மலேசிய மடல்:
-நக்கீரன்
கோலாலம்பூர், ஜூலை 23:
ஐக்கிய இராச்சியத்தைப் போல மலேசியாவிலும் முடியாட்சி இயைந்த குடியாட்சி நடைபெற்றாலும் ஜனநாயக மாண்பிற்கு எவ்வித பங்கமுமில்லை. நீதிமன்ற நடைமுறையும் சட்டத்தின் ஆட்சியும் சீராக இடம்பெற்று மக்களின் உரிமைவாழ்விற்கு துணைபுரிகின்றன. இருந்தபோதும், மலேசியாவில் மறைமுக அடிமைத்தனமும் மானுட வர்த்தகமும் இடம்பெற்று வருகின்றன என்று மனித உரிமை ஆர்வலரும் சட்ட வல்லுநருமான கார்த்திகேசன் சண்முகம் தெரிவித்துள்ளார்.
மலேசிய அரசத் தமிழ் வானொலியான ‘ஆர்டிஎம்’ மின்னல் பண்பலை வானொலியில் அன்றாடம் காலை ஆறரை மணி முதல் பத்து மணிவரை இடம்பெறும் காலைக்கதிர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது உடல் உறுப்பு வணிகம், தொழிலாளர் அடிமைத்தனம், பணி சுரண்டல், பாலியல் தொழில் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு மனிதக் கடத்தல் இடம்பெற்று வருவதாக கார்த்திகேசன் குறிப்பிட்டார்.
வெளிநாடுகளில் இருந்து மலேசியாவிற்கு கடத்துதல், மலேசியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு கடத்துதல், உள்நாட்டிலேயே ஓர் இடத்திலிருந்து வேறோர் இடத்திற்கு கடத்துதல் என மூன்று வகையில் மனிதக் கடத்தல் இடம்பெறுகின்றன என்றார் அவர்.
மக்களிடையே நிலவும் சமுதாய ஏற்றத்தாழ்வு, குறிப்பாக பொருளாதார ஏற்றத்தாழ்வு, வேலை வாய்ப்பின்மை, அறியாமை போன்ற கூறுகளை மூலதனமாகக் கொண்டு எளிமையாக மனிதக் கடத்தல் இடம்பெறுகிறது. இவ்வாறு, மனிதக் கடத்தலில் ஈடுபடுவோருக்கு பேரளவில் பொருளீட்டும் அப்பட்டமான சுயநலம்தான் தலையாய இலக்கு.
இவ்வாறு மனிதக் கடத்தலுக்கு ஆளாகும் அப்பாவி மக்கள், அதில் இருந்து மீள்வது பெரும்பாலும் குதிரைக் கொம்புதான். குறிப்பாக, கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்படுவோர் காலப்போக்கில் தங்களை தக அமைத்துக் கொள்வதும் உண்டு. இருந்தபோதும், காலம் தரும் படிப்பினை, எதிர்காலம் குறித்த விழிப்புணர்வு, தன்னம்பிக்கை, குடும்ப வறுமை, தன்னூக்கம், மான உணர்வு ஆகியத் தன்மையைக் கொண்டுள்ளவர்-கள் மலைகளுக்கு இடையேயான மடுவைப் போன்ற அத்தகைய பேரிடரில் இருந்து மீண்டு வருவதும் உண்டு.
மலேசியாவைப் பொறுத்தவரை, வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான தேவை தொடர்ந்து நீடித்து வருகிறது. தொழில் துறை, கட்டுமானம், வர்த்தகத் துறைகளைத் தவிர வீட்டுப் பணிப்பெண்களுக்கான தேவையும் மிகுதியாக உள்ளது. இதற்கு இரு அம்சங்கள் முக்கியமாக அடிப்படையாக இருக்கின்றன. பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்வதும் கூட்டுக் குடும்ப அமைப்பு சிதைந்து விட்டதும்தான் அந்த இரு முகாந்திரமான காரணங்கள்.
