சிவா பரமேஸ்வரன் – முன்னாள் மூத்த செய்தியாளர் பிபிசி
இலங்கையிலுள்ள நிர்வாக மாவட்டங்கள் அநேகமானவை தனித் தேர்தல் மாவட்டமாக உள்ளன. ஆனால் வடக்கிலுள்ள ஐந்து நிர்வாக மாவட்டங்கள் இரண்டு தேர்தல் மாவட்டங்களாக இணைக்கப்பட்டுள்ளன.
வாக்காளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே இது தீர்மானிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி ஆகிய நிர்வாக மாவட்டங்களைக் கொண்டது போல், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களை உள்ளடக்கியது வன்னி தேர்ததல் மாவட்டம்.
தமிழ் மக்களின் இதயமான வன்னிக்கு தமிழர் தாயகத்துக்கான உரிமைப் போராட்டத்தில் முக்கியமானதொரு இடமுண்டு.
உள்நாட்டுப் போர் முடிவடைவதற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் மையமாக விளங்கியது வன்னிப் பிரதேசம். இந்த நிலம் எக்காலத்துக்கும் `சிவந்த மண்` ஆக இருக்கும். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற போரில், போராளிகளின் தீரத்தையும், வீரத்தையும் கண்ட இந்த மண் ஏராளமான தாக்குதல்கள் மற்றும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளையும் கண்டுள்ளது.
இந்த மண்ணிலேயே 18/5/2009 அன்று தமிழ் மக்களின் ஆயுதப் போரட்டம் மௌனித்தது. அந்நாளே உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் `முள்ளிவாய்கால் நினைவேந்தல்` என்று தமிழர்களால் அனுசரிக்கப்படுகிறது.
போரின் இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கானவர்கள் சரணடைந்தது, கையளிக்கப்பட்டது, அல்லது வலிந்து பிடித்துச் செல்லப்பட்டது போன்றவைகளுக்கு மௌன சாட்சியாக இருக்கும் வட்டுவாகல் பாலம் இந்தப் பெருநிலப்பரப்பிலேயே உள்ளது.
சாதனை, வேதனை இரண்டையும் சுமக்கும் இந்த மண்ணிலிருந்து தெரிவாகும் உறுப்பினர்கள் எண்ணிக்கை 6. இங்கு 17 அரசியல் கட்சிகள் மற்றும் 28 சுயேச்சைக் குழுக்கள் களத்தில் உள்ளன.
2015 தேர்தலில் ததேகூ சார்பில் 4 தமிழர்களும், ஐதேக சார்பில் ஒரு முஸ்லிமும் (ரிஷாத்) ஐமசுமு சார்பில் ஒரு முஸ்லிமும் (மஸ்தான்) தெரிவாகியிருந்தனர். அந்த 6 பேரும் இம்முறையும் களத்திலுள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு (வீடு):
டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான 9 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலில் 2015ல் அவருடன் தெரிவான, டாக்டர்.எஸ்.சிவமோகன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருடன் தேசியப் பட்டியலில் நியமனம் பெற்றிருந்த சாந்தி சிறீஸ்கந்தராஜாவுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.
2015 தேர்தலில் ஈபிஆர்எல்எப் சார்பாக பட்டியலில் இடம்பிடித்த சிவமோகன் இம்முறை தமிழரசு கட்சியில் இடம்பிடித்துள்ளார்.
மாகாண முன்னாள் அமைச்சர் டாக்டர்.பி.சத்தியலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் லிங்கநாதன் ஆகியோருக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி: (மீன்)
இக்கட்சியின் பொதுச்செயலர் சிவசக்தி ஆனந்தன் (ஈபிஆர்எல்எப்) முதன்மை வேட்பாளராகப் பெயரிடப்பட்டுள்ளார். கடந்த தேர்தல்களில் கூட்டமைப்பு சார்பில் இவர் தேர்வாகியிருந்தார்.
வடமாகாண சபைத் தேர்தலில் டெலோ மூலம் அரசியலில் பிரவேசித்த முன்னாள் மாகாண அமைச்சர் டாக்டர்.ஜி.குணசீலன், விடுதலைப் புலிகளில் ஒரு தளபதியாக இருந்து போரில் உயிரிழந்த விக்டரின் சகோதரி லூர்து மாலினி வினிட்டன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். பல புதுமுகங்களும் மீன் சின்னத்தில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்: (சைக்கிள்)
கடந்த இரண்டு தேர்தல்களைப் போன்று இந்தத் தேர்தலிலும் தனித்து போட்டியிடுகிறது. சிவபாதம் கஜேந்திரகுமார் தலைமையில் மேரி ரெஜினா சசீந்திரலிங்கம் என்ற பெண் வேட்பாளருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி: (யானை)
இக்கட்சியில் தமிழர்கள் மற்றும் சிங்களவர் தலா நால்வரும், முஸ்லிம் ஒருவரும் நிறுத்தப்பட்டுள்ளனர். தமிழ்-முஸ்லிம் வேட்பாளர்கள் பெரியளவில் அறியப்பட்டவர்கள் இல்லை.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன: (தாமரை மொட்டு)
கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் தெரிவான காதர் மஸ்தான் தலைமை வேட்பாளர். வன்னியில் சிவில் பாதுகாப்புப் படைக்கு கட்டளை அதிகாரியாகப் பணியற்றிய கேணல் ரட்ணப்பிரிய பண்டு உட்பட நான்கு சிங்களவர்கள், இரண்டு முஸ்லிம்கள், மூன்று தமிழர்கள் பட்டியலில் உள்ளனர்.
