாக உலக சுகாதார நிறுவனமும் உலக நாடுகளை எச்சரித்துள்ளது. மலேசியத் திருநாட்டைப் பொறுத்தவரை கொரோனாவின் தாக்கம் தற்பொழுது கட்டுப்பாட்டில் இருந்தாலும் மலேசிய அரசும் மக்களும் எச்சரிக்கையையும் விழிப்புணர்வையும் விட்டுவிட வில்லை.
இத்தகைய சுழலில்தான், வரும் ஜூலைத் திங்கள் முதல் சிறார் மையங்களும் பாலர் பள்ளிகளும் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அத்துடன், சிறாரின் பாதுகாப்பு மற்றும் சுகாதார அம்சங்களில் சிறார் மையங்களின் பொறுப்பாளர்களும் பெற்றோரும் இரட்டை கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
மாணவர்கள் சிந்தனையாலும் செயலாலும் செப்பம் பெறும் இடம் கல்விச் சாலைகள்தாம். குறிப்பாக, இளம் பருவத்தில் மாணவச் செல்வங்கள் எந்த அளவிற்கு பக்குவம் பெறுகிறார்களோ அந்த அளவுக்குத்தான் அவர்கள் பெரியவர்களாகி பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர்க்கல்வி நிலையங்களுக்குச் செல்லும்போதும் அவர்களின் அறிவும் ஆற்றலும் வெளிப்படும்.
மலேசியா போன்ற பல இன மக்கள் வாழும் நாடுகளில் சமூக ஒருங்கிணைப்பும் சமய நல்லிணக்கமும்தான் மக்களின் ஒற்றுமைக்கு அடித்தளம். இந்த அடித்தளம் உருவாகும் இடம் கலவிச் சாலைகள்தான். ஆனால், இத்தகைய நல்லிணக்கக் கூற்றுக்கு பங்கம் ஏற்படும் வகையில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தொடக்கூடாது; நெருங்கிப் பழகக்கூடாது; சமூக இடைவெளியுடன் பழக முயற்சிக்க வேண்டும்; ஏனைய மாணவர்களின் உடைமைகளைத் தொடக்கூடாது; அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றெல்லாம் இளம் குழந்தைகளுக்கு வீட்டில் பெற்றோரும் சிறார் மையங்களிலும் பாலர் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களும் வலியுறுத்துவைக் காணும் பிஞ்சு உள்ளங்கள் வெம்பி விடாதா என்று சமூக ஆர்வலர்களும் கல்வியாளர்களும் அச்சம் தெரிவிக்கின்றனர்.
சிறுவர்கள் என்றாலே கைதட்டி பாடுவதும் கைகோத்து ஆடுவதும் கூடி மகிழ்வதும் சேர்ந்து உண்பதும் மற்றவர்களின் பொருளை தொட்டு உணர்வதும் மிகவும் இயல்பானது. தவிர, வெவ்வேறு மொழி, பண்பாடு, கலாச்சரம், சமயங்களைச் சேர்ந்த சிறார்கள் ஒருவரோடு ஒருவராக கலந்து உறவாடும்போதும் ஒருங்கிணைந்து செயல்படும்போதும் தங்களுக்குள் இணக்கமான போக்கினை மெல்ல வளர்த்துக் கொள்வர்.
மொத்தத்தில் இனம், மொழி, சமயம், பண்பாடு உள்ளிட்ட எல்லைகளைக் கடந்து, எதிர்காலத்தில் ஒன்றுபட்ட சமுதாயமாக விளங்குவதற்கான அடிப்படை உருவாகும் இடமே பாடசாலைகள்தான். சிறார்கள் வீட்டு எல்லையைக் கடந்து முதன் முறையாக சமுதாய வீதியில் வலம் வரும் இடம் பாலர் பள்ளிகள்தாம்.
இப்படிப்பட்ட சூழலில், இதற்கெல்லாம் இடம்தராத வகையில் முகத்தில் புன்னகை தவழ்கிறதா, கோபம் கொப்பளிக்கிறதா அல்லது அழுகை அரும்புகிறதா என எதுவும் தெரியாத வகையில் முகத்தில் பாதியை மூடியபடி சுவாச கவசம் அணிந்த வண்ணம், அம்மா-அப்பா சொன்னபடி ஒருவரையும் தொடக்கூடாதே என்ற மிரட்சி ஒரு பக்கமாகவும்ம் ஆசிரியை கேட்டுக் கொண்டபடி யாரோடும் நெருங்கி உட்காரக் கூடாதே என்னும் மருட்சி இன்னொரு புறமாகவும் மனதில் நிழலாட நாள் முழுவதும் வகுப்பில் அமர்ந்திருக்கும் சிறார்தம் மனம் வாடித்தான் போகும்!
இதே மன நெருக்கடியுடன் காலமெல்லாம் பாடசாலைக்கு சென்று வரும் பாலகர்களின் மனதில் மகிழ்ச்சியும் துள்ளல் மேவிடும் ஆர்வமும் எங்ஙனம் ஏற்படும்?.
ஆனாலும் வேறு வழியும் புலப்படவில்லை; இதற்கெல்லாம் மாற்று மார்க்கமும் புரியவில்லை ஒருவருக்கும்.
கரணம் தப்பினால் மரணம் என்னும் நிலையை கொரோனா கிருமி ஏற்படுத்தி இருப்பதால், எல்லாவற்றையும்விட உயிர்தான் மிக முக்கியமானது என்னும் அடிப்படையில் சுவாச கவசத்தை அணியத்தான் வேண்டும்; சமூக இடைவெளியையும் தற்காக்கத்தான் வேண்டும்.
எல்லாம் சரி! இந்த நிலை தொடர்ந்தால், எத்தனைக் காலத்திற்கு மாணாக்கர்கள் இதை எதிர்கொள்வது? இதற்கான விடை ஒருவரிடமும் இல்லாத நிலையில், காலம் வகுத்த கட்டளைக்கு ஏற்ப வாழ்ந்துதான் ஆக வேண்டும். உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் உயிர் நிலைத்திருக்க வேண்டும் என்றால் இதில் சிறுவர் என்ன? பெரியவர் என்ன?? கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க இந்த நிலையை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.
மொத்தத்தில், ஒரு புதிய மாணவர் சமுதாயம் உருவாகி விடுமோ என்ற அச்சம் பொதுவாக அனைத்துத் தரப்பினரிடமும் எழுந்துள்ளது. இதற்கான விடையையும் தீர்வையும் எதிர்காலம் வழங்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்வைத் தொடர்வதைத் தவிர வேறு வழியேது?
காத்திருப்போம்; காலம் பதில் சொல்லும்!
நக்கீரன்.
நக்கீரன் – Nakkeeran 013-244 36 24