சிவா பரமேஸ்வரன் — முன்னாள் மூத்த செய்தியாளர் பிபிசி
‘இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு’ என்று அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகிறது ஸ்ரீலங்கா. அரசுப் பணியாளர்கள் தொடக்கம் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் வரை இதன் பெயரிலேயே சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டும். தேர்தலில் தெரிவான பின்னரும் இது பொருந்தும்.
ஆனால், அந்த ஜனநாயகத்தையும் சமதர்ம சமுதாயம் என்று அறியப்படும் சோசலிசத்தையும் இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இன்று நவகாலனித்துவ அடிமைகளாக இருக்கும் தோட்டத் தொழிலாளர்கள் அனுபவிக்கின்றார்களா?
இந்திய வம்சாவளியினரான தோட்ட மக்களின் வியர்வையும் இரத்தமும் கலந்த மண்ணே மலையகம்.
இலங்கை உலகளவில் முதலில் அறியப்பட்டது `சிலோன் டீ` மூலமே.
அந்தப் பெருமையை நாட்டுக்குத் தேடித் தந்தவர்கள் இந்திய வம்சாவளித் தமிழர்கள். அவர்கள் தம்மையே உரமாக்கி வளர்த்த பூமிதான் மலையகம். அவர்கள் இழிவைத் தவிர வேறு எதையும் கண்டதில்லை. `லயம்` எனும் நரகமே இவர்களின் குடியிருப்பு.
எனினும் நாட்டின் மையநீரோட்டத்தில் அவர்கள் இன்னும் உள்வாங்கப்படவில்லை என்பது மிகவும் வேதனையான விடயம்.
இலங்கை 1948 பிப்ரவரி 4ஆம் திகதி சுதந்திரம் அடைவதற்கு முன்னர் இறுதித் தேர்தல்1947ல் நடைபெற்றது. 74 தொகுதிகளில் ஏழு தொகுதிகளிலிருந்து இந்திய வம்சாவளிகளான எஸ்.தொண்டமான்–நுவரெலியா, சி.வி.வேலுப்பிள்ளை-தலவாக்கலை, கே.குமாரவேலு-கொட்டகலை, கே-ராஜலிங்கம்-நாவலப்பிட்டி, ஜி.ஆர்.மோத்தா-மஸ்கெலிய, எஸ்.-சுப்பையா-பதுளை, கே.வி.நடராசா-பண்டாரவளை ஆகிய 7 பேர் தெரிவானார்கள்.
சுதந்திரம் கிடைத்த 1948ஆம் ஆண்டு டிசம்பரில் டி.எஸ்.சேனநாயக்க அரசால் கொண்டுவரப்பட்ட பிரஜா உரிமைச் சட்டம் பெரும்பாலான இந்திய வம்சாவளியினரின் குடியுரிமையைப் பறித்தது.
சுதந்திரத்துக்குப் பின்னர் 1952ல் நடைபெற்ற முதலாவது தேர்தலில் இந்திய வம்சாவளியினர் பிரதிநிதித்துவம் `ஜீரோ` ஆனது. இருப்பினும் 6 பேர் கொண்ட நியமன உறுப்பினர்களில் இந்திய வம்சாவளிகளான தொண்டமான் மற்றும் அசீஸ் போன்றோருக்கும் வாய்ப்பு கிட்டியது.
கால் நூற்றாண்டு காலம் தொகுதிகளிலிருந்து நேரடியாக இந்திய வம்சாவளியினர் யாரும் தெரிவாகவில்லை.
1977ஆம் ஆண்டு தேர்தலின் போது நுவரெலியா மற்றும் மஸ்கெலியா தொகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டு நுவரெலியா–மஸ்கெலியா என்று மூன்று உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தொகுதியாக உருவாக்கப்பட்டது. காமினி திஸநாயக்க (ஐ.தே.க) அனுர பண்டாரநாயக்க (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி), சௌ.தொண்டமான்(இ.தொ.க) ஆகியோர் தெரிவாகினர்.
25 வருடங்களுக்குப் பின்னர் தொகுதிவாரியாகக் கிடைத்த முதலும் கடைசியுமான பிரதிநிதித்துவம் இதுவே. பின்னர் 1989 தொடக்கம் தேர்தல் விகிதாசார முறைக்கு மாறியது.
குறிப்பாக நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களைக் கொண்டது மலையகம் என்று அறியப்படுகிறது.
