சிவா பரமேஸ்வரன்
இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேர்தல் பல நிர்வாக மற்றும் சட்ட சிக்கல்களைக் கடந்து எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது.
தேர்தல் பிரச்சாரம் இப்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது என்றாலும் கட்சிகள் எந்த விஷயங்களை முன்வைத்து மக்களிடம் வாக்கு கோரவுள்ளன என்பது தேர்தல் அறிக்கை வெளியான பிறகே தெரியும் ஆனாலும் நாட்டின் அரசியல் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை என்று துருவப்படுத்தப்பட்டுள்ளது நன்றாகத் தெரிகிறது.
முன்னையத் தேர்தல்களைப் போலவே இம்முறையும் இலங்கையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ளனர்.
இத்தேர்தலில் தந்தை-மகன், உடன்பிறப்புகள், கணவன்-மனைவி என அனைத்து குடும்ப உறவுகளும் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். அப்படியானவர்களின் சிலரைப் பார்ப்போம்.
ராஜபக்ச குடும்பத்தில் மட்டும் இரு புதுமுகங்கள் உட்பட ஐந்து பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் தாமரை மொட்டுச் சின்னத்தில் களமிறங்கியுள்ளனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச குருநாகல் மாவட்டத்திலும், அவரது மகன் நாமல் ராஜபக்ச ஹம்பாந்தோட்டையிலும் போட்டியிடுகின்றனர். மஹிந்தவின் மூத்த சகோதரரும் அமைச்சருமான சாமல் ராஜபக்ச ஹம்பாந்தோட்டையிலும் அவரின் மகன் சசீந்திர ராஜபக்ச புதுமுகமாக மொனராகல மாவட்டத்திலும் களமிறங்க ராஜபக்சக்களின் சகோதரி மகன் நிபுண ரகவக்க மாத்தறை மாவட்டத்தில் மற்றொரு புதுமுகமாக களமிறங்கியுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவை தவிர ஏனைய நால்வரும் தமது பூர்விகமான தெற்கில் போட்டியிடுகின்றனர்.
சாமல்-நாமல் ஆகியோர் ஒரே மாவட்டத்தில் போட்டியிட்டாலும் அவர்களிடையே கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெறுவதில் போட்டியுள்ளது. 2015 தேர்தலில் பெரியப்பாவைவிட நாமல் கூடுதல் வாக்குகளைப் பெற்றிருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சஜித் பிரேமதாஸ தலைமையில் டெலிபோன் சின்னத்தில் ஐக்கிய மக்கள் சக்தியாகப் போட்டியிடும் கட்சியிலும் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் உள்ளது.
கடந்த தேர்தல் போன்று, முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் பேச்சாளருமான டாக்டர் ராஜித சேனாரட்ன களுத்துறையிலும் அவரது மகன் சதுர சேனாரட்ன கம்பஹா மாவட்டத்திலும் போட்டியிடுகின்றனர்.
இக்கட்சியின் சார்பில் மொனராகல மாவட்டத்தில் தர்மதாஸ பண்டார போட்டியிட அவரது சகோதரரும் கட்சியின் பொதுச் செயலருமான ரஞ்சித் மதும பண்டார தேசியப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
ரணதுங்க சகோதரர்களிடையே கம்பஹாவில் நேரடிப் போட்டி நிலவுகிறது. உலகக் கோப்பையை வென்ற இலங்கை கிரிக்கெட் அணிக்குத் தலைவராக இருந்த அர்ஜுன ரணதுங்க கடந்த தேர்தலைப் போன்று ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்திலும், பிரசன்ன ரணதுங்க தாமரை மொட்டுச் சின்னத்திலும் நேருக்கு நேர் போட்டியிடுகின்றனர்.
மலையகத்தில் தொண்டமான் குடும்பத்திலும் இதே நிலை கணப்படுகிறது. காலஞ்சென்ற ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமான் நுவரெலியாவிலும், ஆறுமுகன் தொண்டமானின் சகோதரியின் மகன் செந்தில் தொண்டமான் பதுளை மாவட்டத்திலும் மொட்டுச் சின்னத்தில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் கட்சிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் மீன் சின்னத்தில் முன்னாள் துணை அமைச்சர் சோ.கணேசமூர்த்தியும் அவரது மகன் கோபிநாத் கணேசமூர்த்தியும் ஒரே கட்சியில் மட்டக்களப்பில் போட்டியிடுகின்றனர்.
