சிவா பரமேஸ்வரன் —- முன்னாள் மூத்த செய்தியாளர் பிபிசி
இலங்கையிலுள்ள தேர்தல் மாவட்டங்களில் கூடுதலான உறுப்பினர்கள் தெரிவாகும் மாவட்டம் கொழும்பு.
சிங்களவர்கள் கூடுதலாக வசிக்கும் இம்மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்களும் கணிசமான அளவில் வாழ்கிறார்கள்.
இம்மாவட்டத்திலுள்ள 15 தொகுதிகளில் மகரகம, ஹோமாகம, கெஸ்பாவ, கடுவல ஆகிய தொகுதிகளில் அநேகமானோர் கடும்போக்கு பௌத்த சிங்களவர்கள்.
விகிதாசார முறையில் இதுவரை நடைபெற்ற ஏழு தேர்தல்களில், ரணில் விக்ரமசிங்க மறைந்த ஜே.ஆர்.ஜெயவர்தன, ஆர்.பிரேமதாஸ, லலித் அதுலத்முதலி, போன்ற முன்னணித் தலைவர்கள் கொழும்பிலிருந்துதான் தெரிவாகியுள்ளனர்.
கடும்போக்கு பௌத்தர்கள் என்று கூறப்படும் விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்த்தன, உதய கம்மன்பில, சம்பிக்க ரணவக்க, விஜேதாஸ ராஜபக்ச போன்றவர்களும் இங்கிருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
1989 தேர்தல்: (ஆசனங்கள் 20)
இலங்கைத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாகக் கொழும்பு மாவட்டத்திலிருந்து தமிழ் பிரதிநிதி ஒருவர் இந்தத் தேர்தலில் தெரிவானார். ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில் இ.தொ.காவினால் முன்மொழியப்பட்ட எம்.எஸ். செல்லச்சாமி அந்தப் பெருமையைப் பெற்றார்.
ஐ.தே.கட்சிக்குக் கிடைத்த 12 ஆசனங்களில் எம்.எச். மொஹமட், ஜாபிர்.ஏ.காதர் ஆகிய முஸ்லிம்களும் தெரிவாகினர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 6 பேரும், மகாஜன எக்சத் பெரமுன சார்பில் இருவரும் தெரிவாகினர்.
1994 தேர்தல்: (ஆசனங்கள் 20)
சந்திரிகா அலை வீசிய இந்தத் தேர்தல் களத்தில் பொதுஜன முன்னணி என்கிற கூட்டணி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையில் அறிமுகமானது. அந்த முன்னணியில் 11 பேர் தெரிவாகினர். ஏற்கனவே கம்பஹா மாவட்ட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க முதல்முறையாக ஐ.தே.க சார்பில் கொழும்பு மாவட்டத்தில் தெரிவானார். ஐ.தே.கட்சிக்கு 9 ஆசனங்கள் கிடைத்தன. இருகட்சிகளில் தலா ஒரு முஸ்லிம் தெரிவானாலும் தமிழர்கள் யாரும் தெரிவாகவில்லை.
ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடைபெற்றது. அக்டோபரில் கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்றில் ஐ.தே.க உறுப்பினர்களான ஓஸி அபேகுணசேகர, வீரசிங்க மல்லிமராச்சி ஆகியோர் கொல்லப்பட்டனர். அந்த வெற்றிடத்துக்கு இ.தொ.காவைச் சேர்ந்த பி.பி.தேவராஜ் மற்றும் ஆர்.யோகராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
2000ஆம் ஆண்டு தேர்தல்: (ஆசனங்கள் 20)
ஐ.தே.கட்சியுடன் மனோ கணேசனின் ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸும் இணைந்தது. அவர்களுக்கு 10 ஆசனங்கள் கிடைத்தாலும் தமிழர்கள் யாரும் தெரிவாகவில்லை, எனினும் இரு முஸ்லிம்கள் தெரிவாகினர். பொதுஜன முன்னணி சார்பில் பௌசி உட்பட எட்டு பேர் வெற்றியீட்டினர்.
ஜே.வி.பி சார்பில் விமல் வீரவன்ச உட்பட இருவர் வெற்றி. இ.தொ.கா, முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் காங்கிரஸ் ஆகியன தனித்துப் போட்டியிட்டாலும் படுதோல்வியடைந்தன.
2001 தேர்தல்: (ஆசனங்கள் 21)
ஐ.தே.க கூட்டணிக்கு மீளத் திரும்பியது இ.தொ.கா. முஸ்லிம் காங்கிரஸ்,மேலக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளும் பங்காளிகளாகின. அவர்களுக்கு 12 ஆசனங்கள் கிடைத்தன. மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், முதல்முறையாக நாடாளுமன்றம் சென்றார். பொதுஜன முன்னணிக்கு ஏழும், ஜே.வி.பிக்கு இரண்டு இடங்களும் கிடைத்தன.
