சிவா பரமேஸ்வரன் —முன்னாள் மூத்த செய்தியாளர் பிபிசி.
இலங்கையில் தொகுதிவாரியான நாடாளுமன்றத் தேர்தல் இறுதியாக 1977ல் நடைபெற்றது. 161 தொகுதிகளிலிருந்து 168 உறுப்பினர்கள் தெரிவாகினர்.
கொழும்பு மத்தி, நுவரெலியா ஆகியவை மூன்று அங்கத்தவர்கள் தொகுதி. மட்டக்களப்பு, ஹரிஸ்பத்துவ, பொத்துவில், வேருவில ஆகியன இரண்டு அங்கத்தவர்கள் தொகுதிகளாகும். ஏனையவை தனி அங்கத்தவர் தொகுதிகள்.
மூன்று அங்கத்துவ தொகுதி வாக்காளர்களுக்கு மூன்று வாக்குச் சீட்டுக்களும், இரண்டு அங்கத்தவர்கள் தொகுதியாயின் இரண்டு வாக்குச் சீட்டுகளும் ஏனைய தொகுதி வாக்காளர்களுக்கு ஒற்றை வாக்குச் சீட்டும் வழங்கப்படும்.
ஒன்றுக்கு மேற்பட்ட அங்கத்தவர் தொகுதியாக இருந்தாலும் ஒரு கட்சி சார்பில் ஒரு வேட்பாளரை மட்டுமே நிறுத்த முடியும்.
1970ஆம் ஆண்டு தேர்தலில் பெலியத்த தொகுதியிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் தெரிவான மஹிந்த ராஜபக்ச இறுதியாக நடைபெற்ற தொகுதிவாரி தேர்தலில் தோல்வியடைந்தார். அவரது சகோதரர் பசில் ராஜபக்ச முல்கிரிகல தொகுதியில் முதல் முறையாகப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
இறுதியாக நடைபெற்ற தொகுதிவாரி தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் இரா.சம்பந்தன் (திருகோணமலை), ரணில் விக்ரமசிங்க (பியகம) ஜோன் அமரதுங்க (வத்தளை), ஆகிய மூவரும் தான் கடந்த நாடாளுமன்றத்திலும் உறுப்பினர்களாக இருந்து எதிர்வரும் தேர்தலிலும் வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ளனர். 1977தேர்தலில் கிளிநொச்சித் தொகுதியிலிருந்து வெற்றி பெற்ற வீ.ஆனந்தசங்கரியும் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுகிறார்.
1977 தேர்தலில் ஐ.தே.க ஆறில் ஐந்து பெரும்பான்மைப் பெற்று யானை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றியது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எட்டு ஆசனங்களுடன் படுதோல்வியடைந்தது. ஐ.தே.க – சு.க எனச் சுழன்றுகொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவி முதல் தடவையாகத் தேசியக் கட்சி ஒன்றிலிருந்து நழுவி சிறுபான்மை கட்சி ஒன்றுக்குச் சென்றது. தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அ.அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரானார்.
இது தேசிய அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
ஐ.தே.க-140, த.வி.கூ-18, சு.க-08, இ.தொ.கா-01, சுயேச்சை-01 என 1977 தேர்தல் முடிவு அமைந்தது.
தேர்தல் முடிந்த பின் ஜூலை மாதம் பிரதமராகப் பதவியேற்ற ஜே.ஆர்.ஜெயவர்தன அக்டோபர் மாதம் 4ஆம் திகதி அரசியல் அமைப்பின் இரண்டாவது திருத்தம் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது ஜனாதிபதியாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டார். புதிய அரசியலமைப்பு சட்டத்தை அமைக்க குழுவொன்றையும் நியமித்தார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி நடைமுறைக்கு வந்த நிலையில் அதுவரை முதலாவது ஜனாதிபதி என்ற பெருமையைக் கொண்டிருந்த வில்லியம் கோபல்லாவ மறைமுகமாகப் பதவி விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு விழுந்த முதல் அடி.
ஜே.ஆர்.பிரதமராகப் பதவியேற்ற ஒரு மாதத்திலேயே, யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற சம்பவமொன்றை மையப்படுத்திப் பரவிய வதந்தி ஆகஸ்ட் 8 ஆம் திகதி நாடு முழுவதும் இனக்கலவரமாக வெடித்தது. சில நாட்கள் நீடித்த இந்தக் கலவரத்தில் ஏராளமான தமிழர்கள் தமது உயிரையும், உடைமைகளையும் இழந்தனர்.
