ஆங்கிலேயர் காலத்தில் இருந்து மிகவும் படித்த கல்விச்சமூகமாக விளங்கிய தமிழச் சமூகம் இன்று கல்வியில் திட்டமிட்டு பின்தங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டு வருகிறது. தமிழ்ப் புத்திஜீவிகள் புறந்தள்ளப்பட்டும் தரமான கல்வியாளர்களுக்கு முன்னுரிமை வழங்காமலும் தமிழ்மக்கள் ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர் என்பதற்கு திரு. குமாரவடிவேல் குருபரனின் பதவித்துறப்பு ஒரு உதாரணமாகும். பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளரான குருபரனுக்கு நடைபெற்ற அநீதி போன்று முன்பு உபவேந்தர் இரத்தினம் விக்னேஸ்வரனுக்கும் நடந்தது என்பதை தமிழ்மக்கள் மறக்கக்கூடாது.
சட்டத்தரணியும் விரிவுரையாளருமான கலாநிதி குமாரவடிவேல் குருபரன் அவர்கள் 1996ல் நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாகவிருந்த துமிந்த கெப்பிட்டிவலான தலைமையிலான படையினரால் கைது செய்து காணாமலாக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்களின் ஆட்கொணர்வு மனு வழக்கை கையிலெடுத்த நாள் முதல் அவர் மீதான பேரினவாதத்தின் அழுத்தம் அதிகரித்துக்கொண்டே வந்ததுடன் அவரால் உயர் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கை வாதத்திற்கு எடுத்துக்கொள்ளாமல் ஒத்திவைத்துக்கொண்டே இருந்ததன் விளைவே அவரை பதவிவிலகும் அளவிற்குத் தள்ளியுள்ளது. பல்கலைக்கழகத்திற்குள் இராணுவத்தினரின் செல்வாக்கும் அழுத்தமும் பிரயோகிக்கப்படுகின்றதற்கு குருபரனின் பதவிவிலகல் ஒரு உதாரணம் ஆகும். நீதிதேவதையே நீத்துறையில் பணிபுரியும் பணியாளர்களை நிராகரிக்கும் செயல் என்பது இலங்கை போன்ற இராணுவ ஆட்சி நாட்டில் மட்டும் தான் நடக்கும்.
சனநாயக சோசலிசக் குடியரசு என்று சொல்லிக்கொள்ளும் இலங்கையில் சனநாயகம் நிலவுவதற்கான எந்தவிதமான களநிலவரமும் புலப்படவில்லை என்பதே உலகறிந்த உண்மை. இராணுவமயமாக்கத்திற்குள் சென்றுகொண்டு இருக்கும் இலங்iயில் இராணுவத்தின் தலையீடானது பல துறைகளில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தும் நிலைதான் நீடிக்கின்றது.
இன்று மக்களால் சனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்டவர்கள் என்று கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகள் பலர் சட்டவாளர்களாக இருந்தும் கலாநிதி குருபரன் சம்பந்தப்பட்ட விடயத்தில் இன்றுவரை குரல் கொடுக்காமல் மௌனமாக இருப்பதன் சூழ்ச்சுமம் என்ன?
தமிழ்க் குமுகாயத்தில் நல்லபல திறமைமிக்க சட்டவாளர்களை உருவாக்க வேண்டும் என்ற வேணவாவுடன் விரிவுரையாளர் பதவியைத் தெரிந்தெடுத்து யாழ்பல்கலைக்கழகத்தில் மேல்நிலைப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர் கலாநிதி குருபரன் அவர்கள். நடைமுறை அனுபவத்துடன் சட்டக்கல்வியைப் போதித்துவந்த தனக்கு நடைமுறை அனுபவம் இல்லாத ஒரு ஆசிரியராகத் தன்னால் பணிபுரிய முடியாது என்று பதவிவிலகல் கடிதத்தில் குறிப்பிட்டள்ளார். கலாநிதி குருபரனின் பதவிவிலகல் என்பது தமிழ்ச் சட்டத்துறை மாணவர்களுக்கு ஒரு பெரும் பின்னடைவாகும். ஓர் இனத்தின் கல்வியறிவை பாதிக்கும் செயற்பாடும் ஒரு வகையில் இனவழிப்பேயாகும். அதுமட்டுமல்லாது, நடைமுறையில் கலாநிதி குருபரனின் பல்கலைக்கழக பதவிக்கே அடிப்படை உரிமையாக இருக்க வேண்டிய கருத்துச்சுதந்திரமும் பறிக்கப்பட்டுள்ளது.
உலகில் எந்த நாட்டிலும் இல்லாத ஒரு நடைமுறை எப்பேது இலங்கைச் சட்டத்துறையில் வந்தது என்று ஆராய்ந்து பார்த்தபோது தான் தெரியவந்தது, சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் தனது வழக்கைப் பதிவுசெய்த பின்னர் இலங்கை அரசால் இரண்டு மாதங்களுக்கு முன்பு சட்டப் பேராசிரியர் ஒருவர் சட்டவாளராகவும் பேராசிரியராகவும் தொழில்புரியமுடியாது என்ற ஒரு சுற்றறிக்கை ஒன்றைத் தயாரித்து அமூல்படுத்தப்பட்டுள்ளது என்று.
கலாநிதி குருபரனின் பதவிவிலகல் ஆனது கல்வி நிறுவனங்கள் சுயாதீனத் தன்மையை முற்றாக இழந்துள்ளன என்பதையே காட்டுகின்றது. சிங்கள அரச இயந்திரத்திற்கு ஊதுகுழலாக இயங்கும் யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு எதிரகாலங்களில் தமிழ்க் கல்வியாளர்களுக்கு எதிரான இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என்று தமிழர் கல்வியின்பால் அக்கறையுடையவர்களாக் கேட்டுக்கொள்ளுகின்றோம்.
«தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்»
-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-