சிவா பரமேஸ்வரன் – முன்னாள் மூத்த செய்தியாளர் பிபிசி
எதிர்வரும் ஆகஸ்ட் 5 தேர்தலில், தெரிவாகவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏழு.
2015ல் நாடாளுமன்றத்துக்குத் தெரிவான 07 உறுப்பினர்களும் தேசியப் பட்டியல் உறுப்பினர் ஒருவரும் களத்தில் உள்ளனர். 2015க்கு முன்னர் தெரிவாகியிருந்த 6 பேர் உட்பட முன்னாள் உறுப்பினர்கள் 14 பேர் போட்டியிடுகின்றனர்.
வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை யாழ் மாவட்ட தேர்தல் களமே மிகவும் பரபரப்புடன் காணப்படுகிறது. கூட்டமைப்பிலிருந்து பிரிந்துசென்ற தரப்பினர் மாற்று அணியாகக் களத்தில் இறங்கியுள்ளதால் நான்குமுனை போட்டி நிலவுகிறது.
அனைத்து மாவட்டங்களிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போட்டியிடுகின்ற போதிலும் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவதைத் தவிர்த்துக் கொண்டது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இங்கு ஏற்பட்ட அவமானம் மீண்டும் ஏற்ப்படக் கூடாது எனும் முன்னெச்சரிக்கையாகக் கூட இதை நோக்கலாம்.
இருப்பினும் பங்காளிக் கட்சிகளான ஈபிடிபி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவை தனித்தனியாக களத்திலுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு: (வீடு)
2015 தேர்தலில் தெரிவான மாவை சேனாதிராஜா, த.சித்தார்த்தன், எம்.சுமந்திரன், ஈ.சரவணபவன், சி.சிறீதரன் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.இரவிராஜின் மனைவி சசிகலா பெண் வேட்பாளராகப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
யாழ் மாநகர மேயர் இமானுவேல் ஆர்னல்ட் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பி.கஜதீபன் ஆகியோருக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி: (மீன்)
கூட்டமைப்பிலிருந்து அதிருப்தி காரணமாக வெளியேறியவர்களை உள்ளடக்கிய இந்த மாற்று அணியில் முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், என்.ஸ்ரீகாந்தா ஆகியோரும் உள்ளனர்.
மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி மீரா அருள்நேசன் ஆகிய இரு பெண்களுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.
2010, 2015ல் கூட்டமைப்பில் போட்டியிட்ட தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரான க.அருந்தவபாலன் இம்முறை இந்த அணியில் போட்டியிடுகிறார்.
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்: (சைக்கிள்)
2010க்கு முன்னர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் இம்முறையும் போட்டியிடுகிறார்கள்.
ஒரு பெண் உட்படச் சட்டத்தரணிகள் மற்றும் இளைஞர்களுக்கு இக்கட்சியில் கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி-:(வீணை)
1994 முதல் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இம்முறையும் களத்திலுள்ளார்.
முன்னாள் மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன், மனித உரிமைகள் சட்டத்தரணி முடியப்பு ரெமிடியஸ் ஆகியோருடன் பெண் வேட்பாளர் ஒருவருக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கியத் தேசியக் கட்சி: (யானை)
தனது கணவர் கொல்லப்பட்டதையடுத்து அரசியலில் பிரவேசித்தவர் விஜயகலா மகேஸ்வரன். 2010,2015 தேர்தல்களில் தெரிவானவர்.
ஐதேக பிளவுபட்டாலும் அவர் இம்முறையும் யானை சின்னத்திலேயே போட்டியிடுகிறார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி: (கை)
2015 தேர்தலில் ஐமசுமு சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டவர் அங்கஜன் இராமநாதன். தேர்தலில் தெரிவாகாத போதிலும் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்ற அவர் இம்முறை மீண்டும் போட்டியிடுகிறார்.
ஐக்கிய மக்கள் சக்தி, தவிகூ உட்பட 19 கட்சிகளும் 14 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிலுள்ளன.
சுயேச்சைக் குழுக்களில் இரண்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்க ஸ்தாபகரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான பொன்.ஐங்கரநேசன் மாம்பழம் சின்னத்தில் சுயேச்சைக் குழுவாகக் களமிறங்கியுள்ளார். முன்னாள் மாகாண அமைச்சரான இவர் ஊழல் மற்றும் முறைகேடுகள் குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் முதலமைச்சரின் நிர்ப்பந்தத்தின் பேரில் பதவி விலகினார்.
