சிவா பரமேஸ்வரன் — முன்னாள் மூத்த செய்தியாளர் பிபிசி
இலங்கையில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மத்திய மாகாணம் நுவரெலியா, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது.
பௌத்தர்களின் மிகப் புனிதத்தலமான தலதா மாளிகை கண்டியிலேயே உள்ளதால், இந்நகர் வரலாற்றுச் சிறப்புமிக்க நகராகக் கருதப்படுகிறது. இலங்கை அரசியலில் செல்வாக்கு செலுத்தும் அதியுயர் பௌத்த பீடங்களான அஸ்கிரிய மற்றும் மல்வத்தைப் பீடங்களும் இங்கேயே அமைந்துள்ளன.
இலங்கையின் முதலாவது சிங்கள-முஸ்லிம் இனக்கலவரமும் கண்டி நகரிலேயே 1915 ஆம் ஆண்டு தொடங்கி பின்னர் நாடெங்கும் பரவியது. அங்கேயே இரு ஆண்டுகளுக்கு முன்னரும் சிங்கள-முஸ்லிம் கலவரம் மீண்டும் இடம்பெற்றது.
கண்டி மாவட்டத்தில் நடைபெறும் பெரஹர (ரத ஊர்வலம்) உலகப் புகழ்பெற்றது.
இம்மாவட்டத்தில் பெரும்பான்மையாகச் சிங்களவர்கள் வசிக்கிறார்கள். முஸ்லிம்கள் செறிந்து வாழ்கிறார்கள். பெருந்தோட்டங்களில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் குறிப்பிட்டளவுக்கு உள்ளனர்.
1948க்கு பின்பு தங்களுக்கான இன ரீதியான பிரதிநிதித்துவத்தைக் கண்டி மாவட்டத்திலும் இந்தியா வம்சாவளித் தமிழர்களும் இழந்தனர். 46 வருடங்களுக்குப் பிறகு 1994 ஆம் ஆண்டுதான் முதல் முறையாக ஒரு பிரதிநிதித்துவத்தைப் பெற்றாலும் அதைத் தொடர்ச்சியாகத் தக்கவைத்துக் கொள்ள முடியாத சூழலே காணப்படுகிறது.
1989 தேர்தல்:
ஐ.தே.க-இ.தொ.கா கூட்டாக இத்தேர்தலில் போட்டியிட்டன. கிடைத்தது 8 ஆசனங்களில் ஏ.சி.எஸ்.ஹமீத் மற்றும் அப்துல் காதர் ஆகிய இரண்டு முஸ்லிம்கள் தெரிவான போதும் தமிழர் யாரும் தெரிவாகவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் தெரிவான நால்வரும் சிங்களவர்கள். முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டாலும் ஒரு ஆசனத்தையும் பெறவில்லை.
1994 தேர்தல்:
ஐ.தே.க-இ.தொ.கா கூட்டு நீடித்தது. சுதந்திரத்துக்குப் பிறகு முதல் தடவையாகத் தமிழர் ஒருவர் தெரிவானார். அவர் இ.தொ.கா சேர்ந்த சிவசாமி இராஜரட்ணம்.
இதர 6 ஆசனங்களில் 4 சிங்களவர்களும், 1989ல் தெரிவான இரு முஸ்லிம்களும் இருந்தனர்.
சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான பொதுஜன முன்னணியில் தெரிவான ஐவரும் சிங்களவர்கள்.
2000 ஆண்டுத் தேர்தல்:
இ.தொ.கா தனிவழி சென்றது. இந்தத் தனிவழிப் பயணம் அரைநூற்றண்டுக்கு பிறகு கிடைத்திருந்த தமிழ் பிரதிநிதித்துவத்தையும் இல்லாமல் செய்தது.
பொதுஜன முன்னணியில் ஆறு சிங்களவர்கள் தெரிவாகினர். ஐ.தே.க சார்பில் மூன்று சிங்களவர்களும் ஏற்கனவே தெரிவான இரண்டு முஸ்லிம்களுடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேசிய ஐக்கிய முன்னணியாக (நுவா) தனித்துப் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிம் தெரிவானார்.
ஏற்கனவே தேசியப் பட்டியில் மூலம் நாடாளுமன்றத்துச் சென்ற அவர் நேரடி தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெற்றார்.
தமிழர்கள் பிரதிநிதித்துவத்தை இழக்க முஸ்லிம்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.
