சிவா பரமேஸ்வரன்— மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்
இலங்கையின் கிழக்கு மாகாணம் நாட்டில் சற்று தனித்துவமானது. அங்கு மூவின மக்கள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் ஏறக்குறைய சம அளவில் உள்ளனர். முஸ்லிம் மக்களும் பெரும்பான்மையாக தமிழ் மொழியைப் பேசினாலும், தங்களை தனித்துவமான ஒரு இனமாக அடையாளப்படுத்துகின்றனர்.
இந்திய மக்கட்தொகையில் முஸ்லிம்கள் 13% இருந்தாலும், அவர்கள் தம்மை தனியொரு இனமாக கூறிக் கொள்வதில்லை.
மொழிவாரியாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமை இருந்தாலும், கலை கலாச்சாரம், அரசியல் சமூகச் சூழல், பொருளாதாரம் என்று வரும்போது வேறுபாடுகளே அதிகம் உள்ளன.
கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் அதிகமாக திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டத்தில் வாழ்கிறார்கள்.
முதலில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் சூழல் பற்றிய பார்வை. இங்கு மக்கட்தொகையில் என்பது 72% தமிழர்கள்.
தெரிவாகும் உறுப்பினர்கள் எண்ணிக்கை ஐந்து. கட்சி அல்லது சுயேச்சைக் குழு சார்பில் நிறுத்தப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கை எட்டு.
கடந்த 2015 தேர்தலில் த தே கூ சார்பில் மூவரும், ஐ தே க (ரிஷாத் கட்சி) மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தலா ஒருவரும் தெரிவாகியிருந்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு: (இலங்கை தமிழரசுக் கட்சி)
கடந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்த சீ.யோகேஸ்வரன் மற்றும் ஞா.சிறிநேசன் இம்முறையும் போட்டியிடுகின்றனர். கி. துரைராஜசிங்கம் கடந்த 1994 முதல் 2000 வரை நாடா|ளுமன்ற உறுப்பினராக இருந்தவர். அவர் 20 ஆண்டுகளுக்கு பிறகு இத்தேர்தலில் போட்டியிடுகிறார். 2015ல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட சாணக்கிய ராகுல ராஜபுத்திரன் மற்றும் மட்டக்களப்பு ஓய்வு பெற்ற அரசாங்க அதிபரான இருந்த மா.உதயகுமார் ஆகியோர் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள்.
டெலோ சார்பில் கடந்த 1989-94 வரை உறுப்பினரான இருந்த கோ.கருணாகரம் மற்றும் முதல் முறையாகப் போட்டியிடும் சட்டத்தரணி ந. கமலதாஸ் ஆகியோரும் புளொட் சார்பில் பொறியிலளாரான மு.ஞானபிரகாசமும் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்கள்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
2015 தேர்தலில் த தே கூ பட்டியலில் புளொட் சார்பில் தெரிவாகியிருந்த ச.வியாழேந்திரன் கட்சிமாறி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான 51 நாள் அரசில் பிரதி அமைச்சராக இருந்தவர். இம்முறை அக்கட்சியின் தலைமை வேட்பாளராக பெயரிடப்பட்டுள்ளார். இக்கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் தமிழர்கள். கடந்த 2004 ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகளின் பின்புலத்தில் உருவாக்கப்பட்ட த தே கூ வேட்பாளராகப் போட்டியிட்ட சே.ஜெயானந்தமூர்த்தி, யுத்தகால நெருக்கடியால் இலண்டனுக்கு இடம்பெயர்ந்தார். நாடாளுமன்ற அனுமதி பெற்று விடுப்பில் இருந்த அவர், இலங்கையின் எம் பி பதவி முடிந்த பிறகு, நாடுகடந்த தமிழீழ அரசில் ஒரு உறுப்பினராகத் தேர்வாகியிருந்தார். இலங்கைக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டிருந்தவர்களின் அவரும் ஒருவர்.
