-நக்கீரன்
கோலாலம்பூர், ஜூலை 22:
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் சார்பில் நிறுவப்பட்டுள்ள ‘டான்ஸ்ரீ டத்தோ கே. ஆர். சோமா மொழி – இலக்கிய அறவாரியத்தின் சார்பில் மலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப் பிரிவிற்கு இன்று முன்று இலட்ச வெள்ளி உதவி கையளிக்கப்பட்டது.
நாட்டின் மூத்த முதல் பல்கலைக்கழகமும் மலேசியாவில் உள்ள இருபது அரச பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கையைக் கொண்டிருக்கும் ஒரேப் பல்கலைக்கழகமுமான மலாயாப் பல்கலைக்கழகத்தின் தமிழாய்வியல் பிரிவின் வளர்ச்சிக்கும் அங்கு தமிழ்க் கல்வியைத் தொடரும் இந்திய மாணவர்களின் உதவிக்கும் பயன்படும் வகையில் இந்த நிதி அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு கூட்டுறவு சங்கம், தன் உறுப்பினர்களின் நலனுடன் தான் சார்ந்துள்ள சமுதாயத்திற்காகவும் மொழி வளர்ச்சிக்காகவும் பாடுபடுகிறது என்றால், அது இந்தக் கூட்டுறவு சங்கமாகத்தான் இருக்கும்.
கொடிய ஆட்கொல்லி கிருமியான கொரோனாவின் தாக்கத்தினால் மனித வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளும் உலக அளவில் பாதித்திருப்பதைப் போல, மலாயாப் பல்கலைக்கழக தமிழ் இருக்கையிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ள இந்த நிலையில்தான், இந்திய மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த நிதியை அளிப்பதாக, இதன் தொடர்பில் நடைபெற்ற செய்தியாளர்க் கூட்டத்தில் பேசிய அறவாரியத் தலைவரும் கூட்டுறவு சங்கத் தலைவருமான டான்ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரம் தெரிவித்தார்.
ஏறக்குறைய நாடு சுதந்திரம் அடைந்த நேரத்தில் தமிழவேள் கோ.சாரங்கபாணியின் அரும்பெரும் முயற்சியின் விளைவாக மலாயாப் பல்கலைக்கழகத்தில் தோற்றுவிக்கப்பட்ட இந்தத் தமிழாய்வுப் பிரிவில் தற்பொழுது தொய்வு நிலை ஏற்பட்டுள்ளதை அறிந்து இந்த உதவியை செய்ய அறவாரியம் முன்வந்ததாகத் தெரிவித்த டான்ஸ்ரீ சோமா, தொடர்ந்து இவர்கள் செயல்பாட்டைக் கருதி அடுத்தக்கட்ட நகர்வு குறித்து ஆலோசிக்கப்படும் என்று மேலும் தெரிவித்தார்.
“இந்த நிதியைக் கொண்டு மொழி-இலக்கிய வளர்ச்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்படும்; கருத்தரங்குகள் நடத்தப்படும்; நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகளை மேற்கொள்வோம்; மலேசிய இந்திய சமுதாயம் தொடர்பாக ஆய்வு(முனைவர் கல்வி) மேற்கொள்ளும் மாணவர்களின் சூழ்நிலை கருதி அவர்களுக்கு உரிய நிதி உதவி நல்கப்படும்” என்றெல்லாம் பேசினார் மலாயாப் பல்கலைக்கழக தமிழாய்வுத் துறையின் தலைவர் இணைப் பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியம்.
கூட்டுறவு சங்க தலைமை இயக்குநர் டத்தோ பா.சகாதேவன், டான்ஸ்ரீ சோமா அறவாரிய அறங்காவலர் டான்ஸ்ரீ க.குமரன், தமிழாய்வுத் துறையின் மேநாள் தலைவர் பேராசிரியர் சு.குமரன், கூட்டுறவு சங்க பொறுப்பாளர்கள், பல்கலைக்கழகத்தின் சார்பில் உயர்நிலைப் பொறுப்பாளர், ஊடகத் துறையினர் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி, கூட்டுறவு சங்க கட்டடமான துன் சம்பந்தன் மாளிகை வளாகத்தில் நடைபெற்றது.