சிவா பரமேஸ்வரன் – முன்னாள் மூத்த செய்தியாளர் பிபிசி
மலையகத்தில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் கணிசமாக வாழும் மற்றுமோர் மாவட்ட பதுளை மாவட்டம். ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள இந்த மாவட்டத்திலும் செழிப்பான தேயிலைத் தோட்டங்களையும், நீர்வீழ்ச்சிகளையும் பரவலாகக் காண முடியும்.
இராமாயணத்துடன் தொடர்புடைய இராவணன் நீர்வீழ்ச்சியும் இம்மாவட்டத்திலேயே உள்ளது.
நீர்வீழ்ச்சிக்குப் பின்னால் அமைந்துள்ள குகையில் சீதையை இராவணன் மறைத்து வைத்திருந்தார் என்பது தொன்மையான நம்பிக்கையாகும்.
சுதந்திரத்துக்கு முன்பு பதுளை மாவட்டத்தில் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு இரண்டு பிரதிநிதித்துவமும் இருந்தது, பிரஜாவுரை சட்டம் காரணமாக சுதந்திரம் கிடைத்த ஆண்டே அது பறிக்கப்பட்டது.
அரசியல்ரீதியான இந்த நடவடிக்கையே சுதந்திரத்துக்குப் பின்னர் சிறுபான்மை இனத்தை இலக்கு வைத்து பேரினவாதிகள் அடித்த முதல் அடி என்று இன்றளவும் பேசப்படுகிறது.
இம்மாவட்டத்திலுள்ள இந்திய வம்சாவளியினரும், 43 வருடங்களுக்குப் பின்னரே 1994ல் தமது பிரதிநிதி ஒருவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப முடிந்தது.
பதுளை மாவட்டம் 20% தமிழர்களைக் கொண்டது. இங்கு தமிழ் பிரதிநிதித்துவம் ஒன்று, இரண்டு என்று சுழன்று கொண்டிருந்தாலும், சில சந்தர்ப்பங்களில் வாக்குகள் பிரிவதால் அதுவும் இல்லாமலும் போகின்றது.
விகிதாசார முறையின் கீழ் இதுவரை நடைபெற்ற 7 தேர்தல்களில் 5% இருக்கும் முஸ்லிம்கள் சார்பாக இதுவரை எவரும் தெரிவாகவில்லை.
1989 தேர்தல்:
விகிதாசார முறையில் நடைபெற்ற முதல் தேர்தல் இது. கூட்டாகப் போட்டியிட்ட இ.தொ.கா-ஐ.தே.கவுக்கு 5 ஆசனங்கள் கிடைத்தன. எஞ்சிய மூன்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குக் கிடைத்தன. தமிழர்கள் யாரும் தெரிவாகவில்லை.
1994 தேர்தல்:
பொதுஜன முன்னணி உருவாகி சந்திரிகா அலை வீசிய இந்தத் தேர்தல் காலத்திலும் இ.தொ.கா-ஐ.தே.க கூட்டு நீடித்தது-ஐந்து ஐந்து ஆசனங்கள் கிடைத்தது அதில் இ.தொ.காவைச் சேர்ந்த வீரன் சென்னன் சுதந்திரத்துக்குப் பிறகு பதுளையிலிருந்து தெரிவான முதல் தமிழர் என்ற பெருமையைப் பெற்றார். ஏனைய 3 இடங்கள் பொதுஜன முன்னணிக்குக் கிடைத்தது.
2000 தேர்தல்:
இத்தேர்தலில் கண்டி மாவட்டம் போன்று இ.தொ.கா தனியாக நின்று இருந்த பிரதிநிதித்துவத்துவமும் இல்லாமல் போனது. கடந்த இரு தேர்தல்களைப் போன்று ஐ.தே.க தனது ஐந்து இடங்களையும், பொதுஜன முன்னணி மூன்று இடங்களையும் தக்கவைத்துக் கொண்டன.
2001 தேர்தல்:
தனியாகப் பயணித்து கிடைத்த அனுபவம், ஏமாற்றம் காரணமாக ஐ.தே.க கூட்டணியை இ.தொ.கா இணைந்தது. வழமை போல் 5 இடங்கள் கிடைத்தன.
அவர்களின் தெரிவான தமிழர் ஐ.தே.கவைச் சேர்ந்த கே.வேலாயுதம். பொதுஜன முன்னணிக்கு மூன்று இடங்கள் கிடைத்தன.
