சிவா பரமேஸ்வரன்—முன்னாள் மூத்த செய்தியாளர் பிபிசி
இந்தக் கட்டுரையை வாசிக்கும் பலர் திருமலை`தியாகி நடராஜனை` அறிந்திருப்பார்களா எனத் தெரியவில்லை. ஆனால் ஈழத் தமிழர்களின் போராட்டத்தில் அவருக்கு தனியொரு இடமுண்டு.
இலங்கையின் அரசியலைப் புரட்டிப் போட்ட சம்பவங்களில் ஒன்று தனிச் சிங்களச் சட்டம். அதை எதிர்த்து 1957 ஆம் ஆண்டு நாட்டின் ஒன்பதாவது சுதந்திர தினத்தன்று தமிழர் பிரதேசங்களில் கறுப்பு தினமாக அனுசரிக்கும்படி இலங்கை தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. அன்று திருகோணமலை நகர் மணிக்கூண்டு கோபுரத்தில் பறந்து கொண்டிருந்த தேசியக் கொடியை அகற்ற முற்பட்ட 22 வயது இளைஞர் நடராஜன் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்.
தமிழர்களின் சாத்வீகப் போராட்ட வரலாற்றில் பொலிஸ் துப்பாகிச்சூட்டில் பலியான முதல் தமிழர் அவர்.
இச்சம்பவம் ஈழத்தமிழர் வரலாற்றில் ஒரு மைல் கல். அதன் அடிப்படையிலேயே ஒருங்கிணைந்த வடகிழக்கு மாகாணத்தின் தலைநகராகவும் விளங்கியது திருகோணமலை.
ஈழத்தில் பாடல்பெற்ற தலங்கள் இரண்டு. அதில் ஒன்று திருக்கோனேஸ்வரம். இராவணன் வழிபட்டதால் இலங்கையில் சிவ பூமி என்ற சிறப்புப் பெயரும் திருகோணமலைக்கு உண்டு.
மூவின மக்களும் வாழும் திருகோணமலையில் சுதந்திரத்துக்கு பின்னர் கந்தளாய்-அல்லை, மொராவெவ போன்ற நீர்ப்பாசன திட்டங்கள் மூலம் வலிந்த சிங்களக் குடியேற்றம் முன்னெடுக்கப்பட்டது. பௌத்த தொல்பொருள் ஆய்வுகளாலும் தமிழர் நிலம் பறிபோகிறது.
திருகோணமலை மாவட்ட தேர்தல் உள்ளூரிலும் சர்வதேசத்திலும் உற்று கவனிக்கப்படுகிறது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் இங்கு போட்டியிடுகிறார். வயது காரணமாக அவர் தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கி தேசியப் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்று கட்சிக்குள் எதிர்ப்பார்க்கப்பட்டது. எனினும் இங்கு தமிழர் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், அது சம்பந்தர் போட்டியிட்டால் மட்டுமே சாத்தியம் என்ற கருத்து மாவட்டத்தில் வலுப்பெற்றது.
இந்த மாவட்டத்திலிருந்து தெரிவாகும் உறுப்பினர்கள் எண்ணிக்கை 4. கட்சி அல்லது சுயேச்சை குழுவில் இடம்பெற வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கை 7.
திருகோணமலை, மூதூர், சேருவில ஆகிய மூன்று தொகுதிகளை உள்ளடக்கியது இந்தத் தேர்தல் மாவட்டம்.
விகிதாசார தேர்தல் முறை 1989ல் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, நடைபெற்ற 7 தேர்தல்களிலும் அநேகமாக 2-1-1 என ஆசனங்கள் மூவினங்களுக்கிடையே சுழன்று கொண்டிருக்கிறது. இருப்பினும் 2000ஆம் ஆண்டு தமிழர்கள் யாரும் தெரிவாகவில்லை. அந்தத் தேர்தலில் சம்பந்தர் போட்டியிடவில்லை.
கடந்த 1989, 2004 தேர்தல்களில் மட்டுமே தமிழர்கள் இரண்டு ஆசனங்களைப் பெற முடிந்தது. முஸ்லிம்கள் 1994 ,2001 மற்றும் 2015லும், சிங்களவர்கள் 2010லும் தலா இரு ஆசனங்களைப் பெற்றிருந்தனர். 2000ஆம் ஆண்டு வழமைக்கு மாறாக முஸ்லிம்கள் 3 இடங்களைப் பெற்ற தேர்தலில்தான் தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டது.
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் கூட்டமைப்பில் உள்வாங்கப்பட்டு, தேர்தலில் போட்டியிட வாய்பளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தாலும் இம்முறையும் அது மறுக்கப்பட்டது.
