சிவா பரமேஸ்வரன்—முன்னாள் மூத்த செய்தியாளர் பிபிசி
யாழ்ப்பாணமும் தமிழுணர்வும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். வறண்ட பூமியானாலும் கல்வி வளம் நிறைந்த பூமி. தமிழர்களின் தாயகப் போராட்ட வரலாற்றில் மிகமுக்கியமான பங்குள்ள இடம். இலங்கை எனும் நாட்டின் வளர்ச்சியைக் கல்வி மற்றும் நிர்வாக ரீதியில் கட்டியெழுப்பிய பலரும் இங்கு பிறந்தவர்களே.
தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை அறவழியில் முன்னெடுத்த தந்தை செல்வாவும் அந்த இலட்சியத்துக்காக ஆயுதப் போராட்டத்தை வழிநடத்திய விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் யாழ் மண்ணுக்குப் பெருமை சேர்த்தவர்கள்.
ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் பல குழுக்கள் தோன்றியதும் இங்குதான். தமிழர்களுக்கான தீர்வு தனி நாடே எனும் வட்டுக்கோட்டை தீர்மானம் பிரகடனப்படுத்தப்பட்டதும் இங்குதான்.
போர்க்காலம் யாழ்ப்பாணத்தில் பல விஷயங்களைப் புரட்டிப் போட்டது. கல்விமான்கள், தொழில்சார் நிபுணர்கள், உட்பட பல்வேறு தரப்பினர் புலம் பெயர்ந்து பல நாடுகளின் யாழ்ப்பாண அடையாளத்தை இழக்காமல் இன்றும் வாழ்கிறார்கள்.
போர் காரணமாக உள்நாட்டில் மாறுதல்கள் ஏற்பட்டன. அது யாழ்ப்பாண அரசியலும் எதிரொலித்தது.
அங்கிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்வாகி தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பவர்களின் எண்ணிக்கை காலவோட்டத்தில் `கழுதை தேய்ந்து கட்டெறும்பான` கதையாயிற்று. 1977ல் தொகுதிவாரியாக இறுதித் தேர்தல் நடைபெற்றபோது 11 உறுப்பினர்கள் தெரிவாயினர். அனைவரும் தவிகூ சேர்ந்தவர்கள். விகிதாசார முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு பதினொன்று பத்தாகி, பத்து ஒன்பதாகி இப்போது ஏழாகவுள்ளது.
1989 தேர்தல்:
விகிதாசார முறையில் நடைபெற்ற முதலாவது தேர்தல். அவ்வேளை இந்தியப் படை வடக்கு கிழக்கில் நிலை கொண்டிருந்தது. தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கை11.
தவிகூ உதயசூரியன் சின்னத்தில் டெலோ, ஈபிஆர்எல்எப் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. புளொட், தமிழ் காங்கிரஸ், ஐதேக, முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவையும் போட்டியிட்டன. ஈரோஸ் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிட்டது. இந்தத் தேர்தல்தான் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் அமைப்புகளின் தேர்தல் அரசியல் பிரவேசமாக அமைந்தது.
ஈரோஸ் சார்பாக அந்த அமைப்பைச் சேர்ந்த இ.ரட்ணசபாபதி, இ.பரராஜசிங்கம் உட்பட 8 பேர் தெரிவாயினர். தவிகூ சார்பில் தெரிவான மூவரும் ஈபிஆர்எல்எப். அதில் ஒருவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். முதல் முறையாகத் தேர்தல் களத்தில் இறங்கிய மாவை சேனாதிராஜா தோல்வியடைந்தார்.
ஈரோஸுக்கு யாழ் மாவட்டத்தில் கிடைத்த வாக்குகள் மூலம் தேசியப் பட்டியலிலும் ஒரு இடம் கிடைத்தது. மட்டக்களப்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த சேகு தாவூத் பஷீருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.
விகிதாசாரத் தேர்தல் வரலாற்றில் சுயேச்சைக் குழுவுக்கு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்தது இதுவே முதலும் கடைசியும்.
தேர்தல் முடிந்த மூன்று மாதங்களுக்குள் பதவிப் பிரமாணம் செய்யாத நிலையில் ஈரோஸ் உறுப்பினர்கள் பதவியிழந்தார்கள். மீண்டும் பதவியிழந்த சிலர் உட்பட 9 பேர் பதவியேற்றனர். அதில் மலையகத்தைச் சேர்ந்த இராமலிங்கமும் ஒருவர்.
பிரேமதாஸவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஏற்பட்டிருந்த போர் நிறுத்தம் 1990ல் முறிவடைந்தது. பிறகு அரசியல் நெருக்கடி காரணமாக ஈரோஸ் உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்லாமல் பதவியிழந்தனர். பின்னர் ஈரோஸ் கலைக்கப்பட்டு பாலகுமார் உட்பட பலர் விடுதலைப் புலிகளில் இணைந்தனர். 1994 தேர்தல்வரை அந்த இடங்கள் வெற்றிடமாகவே இருந்தன. ஆனால் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை இழந்த சேகு தாவூத் பஷீர், சில மாதங்களுக்குப் பிறகு மட்டக்களப்பிலிருந்து தெரிவானவர்கள் ஒருவர் பின் ஒருவராகப் பதவியிழக்க, தனக்குரிய இடம் வரும் போது பதவியேற்றுக் கொண்டார்.
பின்னர் பல்டியடித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தார்.
1994 தேர்தல்:
வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டாலும் நாடு தழுவிய விகிதாசாரத்தில் பதினோரு ஆசனங்கள் 10ஆகக் குறைந்தது.
மாவட்டத்தின் பெரும்பாலான பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலம் அது. தீவகம் மட்டும் அரச கட்டுப்பாட்டில் இருந்தது. விடுதலைப் புலிகள் தேர்தலை நடத்தக் கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருந்தால், வாக்களிப்பு வீதமும் முடிவும் மாறியிருக்கும்.
இந்தத் தேர்தலில் 2.3% வாக்குகளே பதிவாகி அதன் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியது. ஈபிடிபி போட்டியிட்ட முதலாவது தேர்தல் இதுவாகும். தவிகூ போட்டியிடக் கூடிய சூழல் இருக்கவில்லை. சுயேச்சைக் குழுவாகப் போட்டியிட்ட ஈபிடிபி பெற்ற வாக்குகள் வெறும் 10,704 ஆனால் கிடைத்த ஆசனங்களோ 9. அக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முதல் முறையாக நாடாளுமன்றத்தில் பிரவேசிக்கின்றார். அன்று முதல் இன்றுவரை தனது பதவியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
தொகுதிவாரி முடிவுகள்
தொகுதி | பதிவான வாக்காளர்கள் | ஈபிடிபி | மு கா | சுயேச்சை | ஈபிஆர் எல்எப் |
ஊர்காவற்துறை | 49504 | 9944 | 56 | 214 | 232 |
வட்டுக்கோட்டை | 58949 | 556 | 05 | 43 | 08 |
காங்கேசன்துறை | 60417 | 93 | 04 | 15 | 09 |
மானிப்பாய் | 58382 | 04 | 00 | 08 | 00 |
கோப்பாய் | 56496 | 40 | 00 | 17 | 00 |
உடுப்பிட்டி | 52153 | 05 | 01 | 01 | 01 |
பருத்தித்துறை | 40336 | 03 | 00 | 31 | 00 |
சாவகச்சேரி | 51717 | 13 | 62 | 02 | 02 |
நல்லூர் | 62372 | 08 | 00 | 09 | 02 |
யாழ்ப்பாணம் | 50045 | 76 | 1914 | 26 | 06 |
கிளிநொச்சி | 55995 | 02 | 56 | 06 | 02 |
தபால் வாக்கு | 09 | 00 | 00 | 02 | 01 |
மொத்தம் | 596366 | 10744 | 2098 | 374 | 263 |
இந்தத் தேர்தல் முடிவுகள் கேலிக்கூத்தான ஒன்றென இன்றுவரை பேசப்படுகிறது. ஈபிடிபியினர் தீவகத்தில் அரசியல் வேலைத் திட்டத்தை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன. ஆனால் ஆட்சியில் இருந்த ஐதேக யாழ்ப்பாணத்தில் போட்டியிடவில்லை.
தொகுதிவாரியாக நூற்றுக்கும் குறைவான வாக்குகளைப் பெற்று உறுப்பினர்கள் நாடாளுமன்றம் சென்றதும் இத்தேர்தலில் நடந்தது.
யாழ் மாவட்டத்திலிருந்து முதல் முறையாக முஸ்லிம் ஒருவரும் நாடாளுமன்றம் சென்றார். புத்தளத்தைச் சேர்ந்த சேர்ந்த ஐ.எம்.இலியாஸ் தேர்வானார். யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தங்கியிருந்த இடங்களிலேயே வாக்களிக்கும் வசதி வழங்கப்பட்டதால் மு காவுக்கு கிடைத்த வாக்குகள் மூலம் அவர் தேர்வானார்.
2000ஆம் ஆண்டு தேர்தல்:
ஒப்பீட்டளவில் யாழ்ப்பாணத்தில் சிவில் நிர்வாகம் நடைமுறையில் இருந்ததால் வாக்காளர்களின் எண்ணிக்கை கூடியது. தென்னிலங்கையைச் சேர்ந்த சிறிய கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும்கூட போட்டியிடும் நிலை ஏற்பட்டது.