2004 தேர்தல்:
ஐ.தே.க-இ.தொ.கா கூட்டணி தொடர்ந்தது. பொதுஜன முன்னணிக்குப் பதிலாக மஹிந்த ராஜபக்ச தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஐ.தே.க கூட்டணிக்கு எதிராகக் களமிறங்கியது.
வழமை போல் 5-3 என்று தேர்தல் முடிவுகள் அமைந்தது. ஐ.தே.க சார்பில் இ.தொ.காவைச் சேர்ந்த முருகன் சச்சிதானந்தம் மற்றும் சுரேஷ் வடிவேல் ஆகியோர் தெரிவான நிலையில் தமிழர் பிரதிநிதித்துவம் இரண்டாக உயர்ந்தது.
2020 தேர்தலில் இவர்கள் இருவரும் எதிரும் புதிருமாகப் போட்டியிடுகின்றனர்,
தேர்தலுக்குப் பிறகு இ.தொ.கா வும் ஐ.ம.சு.மு ஆட்சியில் இணைந்தது. காலவோட்டத்தில் சுரேஷ் வடிவேல் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து கொண்டார்.
2010 தேர்தல்:
முதல்முறையாக ஐ.தே.கவின் அரசியல் எதிரியான ஐ.ம.சு.முன்னணியுடன்-இ.தொ.கா இணைந்து தேர்தலை எதிர்கொண்டது. இவர்களுக்கு ஆறு ஆசனங்கள் கிடைத்தாலும் தமிழ் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை.
சுரேஷ் வடிவேல் ஐ.ம.சு.முன்னணி சார்பாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
இத்தேர்தலில் ஐ.தே.கவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அவர்கள் சார்பில் தெரிவான இரண்டு பேரில் ஒருவரான ஹரின் பெர்ணாண்டோ 2014 ஆகஸ்டில் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காகப் பதவி துறக்க கே.வேலாயுதம் மீண்டும் நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பைப் பெற்றார். .
மலையக மக்கள் முன்னணி முதல்முறையாகப் போட்டியிட்டாலும் தோல்வியைச் சந்தித்தது
2015 தேர்தல்:
ஐ.தே.கட்சியுடன் மலையக மக்கள் முன்னணி இணைந்து போட்டியிட்டது.. இ.தொ.கா- ஐ.ம.சு.முன்னணியைக் கைவிட்டு தனிவழியை நாடினாலும் 2000ஆம் இத்தேர்தலைப் போல இம்முறையும் படுதோல்வியைச் சந்தித்தது.
ஐ.தே.கவுக்கு பழையபடி ஐந்து இடங்கள் கிடைத்தன. அதில் ம.ம.முவைச் சேர்ந்த அ.அரவிந்தகுமார், ஐ.தே.க சார்பில் ஐ.ம.சு.முன்னணியிலிருந்து அணி மாறிய சுரேஷ் வடிவேல் ஆகியோர் தெரிவாகினர்.
மஹிந்த தலைமையிலான ஐ.ம.சு.முன்னணிக்கு மூன்று ஆசனங்கள் கிடைத்தன.
2020 தேர்தல்:
அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் இம்மாவட்டத்திலிருந்து தெரிவாகும் உறுப்பினர்கள் எண்ணிக்கை எட்டிலிருந்து ஒன்பதாக உயர்ந்தது.
12 கட்சிகளும் அதேயளவு சுயேச்சைக் குழுக்களும் களத்திலுள்ள போதிலும், யானை, தாமரை மொட்டு, தொலைபேசி ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டியைக் காண முடிகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன: (தாமரை மொட்டு)
மூத்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா முன்னாள் மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க உட்பட 12 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலில் தொண்டமான் குடும்பத்தின் மற்றுமொரு வாரிசான செந்தில் தொண்டமானும் இடம்பெற்றுள்ளார். வேறு தமிழ் வேட்பாளர்கள் இல்லை.
ஐக்கிய தேசியக் கட்சி: (யானை)
வேட்பாளர்கள் பட்டியலில் முருகன் சச்சிதானந்தம், மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் வேலாயுதத்தின் மகன் பிரதீபராஜா மற்றும் ஒரு முஸ்லிமுக்கும் சிறுபான்மையினர் சார்பாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி: (தொலைபேசி)
கடந்த தேர்தலில் யானைச் சின்னத்தில் தெரிவான சுரேஷ் வடிவேல், அருணாசலம் அரவிந்தகுமார், ரவிந்திர சமரவீர உட்படப் பெயரிடப்பட்டுள்ள 12 பேரில் ஒரு முஸ்லிமும் இடம்பெறுகிறார்.