இந்திய வம்சாவளியினரின் இதயம் என்று கருதப்படுவது நுவரெலியா. தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கை எட்டு. 12 அரசியல் கட்சிகள் 11 சுயேச்சைக் குழுக்கள் களத்திலுள்ளன.
1948ல் பிரஜா உரிமையைப் பறித்த ஐ.தே.க அரசே அதை 31 ஆண்டுகளுக்குப் பிறகு 1979ல் மீண்டும் வழங்கியது.
தேர்தல்-1989:
விகிதாசார அடிப்படையில் முதலாவது தேர்தல். இ.தொ.கா-ஐ.தே.க கூட்டாகப் போட்டியிட்டு 4 இடங்களைக் கைப்பற்றினர். சுதந்திரக் கட்சி சார்பில் இருவர் தெரிவாகினர். மறைந்த பெரியசாமி சந்திரசேகரன் புளொட்டின் அரசியல் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியில் போட்டியிட்டார். இத்தேர்தலில் தமிழர்கள் யாரும் தெரிவாகவில்லை.
.தேர்தல்-1994:
ஆசனங்களில் எண்ணிக்கை ஆறிலிருந்து 8ஆக உயர்ந்தது. இ.தொ.கா-ஐ.தே.க கூட்டு நீடித்தது. கிடைத்த 5 அங்கத்துவத்தில் இ.தொ.காவைச் சேர்ந்த ஆறுமுகன் தொண்டமான், முத்து சிவலிங்கம், சு.சதாசிவம் ஆகியோரும் தெரிவாகினர். ஏனைய இருவரும் சிங்களவர்கள்.
இ.தொ.காவிலிருந்து பிரிந்தவர்களால் உருவாக்கப்பட்ட மலையக மக்கள் முன்னணி தலைவர் பெ.சந்திரசேகரனும் சுயேச்சையாகத் தெரிவானார்.
எஞ்சிய இரு ஆசனங்கள் பொதுஜன முன்னணி வசமானது. நுவரெலியாவிலிருந்து முதல்முறையாக நான்கு தமிழர்கள் தெரிவானார்கள்.
தேர்தல்-2000
ஆசனங்களின் எண்ணிக்கை 7 ஆகக் குறைந்தது. காலத்திற்கேற்ப பல்டியடிப்பதையே அரசியல் வியூகமாகக் கொண்ட இ.தொ.கா சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான பொதுஜன முன்னணிக்குத் தாவியது. முன்னணிக்குக் கிடைத்த நான்கு ஆசனங்களில் மூவர் இ.தொ.காவைச் சேர்ந்தவர்கள். ஐ.தே,க-மலையக மக்கள் முன்னணியும் இணைந்து மூன்று ஆசனங்களைப் பெற்றது. அதில் பெ.சந்திரசேகரன் (ம ம மு) மற்றும் சு.சதாசிவம் (ஐ.தே,க) ஆகியோர் அடங்குவர்.
தேர்தல்-2001
மீண்டும் பல்டியடித்த இ.தொ.கா இம்முறை ஐ.தே.கவுடன் இணைந்தது. அந்தக் கூட்டணியில் ம.ம.முன்னணியும் தொடர்ந்தது–5 ஆசனங்கள் கிடைத்தன. ஆறுமுகன் தொண்டமான், முத்து சிவலிங்கம், பெரியசாமி சந்திரசேகரன் ஆகியோருடன் இரு சிங்களவர்களும் தேர்வாயினர். பொதுஜன முன்னணியிலும் சிங்களவர் இருவர் தெரிவாகினர்.
இருப்பினும் இந்திய வம்சாவளிப் பிரதிநிதித்துவம் நான்கிலிருந்து மூன்றாகக் குறைந்தது.
தேர்தல்-2004
ஐ.தே.க–இ.தொ.கா கூட்டணி நீடித்தது. ம.ம.முன்னணி தனிவழி போனது. ஐ.தே.கவுக்கு கிடைத்த 4 ஆசனங்களில் மூன்று இ.தொ.கா வசமானது. தனிவழி சென்ற சந்திரசேகரனும் தெரிவானார்.
ஐ.தே.க சார்பில் ஒரு சிங்களவரும், பொதுஜன முன்னணி சார்பில் இரு சிங்களவர்களும் தெரிவானார்கள்.
