சிவா பரமேஸ்வரன் — முன்னாள் மூத்த செய்தியாளர் பிபிசி
இலங்கையில் சுதந்திரத்துக்கு பின்னர் ஏற்பட்ட முதலாவது இனக்கலவரம் 1956ல் அரங்கேறியது. அதே ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய பண்டாரநாயக்க தனிச் சிங்களச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஜூன் 5 ஆம் திகதி முன்வைத்தார். இதற்கு எதிராக தமிழரசுக் கட்சியினர் தலைவர் செல்வா தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டபோது சிங்கள வன்முறையாளர்களினால் தாக்கட்டனர்.
இதன் எதிரொலியாக நாட்டின் பல பகுதிகளில் இன வன்முறை வெடித்தது. ஜூன் 11 முதல் 16 வரை ஐந்து நாட்கள் கல்லோயா நீர்த்தேக்கம் அமைந்திருக்கும் அம்பாறை மாவட்டத்தில் வன்முறை தொடர்ந்தது. அதில் 150க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர், பலர் அதிகமானவர்கள் காயமடைந்தனர். கல்லோயா கலவரம் என்று அறியப்படும் இந்த வன்முறையே தமிழர்களுக்கு எதிரான முதலாவது இனக் கலவரமாக அறியப்படுகிறது.
சுதந்திரத்துக்கு பின்னர் தமிழ் பேசும் மக்களின் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட பிரதேசம் திகாமடுல என்று சிங்களத்தில் கூறப்படும் அம்பாறை மாவட்டம். கல்லோயா நீர்ப்பாசனத் திட்டமே இந்த வலிந்த சிங்களக் குடியேற்றத்துக்கு காரணமாக அமைந்தது. அன்று தொடக்கம் குடிப்பரம்பல் நிலவரம் மாற ஆரம்பித்து தமிழ் மக்களின் விகிதாசாரம் குறைய ஆரம்பித்து இன்றும் தொடருகிறது.
வடக்கு கிழக்கு இணைந்த அதிகாரப் பகிர்வில், முஸ்லிம்களுக்குரிய அரசியல் அபிலாஷை தென்கிழக்கு அலகு.
முஸ்லிம்கள் மிகப் பெரும்பான்மயாக வாழும் மாவட்டம் அம்பாறை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பலம்.
அக்கட்சியின் ஸ்தாபகரான எம்.எச்.எம்.அஷ்ரஃப், தனது அரசியல் பிரவேசத்தை தமிழர் விடுதலைக் கூட்டணியிலேயே ஆரம்பித்தார். 1979 ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தலின் போது ஏற்பட்ட முரண்பாடு, ஆயுதப் போரட்ட காலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கிய அச்சுறுத்தல் மற்றும் நெருக்கடி காரணமாகவே இக்கட்சியை அவர் உருவாக்கினார்.
இம்மாவட்டத்திலிருந்து தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 7. ஒரு கட்சி அல்லது சுயேச்சைக் குழு நிறுத்த வேண்டிய வேட்பாளர் எண்ணிக்கை 10.
அரசியல் கட்சிகள்-20, சுயேச்சைக் குழுக்கள்-33 போட்டியிடுவதால், நாட்டிலேயே மிக நீளமாக வாக்குச் சீட்டு பயன்படுத்தப்படும்.
ஐக்கிய தேசியக் கட்சி:
கடந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிட்ட இக்கட்சி இம்முறை பலவீனமான நிலையில் போட்டியிடுகிறது. 2015ல் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்தில் பிரவேசித்த அனோமா கமகே தலைமை வேட்பாளராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
இம்மாவட்டத்தில் தெரிவாகியிருந்த இவரது கணவர் தயா கமகே இம்முறை கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.
ஐதேக பட்டியலில் இரண்டு முஸ்லிம்களும் ஒரு தமிழரும் இருந்தாலும், அவர்கள் ஒப்பீட்டளவிலேயே சிறுபான்மையினத்தவர்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி:
இம்மாவட்டத்திலுள்ள 43% முஸ்லிம் வாக்குகளை இலக்கு வைத்தே, ஐக்கிய மக்கள் சக்தி முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடுகிறது. வேட்பாளர் பட்டியலில் 6 முஸ்லிம்கள், 3 சிங்களவர் மற்றும் ஒரு தமிழர் இடம்பெற்றுள்ளனர்.
