10-07-2020 வெள்ளிக்கிழமை
இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் களத்தில் நின்றவண்ணம் ,வாக்குகளைப் பெறும் நோக்கில் நடைபெறும் ‘போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாண்டில் நடைபெறும் இந்த தேர்தலை நாம் உற்று நோக்கும் போதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் கட்சிகளின் எண்ணிக்கையும் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையும் வியக்கும் வகையில் அதிகரித்தள்ளதை நாம் கவனிக்கலாம்.
பொதுச் சந்தை ஒன்றில் போய் அமர்ந்திருந்து காய்கறி வியாபாரமும் மீன் வியாபாராமும் செய்வது போன்று இந்த தேர்தலில் போட்டியிடுகின்றவர்கள் கணிக்கின்றார்களா என்றால் அது சரியான பதில் இல்லை.
தேர்தலில் போட்டியிடுவதும்,அதில் வெற்றியடையவதும் சந்தை வியாபாரத்திற்கு ஒப்பிட முடியாது. பாராளுமன்றப் பதவி என்பது தற்போது பல கோடி ரூபாய்களை முன்னாள் வைத்துக் கொண்டு ‘பேரம்’ பேசப்படுகின்ற ஒரு ‘வர்த்தகம்’ என்பதை நாம் உணர்ந்து கொண்டோமோ இல்லையோ முன்னாள் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மலையகத்தின் உறுப்பினர்களும் நன்கு ;படித்து’ வைத்துள்ளார்கள் என்பதே உண்மை.
இந்தத் தேர்தல் மூலம் இலங்கை என்ற மாங்கனித்தீவிற்கு என்ன கிடைக்கப் போகின்றது என்றால் பாரிய பொருளாதாரப் பற்றாக்குறையை வரவு செலவுத் திட்டம் காட்சிப் படுத்தப்போகின்றது.
முதலாளித்துவ அரசியல்வாதிகளின் நோக்கமாக விளங்கும் சுரண்டல் மற்றும் ஊழல் போன்றவை மிகவும் வெற்றிகரமாக நிறைவேற்றக் கூடிய வாய்ப்புக்கள் அதிகளவில் அவர்களுக்கு கிட்டும்.
மேலும், இரண்டு பிரதானக் கட்சிகளிலும் ஆட்சியில் உள்ளவர்களால் அரச நிறுவனங்களிலும் மத்திய வங்கியிலும் மோசடிகள் செய்து பழக்கமும் அனுபவமும் உள்ளதால் அது அவர்களுக்கு நன்மை தரும் விடயமாக இருக்கும். அதைத் தொடர வாய்ப்பு ஏற்படும்.
மலையக மக்களுக்கு குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களுக்க விமோசனமே இல்லை. தொழிலாளர்களின் இரத்தத்தை குறி வைத்து அட்டை உறிஞ்சவும் தலைவர்களும் அரசியல்வாதிகளும் அவர்களிற்கு வழங்கப்படும் அனைத்தையும் சுரண்டவும் மீண்டும் சந்தர்ப்பம் கிட்டப் போகின்றது.
குறிப்பாக கடந;த அரசில் இந்திய அரசாங்கம் வழங்கிய வீட்டுத் திட்டத்தில் ஒரு வீட்டுக்கு ஒதுக்கபட்ட 8 இலட்சத்தில் தனது பங்காக நான்கு இலட்சத்தை ஒப்பந்தக் காரரிடம் கேட்டுப் பெற்றுக்கொண்ட திகாம்பரம் என்னும் அமைச்சரின் ‘ஆலோசனையில்’ நான்கு இலட்சத்திற்கும் குறைவான செலவில் வீடு கட்டிக் கொடுக்க , அவை உறுதியற்றவையாகவும் தொழிலாளர்கள் வசிப்பதற்கு உகந்தவையாக இல்லாமற்போக, அந்த திட்டம் இடைநடுவில் கைவிடப்பட்டது போல மீண்டும் அமைச்சர்களாகி கோடிக் கணக்கில் சுரண்டும் கனவில் அவரைப் போன்று அடுத்த கட்சிக் காரர்கள் காத்திருப்பார்கள்
அடுத்து நாம் குறிப்பிடுவது வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களையே.