இந்திய வம்சாவளிப் பிரதிநிதித்துவம் மீண்டும் நான்கானது. பெ.சந்திரசேகரன் 2010 ஜனவரி 1 அன்று காலமானார். அந்த வெற்றிடத்துக்கு எஸ்.அருள்சாமி நியமிக்கப்பட்டார்.
தேர்தல்-2010
இ.தொ.கா ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தது. கிடைத்தது 5 இடங்கள், அதில் மூவர் இ.தொ.காவைச் சேர்ந்தவர்கள்.
ஐ.தே.கவுக்கு கிடைத்த இரண்டு ஆசனங்கள் இந்திய வம்சாவளித் தமிழரான பி.திகாம்பரம் மற்றும் இலங்கைத் தமிழரான ஜெ.ஸ்ரீரங்கா ஆகியோருக்கு கிடைத்தன. ஐ.தே.க சார்பில் சிங்களவர் யாரும் தெரிவாகாத தேர்தல் இது.
காலஞ்சென்ற சந்திரசேகரனின் மனைவி சாந்தினி சந்திரசேகரன் தலைமையில் ம.ம.முன்னணி தனித்துப் போட்டியிட்டு படுதோல்வி கண்டது.
தேர்தல்-2015
ஆசனங்களின் எண்ணிக்கை 8 ஆகக்ஃப்கூடியது. மனோ, திகா, ராதா ஆகியோர் இணைந்து உருவாக்கிய தமிழ் முற்போக்குக் கூட்டணி ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிட்டது.
கிடைத்த ஐந்து ஆசனங்களில் த.மு.கூட்டணியைச் சேர்ந்த ப.திகாம்பரம், பெ.ராதாகிருஷ்ணன், எம்.திலகராஜ் ஆகிய மூவரும் தெரிவாயினர். ராதாகிருஷ்ணன் 2010 தேர்தலில் இ.தொ.கா சார்பில் தெரிவாகியிருந்தார். ஐ.ம.சு.முன்னணிக்குக் கிடைத்த மூன்று இடங்களில் இரண்டில் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் முத்து சிவலிங்கம் ஆகியோரும் மீண்டும் வெற்றி பெற்றனர். முதல் முறையாக இந்திய வம்சாவளியினரின் பிரதிநிதித்துவம் 5 ஆக உயர்ந்தது.
2020 தேர்தல் களநிலவரம்:
மறைந்த இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமான் இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தல் இது. அவருடன் சமகாலத்தில் நாடாளுமன்றம் சென்ற மற்றுமோர் மூத்த அரசியல்வாதியான முத்து சிவலிங்கமும் இம்முறை போட்டியிடவில்லை.
கடந்த தேர்தல்களில் இருமுனைப் போட்டி நிலவிய இம்மாவட்டத்தில் இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக மும்முனைப் போட்டி நிலவுகிறது.
பிரதான அரசியல் கட்சிகள் இந்திய வம்சாவளி மக்களின் வாக்குகளை இலக்கு வைத்தே மலையக கட்சிகளுடன் கூட்டணி வைப்பது வழமை.
இ.தொ.கா இம்முறை மஹிந்த ராஜபக்ச தலைமையிலான தாமரை மொட்டுச் சின்னத்தில் இணைந்து களமிறங்கியுள்ளது.
11 பேர் கொண்ட பட்டியலில் 8 பேர் தமிழர் மூவர் சிங்களவர்.. வழமையாக இதுபோன்ற கூட்டணிகளில் மூன்று விருப்பு வாக்குகளையும் இலக்கு வைத்து, தமது தரப்பில் மூவரை மட்டுமே நிறுத்திய இ.தொ.க இம்முறை ஐந்து பேரை நிறுத்தியுள்ளது.
மொட்டுக் கட்சியும் நேரடியாகத் தமிழ் பிரதிநிதித்துவத்தை இலக்கு வைத்து முன்னணி கிரிக்கெட் வீரராக இருந்த முத்தையா முரளிதரனின் சகோதரர் பிரபாகரன், முன்னாள் உறுப்பினர் சு.சதாசிவம் உட்பட மூன்று தமிழர்களை நிறுத்தியுள்ளது.