மைத்திரி-ரணில் ஆட்சியில் ஏற்பட்ட சுமுக நிலையை அடுத்து அவர் நாடு திரும்பினார். த தே கூட்டமைப்பு அவரை கவனத்தில் எடுக்கவில்லை. பின்னர் ஐ தே க , த வி கூ, மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரனின் (கருணா) தமிழர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்று பல கட்சிகளுக்கு தாவிய இவர் தேர்தலில் தாமரை மொட்டுக் கட்சியின் ஒரு வேட்பாளர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
விடுதலைப் புலிகள் பிளவுபட்ட பின்பு, கருணாவால் உருவாக்கப்பட்ட கட்சி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (டி எம் வி பி). மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இந்தக் கட்சியின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு பின்புலமாக இருந்த்து. கருணா இலண்டனுக்குச் சென்ற பிறகு கட்சி சி. சந்திரகாந்தன் (பிள்ளையான்) வசம் வந்தது. கிழக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தலில், ஐ ம சு மு ஆட்சியைக் கைப்பற்றியது. பிள்ளையான் முதலமைச்சரானார். கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சர் என்கிற பெருமையும் அவருக்கு உண்டு. ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில்-எதிரிகளில் ஒருவரான இவர் சிறையில் விளக்கமறியல் கைதியாக வைக்கப்பட்டுள்ளார்.
இந்தக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஞா. கிருஷ்ணபிள்ளையும் இடம்பெற்றுள்ளார்.
ஜோசப் பரராஜசிங்கம் 2005 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டாலும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மைத்திரி-ரணில் தலைமையிலான அரசிலேயே பிள்ளையான் கைது செய்யப்பட்டார். ஐ ம சு மு பங்காளிக் கட்சியாக இருந்தாலும், 2015 தேர்தலிலும் பிள்ளையான் கட்சி தனித்து போட்டியிட்ட போதிலும் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவை இக்கட்சி ஆதரித்தது.
கருணா ஒரு காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவராக வலம் வந்தவர். 2010 ஆம் ஆண்டு தேசியப் பட்டியலில் தெரிவாகி பிரதி அமைச்சராகவும் இருந்தார். 2015 அவரது சகோதரி ருத்திரமலர் போட்டியிட்டாலும் தெரிவாகவில்லை. இம்முறை தனது மனைவியை தாமரை மொட்டுக் கட்சியில் புகுத்துவதற்கு எடுத்த முயற்சி எட்டக்கனியான நிலையில், தனது மனைவி வித்யாவதி தலைமையில் ஒரு சுயேச்சைக் குழுவை களமறிக்கியுள்ளார்.
கருணா அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை தமிழர் மகாசபை சார்பில் போட்டியிடுகிறார்.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி (விக்னேஸ்வரன் கட்சி):
இக்கட்சியின் பிரதான வேட்பாளர் சோமசுந்தரம் கணேசமூர்த்தி. இவர் ஏறனவே பொதுஜன முன்னணியில் (சந்திரிகாவின் இரண்டாவது ஆட்சியில்) தேசியப் பட்டியல் உறுப்பினராக தேர்வாகி, தேசிய நல்லிணக்க துறையின் பிரதி அமைச்சராக இருந்தவர். கடந்த தேர்தலில் ஐ தே கா வில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இம்முறை அவரது மகன் கோபிநாத்தும் போட்டியிடுகிறார்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈரோஸ், ஐ தே க, போன்ற கட்சிகளும் போட்டியிடுகின்றன.
முஸ்லிம் கட்சிகள்:
சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் ஒரு பிராதான பங்காளிக் கட்சியாக இருக்கின்ற போதிலும் மு கா இம்முறையும் தனித்து கடந்த முறை தெரிவாகியிருந்த அலி சாகிர் மௌலானாவுடன், மாகாண முன்னாள் முதலமைச்சர் நசீர் அகமது, ஆகியோர் அக்கட்சியின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். கடந்த தேர்தலில் ஐ தே கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட மற்றோர் முஸ்லிம் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சஜித் தலைமையிலான ஐ ம ச இணைந்து போட்டியிடுகிறது.
கடந்த முறை தேர்வான அக்கட்சியின் அவைத்தலைவர் எஸ் எச் அமீர் அலி தலைமை வேட்பாளராக பெயரிடப்பட்டுள்ளார். அப்பட்டியலில் 3 முஸ்லிம்கள் 5 தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர்.
பிரிந்து போட்டியிட்டாலும், வழமை போல் முஸ்லிம் கட்சிகளுக்கு தலா ஒரு இடம் கிடைக்கும் எனும் எதிர்ப்பார்ப்பு அவர்களிடையே உள்ளது.