நான்கு தமிழக் கட்சிகள் இணைந்து முதல் தடவையாக த.வி.கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டாலும் ஒரு ஆசனத்தையும் பெற முடியவில்லை.
2004 தேர்தல்: (ஆசனங்கள் 20)
ஐ.தே.க மற்றும் ஏனைய சிறுபான்மை கட்சிகள் இணைந்த கூட்டு தொடர்ந்து ஒன்பது பேர் தெரிவானார்கள். வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகளின் பின்புலத்தில் த.தே.கூ போட்டியிட்டதன் காரணமாக, தி.மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் போட்டியிட முடியாமல் கொழும்பில் போட்டியிட்டுத் தெரிவானார்.
தேர்தல் பிரச்சார காலத்தில் துப்பாக்கிச் சூட்டுக்குள்ளான அவர் வைத்தியசாலையிலிருந்தே வெற்றி பெற்றார். கொழும்பு மாவட்டத்தில் தெரிவான முதல் இலங்கைத் தமிழர் என்ற பெருமையை அவருக்குரியது. மனோ கணேசன் மீண்டும் தெரிவானார். இரு முஸ்லிம் பிரதிநிதித்துவமும் தொடர்ந்தது.
பொதுஜன முன்னணி, மஹிந்த ராஜபக்ச தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாக உருமாறியது. ஜே.வி.பி, மஹாஜன எக்சத் பெரமுன ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய இந்த முன்னணிக்கு எட்டு இடங்கள் கிடைத்தன.
முதல்முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பௌத்த பிக்குமார்களை உள்ளடக்கிய ஜாதிக ஹெல உறுமயவுக்கு மூன்று இடங்கள் கிடைத்தன.
2008 ஜனவரி 1 பொன்னம்பலவானேஸ்வரர் ஆலய வளாகத்தில் தி.மகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது வெற்றிடத்துக்கு மு.காவை சேர்ந்த எம்.ரஜாப்தீன் நாடாளுமன்றம் சென்றார்.
2010 தேர்தல்: (ஆசனங்கள் 19)
ஐ.ம.சு.முன்னணியில் இ.தொ.கா மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகியவை இணைந்தது. இவர்களுக்கு 10 இடங்கள் கிடைத்த போதிலும் தமிழர்கள் எவரும் இல்லை. ஆனால் முஸ்லிம் ஒருவர் தெரிவானார். மேலக மக்கள் முன்னணி-மு.கா உட்பட ஐ.தே.க கூட்டு தொடர்ந்தது. மனோ கணேசன் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவ அவருக்குப் பதிலாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட அவரது சகோதரர் பிரபா கணேசன் வெற்றிபெற்றார். அவர் பின்னர் மஹிந்தவுடன் இணைந்து கொண்டார். ஐ.தே.க கூட்டணிக்கு 7 இடங்கள் கிடைத்தன. முதல்முறையாக யானைச் சின்னத்தில் முஸ்லிம்கள் யாரும் தெரிவாகாத தேர்தல் இது.
ஜனநாயகத் தேசிய முன்னணி சார்பில் ஜே.வி.பியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயக்கவும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சரத் பொன்சேகாவும் தெரிவாகினர்.
2015 தேர்தல்: (ஆசனங்கள் 19)
ரணில்-மைத்திரி நல்லாட்சி காலத்தில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் ஐ.தே.க கூட்டணியில் எஸ்.எம்.மரிக்கர், முஜிபுர் ரஹ்மான் ஆகிய புதுமுகங்களுடன் மனோ கணேசன் உட்பட 11 பேர் வெற்றி பெற்றனர். ஐ.ம.சு.மு சார்பில் 7 பேர் தெரிவான போதிலும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் எவரும் இல்லை. ஜே.வி.பிக்கு ஒரு ஆசனம் கிடைத்தது.
2020 தேர்தல்: (ஆசனங்கள் 19)
கடந்த தேர்தல்களில் இருமுனைப் போட்டி நிலவிய இங்கு இதர பகுதிகளைப் போலவே இங்கும் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சி (யானை):
கடந்த முறை தெரிவான 11 பேரில் ரணில் விக்ரமசிங்க, ரவி கருணாநாயக்க ஆகிய இருவர் மட்டுமே மீண்டும் இக்கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் போனமுறை வெற்றிபெற்ற தயா கமகே இப்போது கொழும்பில் போட்டியிடுகிறார்.
எஞ்சிய 9 பேரில் எட்டு பேர் இம்முறை தொலைபேசி சின்னத்திலும், விஜேதாஸ ராஜபக்ச தாமரை மொட்டுச் சின்னத்திலும் வாக்கு கோருகின்றனர்.
முன்னாள் மாகாண சபை சண் குகவரதன் உட்பட இரு தமிழர்களுக்கும் இரு முஸ்லிம்களுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி (தொலைபேசி):
கடந்த தேர்தல்களில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து தெரிவான சஜித் பிரேமதாஸ முதல் தடவையாகக் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கியுள்ளார்.
