கதிரோட்டம் 17-07-2020
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சுமார் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள பெரும்பான்மை இனத்தின் அரசியல்வாதிகளாலும் இனவாதிகளாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசியல்,பொருளாதார, சமூக, சமயம், மொழி ஆகியவை சார்ந்த நடவடிக்கைகளும் அவற்றால் ஈழத் தமிழினம் அனுபவித்த விபரிக்க முடியாத கொடுமைகளும் எவராலும் இலகுவில் மறந்துவிட முடியாது.
இவ்வாறான எதிர்ப்புணர்வும் கொரூர சிந்தனைகளும் தோன்றுவதற்கு பல காரணங்கள் உள்ளன என்பதை உலகமே நன்கு அறியும். ஆனால் இலங்கை அரசினால் தொடர்ச்சியாக எமது இனம் அடக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் துயர்படிந்த வாழ்வை தொடர்வதை கண்டு சகித்துக் கொள்ள முடியாத இளைஞர் அரசியல் சிந்தனைகளையும் தம்மோடு இணைத்துக் கொண்டு ஆயுதம் ஏந்திய போராட்டத்தை ஆரம்பித்தனர்.
எனினும் சமாந்தரமாகவே ஆயுதப்போராட்டத்தையும் பாராளுமன்றம் மூலமான வாக்குப் பலத்தைக் கொண்ட கருத்து ரீதியான போராட்டததை நடத்திக் கொண்டிருந்த எமக்கு இரண்டு வகையான போராட்டங்களிலும் சர்வதேசத்தின் ஆதரவு முழுமையாகக் கிட்டவில்லை. எட்டவே நின்று கொண்டு பல நாடுகள் எம் இனத்தின் பிரதிநிதிகளுக்கு வாக்குறுதிகளைத் தந்தாலும் இறுதியில் எமது விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்கு சர்வதேசம் போட்டியிட்டுக் கொண்டு அந்த மண்ணிற்கு இராணு உதவிகளை அனுப்பி எமது மக்களையும் போராளிகளையும் கொன்று குவித்தனஃ
இன்னொரு பக்கத்தில் பாராளுமன்றம் என்னும் மேடையைப் பாவித்து கருத்துப் போராட்டத்தை நடத்துவதற்காக எமது மக்கள் வாக்களித்து அனுப்பி வைத்த எமது பிரதிநிதிகள் கூட தங்கள் கடமையை செய்யாமல் ‘தங்கள்’ திருப்திக்கு ஏற்றவாறு பாராளுமன்றக் கதிரைகளைப் பயன்படுத்தினரே தவிர , எம் இனத்தின் தேவைகளைபெற்றுத் தரவில்லை. மாறாக அவர்கள் பெற்றது ஏராளம்!, ஏராளம்.
இவ்வாறாக நாம் கடந்து வந்த எமது அரசியல் தளம் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வேறு வடிவங்களை எடுத்து எமது இனத்திற்கு எதிராக பெரும்பான்மை இனம் சார்ந்த தலைமைகள் மிகவும் மூர்க்கத்தனமாகக் கிளர்ந்து எழுந்து நின்று ‘சங்காரம்’ செய்வது போன்று, அச்சமூட்டும் வகையில் தங்கள் நடவடிக்கைகளைத் ஆரம்பித்துள்ளன. நாம் அவதானித்த வகையில் இலங்கை அரசும், புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் சிங்கள அமைப்புக்களும் இவ்வாறான மூர்கத்தனமான முறையில் நீதிக்கு முரணான வகையில் தங்கள் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளன.
இலங்கையில் ஜனாதிபதியாக கோத்தபாய தேர்ந்தெடுக்கப்பட்டதும், அவர் எங்கிருந்து அரசியலுக்கு வந்தாரோ, அதே இராணுவ வழியில் ஆட்சியை நடத்த முற்படுகின்றார்.இவற்றின் உச்சமாக ‘ஜனாதிபதி செயலணி’ என்னும் இராணுவத்தின் சாயம் பூசப்பட்ட அரச செயற்பாட்டை ஆரம்பித்து தமிழ் மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை முன்னாள் இராணுவ அதிகாரிகளையும் பௌத்த பிக்குகளையும் கொண்டு மேற்கொண்டு வருவதைக் காணக் கூடியதாக உள்ளது.
இதே வெளிநாடுகளில் குறிப்பாக இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் தமிழர்களுக்கு எதிரான அமைப்புக்களை இலங்கை அரசின் ஆதரவோடு நிறுவி, அவற்றை தமிழ் மக்களின் முன்னேற்றமான எண்ணங்களைச் சிதைக்கும் வகையில் செயற்பட ஆரம்பித்துள்ளனர்.
குறிப்பாக கனடாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘இலங்கை- கனடிய செயல் கூட்டணி’ என்னும் அமைப்பின் ஊடாக இங்கு குழப்ப நிலையைத் தோற்றுவிக்க இங்கு வாழும் சிங்கள இனமக்களை அணி திரளச் செய்து மாகாண மற்றும் உள்ளாட்சி மன்றங்களில் தமிழ் மக்களுக்கு உள்ள செல்வாக்கை சரியச் செய்யும் கபடத்தனமான செயற்பாடுகளில் இறங்கியுள்ளனர்.
ஆனால் இவற்றையெலலாம் கவனிக்காத அல்லது அக்கறை கொள்ளாத வகையில் தமிழர் அமைப்புக்கள் வாளாதிருப்பது என்பதும் எமக்கு கவலையளிக்கின்றது
நாம் மேற்குறிப்பிட்ட இலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மை மக்களை பிரதிநிதிததுவம் செய்கின்றோம் என்ற போர்வையில் இயங்கும் ‘இலங்கை- கனடிய செயல் கூட்டணி’ அமைப்பு கடந்த சில மாதங்களாக தமிழ் மக்களுக்கும் கனடாவில் தேர்ந்தெடுக்கப்பட்டதமிழ் பேசும் ‘மக்கள் பிரதிநிதி’களுக்கும் இடையூறு செய்யும் வகையில் கலந்துரையாடல்களையும் இணையவழி கூட்டங்களையும் நடத்திவருகின்றது.
எனவே அந்த அமைப்பு எமது மக்களுக்கு எதிராக நடத்துகின்ற செயற்பாடுகள் பற்றிய கவனயீர்ப்பை ஏற்படுத்தும் வகையில் கனடாவில் இயங்கும் ‘ஈழத்தின் குரல் என்னும் அமைப்பு இன்று 17ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை கனடிய நேரப்படி 6.00 மணிக்கு இணைய வழி மூலமாக கலந்துரையாடலை நடத்துகின்றது. எனவே எமது மக்களின் நலனில் அக்கறை கொண்ட அனைவரும் கலந்து கொள்ளும் படி நாம் வேண்டுகின்றோம். இதில் கலந்து கொள்வதற்கு Meeting ID :8501015 9827 – Password:- 015769 ஆகியவற்றைக் குறித்துக்கொள்ளும்படியும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.