மலேசிய மடல்:
கோலாலம்பூர், ஜுன் 25:
மலேசியாவில் உள்ள இந்தியத் தொழிலாளர்கள் விடயத்தில் இந்திய நடுவண் அரசு பாராமுகமாக இருப்பது ஒருபுறம் இருக்க அவர்களை மேலும் நெருக்கடிக்கு ஆளாக்குவதாக சம்பந்தப்பட்டவர்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
அண்மைக் காலமாக வருமானத்தை இழந்திருப்பதுடன் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற நிலையையும் இவர்கள் எதிர்கொண்டிருக்கும் இந்த நெருக்கடியான நிலையில் இந்தத் தொழிலாளர்கள் தத்தம் கடப்பிதழைப் புதுப்பிக்கும் நடவடிக்கை ஈடுபடும் நேரத்தில் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா சிக்கலால் கடந்த சில மாதங்களாக இந்தியத் தூதரகம் பொது நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திருந்தது.
இதனால், விசா முடிந்தவர்களும் வேலை பார்ப்பதற்கான பெர்மிட்டைப் புதுப்பிக்க வேண்டியவர்களும் நாடு முழுவதிலும் இருந்து கோலாலம்பூரை முற்றுகை இட்டனர்.
ஆனால் புதிய நடைமுறையை அமல்படுத்தி இருப்பதால் நாட்டின் தென்கோடி முனையான ஜோகூர், வடமுனையான பினாங்கில் இருந்தெல்லாம் பலநூறு கிலோமீட்டரைக் கடந்து கணவன் மனைவி குழந்தை என குடும்பத்துடன் வந்தவர்களெல்லாம் பரிதவிப்பிற்கு ஆளாகி நிற்கின்றனர்.
இந்தச் சூழலில் தங்களின் கடப்பிதழ் தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிகாண முடியாமல் இருக்கும் இந்தியத் தொழிலாளர்கள் தாங்கள் எதிர்நோக்கும் அவலத்திற்கு இந்தியத் தூதரகம் விரைவில் தீர்வு காண வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 4 மாதங்களாக கோவிட் 19 நோய்த் தொற்று காரணத்தால் கடப்பிதழ் புதுப்பித்தல் தொடர்பான பணிகள் எதுவும் இந்தியத் தூதரகத்தால் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் கடந்த திங்கள் முதல் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
இதனைத் தொடர்ந்து கடப்பிதழ் புதுபித்தல் பணியை மேற்கொள்ளும் பிஎல்எஸ் இண்டெர்நேஷனல் நிறுவனத்தை இந்தியத் தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
அலுவலகத்திற்கு நேரடியாக சென்று கடப்பிதழைப் புதுப்பிக்கும் முறையை திங்கள் முதல் மாற்றியமைத்த நிர்வாகம் புதிதாக முன்பதிவு முறையை நடைமுறைப் படுத்தியது.
இதன் மூலம் நேற்று முன்பதிவு செய்தவர்கள் தங்களின் கடப்பிதழைப் புதுப்பிக்க சென்றபோது அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அறிவிப்பு செய்தனர் பிஎஸ்எல் நிர்வாகத்தினர்.
உங்கள் அனைவரின் முன்பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய முறையில் நீங்கள் எங்கள் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என அறிவித்தனர்.
இந்தியாவிலிருந்து இங்கு பணிபுரிய வந்துள்ளவர்கள் அனைவருமே கல்வியறிவு பெற்றவர்கள் என இந்தியத் தூதரகம் நினைக்கிறதா எனத் தெரியவில்லை.
ஏன் இந்த குழப்பம் எனவும் புரியவில்லை.
ஏற்கெனவே இருந்த பழைய முறையில் ஓர் இந்தியத் தொழிலாளர் தன் கடப்பிதழைப் புதுப்பிக்கச் (புதுப்பிக்கும் கட்டணம் வெ. 350, விண்ணப்படிவம் பூர்த்தி செய்ய வெ. 42, புகைப்படம் எடுக்க வெ. 26, முன்பதிவு மேற்கொள்ள வெ 30, இவற்றுடன் போக்குவரத்து செலவும் உள்ளது) சென்றால் ஏறக்குறைய தன்னுடைய அரை மாத சம்பளத்தை செலவழிக்கும் நிலையில் தற்போதைய முறையில் கூடுதல் செலவினத்திற்குஇந்தியத் தூதரகம் வழி வகுத்துள்ளது. இது எப்படி இருக்கிறது என்றால், எரிகிற வீட்டில் கிடைக்கிறது வரை லாபம் எனபது போல் தெரிகிறது.
அதேவேளை ம்லேசிய அரசாங்கம் இக்கட்டான இந்த சூழ்நிலையில் அந்நியத் தொழிலாளர்களின் லெவிக் கட்டணத்தில் 25% கழிவு வழங்கியுள்ள நிலையில் இந்தியத் தூதரகம் தங்களின் குடிமக்களிடம் கரிசனமாகா நடந்து கொள்வதற்குப் பதிலாக இலாப நோக்கில் செயல்படுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது.
தினம்தினம் புதிதாக அறிவிப்பு செய்துவரும் இந்தியத் தூதரகத்தின் இதுபோன்ற அறிவிப்புகளால் ஏற்கெனவே நோய்த் தொற்று பயம், வேலையின்மை, சம்பளக் குறைவு, பணிபுரிவதற்கான பெர்மிட்டை புதுப்பிக்க முடியாத சூழ்நிலை என்றெல்லாம் மன உளச்சலில் உள்ள இந்தியத் தொழிலாளர்கள் அவலத்தை எதிர்நோக்கி இருக்கும் நிலையில் இந்திய அரசின் இந்தப் புதிய முன்பெடுப்ப் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்.
எனவே, இந்தப் புதிய முறைகளை மாற்றி பழைய முறையிலேயே எளிமையாக கடப்பிதழைப் புதுப்பிக்க வழி ஏற்படுத்தித் தருமாறு இந்தியத் தூதரகத்தைக் கேட்டுக் கொள்வதாக பாதிக்கப்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.