இன்றைய கல்வி-அறிவியல் யுகத்தில் அநேகமாக அனைத்துப் பெண்களும் கல்வி அறிவு பெறுவதால், பொருளாதார சூழலைக் கருதி எல்லாப் பெண்களும் பணிக்குச் செல்கின்றனர். இப்படி வேலை தேடும் படலத்தாலும் நகரிய வாழ்க்கை முறையாலும் கூட்டுக் குடும்ப அமைப்பு இயல்பாக சிதறும் நிலைக்கு ஆளாகி பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன.
ஆட்கடத்தலில் ஈடுபடுவோர் இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்ற-னர். வெளிநாடுகளில் வாழும் வறிய மற்றும் நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் வேலைதேடுவோரும் உள்ளூர் முகவர்களால் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு மிகுதியான சம்பளம், நல்ல வாழ்க்கை என்றெல்லாம் ஆசை வார்த்தைகள் மூலம் வாக்குறுதி அளிக்கப்பட்டு ஆர்வம் ஊட்டப்படுகின்றனர்.
இதனால், எதிர்கால நம்பிக்கை வெளிச்சத்தை நினைத்துப் பார்க்கும் அத்தகையோர், கைவசம் இருக்கும் சொற்ப ஆபரணங்களையும் மற்ற உடைமைகளையும் விற்று உள்ளூர் முகவர்களிடம் கொடுத்து விடுகின்றனர். அந்த முகவர்களோ, அலுங்காமல் குலுங்காமல் அவர்களை மலேசியாவிற்கு அழைத்து வந்து உள்ளூர் முகவர்களிடம் ஒப்படைக்கின்றனர். இதை வேறு வகையில் சொல்வதென்றால் விற்று விடுகின்றனர்.
அப்படி பெண்களையும் தொழிலாளர்கலையும் வாங்கும் உள்நாட்டு முகவர்கள், மறைமுகமாக விலைக்கு வாங்கப்பட்டவர்களின் தகுதி, தோற்றம், வயது, கல்வி போன்றவற்றின் அடிப்படையில் தொழிற்சாலை, வீடு, உடம்பு பிடித்துவிடும் நிலையம் என்றெல்லாம் வேலைக்கு அனுப்பி விடுகின்றனர்; அதாவது விற்று விடுகின்றனர்.
அவ்வாறு செல்லும் தொழிலாளர்கள் நீண்டகாலம் ஊதியம் இன்றி உணவை மட்டும் பெற்றுக் கொண்டு உழைக்க நேரிடுகிறது. உள்நாட்டு முகவர், மலேசிய முகவர் ஆகியத் தரப்பினரின் தொடர்பு அற்றுவிட்ட நிலையில், மூன்றாம் தரப்பினரிடம் சிக்கிக் கொள்ளும் இப்படிப்பட்டவர்கள் ஏறக்குறைய அடிமைத்தனத்திற்கும் உழைப்பு சுரண்டலுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.
வெளிநாட்டினரை பணிக்கு அமர்த்துவோர், அதற்காக தாங்கள் உள்நாட்டு முகவரிடம் செலுத்திய தொகைக்கு உழைத்து ஈடுகட்டும்படி சம்பந்தப்பட்ட தொழிலாளர்களை வலியுறுத்துகின்றனர். மொத்த்தில், ஜனநாயாக முறையில் மக்களாட்சி மலர்ந்து மணம் பரப்பும் இன்றைய சுழலிலும் ஆண்டான்-அடிமைத் தனம் இடம்பெறுவதற்கு மனித வர்த்தகத்தில் ஈடுபடுவோர் காரணமாக உள்ளனர்.
