மலேசிய மடல்:
(நக்கீரன்)
கோலாலம்பூர், ஜூலை 09:
உலக அரசியல் அரங்கில் அரசியல் நிலைத்தன்மைக்குப் பெயர் பெற்று விளங்கிய திருநாடு மலேசியா.
மலேசிய மக்கள், பல இனத்தவராக இருந்தாலும், பன்மொழிகளை பேசுவோராக விளங்கினாலும், பல சமயங்களைச் சார்ந்தவர்களாக வாழ்ந்தாலும், பண்பாடு-கலை-கலாச்சாரக் கூறுகளால் வேறுபட்டிருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமையை நிலைநாட்டும் உன்னதத்தைப் பெற்று கூட்டு சமுதாயமாக வாழ்கின்றனர்.
சில வேளைகளில், ஒரு சில தலைவர்கள் தங்களின் அரசியல் ஆதாயம் கருதியும் தன்னலத்தை முன்னிறுத்தியும் முரண்பாடான கருத்துகளை வெளிப்படுத்தினாலும்கூட, மக்களோ தாங்கள் கொண்ட திண்ணிய எண்ணத்தில் இருந்தும் நாகரிக மேம்பாட்டில் இருந்தும் நல்லிணக்க மேன்மையில் இருந்தும் குறிப்பாக சமய சகிப்புத்தன்மையிலிருந்து கிஞ்சிற்றும் வழுவாமல் ஒருமைப்பாட்டையும் ஓர்மையையும் உயர்த்திப் பிடிக்கும் பண்பினராக காலம் காலமாக விளங்கி வருகின்றனர். இதனாற்றான், நாடு அமைதிப் பூங்காவாக காட்சி தருகிறது.
இதன்பொருட்டு, ஒருசில முன்னோடித் தலைவர்கள் அரும்பாடாற்றி இருக்கின்றனர் என்பதும் உண்மைதான். இதனால்தான் சமூக வேறுமாடு, சமய மாறுபாடு போன்ற எவ்வித முறுகல் நிலையையும் அறியாமல் திகழ்கிறது இந்த மண்.
இத்துடன், அரசியல் நிலைத்தன்மையும் இணைந்து அணிவகுத்துக் கொண்டதால், அந்நிய முதலீடு, பன்னாட்டு சுற்றுப் பயணியர் வருகை யாவும் ஆண்டுக்காண்டு அதிகரித்து வந்ததுடன் வெளிநாட்டினர் ‘இரண்டாவது இல்லம்’ என்ற திட்டத்தின்வழி மலேசியாவில் வீடு வாங்குவது, வெளிநாட்டினர் மருத்துவ சுற்றுலா மேற்கொள்வது, உயர்க்கல்வி நிலையங்களில் வெளிநாட்டு மாணவர்கள் குவிந்ததெல்லாம் தொடர்ந்தன.
ஆனால், தற்பொழுதோ அரசியல் நிலைத்தன்மை என்னும் பெருமையை இழந்து நிற்பதுடன், நாளுக்கு நாள்; பொழுதுக்கு பொழுது அதிரடி அரசியலை நோக்கி விரைவாக நகர்கிறது இந்த மலை நாடு.
இதற்கு சரியான சான்று, கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரதமர் ஆவார் என்று மகவும் எதிர்பார்க்கப்பட்ட டத்தோஸ்ரீ அன்வார் இன்னமும் அந்த நிலையை எட்ட முடியவில்லை.
உள்நாட்டில் மட்டுமல்ல; அண்டை நாடான சிங்கப்பூர், அரபு உலகம் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளுடன் அமெரிக்காகூட புத்தாயிரத்தாம் ஆண்டு பிறக்கும் வேளையில் மலேசியாவை அன்வார்தான் வழிநடத்துவார் என்று எதிர்பார்த்தன.
ஆனால், அது நடைபெறவில்லை இன்றுவரை. அதேவேளை, ஒருவரும் ஒரு பொழுதும் எண்ணிப்பாராத வகையில் ஒரே நாளில் பிரதமராகி அதிரடி படைத்துள்ளார் இன்றைய பிரதமர் டான்ஸ்ரீ முகைதின் யாசின்.
இதற்கெல்லாம் மூல காரணம், கட்சிகளின் அரசியல் சதிரடிதான்.
தேசிய அரசியலில் ஈடுபட்டுள்ள தலைவர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டு நலனிலும் மக்களின் முன்னேற்றத்திலும் அக்கறை செலுத்துவதற்கு மாறாக தத்தம் நலனிலும் தான் சார்ந்துள்ள கட்சிக்கான மறைமுக நடவடிக்கையிலும் மனங்கூசாமல் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு வகையில், இந்த நிலைக்கு அச்சாரமாகவும் ஆணி வேராகவும் இருப்பவர் மேநாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுதான்.