அவர்கள் இடப்போகின்ற புள்ளடிகள் அவர்களுக்கு எண்ணற்ற வலிகளையும் இழப்புக்களையும் சோதனைகளையுமே தரப்போகின்றன என்று நிதர்சனமாகவே தெரிகின்றது.
குறிப்பாக கடந்த காலங்களில் தொடர்ச்சியாக பதவிகளில் அமர்ந்திருந்து பல சலுகைகளையும் அனுபவித்தவர்கள் மீண்டும் அதே கனவுகளோடு, மக்களைக் கவரக்கூடிய ஆயிரம் பொய்களை கூறி அழுது வடித்து வாக்குகள் பெற்று மீண்டும் விமானங்கள்போன்ற வாகனங்களில் பறக்கவே காத்திருக்கின்றார்கள். அவர்கள் அனைவரிடத்திலும் நிதி நிறைந்து காணப்படுவதால், மக்கள் ஏமாற்றப்படலாம்.
சரி, புதிதாகப் போட்டியிடுகின்ற நூற்றுக்கணக்கானவர்கள் பல கட்சிகளின் சார்பில் இந்த தேர்தலில் குதித்துள்ளார்கள். அவர்களில் பலருக்கு நல்ல நோக்கங்கள் இருந்தாலும் மக்கள் துயரங்களை தீர்த்து வைக்கும் தயாள குணம் தேங்கிக் கிடந்தாலும் கூட்டமைப்பு போன்ற நிதி பலமிக்க அணிகளோடு மோதுவதும் மக்களை ஈர்ப்பதும் மிகுந்த சிரமமான விடயமாகவே அவர்களது பிரச்சாரங்கள் தென்படலாம்.
ஆனால் வடக்கு கிழக்கு மக்கள் நன்கு சிந்தித்து நிதானமாக வாக்களிக்க வேண்டிய அவர்களது கடமையாகும்.
அதை விடுத்து, அல்லது அந்த உண்மையை மறந்து பொருத்தமானவர்களை தெரிவு செய்யும் சந்தர்ப்பத்தை நழுவவிட்டு, வாக்களிக்காமல் இருந்துவிட்டு பின் தெரிவுசெய்யப்படும் அரசியல் பிரதிநிதிகளை விமர்சிப்பதும் ஒரு பொறுப்பற்ற செயற்பாடாகவே கருத வேண்டியிருக்கின்றது. இந்த விடயத்தில் மக்கள் நலன் விரும்பும் கடசிகளும் வேட்பாளர்களும் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும்.
இந்த சந்தர்ப்பத்தில் வடக்கில் மிகுந்த உரமான சிந்தனைகளோடு ஸ்தாபிக்கப்பெற்ற தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள அறிக்கையில்உள்ள சில பகுதிகளை எமது வாசகர்கள் முன்னால் படிப்பதற்காக வைக்கின்றோம்.
“எதிர்வரும் இலங்கைப் பொதுத் தேர்தலில், தனிமனித ஒழுக்கம், நேர்மை, லஞ்சத்துக்கும் சலுகைகளுக்கும் விலைபோகாத தைரியம், தமிழ் மக்களின் அடிப்படை நிலைப்பாடுகளை தெளிவாக வலியுறுத்துவதோடு அதை முன்னின்று செய்யும் தற்றுணிவு கொண்ட, தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகளை அடைவதற்காக கொள்கைப்பற்றுடன் செயற்படக் கூடிய அரசியல் பிரதிநிதிகளையே இம்முறை தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டுமென தமிழ் மக்கள் பேரவை வேண்டுகோள் விடுக்கின்றது”