இவரது அமைப்பும் மீன் கூட்டணியில் இணைந்து கொள்ளும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தன்வழி தனிவழி என்று பயணிக்கிறார்.
முன்னாள் ஈபிடிபி உறுப்பினரான முருகேசு சந்திரகுமார் கேடயம் சின்னத்தின் சுயேச்சையாக இம்முறையும் களத்திலுள்ளார்.
1994, 2010 தேர்தல்களில் வீணைச் கட்சியில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தார். கிளிநொச்சியை மையமாகக் கொண்டு தன்னுடைய அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்து வரும் இவர் அங்குள்ள மலையக மக்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளார்.
களநிலவரம்:
கடந்த தேர்தல்களைவிட இம்முறை போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குகளை இலக்கு வைத்து பிரதான கட்சிகள் பெண் வேட்பாளர்களை முன்னிலைப்படுத்தியுள்ளன.
வீட்டுச் சின்னத்தில் சசிகலா இரவிராஜ், மீன் சின்னத்தில் அனந்தி சசிதரன் யானைச் சின்னத்தில் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் தமது கட்சிக்காகப் பெண் வாக்காளர்களை கவரும்வகையில் பிரச்சார யுத்திகளைக் கையாள்கிறார்கள். ஏனையக் கட்சிகளிலும் சுயேச்சைக் குழுக்களிலும் பெண் வேட்பாளர்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட தேர்தல் களத்தைப் பொறுத்தவரை போருக்கு பின் வித்தியாசமான ஒரு சூழல் காணப்படுகிறது. கூட்டமைப்பினால் அரசியலில் அடையாளப்படுத்தப்பட்டவர்களே பிரிந்து சென்று தனிக் கூட்டணி அமைத்து களத்தில் நிற்கின்றனர்.
இதுவரை வீணையையும், சைக்கிளையும், யானையையும் எதிர்கொண்ட கூட்டமைப்பு இம்முறை மீனையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
ஒரே சின்னத்தில் 10 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். விருப்பு வாக்குகளைப் பெறுவதில் அனைத்துக் கட்சிகளிலும் உட்பூசல் இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. குறிப்பாக வீட்டுக்குள் பூசல் தீவிரமாகவுள்ளது.
வேட்பாளர்கள் மாவை அணி, சுமந்திரன் அணி என்று பிரிந்து நிற்பதுபோல் தெரிகிறது. வேட்பாளர்கள் ஒருவர் மீது ஒருவர் வெளிப்படையாகவே குற்றச்சாட்டுக்களைக் கூறி பிரச்சாரமும் செய்கின்றனர். இதற்கு உள்ளூர் ஊடகங்களும் துணைபோகின்றன.
சுமந்திரன், சிறீதரன் ஆகியோர் விடுதலைப் புலிகள் தொடர்பாக அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் கட்சிக்குள்ளேயும் வெளியேயும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
“ஆயுதத்தை விரும்பும் ஆட்கள் எனக்கு வாக்களிக்க வேண்டாம். ஆயுதப் போராட்டத்தை நான் ஆதரிக்கவில்லை” என்று சுமந்திரன் தெரிவித்த சில கருத்துக்களும், சுமந்திரனை அன்டன் பாலசிங்கத்துடன் ஒப்பிட்டு சிறீதரன் பேசியதும் கூட்டமைப்பை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் கனடாவிலிருந்து திரட்டப்பட்டு சுமந்திரனிடம் கையளிக்கப்பட்டதாகக் கூறப்படும் ரூபாய் 20 கோடி 20 லட்சம் நிதி தொடர்பாகத் தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியின் முக்கியஸ்தரான விமலேஸ்வரி காந்தரூபன் முன்வைத்த குற்றச்சாட்டும் உள்ளூர் அரசியலில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
தமிழரசுக் கட்சியின் தற்போதைய நிலை `சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொண்டது போல் உள்ளது`, இதனால் தமிழரசுக் கட்சிக்குப் பாதிப்பு ஏற்படுமாயின் அது கூட்டமைப்பின் வாக்குவங்கியில் வீழ்ச்சியை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது.
சமூக ஊடகங்கள் மூலம் ஒருவர் மீது ஒருவர் மீது சேறு பூசுதல் தமிழ்க் கட்சிகளில் காணப்படுகிறது.
வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட காலத்தில் வீட்டுக்கு இருந்த ஆதரவில் சரிவு தென்படுகிறது. அந்த நெருக்கடியை மற்ற கட்சிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் யதார்த்தத்தையும் காண முடிகிறது.