கள நிலவரம்:
மும்முனைப் போட்டி நிலவும் களத்தில் தாமரை மொட்டுக் கட்சியில் முஸ்லிம்கள் யாரும் இல்லை. இதனால் அவர்கள் முஸ்லிம் வாக்குகளை இழக்க நேரிடும்.
அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபட்டுள்ளதால் அவர்களின் வாக்குவங்கியும் இரண்டாகப் பிரியும் போது, யானை கடந்த ஐந்து தேர்தல்களில் பெற்ற வெற்றியை இம்முறை எதிர்ப்பார்க்க முடியாது. அதில் ஒரு குறிப்பிட்ட தொகை தாமரை மொட்டுப் பக்கம் சாயக் கூடும். எனவே தாமரை மொட்டுக்குச் சாதகமான சூழல் காணப்படுகிறது
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க 55% வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களைப் பெற்றது. 38% வாக்குகளைப் பெற்ற ஐ.ம.சு.முன்னணிக்கு 3 ஆசனங்கள் கிடைத்தன. ஆனால் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நிலைமை மாறியது. கோத்தாபய ராஜபக்சவுக்கு 49% வாக்குகளும் சஜித் பிரேமதாஸவுக்கு 45% வாக்குகளும் கிடைத்தன.
இம்முறை தாமரை மொட்டு-5, தொலைபேசி-2, யானை-1 என ஆசனங்களைப் பெறும் வாய்ப்பு உள்ளது. ஒரு இடம் சுழன்று கொண்டிருக்கிறது.
இ.தொ.காவுக்கு இங்கு குறிப்பிடத்தக்க வாங்கு வங்கி இல்லை என்பது அவர்கள் தனித்துப் போட்டியிட்ட தேர்தல்களில் நிரூபிக்கப்பட்டது. ஆனால் செந்தில் தொண்டமானைப் பொறுத்தவரை மாகாண அமைச்சராக இருந்து தனது சேவை மூலம் மக்களின் அபிமானத்தைப் பெற்றவர். அவர் ஆளுமைமிக்க ஒருவராகவும் தோட்ட மக்களால் கருதப்படுகிறார்.
அதேவேளை தாமரை மொட்டுக் கட்சியில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நிமால் சிறிபால டி சில்வா, சாமர தஸநாயக்க, டிலான் பெரேரா போன்ற முன்னணி வேட்பாளர்கள் இருப்பதையும் செந்தில் தொண்டமான் கவனத்தில் எடுக்க வேண்டும். அவரது வெற்றி கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெறுவதிலேயே தங்கியுள்ளது.
தொலைபேசிக் கட்சிக்கு கிடைக்கக் கூடிய வாக்குகளின் அடிப்படையில் தமிழர்கள் ஒன்று அல்லது இரண்டு இடங்களைப் பெறக்கூடிய சாத்தியங்கள் உள்ளன.
யானைக்குப் போகக் கூடிய தமிழர் வாக்குகளை எந்தளவுக்கு கவர்வார்கள் என்பதிலேயே அவர்களின் வெற்றி முடிவாகும்
இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு வேறு இனத்தவர்கள் வாக்களிக்கும் வாய்ப்பு மிக அரிது. ஆனால் சிங்கள வேட்பாளர்கள் தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகளையும் எதிர்பார்த்து பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர்.
1989, 2000 மற்றும் 2010 தேர்தல்களில் தமிழ் மக்கள் கட்சிரீதியாகப் பிரிந்து வாக்குகளை அளித்தது, விருப்பு வாக்குகளை உரிய முறையில் பயன்படுத்தத் தவறியது போன்ற காரணிகளே அவர்கள் தமது பிரதிநிதித்துவத்தை இழக்க காரணமாக அமைந்தது.
மலையக மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்க வேண்டுமானால், அவர்களின் பிரதிநிதித்துவமும் அதிகரிக்க வேண்டும். அவர்கள் ஆழமாகச் சிந்தித்து புத்திசாலித்தனமாக வாக்களித்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.
தங்களது நம்பிக்கைக்குரிய கட்சிக்கு வாக்களிக்கும் போது விருப்பு வாக்கு புள்ளடியை தங்கள் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் ஒரு உத்தியாகக் கையாள வேண்டியவர்களாக இந்திய வம்சாவளியினர் உள்ளனர். அதுவே அவர்களுக்கு நலம் பயக்கும்.