2015 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு மு கா சார்பில் தெரிவான எச்.எம்.ஹாரிஸ், எம்.ஐ.எம்.மன்சூர், ஃபைசல் காசிம் மற்றும் தேசியப் பட்டியல் உறுப்பினர் ஏ.எல்.நசீர் உட்பட 6 பேர் இம்முறை போட்டியிடுகிறார்கள்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ரிஷாத் கட்சி)
ஏனைய மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டாகப் போட்டியிட்டாலும், 2015 போல் இம்முறையும் இம்மாவட்டத்தில் தனித்து போட்டியிடுகிறது. ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கும் முஸ்லிம் வாக்குகளின் விருப்பத் தெரிவு தமக்கு சாதகமாக அமையாது என்பதால், ஒரு ஆசனத்தையாவது பெற வேண்டும் என்பதற்காக ரிஷாத் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.
இக்கட்சியின் அநேக வேட்பாளர்கள், ஏற்கனவே முஸ்லிம் காங்கிரஸ், மற்றும் தேசியக் காங்கிரஸிலிருந்து அதிருப்தி காரணமாக வெளியேறியவர்கள்.
தேசிய காங்கிரஸ்:
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தாமரை மொட்டுக் கட்சியுடன் கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்ட ஒரு முஸ்லிம் கட்சி தேசியக் காங்கிரஸ். ஆனால் இம்முறை மொட்டுக் கட்சியால் கைவிடப்பட்ட நிலையில் இக்கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. தலைவர் அதாவுல்லா உட்பட போட்டியிடும் பத்து பேரும் முஸ்லிம்கள்.
சில மாதங்களுக்கு முன்பு தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் முன்னாள் அமைச்சர் மனோ கணேசனுடன் வார்த்தைப் பிரயோகம் ஒன்றில் மல்லுக்கட்டியவர். இதனால் ஆத்திரமடைந்த மனோ கணேசன் அவர் மீது குடிநீரை வீசியது நேரடியாக பலரால் தொலைக்காட்சியில் பார்க்கப்பட்டது.
2015க்கு முன்பு அதாவுல்லா மத்திய அமைச்சில் பலவேறு பொறுப்புகளை வகித்தவர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன:
2015 தேர்தலில் தெரிவான இரு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏழு சிங்களவர்கள், இரண்டு முஸ்லிம்கள் மற்றும் ஒரு தமிழரும் பட்டியலில் உள்ளனர்.
இரு முஸ்லிம் வேட்பாளர்களில், முன்னாள் அமைச்சர் மையோன் முஸ்தபாவின் மகன் ரிஸ்லி முஸ்தபதாவும் ஒருவர். 2010 தேர்தலில் த தே கூ சார்பில் தெரிவாகி பின்னர் பல்டியடித்த பி.பியசேன இக்கட்சியில் போட்டியிடும் வாய்ப்பை எதிர்ப்பார்த்த போதும் ஏமாற்றமே மிஞ்சியது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு:
முஸ்லிம் கட்சிகளில் முஸ்லிம்களே வேட்பாளர்களாக இருப்பது போல் தமிழ் கட்சிகளில் தமிழர்களே இடம்பெற்றுள்ளார்கள். கூட்டமைப்பு சார்பில் 2015ல் தெரிவான க.கோடீஸ்வரன் தலைமையில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இவர் கடந்த தேர்தலில் டெலோ சார்பில், கூட்டமைப்பின் பட்டியலில் இடம்பிடித்து நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியிருந்தாலும் பின்னர் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டார். இதனால் வேட்பாளர் பட்டியலை முடிவு செய்யும் போது இரு கட்சிக்கும் இடையில் உரசல் ஏற்பட்டது.
பட்டியலில் பத்து பேர் இடம்பெற்றிருந்தலும் பாதியளவில் `டம்மி` வேட்பாளர்களே.
இதர தமிழ் கட்சிகள்:
அகில இலங்கை தமிழர் மகா சபை விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தலைமையில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியவையும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் கூட்டணி ஆகியவை இம்மாவட்டத்தில் போட்டியிடவில்லை.
கள நிலவரம்:
கடந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் அணியில் முஸ்லிம் காங்கிரஸ் இடம்பெற்றிருந்ததால் 4 ஆசனங்கள் அவர்களுக்கு கிடைத்தது. அதில் மூவர் முஸ்லிம்கள் ஒருவர் சிங்களவர். ஐமசுமு சார்பில் இரு சிங்களவர்கள், கூட்டமைப்பு சார்பில் ஒரு தமிழரும் தெரிவாகினர்.
முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்தத் தேர்தல் மாவட்டத்தை பொறுத்தவரை, பலமான முஸ்லிம் கட்சியொன்று ஒரு பிரதான தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடும் பட்சத்தில், அந்தக் கூட்டணிக்கே அதிக இடங்கள் கிடைப்பது கடந்தகால வரலாறு.
அந்த அடிப்படையில்தான் இம்முறை மு கா, சஜித் கட்சியுடன் கூட்டமைத்து போட்டியிடுவதால், தனக்குரிய 3 ஆசனங்களைத் தக்கவைப்பதோடு, கூடுதலாக ஒரு இடத்தைப் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பொறுத்தவரை, திருகோணமலை மாவட்டம் போலவே இம்மாவட்டத்திலும் சிங்கள வாக்குகளையே குறிவைத்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட கூடுதலான வாக்குகளைப் பெற்றால் அவர்கள் இரண்டு இடங்களை பெறக் கூடும்.
ஏனைய இரண்டு இடங்கள் ததேகூ, தேசிய காங்கிரஸ், ரிஷாத் கட்சி, ஐதேக ஆகிய நான்கு கட்சிகளுக்கு இடையேதான் பகிரப்படும் வாய்ப்பு உள்ளது. இதில் இரண்டு கட்சிக்கு தலா ஒரு இடம் கிடைக்கக் கூடும்.
ஜனாதிபதி தேர்தலில் இம்மாவட்டத்திலுள்ள சிங்கள வாக்காளர்களில் பெரும்பாலானோர் கோத்தாவுக்கே வாக்களித்தனர். தற்போது ஐக்கிய தேசிய கட்சி பிளவுபட்டுள்ள நிலையில், சிங்கள வாக்குகள் தாமரை மொட்டுக்கு சாதகமாகவே உள்ளது.
இம்மாவட்டத்தில் 18% தமிழர்கள் இருந்தாலும், இந்தத் தேர்தலில் ஒரு ஆசனத்தையாவது அவர்களால் பெற முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
கடந்த தேர்தலில் 17% வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தைத் தமிழர்கள் தக்கவைத்துக் கொண்டனர்.
கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பான பிரச்சினை, தமிழர்களின் காணிகள் பறிபோகுதல் போன்ற விஷயங்களில் கூட்டமைப்பு தமிழ் மக்களின் நலன்களைப் பாதுகாக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு எதிரொலிக்கிறது.
இம்முறை கருணா அம்மான் ஒரு கட்சியில் போட்டியிடுவதால், குறிப்பிட்ட அளவிலான வாக்குகளை அவரால் பெற முடியும். இந்த மாவட்டத்தில் முஸ்லிம்களின் அரசியல், சமூக, பொருளாதார ஆதிக்கத்திலிருந்து தமிழர்களை பாதுகாக்க கருணா அம்மானால் தான் முடியும் என்று ஒரு சாரார் நம்புகின்றனர். ஆனால் இந்த நம்பிக்கை வெற்றியை பெற்றுத்தருமா?
தமிழ் வாக்குகள் சிதறும் பட்சத்தில் 1994 தேர்தல் போன்று தமிழர்களின் பிரதிநிதித்துவம் இல்லாத மற்றுமோர் தேர்தலாக இது அமையக் கூடும் எனும் அச்சமும் உள்ளது.
1994ல் தவிகூ மாவை சேனாதிராஜா தலைமையில் வேட்பாளர்களை நிறுத்தியது. வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தலைமை வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்திய தரப்பினர், தமிழர் மகா சபை என்ற பெயரில் சுயேச்சையாகப் போட்டியிட்டனர். டெலோவும் தனித்துப் போட்டியிட்டது. இருதரப்பும் வாக்குகளைப் பிரித்ததால் தமிழரின் பிரதிநிதித்துவம் பறிபோனது.
அன்று மாவைக்கு எதிரான சுயேச்சைக் குழுவுடன் தொடர்புடையவர்களே இப்போது கருணா அம்மானுக்கு பக்கபலமாக உள்ளனர்.
தமிழ மக்களின் பிரதிநிதித்துவம் இழக்கப்படாமல் இருப்பது அங்குள்ள தமிழ மக்களின் வாக்குகளிலேயே தங்கியுள்ளது.