2004 தேர்தலில் வீட்டுச் சின்னத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து தெரிவான ஒரேயொரு உறுப்பினரான எஸ்.கனகரட்ணம் இம்முறை தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
போர்க் காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைதாகி சில காலம் சிறையில் இருந்தார். 2010 தேர்தலின் போது விடுதலையாகி வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி: (தொலைபேசி)
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான பட்டியலில், மூவினத்தைச் சேர்ந்த தலா மூவருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெயரிடப்பட்டுள்ள தமிழ் வேட்பாளர்கள் பிரபலமானவர்கள் அல்ல.
ஏனைய தமிழ் கட்சிகள்:
தவிகூ, ஈபிடிபி, ஈரோஸ்,தமிழர் சமூக ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிட்டாலும் அவர்கள் சொற்ப வாக்குகளையே பெறக் கூடும். அவர்கள் பெயரளவில் மட்டுமே போட்டியிலுள்ளதாகக் கருத முடியும்.
கடந்த தேர்தல்கள்:
1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலே விகிதாசார முறையில் நடைபெற்ற முதல் தேர்தல். அத்தேர்தலில் வன்னி மாவட்டத்துக்கான ஐந்து இடங்களில் தமிழர் விடுதலைக் கூட்டணி இரண்டு, முஸ்லிம் காங்கிரஸ், ஐதேக, ஈரோஸ் ஆகியவை தலா ஒரு இடத்தை கைப்பற்றின. இதில் தமிழர்கள் நால்வர்.
அடுத்து வந்த 1994ஆம் ஆண்டுத் தேர்தலில் இடங்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்து புளொட் மூன்று இடங்களில் வென்றது. ஏனைய மூன்று இடங்களில் முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை தலா ஒரு ஆசனத்தைப் பெற, சந்திரிகா தலைமையிலான பொதுஜன முன்னணி சார்பில் பி.சுமதிபால என்கிற ஒரு சிங்களவரும் முதல் முறையாக வன்னியிலிருந்து தேர்வானார்.
2000ஆம் ஆண்டுத் தேர்தலில் டெலோ-3, முகா-1, ஐதேக-1, பொதுஜன முன்னணி-1.
2000ஆம் ஆண்டு தேர்தலில் இரண்டு சிங்களவர் தெரிவானது தமிழர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அந்நிலை தொடரக்கூடாது எனும் இலக்கில் 2001 ஆம் ஆண்டு தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, டெலோ மற்றும் இபிஆர்எல்எப் ஆகியவை புரிந்துணர்வு அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டன.
அத்தேர்தலில் தவிகூ-3, ஐதேக-2 புளொட்-1 இடங்களைப் பெற்றன. ஐதேக சார்பில் வெற்றிபெற்ற இரு முஸ்லிம்களில் ரிஷாத் பதியுதீனும் ஒருவர்.
2004ஆம் ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட்ட சூழலில், விடுதலைப் புலிகளை தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகளாக தவிகூ தலைவர் ஆனந்தசங்கரி ஏற்கவில்லை. வேட்பாளர்கள் தெரிவு எவ்வித தலையீடுமின்றி இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை அவர் வலியுறுத்தினார். அவரது நிலைப்பாடு நிராகரிக்கப்பட்டதால் கூட்டமைப்புக்கு உதயசூரியன் சின்னத்தை வழங்க அவர் மறுத்தார். இதையடுத்து கூட்டமைப்பினர் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் நடைமுறை அறிமுகமானது.
விடுதலைப் புலிகளின் பின்புலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்கொண்ட முதலாவது தேர்தல் இதுவாகும். கூட்டமைப்பு ஆறில் ஐந்து ஆசனங்களை கைப்பற்றியது. எஞ்சிய ஒன்றில் ஐதேக சார்பில் ரிஷாத் தெரிவானார் .
போர் மௌனித்த பிறகு முதலாவது தேர்தல் 2010ல் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் ஐந்து ஆசனங்கள் மூன்றாகக் குறைந்து முதல் முறையாக மூன்று முஸ்லிம்கள் தெரிவாயினர்.