இந்த கலவரம் காரணமாக மலையகப் பகுதியிலிருந்து 75,000க்கு மேற்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் வடக்கு-கிழக்கில் குடியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
தமது கட்சிக்கு நாடாளுமன்றத்திலிருந்த யானைப் பலத்தைப் பயன்படுத்தி 1972ஆம் ஆண்டு மே மாதம் 22 திகதி, சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் கொண்டுவரப்பட்ட இலங்கை சோஷலிச குடியரசின் யாப்பை ஜே.ஆர். குழிதோண்டிப் புதைத்தார்.
இதனையடுத்து 1978ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் திகதி அவரது ஆட்சியினால் புதிய அரசியல் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு எனப் பிரகடனம் செய்யும் புதிய அரசியல் யாப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்து 30 ஆண்டுகளுக்குள் இது மூன்றாவது அரசியல் யாப்பு.
அவரது புதிய அரசியல் யாப்பின் மூலம், நாடாளுமன்றத்தில் பரவியிருந்த அதிகாரம் ஜனாதிபதி எனும் தனிநபர் ஆதிக்கத்துக்கு வழி வகுத்தது
இது `சுதந்திரமான ஜனநாயகத்துக்குச் சாவுமணி` என்று அப்போதே முடிவுக்கு விமர்சனம் எழுந்தது.
இந்த அரசியல் யாப்பில் சில ஜனநாயக விரோத அம்சங்கள் காணப்பட்டன. உதாரணமாக ஆறு ஆண்டுகள் ஆயுட்காலத்தைக் கொண்ட நாடாளுமன்றத்தை ஜனாதிபதி விரும்பினால் தன்னிச்சையாக ஒரு வருடத்தின் பின் கலைக்க முடியும். இதனை ஜே.ஆர். செயலில் காட்டாவிட்டாலும் சந்திரிகா குமாரதுங்க 2001 மற்றும் 2004ல் தன்னிச்சையாக நாடாளுமன்றத்தைக் கலைத்து அதனைச் செயலில் காட்டினார்.
ஆறு ஆண்டுகள் முடிவடைந்து தேர்தல் நடைபெற வேண்டிய நிலையில் 1982 டிசம்பரில் தனது அதிகாரம் மற்றும் நாடாளுமன்ற பெரும்பான்மை மூலம் தேர்தலை நடத்தாமல் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் நாடாளுமன்றத்தின் ஆயுள்காலத்தை மேலும் ஆறு ஆண்டுகளுக்கு நீடித்தார் ஜே.ஆர்.ஜெயவர்தன.
ஜே.ஆரின். நரித்தனமான அரசியல் சிந்தனை அவர் கொண்டுவந்த அரசியல் யாப்பு மூலமாக அம்பலமானது.
எதிர்காலத்தில் சிறுபான்மையினர் யாரும் எதிர்க்கட்சித் தலைவராக வந்துவிடக் கூடாது என்பது உட்படத் தான் கொண்டு வந்த அரசியல் யாப்பில் எந்த மாறுதலையோ அல்லது திருத்தங்களையோ கொண்டுவர முடியாதபடி ஜே.ஆர். வைத்த பொறிதான் தற்போதைய விகிதாசார தேர்தல் முறை.
அது பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறையிலிருந்து விலகினாலும் அமெரிக்கா, பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளின் ஒரு கலவையாக விளங்கியது. இலங்கைப் போன்ற சிறிய நாடுகளுக்கு அது முழுமையான ஜனநாயகத் தீர்வாக அமையாது என்பது இங்கு கவனிக்கப்படவில்லை.
1977க்கு பிறகு எந்தவொரு கட்சிக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காததால் ஜே.ஆரால் கொண்டுவரப்பட்ட பல சட்டங்களை நீக்கவோ அல்லது அதில் திருத்தங்களைச் செய்யவோ முடியாமல் நாட்டில் குழப்பநிலை நீடிக்கிறது. எனினும் ஓரிரு திருத்தங்களை ஆட்சியாளர்களால் மேற்கொள்ள முடிந்தது. பயங்கரவாதத் தடைச்சட்டமும் இவரது ஆட்சியில் தான் நிறைவேற்றப்பட்டது.
43 ஆண்டுகள் பழமையான இந்த அரசியல் யாப்பில் இதுவரை 19 திருத்தங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் உள்நாட்டில் பிரிவினை கோருவதைத் தடை செய்யும் ஆறாவது திருத்தம், மாகாண சபை முறைமை மூலம் அதிகாரப் பகிர்வுக்கான 13ஆவது திருத்தம் ஆகியவை அவரது பதவிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட குறிப்பிடத்தக்கத் திருத்தங்களாகும்.