வாக்காளர்களின் எண்ணிக்கை 6,25,000ஐ கடந்தது. ஆனால் 21% மக்களே வாக்களித்தனர். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், நாடு தழுவிய விகிதாசாரத்தில் பத்தாக இருந்த ஆசனம் ஒன்பதானது.
அரசியல் கட்சியாகப் போட்டியிட்ட ஈபிடிபியின் எண்ணிக்கை ஒன்பதிலிருந்து நான்காகக் குறைந்தது. தவிகூ 3 ஆசனங்களைப் பெற்றது. ஐதேக சார்பில் தி.மகேஸ்வரன் தெரிவானார். சுதந்திரத்துக்கு பிறகு 1952 தேர்தலில் ஊர்காவற்துறை தொகுதியிலிருந்து அல்பிரட் தம்பையா ஐதேக சார்பில் தெரிவாகியிருந்தார். 42 வருடங்கள் பின்பு, தேசியக் கட்சி ஒன்றிலிருந்து ஒருவர் (மகேஸ்வரன்) தெரிவானார். முஸ்லிம் காங்கிரஸ் இழந்த ஒரு ஆசனத்தை தமிழ் காங்கிரஸ் கைப்பற்றி அப்பாத்துரை விநாயகமூர்த்தி நாடாளுமன்றம் சென்றார்.
2001 தேர்தல்:
தமிழ் காங்கிரஸ், தவிகூ, ஈபிஆர்எல்எப், டெலோ ஆகிய கட்சிகள் புரிந்துணர்வு அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக `உதயசூரியன் சின்னத்தில்` சந்தித்த முதலாவதும் இறுதித் தேர்தலும் இதுவே. ஆனந்தசங்கரி உட்பட 6 பேர் கூட்டமைப்பில் தெரிவாயினர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முதல் முறையாக நாடாளுமன்றத்துக்குச் சென்றார். ஈபிடிபி-2 ஐதேக-1.
2004 தேர்தல்:
விடுதலைப் புலிகளின் பின்புலத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்த முதல் தேர்தல் இது. இத்தேர்தலில் கூட்டமைப்பிலிருந்து தவிகூ வெளியேற தமிழரசுக் கட்சி உள்நுழைந்தது. வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டமைப்பு சார்பில் 8 பேர் தெரிவாயினர். தமிழ் காங்கிரஸ் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழரசுக் கட்சி சார்பில் மாவை சேனாதிராஜா, என் ரவிராஜ், டெலோ சார்பில் சிவாஜிலிங்கம், ஈபிஆர்எல்எப் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் தெரிவாகியிருந்தனர். செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், சிவநேசன் கிட்ணன் ஆகியோர் கட்சி சார்பின்றி தெரிவாயினர். ஈபிடிபி சார்பில் டக்ளஸ் தேவானந்தா தேர்வானார். ஐதேக இங்குப் போட்டியிட முடியாத சூழலில், மகேஸ்வரன் கொழும்பில் போட்டியிட்டு வென்றார்.
2010 தேர்தல்:
போர் முடிந்த பிறகு நடைபெற்ற முதலாவது தேர்தல். வாக்காளர்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்தைக் கடந்தாலும் வாக்களித்தவர்கள் 23%தான். போர் பிரதேசத்தில் இருந்த மக்களிடையே வாக்களிப்பில் ஆர்வம் இல்லாததையே இது காட்டியது.
கூட்டமைப்புக்கு ஐந்தும் ஐமசுமு வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட ஈபிடிபிக்கு மூன்று ஆசனங்களும் கிடைத்தன. கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்ட ஐதேக உறுப்பினர் மகேஸ்வரனின் மனைவி விஜயகலா அக்கட்சி சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.
2015 தேர்தல்:
வாக்காளர்களின் எண்ணிக்கையில் சுமார் 2 லட்சம் வீழ்ச்சி ஏற்பட்டதால் ஆசனங்களின் எண்ணிக்கை ஏழாகக் குறைந்தது கூட்டமைப்பு சார்பில் மாவை சேனாதிராஜா, எஸ்.சிறீதரன், ஈ.சரவணபவான், த.சித்தார்த்தன் மற்றும் சுமந்திரனும் வென்றார். இத்தேர்தலில் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா ஆகியோர் தோல்வி. விஜயகலா மகேஸ்வரன் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் வெற்றி பெற்றனர். 2010 போல் தமிழ் காங்கிரஸுக்கு இம்முறையும் ஏமாற்றமே.
தொடரும்……