இதனால்தான், கடந்த 2018 மே 9-ஆம் நாளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 14-ஆவது நாடாளுமன்றம், ஈராண்டுகளை நிறைவு செய்வதற்குள்ளாகவே மறு தேர்தல் குறித்த பேச்சும் அறைகூவலும் எழுந்தன.
நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இடைவிடாமல் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக மலாயர் தேசியக் கட்சியான அம்னோ தலைமையிலான கூட்டணியே நாட்டை ஆண்டு வந்த நிலையில், இந்த உலக சரித்திர சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வைக்கும் வகையில் 2018 பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது.
அந்த நேரத்தில் எதிரணித் தலைவரான டத்தோஸ்ரீ அன்வார் சிறையில் இருந்ததால், 93 வயதான மகாதீர் எதிரணிக்கு தற்காலிக தலைவரானதுடன் பிரதமராகவும் ஆனார்.
இதில் விந்தை என்னவென்றால், இதே மகாதீர் முன்னர் ஆளும் அணியாக இருந்த தேசிய முன்னணி சார்பில் 22 ஆண்டுகள் பிரதமராக இருந்தவர். ஈராண்டுகளுக்கு முன் எதிரணி ஆளும் அணியாக மாறியபோதும் பிரதமராகி 22 மாதங்கள் பிரதமராக இருந்தார்.
ஆனால், தேர்தல் காலத்தில் நாட்டு மக்களிடமும் கூட்டணித் தலைவர்களிடம் அளித்த வாக்குறுதிப்படி நடந்து கொள்ளாமல், கால் நூற்றாண்டுக்கு முன் அன்வார் இப்ராகிம்மீது கொண்ட அரசியல் வஞ்சத்தை இன்னமும் மனதிற்கொண்டு, அரசியல் வஞ்சத்தை தனிமனித வஞ்சமாக மாற்றி, வார்த்தை மாறி நடந்து கொண்டார்; வாக்கை மீறி செயல்பட்டார்.
முன்னுக்குப் பின் முரணாகிப் பேசி, கடைசியில் பதவி விலகல் நாடகம் நடத்தி, அந்த நாடகத்தில் இவரே பலியானார்.
கூட்டணியில் குழப்பம் விளைவித்ததுடன், பதவி விலகிய நேரத்தில் ஒருவேளை அன்வார் பிரதமர் ஆகிவிடக்கூடும் என்ற எண்ணத்தில் தன்னுடைய கட்சியை அந்த அணியை விட்டு வெளியேறும்படி செய்து, கூட்டணியின் பெரும்பான்மைக்கு பங்கம் ஏற்படுத்தினார். போதாக் குறைக்கு பிரதமர் பதவிக்குரிய செல்வாக்கைப் பயன்படுத்தி அன்வாரின் கட்சியையும் சேதப்படுத்தினார்.
தான் தீட்டிய சதித்திட்டம் நிறைவேறாமல் போனதுடன், அது வேறொரு கட்டத்தை எட்டியது. இருந்தபோதும், மகாதீருக்கு மனநிறைவான ஒரே விடயம், அன்வார் பிரதமர் ஆகாமல் செய்து விட்டோமே என்பதுதான்.
இப்போது, இனியும் அன்வாருக்கு வாய்ப்பு அமைந்துவிடக் கூடாதென்ற எண்ணத்தில் அன்வார் இருக்கும் அணியிலேயே நீடித்துக் கொண்டு நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மூலம் இப்போதைய ஆட்சியை கவிழ்த்துவிட்டு மீண்டும் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றினால் தான் இன்னும் ஆறு மாத காலத்திற்கு பிரதமராக இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.
22 ஆண்டுகளும் 22 மாதங்களும் போதவில்லையாம். இன்னும் ஆறு மாதத்திற்கு பிரதமர் பதவி வேண்டுமாம். இதில் வேடிக்கையும் விநோதமும் என்னவென்றால், 56 வயதில் பிரதமராகி, மீண்டும் 93 வயதில் பிரதமராகி, தற்பொழுது 95 வயதில் மூன்றாவது முறையாக பிரதமராக ஆசைப்படும் இவர், வரும் ஆகஸ்ட் மாதம் 10-ஆம் நாள் 73 வயதை எட்ட இருக்கும் அன்வாரைப் பார்த்து பிரதமர் பதவிக்கு அலைகிறார் என்பதுதான்.