கைவசம் இருந்த பொன்னையும் பொருளையும் இழந்து, ஆள்மாறி இடம்மாறி கடைசியில் சம்பந்தமே இல்லாத ஓரிடத்தில் அடிமைப்படும் அவலம் அன்றாடம் என்றில்லாமல் ஒவ்வொரு வேளையும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இதற்கான கட்டமைப்பும் சங்கிலித் தொடர் நடவடிக்கையும் ஓர் உணவகத்தில் உணவருந்தும் வேளையிலோ அல்லது ஒரு குவளை தேநீர் பருகும் நேரத்தில்கூட வடிவமைக்கப்படுகிறது.
இதேக் கட்டமைப்பில் மலேசியாவில் இருந்து வேறு நாடுகளுக்கு மனிதர்களைக் மறைமுகமாகக் கடத்துவது, அல்லது விற்பது அல்லது அடிமைத்தனத்திற்கு ஆட்படுத்தும் நடவடிக்கையும் தொடர்கிறது.
இதில், மருத்துவ துறை சார்ந்து உடல் உறுப்புகளுக்காகவும் இத்தகைய நடவடிக்கை தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. மொத்தத்தில், சுரண்டல், பாலியல் தொழில், அடிமைத்தனம் ஆகியவற்றின் மூலம் இலாப நோக்கத்தை முதன்மையாக்க கொண்ட சுயநல மனிதர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வும் எச்சரிக்கை உணர்வும் மிகமிகத் தேவை என்று வலியுறுத்திய சமூகவாதியுமான கார்த்திகேசன், மலேசியாவைப் பொறுத்தவரை இப்படிப்பட்ட மனிதக் கடத்தல், மறைமுக அடிமைத்தனம், சுரண்டல் போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் நடைமுறையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக, குழந்தைக் கடத்தலுக்கு எதிரான சட்டம் முழு வீச்சில் அமலில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
மனித உரிமை தொடர்பான சட்டத்தின் 12-ஆவது பிரிவு குழந்தைக் கடத்தலுக்கு எதிரானது; 13-ஆவது பிரிவு குழந்தைகள் மற்றும் பெரியவர்களைக் கடத்துதல் மற்றும் அவர்களின் மனித உரிமை மீறலுக்கு எதிரானது; 14-ஆவது பிரிவு, குழந்தை கடத்தலில் ஈடுபடுவோருக்கு 20 ஆண்டுகள் வரையிலான சிறைவாசத்துடன் தண்டத்தையும் அளிக்கக்கூடியது; அதைப்போல மனிதக் கடத்தல்வழி இலாபம் அடைந்தவர்களுக்கு எதிரான தண்டனையை 15-ஆவது பிரிவு வழங்குகிறது என்றெல்லாம் நேரடி ஒலிபரப்பின்வழி விளக்கம் அளித்த வழக்கறிஞரும் வழக்குரைஞருமான கார்த்திகேசன் சண்முகத்தை, நிகழ்ச்சியை வழிநடத்திய மின்னல் பண்பலை வானொலி அறிவிப்பாளர்களான தெய்வீகன் தாமரைச்செல்வன், சுகன்யா சதாசிவம் இருவரும் பாராட்டினர்.
உண்மையில், கொடிய ஆட்கொல்லி கிருமியான கோவிட்-19இன் தாக்கத்தில் இருந்து நாடு மெல்ல மீட்சி காண முனைந்துள்ள இந்த வேளையில், காலம் கருதி, சமூக அக்கறையுடன் பொருத்தமான ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து அதன்வழி சமுதாயத்திற்குத் தேவையான விழிப்புணர்வை பொறுப்பான வகையில் வழங்கிய மின்னல் பண்பலை வானொலியின் அறிவிப்பாளர்கள் சமுதாயத்தின் பாராட்டிற்கு உரியவர்கள்.
எல்லாவற்றையும்விட, இதற்கெல்லாம் ஆதாரமாக இருந்து வழிகாட்டிவரும் அரசத் தமிழ் வானொலிப் பிரிவின் நிருவாகி திருமதி சுமதியும் பாராட்டிற்கு உரியவர்.
நக்கீரன் – Nakkeeran 013-244 36 24