கடந்த 2004ஆம் ஆண்டு கூட்டமைப்பு 2 ஆசனங்களைப் பெறுவதற்கு வியூகம் அமைத்துக் கொடுத்தவர் விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த ரூபன் என்கிற ஆத்மலிங்கம் ரவீந்திரா. அவர் 2015 தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட விண்ணப்பித்தாலும் அது நிராகரிக்கப்பட்டது.
இத்தேர்தலில் விக்னேஸ்வரன் கட்சியின் தலைமை வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு:
தலைமை வேட்பாளர் இரா.சம்பந்தர். கனடாவிலிருந்து நாடு திரும்பியுள்ள க.குகதாசன் இரண்டாவது இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். சம்பந்தர் தேசியப் பட்டியலில் இடம்பெறுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே குகதாசன் தனது அரசியல்-தேர்தல் பணிகளை ஆரம்பித்திருந்தார். ஆனால் சம்பந்தர் போட்டியிடுவதால் இவர் இரண்டாம் இடத்திலுள்ளார். அவர் கனடாவில் தமிழரசு கட்சியின் செயல்பாட்டாளராக இருந்து கட்சியின் வளர்ச்சிக்கு பாரிய பங்காற்றியுள்ளார்.
குகதாசன் சம்பந்தருடன் நெருக்கமாக இருந்து அவரது நம்பிக்கையப் பெற்றவர். சம்பந்தர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவர்.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி:
சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான இக்கூட்டணியில் விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியல்துறை பொறுபாளராக இருந்த ரூபன் தலைமை வேட்பாளராக பெயரிடப்பட்டுள்ளார்.
இவரைத் தவிர மற்ற வேட்பாளர்கள் பெரிய அளவில் அறியப்படவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி:
2015 தேர்தலில், ஐ தே கட்சி சார்பில் இம்ரான் மஹ்ரூஃப் மற்றும் பங்காளிக் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ரிஷாத் கட்சி) சார்பில் அப்துல்லா மஹ்ரூஃப் ஆகியோர் தெரிவாகியிருந்தனர்.
இம்முறை இம்ரான் மஹ்ரூஃப் சஜித் கட்சியிலும் அவரது சகோதரி ரூபினா மஹ்ருஃப் ஐ தே க போட்டியிடுகின்றார்.
இந்த உடன்பிறப்புகள் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் உயிரிழந்த ராஜாங்க அமைச்சர் எம்.ஐ.எம் மஹ்ரூஃபின் பிள்ளைகள்.
இக்கட்சியில் தலா மூன்று முஸ்லிம்களும் சிங்களவர்களும் ஒரு தமிழரும் இடம்பெற்றுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன:
இக்கட்சி வேட்பாளர்களில் சிங்களவர் 5 முஸ்லிம்கள் 2. தமிழர்கள் எவரும் இல்லை.
தாமரை மொட்டுக் கட்சியான இதில் முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேயும் இடம்பெறுகிறார்.
இந்தப் பட்டியலில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீதுக்கு இடமளிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட போதிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. பெயரளவுக்கு இரண்டு முஸ்லிம்கள் இடம்பெறுள்ளனர்.
நஜீப் ஏ மஜீத் தேசிய காங்கிரஸ் சார்பில் வேட்பு மனுவை தாக்கல் செய்தாலும் அதுவும் நிராகரிக்கப்பட்டது.
சிங்கள வேட்பாளரின் வெற்றியே மொட்டுக் கட்சிக்கு முக்கியமானதாக இருக்கிறது.
செல்வாக்கு பெற்ற முஸ்லிம்களைப் போடுவதை விட, `டம்மி` முஸ்லிம்களை போட்டியிடுவதே சிறந்தது என்று மொட்டுக் கட்சி நினைக்கிறது.
ஐக்கிய மக்கள் சக்தி (சஜித் கூட்டணி)
இந்தக் கூட்டணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாத் கட்சி பங்காளிக் கட்சிகளாக உள்ளனர்.
இதில் இம்ரான் மஹ்ரூஃப் (சஜித் அணி) அப்துல்லா மஹ்ரூஃப் (ரிஷாத் கட்சி), எம் எஸ் தௌஃபீக் (மு கா) உட்பட 4 முஸ்லிம்களும், மூன்று சிங்களவர்களும் வேட்பாளர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்தக் கூட்டணியிலும் தமிழர்கள் இல்லை.
கள நிலவரம்:
2015 தேர்தலில் வீடு சின்னத்தில் ஒருவரும், யானை சின்னத்தில் இரு முஸ்லிம்களும், வெற்றிலை சின்னத்தில் ஒரு சிங்களவரும் தேர்தெடுக்கப்பட்டனர்.