கூட்டணியில் இ.தொ.கா இருந்தாலும், தமது தரப்பிலும் தமிழர்கள் தெரிவாக வேண்டுமென்று மொட்டுக் கட்சி காய் நகர்த்துகிறது. இ.தொ.க வாக்கு வங்கியிலிருந்து கடந்த காலங்களில் மூவருக்குப் பகிரப்பட்ட விருப்பு வாக்குகள் இம்முறை ஐந்தாகப் பகிரப்படும் போது அது இ.தொ.காவுக்கு அரசியல் தற்கொலையாக அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இ.தொ.கா வேட்பாளர்கள் நான்கு பேரும் விருப்பு வாக்குகளை ஜீவன் தொண்டமானை முன்னிலைப்படுத்தி திரட்டுகிறார்கள்.
தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார் எனும் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளவர் நவீன் திஸநாயக்க. இவர் இம்முறையும் ஐ.தே.கவின் தலைமை வேட்பாளர். தொழிற்சங்கவாதியான வி.புத்திரசிகாமணி உட்பட மூன்று தமிழர்களும் ஒரு முஸ்லிமும் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்கள் ஏனையவர்கள் சிங்களவர்.
பெருந்தோட்ட மக்களின் வாக்குகள் ஐ.தே.கவுக்கு கிடைப்பது அரிதென்பதால் இம்முறை கூடுதலான சிங்கள வேட்பாளர்களை முன்நிறுத்தி வியூகம் அமைத்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் டெலிபோன் சின்னத்தில் 6 தமிழர்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
அதில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் முன்னாள் உறுப்பினர்களான பி.திகாம்பரம், வே.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் திலகராஜுக்கு பதிலாக இம்முறை எம்.உதயகுமார் பெயரிடப்பட்டுள்ளார். எம்.திலகராஜ் தேசியப் பட்டியலுக்கு முன்மொழியப்பட்டுள்ளார். ஏனையோர் சிங்களவர்கள்.
ஐக்கிய மக்கள் சக்தியில் தனக்கு வாய்ப்பு கிடைக்காததால் மறைந்த சந்திரசேகரனின் மகள் அனுஷியா `தன்வழி தனிவழி` எனக் கோடாரி சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியாகச் சிங்களவர்களை மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது.
கடந்த தேர்தலில் ஐதேக கூட்டணி 59% வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களைப் பெற்றது. ஐ.ம.சு.முன்னணி-இ.தொ.கா கூட்டணி 38% வாக்குகளுடன் 3 ஆசனங்களைப் பெற்றது. இதே வாக்களிப்பு வீதமே ஜனாதிபதித் தேர்தலில் பிரதிபலித்தது
அந்த அடிப்படையில் அப்போது சஜித்துக்கு கிடைத்த வாக்குகளில் குறிப்பிட்ட ஓரளவு ஐ.தே.கவுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் கிடைக்கும் ஒரு ஆசனத்தை நவின் திஸநாயக்க பெறக் கூடும்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆதரவு காரணமாக டெலிபோன் கட்சிக்கு நான்கு ஆசனங்கள் கிடைக்கலாம். அதில் த.மு.கூட்டணியின் மூவர் தெரிவாகும் வாய்ப்புள்ளது.
எஞ்சிய மூன்று ஆசனங்கள் மொட்டுக் கட்சி கூட்டணிக்குச் செல்லும். அதில் இ.தொ.கா சார்பானவர்களே வெல்வதற்குக் கூடுதல் வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் இ.தொ.கா நிறுத்தியுள்ள ஐந்து வேட்பாளர்களும் மக்களால் நன்கு அறியப்பட்டவர்கள். எனவே வாக்குகள் பிரியும் போது இ.தொ.கா சார்பில் தெரிவாகும் உறுப்பினர்கள் குறையக் கூடும் எனும் அச்சம் உள்ளது.
மலையகத் தோட்டங்களைக் கிராமங்களாக மாற்றுதல், தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குதல், தனிவீட்டுத் திட்டம் போன்ற விடயங்களில் குறை நிறைகளுக்கு அப்பாற்பட்டு தமிழ் முற்போக்கு கூட்டணி முன்னெடுத்த பல அம்சங்கள் அவர்களுக்கு இத்தேர்தலில் சாதகமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இ.தொ.கா தொண்டமான் குடும்பப் பெயரையும், ஆறுமுகன் தொண்டமானின் மறைவால் ஏற்பட்ட அனுதாபத்தையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயல்கின்றன.
தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வை அனைவரும் முன்னிலைப்படுத்தி வாக்குக் கோரும் நிலையில் மக்கள் யார் பக்கம் என்பதை இத்தேர்தல் தீர்மானிக்கும்.