இதே கட்சியில் யாழ்ப்பாணத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரன் போட்டியிட அவரது சகோதரர் கந்தையா சர்வேஸ்வரன் தேசியப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் கொழும்பில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட, அவரது சகோதாரர் பிரபா கணேசன் தொலைவிலிருக்கும் வன்னியில் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் சுவர்க்கடிகாரம் சின்னத்தில் இறங்கியிருக்கிறார்.
அகில இலங்கை தமிழர் மகாசபையின் சார்பில் கப்பல் சின்னத்தில் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகிறார். அவரது மனைவி வித்யாவதி முரளிதரன் மட்டக்களப்பில் சுயேச்சைக் குழுவொன்றின் சார்பில் தையல் இயந்திரம் சின்னத்தில் களமிறங்கியுள்ளார்.
திருகோணமலையில் காலஞ்சென்ற அமைச்சர் எம்.ஐ.எம் மக்ரூபின் மகனும் மகளும் போட்டியில் உள்ளனர். பாரம்பரியமாக இக்குடும்பம் ஐதேக சேர்ந்தவர்கள். ஆனால் கட்சி பிளவுபட்ட நிலையில் மகன் இம்ரான் மஹ்ரூப் டெலிபோன் சின்னத்திலும் மகள் ரோஹினா மஹ்ரூப் யானை சின்னத்திலும் எதிர் எதிராகப் நிற்கின்றனர்.
சென்ற நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த தயா கமகே தம்பதிகள் இத்தேர்தலிலும் ஒரே கட்சியின் சார்பில் இரு மாவட்டங்களில் போட்டியிடுகின்றனர். தயா கமகே கொழும்பிலும், அவரது மனைவி அனோமா கமகே அம்பாறை மாவட்டத்திலும் யானை சின்னத்தில் வேட்பாளர்களாக உள்ளனர்.
தாமரை மொட்டு கட்சி சார்பில் சகோதரர்கள் லக்ஸ்மண் யாப்பா மற்றும் மஹிந்த யாப்பா மாத்தறை மாவட்டத்தில் வாக்கு கோருகின்றனர்.
பௌத்தர்களின் மிகப் புனிதத் தலமான தலதா மாளிகை அமைந்துள்ள கண்டி மாவட்டத்தில் மொட்டுச் சின்னத்தில் உடன்பிறவா சகோதரர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் ஆனந்த அளுத்கமகே தேர்தல் களத்திலுள்ளனர். 2015 தேர்தலில் எதிரும் புதிருமாகப் போட்டியிட்ட இவர்கள் இம்முறை ஒரே கட்சியில் இத்தேர்தலை சந்திகின்றனர்.
மாத்தளை மாவட்டத்திலும் அதே கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர் ஜானக பண்டார தென்னகோன் மற்றும் அவரது மகன் பிரேமித பண்டார தென்னகோனும் போட்டியிடுகின்றனர்.
அம்மாவட்டத்தில் யானை கட்சியின் சார்பில் அளுவிகாரே குடும்பத்தில் வழமைபோல் சகோதரர்கள் வசந்த அளுவிகாரே மற்றும் ரஞ்சித் அளுவிகாரே இம்முறையும் போட்டியிடுகின்றனர்.
நுவரெலியாவில் நவீன் திஸநாயக்க இம்முறையும் யானையில் பயணிக்கிறார். அவரது சகோதாரர் மாயந்த யஷ்வந்த் திசாநாயக்கவுக்கு டெலிபோன் கட்சியின் தேசியப் பட்டியலில் இடமளிக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் குடும்ப உறுப்பினராரும் கட்சித் தலைவர் பதவியை குறிவைத்துள்ளவர்களில் ஒருவரான ருவான் விஜேவர்த்தன கம்பஹாவில் யானயில் போட்டியிடுகிறார்.
இந்தத் தேர்தலில் குடும்ப உறவுகள் ஒரே கட்சியில் மட்டுமல்லாமல் எதிரெதிராகவும் மோதுகிறார்கள். எதிர்த்துப் போட்டியிடும் போதும் சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பதே பிரதான இலக்காக உள்ளது. ஆனால் ஒரே கட்சியில் போட்டியிடும் போது சின்னத்துக்கு வாக்கு சேகரிக்கும் அதேவேளை விருப்பு வாக்குகளைப் பெறுவதில்தால் உண்மையான போட்டி நிலவுகிறது.