சென்ற தேர்தலில் ஐ.தே.க சார்பில் தெரிவாகியிருந்த மனோ கணேசன், முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரிக்கர் உட்பட 7 பேர் இடமளிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் ஐ.மு.சு.முன்னணியின் தேசியப் பட்டியலில் தெரிவாகியிருந்த பௌசியும் நேரடிப் போட்டியில் இறங்கியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (தாமரை மொட்டு):
தமிழ் பேசும் மக்கள் கணிசமாக வாழும் இம்மாவட்டத்தில் அவர்கள் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது வேட்பாளர்கள் பட்டியலைப் பார்க்கும் போது தெரிகிறது.
2015ல் தெரிவாகியிருந்த விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்தன, உதய கம்மன்பில, போன்றவர்களுக்கு இம்முறையும் இடமளிக்கப்பட்டுள்ளது.
கள நிலவரம்:
ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற தேர்தலில், ஐ.தே.க-11, ஐ.ம.சு.மு-07, ஜே.வி.பி-01 என ஆசனங்கள் பிரிந்தன.
வழமைக்கு மாறாக இம்முறை மும்முனைப் போட்டி நிலவுவதால், அது தாமரை மொட்டுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
யானையும்-தொலைபேசியும் ஒருவர் மீது ஒருவர் சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை, தாமரை மொட்டு மௌனமாக ரசித்துக் கொண்டிருக்கிறது.
சிறுபான்மை மக்களின் வாக்குகளைவிடச் சிங்கள வாக்குகளை அதிகமாகக் கவரும் நோக்குடன் தனது பிரச்சார உத்தியைக் கையாள்கிறது தாமரை மொட்டு.
ரணில்-சஜித் இடையேயான மோதல் யானைச் சின்னத்தின் வாக்கு வங்கியை பரவலாகப் பாதிக்கக் கூடும்.
2015 தேர்தலில் யானைக்கு 53% வாக்குகளும், ஐ.ம.சு.முன்னணிக்கு 39% வாக்குகளும் கிடைத்தன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவுக்கு 53% வாக்குகள் உயர சஜித்துக்கு 47%மாக வாக்குகள் குறைந்தன.
ஜனாதிபதித் தேர்தல் வாக்கு வீதத்தைப் பார்க்கும் போது, சஜித்துக்கு கிடைத்த வாக்குகள் இரண்டாகப் பிரிவதும் அதனால் ஆசனங்கள் குறைவதும் தவிர்க்க முடியாதது .
இச்சூழலில் தாமரை மொட்டு-08, தொலைபேசி-05, யானை-03, ஜே.வி.பி-01 எனும் வகையில் ஆசனங்கள் பிரியக் கூடும். ஒரிரு ஆசனங்கள் கடைசி நேர உச்சகட்டப் பிரச்சாரத்தை பொறுத்தே அமையும்.
சிறுபான்மை இனத்தவர்களின் பிரதிநிதித்துவத்தை கடந்த தேர்தல்களில் யானைதான் பெற்றுத்தந்தது. இம்முறை அது யானையால் முடியாது. தாமரை மொட்டுச் சின்னத்தில் சிறுபான்மையினரே இல்லாத நிலையில் அதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. எனவே சிறுபான்மையினருக்கான வாய்ப்பு தொலைபேசியில்தான் தெரிகின்றது.
தொலைபேசியில் மூன்று முஸ்லிம்களும், மூன்று தமிழர்களுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய ஐந்து-ஆறு ஆசனங்களில் கடந்தமுறை போன்று சிறுபான்மையினருக்கு மூன்று இடங்கள் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே.
தமிழ் மக்கள் எதிர்ப்பார்க்கின்ற மனோ கணேசன் கடந்த தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே தெரிவாகியிருந்தார். அவரால் அரசியலுக்குக் கொண்டுவரப்பட்ட சண் குகவரதன் யானையில் இணைந்து போட்டியிடுகிறார்.
அவர் சொற்ப வாக்குகளைப் பெற்றாலும் அதுவும் மனோவுக்கு பாதகமாக அமையக்கூடும்.
கடந்த தேர்தலில் மனோ கணேசனைவிடக் கூடுதல் வாக்குகளைப் பெற்றிருந்த சுஜீவ சேனசிங்க, ஹர்ஷ டி சில்வா, சம்பிக்க ரணவக்க, மரிக்கார், முஜிபுர் ரஹ்மான், ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகிய 6 பேருடன் இம்முறை சஜித்தும் களத்திலுள்ளார்.
எனவே மனோ கணேசன் குறைந்தது 75,000 வாக்குகளையாவது பெற வேண்டியதுள்ளது. அவரது வெற்றி தமிழ் மக்கள் தமது வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் அளிப்பதிலேயே உள்ளது.