2015 தேர்தலில் கூட்டமைப்பு-4, ஐதேக-1 ஐமசுமு-1 என உறுப்பினர்கள் வென்றனர்.
கள நிலவரம்:
இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் 1989, 2004 தேர்தல்களில்தான் தமிழ் மக்கள் அதிகப்படியான ஆசனங்களை பெற்றார்கள்.
1989,1994,2000,2004 தேர்தல்களில் ஒவ்வொரு ஆசனங்களைப் பெற்ற முஸ்லிம்களுக்கு 2001, 2015 தேர்தல்களில் 2 இடங்களும், 2010ல் மூன்று இடங்களும் கிடைத்தன.
1989ஆம் ஆண்டு நான்காக இருந்த தமிழ் பிரதிநிதித்துவம் 94ல் மூன்றாக குறைந்த போது தான் சிங்களவர் ஒருவர் தேர்வானர். 2000ஆம் ஆண்டில் சிங்கள பிரதிநிதித்துவம் இரண்டாக உயர்ந்தது.
தமிழர்களின் பிரதிநித்துவம் சில தேர்தல்களில் குறைவதற்கு, போர்க் காலத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் தமிழர்கள் வாக்களிக்க முடியாத சூழல் ஒரு முக்கியமான காரணம்.
போர் முடிந்த பிறகும் தமிழ் மக்களின் வாக்குள் திட்டமிட்டு சிதறடிக்கப்படுகின்றன. பல்வேறு கட்சிகள், குழுக்கள் சார்பாக பிரதான கட்சிகள் பிரபலமற்ற தமிழர்களை உள்வாங்கி போட்டியில் இறக்குவதாலும் இந்நிலை ஏற்படுகிறது.
தமிழ் மக்களிடம் வாக்களிப்பதில் ஆர்வமின்மை, தமிழ்த் தலைமைகள் மீதான அதிருப்தி போன்ற பல காரணங்களாலும் தமிழர்களின் வாக்குப்பதிவு குறைகிறது. தமிழர்கள் வாக்களிப்பு வீதம் குறைவது அவர்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கிறது. தற்போதும் இதே நிலை காணப்படுகிறது.
இம்முறை களமிறக்கப்பட்டுள்ள 28 சுயேச்சைக் குழுக்களில் 10 குழுக்கள் தனித் தமிழர்களைக் கொண்டது. 5 குழுக்களிலும், உதிரிக் கட்சிகளிலும் அதிகமாக தமிழர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். வழமைபோல் தமிழர்களின் வாக்குகள் சிதறினால் இம்முறையும் அது ஏனைய இனங்களுக்கு சாதகமாக அமையும்.
கடந்த தேர்தலில் 55% வாக்குகளுடன் 4 ஆசனங்களைப் பெற்ற கூட்டமைப்பின் வாக்குவங்கி இம்முறை சரிந்து அது மூன்றாகக் குறையக் கூடும்.
வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களிடையே ஒற்றுமையை காண முடியவில்லை. விடுதலைப் புலிகள் குறித்து சுமந்திரன் அண்மையில் கூறிய கருத்துக்களை தமக்கு சாதமாக்கிக் கொள்ள கட்சிக்குள் இருக்கும் பல வேட்பாளர்கள் முயற்சிக்கின்றனர்.
விருப்பு வாக்குகளை இலக்கு வைத்து எழுந்துள்ள முரன்பாடான பிரச்சாரமும் உட்கட்சிப் பூசலும் கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் வீழ்ச்சியை ஏற்படுத்தக் கூடும் அப்படி நடைபெறுமாயின் அது அரசியல் தற்கொலையாகவே இருக்கும்.
வன்னியில் விக்னேஸ்வரன் கட்சியின் மூலம் கூட்டமைப்பு கடும் சவாலை எதிர்கொள்கிறது.
சிவசக்தி ஆனந்தனின் தனிப்பட்ட ஆளுமை மற்றும் செல்வாக்கு காரணமாக மீன் சின்னம் ஒரு ஆசனத்தைப் பெறக் கூடும். ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் குறைந்தது ஒரு முஸ்லிமாவது வெல்லக் கூடும்.
அவ்வகையில் வீடு-3 மீன்-1, டெலிபோன்-1 ஆகியவை 5 இடங்களைக் கைப்பற்றப்பட்டால் ஆறாவது இடம் யாருக்கு? சிங்கள வாக்குகள் மூலம் மொட்டுக் கட்சிக்கா, அல்லது முஸ்லிம் வாக்குகள் மூலம் டெலிஃபோன் கட்சிக்கா, அல்லது தமிழர்கள் தமது உள்முரண்பாடுகளை மறந்து வாக்களிப்பதால் ஏதாவதொரு தமிழ் கட்சிக்கு கிடைக்குமா என்பதே தற்போதைய களநிலவரமாக உள்ளது.