ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதனை பகிஷ்கரிப்பது என்ற நிலைப்பாட்டை எடுத்தபோது- பகிஷ்கரிப்பு நிலைப்பாட்டைக் கைவிடுமாறு யாழ்ப்பாணத்தில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் தம்மை சந்தித்து கோரிக்கை விடுத்ததாக சட்டத்தரணி மணிவண்ணன் தெரிவித்துள்ளார்
தொலைக்காட்சி விவாத நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இத்தகவலை அவர் தெரிவித்தார்.
தம்முடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளக் கூடிய எவருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தாம் தயாராக இருப்பதாக அப்போது தாம் பதிலளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
திருநெல்வேலியிலுள்ள ‘திண்ணை’ விடுதியில் தன்னையும், முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேசிய அமைப்பாளர் செல்வராஜா கஜேந்திரனையும் சந்தித்த அமெரிக்க தூதரக அதிகாரிகள், ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பை கைவிடுமாறு தம்மை வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.
கடந்த நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் வல்லரசு நாடுகளுக்கு சில தேவைகள் இருந்தன. பகிஷ்கரிப்பது என்ற முடிவை தாம் எடுத்தால் அந்த வல்லரசு நாடுகள் தம்முடன் பேரம் பேசுவதற்கு முன்வரும் என்பதால்தான் தாம் அவ்வாறான ஒரு முடிவை எடுத்ததாக இந்த விவாத அரங்கில் கலந்துகொண்டிருந்த முன்னணியின் மற்றொரு பிரமுகரான சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார்.
அவ்வாறு உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வல்லரசு நாடுகள் முன்வந்ததா? என இதன்போது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த போதே, “என்னையும் கஜேந்திரகுமார், கஜேந்திரன் ஆகியோரையும் திண்ணை விடுதிக்கு அழைத்த அமெரிக்க தூதரக அதிகாரிகள், பகிஷ்கரிப்பை கைவிடுமாறு வலியுறுத்தினார்கள்” என மணிவண்ணன் குறிப்பிட்டார்