ஜே.ஆர்.ஜெயவர்தன நாடாளுமன்றத்தில் தனக்கு இருந்த மாபெரும் பலத்தின் காரணமாகவே பிரதமராக இருந்த ரணசிங்க பிரேமதாஸவின் கடும் எதிர்ப்பையும் மீறி 1987ல் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். இலங்கை அரசியலில் ஆளுமை செலுத்தும் பௌத்த குருமார்களையும் பொருட்படுத்தாமல் துணிச்சலாக இந்தக் காரியத்தில் அவர் இறங்கினார். தனதுப் பதவிக்காலம் முழுவதிலும் அதைப் பாதுகாத்து வந்தார்.
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 18ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஜனாதிபதி ஒருவர் தொடர்ந்து இருமுறைக்கு மேல் தொடர்ச்சியாகத் தேர்தலில் போட்டியிட இருந்த தடை அதன் மூலம் நீக்கப்பட்டது.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் 18ஆவது திருத்தத்தை ரத்து செய்யும் வகையில் 19 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. அந்த 19ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதி தன்னிச்சையாக நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது அத்தோடு தேர்தல் ஆணைக்குழு போன்ற சில சுயாதீனக் குழுக்களும் நியமிக்கப்பட்டன.
மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சித்தாந்த ரீதியில் ஜே.ஆர்.ஜெயவர்தனவுக்கும் மஹிந்த ராஜபக்சவுக்கும் ஒற்றுமை இருப்பதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
ஜே.ஆர் என்றால் கறுப்பு ஜூலை எம்.ஆர் என்றால் முள்ளிவாய்க்கால் என்று தான் மக்களுக்கு நினைவு வருகிறது.
தனக்கு நாடாளுமன்றத்தில் இருந்த யானை பலம் கொண்ட அதிகார மமதை காரணமாக ஒரு கட்டத்தில் அன்றையத் தமிழ்த் தலைவர்களை நோக்கி, “போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்” என்று ஜே.ஆர்.சூளுரைத்தது தமிழர்கள் மனதில் ஆறாத வடுவாகவுள்ளது.
நாடாளுமன்றத்தில் ஆறில் ஐந்து பெரும்பான்மை பெற்றதாலேயே அவரால் இப்படி தமிழ்த் தலைவர்களை ஏளனமாக உதாசீனப்படுத்த முடிந்தது. இது அந்தப் பெரும்பான்மையால் வந்த வினை. இப்போது மஹிந்த ராஜபக்ச தமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கோருகிறார்.
அவரது நோக்கம் உடனடியாக 19ஆவது திருத்தத்தை இல்லாமல்ச் செய்வதாகவே உள்ளது. அதன் பின்னர் புதிய அரசியல் யாப்பு எனும் இலக்கைக் கொண்டுள்ளார். ஆனால் அவருடன் இருக்கும் கடும்போக்காளர்கள் 19 மட்டுமல்ல 13ஐயும் ஒழித்துக்கட்ட வேண்டும் எனும் எண்ணத்தில் இருக்கிறார்கள்.
அந்த சமயத்தில் ஜே.ஆர். ”ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர அனைத்து அதிகாரங்களையும் இந்த அரசியல் யாப்பு தந்துள்ளது” என்று கூறியது இச்சமயத்தில் நினைவுக்கு வருகிறது.
ஜே.ஆர்.அவித்த அந்த இடியப்பச் சிக்கலிருந்து 40 வருடங்கள் கடந்தும் இன்னும் மீள முடியாமல் இலங்கைத் தத்தளிக்கின்றது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஒரு ஆட்சி அமைந்தால் அது சிறுபான்மையினருக்கு அச்சத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தும் என்பது ஐயமில்லை. இது இலங்கையின் கடந்தகால வரலாறு.
ஜனநாயகம் என்பது அதிகாரப் பரவலாக்கமே தவிர அதிகார குவிப்பு அல்ல.
மஹிந்த ராஜபக்ச தனது தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்திலும் தமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மக்களிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வாக்குக் கோருகிறார். ஆனாலும் சில தரவுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் அவருக்கு ஆட்சி அமைப்பதற்குத் தேவைப்படும் பெரும்பான்மை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஆனால் அவர் எதிர்ப்பார்க்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பது கடினமாகவே தென்படுகிறது. ஆட்சி அமைத்த பிறகு வழமை போல் மாற்றுக் கட்சியினரை தன் பக்கம் இழுக்க வலை வீசுவார். அதில் யார் சிக்குவார்கள் இல்லை என்பது போகப்போகத் தெரியும்.
அதனடிப்படையில் அடுத்த ஆட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கும், ஆனால் கிடைக்காது.