தற்போது களநிலையைப் பொறுத்தவரை முஸ்லிம் வாக்குகள் பிரியும் நிலையில்லை. பிரதான முஸ்லிம் கட்சிகள் (ஹக்கிம்-ரிஷாத்) சஜித் தலைமையிலான கூட்டணியில் உள்ளன. அதேபோல் ஐக்கிய மக்கள் சக்தி சார்பிலும் முஸ்லிம்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
எனவே போனஸ் உட்பட இரு ஆசனங்களும் கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடும் போது, ஐ ம சக்திக்கு செல்வது தவிர்க்க முடியாததாகவே காணப்படுகிறது. எனவே இங்கு 2 முஸ்லிம்களின் வெற்றி முடிவான ஒன்று.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இம்மாவட்டத்தில் சிங்கள மக்கள் பெருவாரியாக கோத்தாவுக்கே வாக்களித்தனர். அந்த வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பொறுத்தவரை சிங்கள மக்களின் வாக்குகளே தமது பலம் என்று நம்புவதால் அவர்களுக்கு ஒரு ஆசனம் கிடைக்கும்.
முஸ்லிம் மற்றும் சிங்கள வாக்குகள் சிதறாது என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் தமிழர் வாக்குகள் குறித்து கேள்விக்குறி உள்ளது. தமிழர் வாக்குகளைப் பொறுத்தவரை த தே கூ மீது விமர்சனங்களும், அதிருப்தியும் இருந்தாலும், சம்பந்தரின் தனிப்பட்ட ஆளுமை காரணமாக, பெரும்பாலான தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கே வாக்களிப்பர்கள் என்று நம்பலாம். வழமைபோல் சம்பந்தரின் தெரிவை மையப்படுத்தியே கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது.
வழமையாக போட்டியிடும் சைக்கிள் கட்சி, வீணைக் கட்சி மற்றும் சூரியன் கட்சி ஆகியவற்றுக்கு மேலதிகமாக இம்முறை விக்னேஸ்வரன் தலைமையிலான மீன் கட்சியும் களத்தில் நிற்கின்றன. இவர்களால் கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அந்தச் சரிவு தமிழர்களின் பிரதிநிதித்துவத்துக்கு `ஆப்பு வைக்குமானால்` அதற்கான பழி இக்கட்சிகள் மீதே சுமத்தப்படும்.
மும்மொழிப் புலமையும், நீண்ட அரசியல் அனுபவமும், ஆழ்ந்த சட்ட அறிவும் கொண்ட சம்பந்தரே தமது பலம் என்று இரு பிரதான தேசியக் கட்சிகளும் நம்புகின்றன. கோத்தா-மஹிந்த ஆட்சியில் எதிர் தரப்பிலிருந்து வேறு எந்தத் தமிழ் தலைவர்களையும் அவர்கள் இருவரும் பொருட்படுத்தமாட்டார்கள் என்பதே யதார்த்தம்.
அவர் தமிழர்களின் பிரதிநிதியாகத் தேர்வாக வேண்டும் என்றே தேசியக் கட்சிகள் எதிர்ப்பார்க்கின்றன.
எனவே இத்தேர்தல் சம்பந்தர் ஐயாவின் அரசியல் வாழ்வில் மிக முக்கியமானதாக இருக்கும்.
கூட்டமைப்பின் தலைவர் என்பதற்கு அப்பால், மாவட்ட பிரதிநிதி என்ற வகையில், மக்களின் எதிர்ப்பார்ப்புகளுக்கு அமைய அவர் செயல்படவில்லை எனும் அதிருப்திக்கு மத்தியில் அவர் இத்தேர்தலைச் சந்திக்கிறார்.
இதுவரை 6 தேர்தல்களில் போட்டியிட்டுள்ள சம்பந்தர் 1989 மற்றும் 1994 ஆம் ஆண்டு தோல்வியடைந்தார். எனினும் 1994 ஆம் ஆண்டு இம்மாவட்டத்திலிருந்து தெரிவான அருணாசலம் தங்கத்துரை 1997ஆம் ஆண்டு குண்டுத் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்ட, அந்த வெற்றிடத்துக்கு இரா.சம்பந்தர் தெரிவானார். 1977 தொடக்கம் 83 வரை ஏற்கனவே பதவி வகித்த சம்பந்தர், மீண்டும் 1997 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
எந்த இனமாக இருந்தாலும் வாக்களிப்பில் அவர்கள் காட்டும் ஆர்வமே தெரிவில் பிரதிபலிக்கிறது. எனவே தமிழர்கள் தமது பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும் என்று எண்ணினால், அவர்கள் பெருந்தொகையாக வாக்களிப்பில் ஆர்வம் காட்டுவதோடு தமது வாக்குகள் சிதறாமல் இருப்பதை உறுதி செய்வது காலத்தின் கட்டாயமாகும்.
தொடரும்……