ஆளுந்தரப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள், கடந்த பொதுத் தேர்தலில் மலேசிய வாக்காளர்களால் புறக்கணிக்கப்பட்டவர்களுடன் அணி சேர்ந்து அமைக்கப்பட்ட ஆட்சியை மக்கள் பின்புற ஆட்சி என்றும் கொல்லைப்புற ஆட்சி என்றும் கருதுகின்றனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத இன்றைய ஆட்சியில் இடம்பெற்றுள்ள பல தளங்கலைச் சேர்ந்த அரசியல் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரம் இருந்தாலும் முட்டலும் மோதலும் தொடர்கின்ற நிலையில், ஒருவருக்கு ஒருவர் அழுத்தம் கொடுப்பதை தாங்கமாட்டாமல் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு பொதுத் தேர்தல் நடத்தலாமா என்ற கோணத்தில் ஆளுந்தரப்புக் கட்சிகள் அனைத்தும் காய் நகர்த்துகின்றன.
இதன் வெளிப்பாடுதான், பொதுத் தேர்தல் முடிந்து இரண்டு ஆண்டுகள், இரு மாதங்கள் மட்டும் இன்றோடு முடிகின்ற இந்த வேளையில் மலேசிய அரசியல் களம், அடுத்த பொது தேர்தலை நோக்கி வேகவேகமாக நகர்கிறது.
இதற்கெல்லாம் ஒரேக் காரணம், நாளை ஜூலை 10-ஆம் நாள் 96-ஆம் அகவையை எட்டும் துன் மகாதீர்தான்.
நம்பிக்கைக் கூயட்டணி மூலம் மாற்றத்தை விரும்பி மக்கள் நம்பிக்கையோடு வாக்களித்து புத்தாட்சியை தோற்றுவித்தனர். ஆனால், மக்கள் கொண்ட நம்பிக்கையையும் சிதைத்து, நம்பிக்கைக் கூட்டணியையும் குலைத்து, மலேசிய அரசியலின் நிலைத்தன்மையையும் கலைத்த ஒற்றை மனிதராக மகாதீர் திகழ்கிறார்.
அப்படியானால், மற்ற தரப்பினர் பரிசுத்தவான்களா என்றால் நிச்சயமாக அதுவும் இல்லை.
கடந்த பிப்ரவரி மாதம் வரை நாட்டை ஆண்ட நம்பிக்கைக் கூட்டணியில் மகாதீர் எப்போது பதவி விலகி, அன்வாருக்கு வழி விடுவார் என்ற சர்ச்சை எழுந்த போதெல்லாம், இந்தத் தவணை முழுவதும்(ஐந்து ஆண்டுகளுக்கு) மகாதீரே பிரதமராக நிடிக்க ஆதரவு அளிப்பதாக எதிரணியைச் சேர்ந்த அம்னோ கட்சியும் அதற்கு வால் பிடித்துக் கொண்டிருக்கும் பாஸ் கட்சியும் மாறி மாறி அறிக்கை விட்டது, கணவன்-மனைவிக்கு இடையே எழுந்த பிரச்சனையில் அடுத்த வீட்டுக்காரன் தலையிட்டதைப் போன்றது.
அதேவேளை, இந்த இரு தரப்பினரையும் நம்பி, மகாதீர் பதவி விலகல் நாடகத்தை அரங்கேற்றிவிட்டு, மீண்டும் அரசியல் கலப்பின்றி தேசிய அரசாங்கத்தை அமைக்க விரும்புவதாக மாமன்னரிடம் கோரிக்கை வைத்தபோது அம்னோவும் பாஸ் கட்சியும் நாங்கள் இனி மகாதீருக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்றனர்.
அத்துடன், இனி பொதுத்தேர்தல்தான் நடத்தியாக வேண்டும் என்றனர். பிறகு அணி மாறி வந்தவர்களுடன் சேர்ந்து கொல்லைக்ப்புற ஆட்சியை அமைத்துக் கொண்டுள்ளனர் இப்போது.
அன்வாரிடம் இருந்து பிரிந்து சென்ற டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தரப்பினரும் இந்தக் கோளாறுகளுக்கு ஒரு முக்கியக் காரணம். அதைவிட, நாட்டின் மூன்றாவது பிரதமர் துன் உசேன் ஓனின் மகனும் அம்னோ கட்சியைச் சேர்ந்தவரும் இன்றைய கொல்லைப்புற ஆட்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் குதிரை பேரத்தில் ஈடுபட்டது அப்பட்டமான அரசியல் தகிடுதத்தம்.
மொத்தத்தில் ஜனநாயகக் கட்டமைப்பின் எஜமானர்கள் என்று கருதப்படும் பொதுமக்களோ வாய் பிளந்து நிற்கின்றனர்.
நக்கீரன் – Nakkeeran 013-244 36 24
One Comment
K.Kunaran
மலேயாவின் இன்றைய அரசியல் நிலை குறித்த
திரு.நக்கீரனின் ஆய்வு
சிறப்பானது.நடுநிலையானது.
தொடருங்கள்.
வாழ்த்துள்.
தான்ஸ்ரீ க.குமரன்