2001 தேர்தல்:
ஒராண்டுக்கு முன்னர் செய்த தவறு காரணமாக இம்முறை இ.தொ.கா-ஐ.தே.கட்சியுடன் மீண்டும் சங்கமித்தது. மு.காவும் இணைத்துக் கொண்டது. ரவூப் ஹக்கிம் உட்பட இரு முஸ்லிம்களும், ஐந்து சிங்களவர்களும் தெரிவானார்கள்.
பொதுஜன முன்னணி சார்பில் வழமைபோல் 4 சிங்களவர்கள் தெரிவாக, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஒரு இடத்தைப் பெற்றது. இத்தேர்தல் முடிவும் தமிழர்களுக்கு ஏமாற்றமே.
2004 தேர்தல்:
ஐ.தே.க தலைமையிலான கூட்டு நீடித்தது. கிடைத்த ஆசனங்கள் ஆறு. இ.தொ.கா சார்பில் நிறுத்தப்பட்ட ஃபைசர் முஸ்தபாவும் தெரிவானதை அடுத்து முஸ்லிம்களின் எண்ணிக்கை மூன்றாகக் கூடியது. தெரிவானார்கள்.
சுதந்திரக் கட்சித் தலைமையிலான பொதுஜன முன்னணி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாக (ஐமசுமு) உரு மாறி 5 ஆசனங்களைக் கைப்பற்றியது. கடும்போக்கு பௌத்த கட்சியான ஜாதிக ஹெல உறுமய ஒரு ஆசனத்தை முதல் முறையாகப் பெற்றது.
காலப்போக்கில் ஃபைசர் முஸ்தபா மஹிந்த ராஜபக்ச அரசில் இணைந்து அமைச்சரானார்.
2010 தேர்தல்:
இ.தொ.கா ஐ.ம.சு.மு பக்கம் தாவியது. இவர்களுக்குக் கிடைத்த ஆசனங்கள் 8. இ.தொ.கா அணி மாறினாலும் அது எதிர்ப்பார்க்கப்பட்ட பலனளிக்கவில்லை. ஐ.மசு.மு சார்பில் முதல் முறையாக முஸ்லிம் ஒருவர் தேர்வானார். கடந்தமுறை இ.தொ.கா சார்பில் தெரிவான ஃபைசர் முஸ்தபா வென்றார்.
ஐ.தே.க-மு.கா கூட்டணிக்கு நான்கு இடங்கள் கிடைத்தன. அதில் தெரிவான மூவர் முஸ்லிம்கள். இக்கூட்டணியில் மனோ கணேசனும் போட்டியிட்டார். விருப்பு வாக்கு அடிப்படையில் தெரிவாகும் வாய்ப்பை இழந்தார்.
2015 தேர்தல்:
இந்திய வம்சாவளி தமிழர்கள் கால் நூற்றாண்டு காலமாக இழந்த பிரதிநிதித்துவம் வேலு குமார் தெரிவு மூலம் மீண்டும் கிடைத்தது. ஐ.தே.க-தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் வேலு குமார் நிறுத்தப்பட்டிருந்தார்.
இந்தக் கூட்டணியில் மு.கா சார்பில் ஹக்கிம், ஐ.தே.க சார்பில் ஹாலீம் உட்பட மொத்தமாக ஏழு இடங்கள் கிடைத்தன. ஐ.ம.சு.மு சார்பில் தெரிவான ஐவரும் சிங்களவர்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு இ.தொ.கா மீண்டும் தனிவழி சென்றாலும் ஏமாற்றமே மிஞ்சியது.
2020 தேர்தல்:
எதிர்வரும் தேர்தலில் 17 அரசியல் கட்சிகளும், 12 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. தேர்வாகும் உறுப்பினர்கள் எண்ணிக்கை-12 நுவரெலியா போல் மும்முனைப் போட்டி கண்டியிலும் நிலவுகிறது.
ஐதேக (யானை)
இம்முறை தனித்துப் போட்டியிடுகிறது. முதலாவது தமிழ் பிரதிநிதியாகத் தெரிவாகியிருந்த சிவசாமி ராஜரட்ணத்தின் மகன் ஜனார்த் இந்திய வம்சாவளித் தமிழர் சார்பு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
15 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலில் மூன்று முஸ்லிம்களுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (தாமரை மொட்டு)
கெஹலிய ரம்புக்வெல, மஹிந்தானந்த அளுத்கமகே, லொஹான் ரத்வத்த உட்படச் சிங்கள வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் கணிசமான முஸ்லிம் வாக்குகள் இருப்பதால் முஸ்லிம் ஒருவருக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.