கடந்த 1989 ஆம் ஆண்டு தொடக்கம் சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன ஆட்சிவரை நாடாளுமன்றத்தில் செல்வாக்குள்ள அரசியல்வாதியாகவும் அமைச்சராகவும் இருந்தவர் ஹிஸ்புல்லா. 2015ல் தோல்வியடைந்தாலும், தேசியப் பட்டியில் உள்வாங்கப்பட்டு அமைச்சராகவும் இருந்தார். பின்னர் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
மட்டக்களப்பு காம்பஸ் என்கிற தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் தெற்கில் சிங்களப் பேரினவாதிகள் உருவாக்கிய சர்ச்சைக் காரணமாக, இவர் ஆளுநர் பதவியைத் துறக்கும் நிலை ஏற்பட்டது. அதாவது கடந்த ஆண்டு ஈஸ்ட்ர் தின குண்டு வெடிப்புக்கு பிறகு இவர், ஆசாத் ஆலி போன்றோர் பௌத்த பேரினவாத அழுத்தம் காரணமாக ஆளுநர் பதவியிலிருந்து விலகும் சூழல் ஏற்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகிய ஹஸன் அலி, பஷீர் சேகு தாவூத் ஆகியோர் உருவாக்கிய ஐக்கிய சமாதான முன்னணி தனைத்துப் போட்டியிடுகின்றது. பிரதான வேட்பாளர்களாக ஹிஸ்புல்லாவும், பஷீர் சேகும் தாவூதும் உள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலில் இக்கட்சி கோத்தாவை ஆதரித்தது. ஆனாலும் இத்தேர்தலில் எந்தவொரு முஸ்லிம் கட்சிக்கும் முக்கியத்துவம் இல்லாமல் போயிற்று.
களநிலை:
தமிழ் வாக்குகள் பரவலாக பிரியும் நிலை உள்ளது. எனினும் 3 ஆசனங்களை தமிழர்கள் பெறக் கூடும். த தே கூ மீது கடும் விமர்சனங்கள் நிலவுவதால் தமிழ் வாக்குகளை பிள்ளையானும், வியாழேந்திரனும் உடைக்கக் கூடும். கடந்த தேர்தலில் வென்ற மூன்று இடங்களைக் கூட த தே கூ போராடித்தான் வெல்லக் கூடிய சூழல் அங்கு நிலவுகிறது. இந்தக் களநிலைமையை கூட்டமைப்புக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே கருத முடியும். கூட்டமைப்பு மைத்ரி-ரணில் தலைமையிலான `நல்லிணக்க அரசை` ஆதரித்தாலும் மக்களுக்குத் தேவையானவற்றை பெற்றுக் கொடுக்கவில்லை எனும் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளது.
இளம் வாக்களர்கள் அபிவிருத்தி, வேலை வாய்ப்பு போன்ற விடயங்களால் கவரப்பட்டுள்ளனர். கூட்டமைப்பு வெற்றுக் கோஷங்களை மட்டுமே எழுப்புகிறது எனும் கருத்தும் மக்களிடையே உள்ளது.
பிள்ளையான் சிறையில் இருப்பதால், அவரால் களத்தில் இற்ங்கி வாக்கு சேகரிக்க இயலாது. ஆகவே எந்த அளவுக்கு அவரது கட்சிக்கு வாக்குகள் கிடைக்கும் என்பது கேள்விக் குறியாக உள்ளது. தேர்தலுக்கு முன்னர் பிள்ளையான் சிறையிலிருந்து வெளிவந்தால் அது கூட்டமைப்புக்கு சவாலாக இருக்கும.
மொட்டுக் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் தமிழர்கள். அவர்களும் தமிழ் வாக்குகளையே இலக்கு வைத்துள்ளனர். கூட்டமைப்புக்கு எதிரானவர்கள் பிள்ளையான் கட்சியைவிட மொட்டுக் கட்சிக்கு வாக்களிப்பதே உசிதம் என்று எண்ணக் கூடும்.
முஸ்லிம் கட்சிகளைப் பொறுத்தவரை அவர்களது இலக்கு தலா ஒரு ஆசனம். இது யதார்த்தத்தில் சாத்தியமில்லை. என்றாலும், தமிழர்களின் வாக்குகள் சிதறினால், அதன் பலன் முஸ்லிம் கட்சிகளுக்கே செல்லும். எனவே, தமிழர்கள் தமது வாக்குகள் சிதறாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அது கூட்டமைப்பின் கொள்கை மற்றும் பிரச்சாரத்திலேயே தங்கியுள்ளது.