ஐநா போர்க் குற்ற விசாரணையில் இலங்கை அரசைக் காப்பாற்றியது, ரணில் அரசுக்கு முட்டுக் கொடுத்தது, உட்கட்சி மோதல்கள் ஆகியவற்றை மையப்படுத்தி இதர கட்சிகள் மேற்கொள்ளும் பிரச்சாரத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் கூட்டமைப்பு தத்தளிக்கிறது.
மீன் சின்னத்தில் ஐந்து கட்சிகள் இணைந்திருந்தாலும், விக்னேஸ்வரன் எனும் தனி நபரில் ஆளுமை மற்றும் பலத்தையே நம்பி களத்திலுள்ளனர்.
ஆனால் அவருக்கு எதிராக அப்போது ஆளும் தரப்பினரால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்த போது மக்களிடையே அவருக்கு இருந்த ஆதரவையும், எழுச்சியையும் இப்போது காணமுடியவில்லை.
அவரது ஆட்சியில் முரண்பாடுகளே அதிகம் காணப்பட்டன. மக்களின் எதிர்ப்பாப்புகளுக்கு அமைய அவரது செயல்பாடுகள் இல்லை எனும் குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
வீணையைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் வழமையானவை. டக்ளஸ் தேவானந்தாவுக்கென்று கணிசமான வாக்குவங்கி ஒன்று உள்ளது.
இன்றையத் தேவை அபிவிருத்தி மற்றும் வேலை வாய்ப்பு என்று கருதுபவர்களிடையே அவருக்குக் கூடுதல் ஆதரவு உள்ளது. இதன் மூலம் ஈபிடியின் வாங்கு வங்கி சற்று உயரக்கூடும்.
சைக்கிள் கட்சியைப் பொறுத்தவரை வழமைபோல குழப்பம் நீடிக்கிறது. வீட்டுக்கு எதிராக மீன் களத்தில் நிற்பதால் சைக்கிள் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.
தேர்தலுக்கு முன்னர் கூட்டமைப்பின் மீது மக்கள் அதிருப்தி கொள்வது வழமை. புலிகளின் தலைவர் பிரபாகரனால் ததேகூ உருவாக்கப்பட்டது என்று மக்கள் கருதுவதால், முற்றாக வீட்டைக் கைவிடும் மனநிலையிலும் இல்லை.
தற்போதுள்ள கள நிலவரப்படி கூட்டமைப்புக்கு மூன்று ஆசனங்களே கிடைக்கும் சாத்தியங்கள் உள்ளன.
கூட்டமைப்புக்கு கடும் சவாலை விடுத்துள்ள விக்னேஸ்வரன் கட்சிக்கு இரண்டு ஆசனங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றாலும், இரண்டாவது இடத்தைப் பெற அவர்கள் அதிகம் போராட வேண்டும்.
வழமைபோல டக்ளஸின் வெற்றியும் உறுதியானதாகவே தெரிகிறது. ஈபிடியும் இரண்டாவது ஆசனத்தைப் பெற முயல்கிறது.
தமிழர் காங்கிரஸும் ஒரு இடத்தைப் பெறக்கூடிய வாய்ப்புள்ளது.
ஐதேக பிளவுபட்டுள்ளதால் அதன் வாக்குவங்கியும் பாதிக்கப்பட்டுள்ளது, இதனால் அவரகள் பிரதிநிதித்துவமும் கேள்விக்குறியே.
மாம்பழம், கேடயம் சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களுக்கும் ஆங்காங்கே ஆதரவு இருந்தாலும் ஆசனம் என்பது எட்டாக்கனியாகவே இருக்கும், இருப்பினும் அது மற்றவர்களின் வாக்குவங்கியை பாதிக்கும்.
வீடு-03, மீன்-01, வீணை-01, சைக்கிள்-01 என ஆசனங்கள் பிரிந்தாலும், ஏழாவது இடம் சுழன்று கொண்டிருக்கிறது. அந்த ஒரு இடத்தை யானை தூக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
யாருக்கு வெற்றி என்பது அடுத்த ஓரிரு வரங்களில் முன்னெடுக்கப்படும் தீவிரப் பிரச்சாரத்தைப் பொறுத்தே அமையக் கூடும்.
யாழ் மண்ணிலிருந்து யார் தெரிவு செய்யப்பட்டாலும் அவர்கள் தமிழர்களாகவே இருப்பார்கள் யாழ் சமூகம் ஒரு அறிவுசார் சமூகம். அவர்கள் தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதிலும் அது வெளிப்படும் என்றும் நம்பலாம்.