இ.தொ.கா சார்பில் பாரத் அருள்சாமி பெயரிடப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி (டெலிபோன்)
2015ல் யானையில் தெரிவான ரவூப் ஹக்கிம், அப்துல் ஹாலிம், வேலு குமார் ஆகிய சிறுபான்மையினருக்கு மீண்டும் இடமளிக்கப்பட்டுள்ளது. லக்ஸ்மன் கிரியெல்ல, திலின பண்டார உட்பட 12 சிங்களவர்கள் இடம்பெறுகிறார்கள்.
கள நிலவரம்:
ஐ.தே.கட்சியின் செல்வாக்கு மிக்க மாவட்டங்களில் கண்டி மாவட்டமும் ஒன்று. ரணிலின் தலைமைத்துவம் தொடர்பில், கட்சிக்குள் ஏற்பட்ட உட்பூசல் காரணமாக அன்றிருந்த பலம் இன்றில்லை. விகிதாசார முறையில் நடைபெற்றுள்ள ஏழு தேர்தல்களில் இரண்டைத் தவிர, ஐந்து தேர்தல்களில் கூடுதல் இடங்களைப் பெற்ற ஐ.தே.க, இப்போது யானை-டெலிபோன் எனப் பிரிந்து நிற்கிறது.
2105 நாடாளுமன்றத் தேர்தலில் 56% வாக்குகளைப் பெற்றிருந்த இக்கட்சியின் வாக்குவங்கி ஜனாதிபதித் தேர்தலில் 45% ஆகக் குறைந்தது. மறுதரப்பில் 39% ஆக இருந்த வாக்குவீதம் 49% ஆக உயர்ந்தது. யானை—தொலைப்பேசி என்று கட்சி பிரிந்த நிலை, தாமரை மொட்டுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
தாமரை மொட்டு-5 தொலைப்பேசி-4, யானை-2 போக எஞ்சியிருக்கும் ஒரு ஆசனம் இந்த மூன்று கட்சிகளுக்கும் சுழன்று கொண்டிருக்கிறது.
குறிப்பாக தொலைப்பேசிக் கட்சியில் முஸ்லிம்களின் இரு பிரதிநிதித்துவம் தக்கவைக்கப்பட்டாலும், தமிழர்களின் வாக்கு பிளவுபடக் கூடிய சூழலில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இம்முறை கேள்விக்குறியாக இருக்கும்.
தாமரை மொட்டு மற்றும் யானையில் தமிழர்கள் யாரும் தெரிவாகும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் தமிழ் வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் அவர்களால் தொலைப்பேசி சின்னத்தில் போட்டியிடும் வேலு குமாருக்கு கடும் சவாலைக் கொடுக்கக் கூடும்.
மும்முனை போட்டியாகக் களத்திலுள்ள கட்சிகளில் முஸ்லிம்களின் வாக்குகள் தொலைப்பேசிக் கட்சிக்கே செல்லும் வாய்ப்பு அதிகமுள்ளது, ஏனென்றால் ஹக்கிம், ஹாலிம் போன்ற பலமான வேட்பாளர்கள் அந்தச் சின்னத்தில் நிற்கிறார்கள்.
இந்திய வம்சாவளித் தமிழர்களின் வாக்கும் பலமானது. 2001 ஆண்டுத் தேர்தலில் மலையக மக்கள் முன்னணிக்குக் கிடைத்த ஒரு பிரதிநிதிதான் சந்திரிகா அரசாங்கத்தைத் தீர்மானித்தது. எனவே இத்தேர்தலில் இந்திய வம்சாவளி மக்கள் தமது வாக்கு பலத்தை பலவீனப்படுத்தாமல், கண்டி போன்ற மாவட்டங்களில் தமது பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொண்டு நிரூபிக்க வேண்டும்.
கண்டியிலிருந்து தமிழர் ஒருவர் தெரிவாகக் கூடிய வாய்ப்பு இருக்குமாயின் அது ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளருக்கே அதிகம் உள்ளது என்பதே களத்திலுள்ள யதார்த்தம்.
மாத்தளை மாவட்டமும் மலையகத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், இங்கிருந்து தமிழ் அல்லது முஸ்லிம் பிரதிநிதி யாரும் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு இல்லை. இருப்பினும் அங்குள்ள சிறுபான்மை மக்களை இலக்கு வைத்து யானை மற்றும் தொலைப்பேசி சார்பில் இரு இனங்களைச் சேர்ந்த தலா ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மொட்டுக் கட்சியின் சிறுபான்மையினர் நிராகரிப்பு இங்கும் தொடருகிறது.
தொடரும்….