எமது இனம் மற்றும் மொழி ஆகியன எமது அடையாளமாக இருந்து எமக்கு பாதுகாப்பையும் பெருமையையும் தரும் என்று எண்ணியிருந்த போதெல்லாம் இதயத்தை துளைத்து போன்ற பல கொடுமைகள் இதுவரை அரங்கேறியுள்ளன. அவையெல்லாமே, எமது அடையாளங்கள் என்று எண்ணியிருந்த இந்த இரண்டின் அடிப்படையிலேயே நடத்தப் பெற்றன என்பதை பார்க்கின்றபோது நாம் அனுபவித்த அந்த கொடுமைகளிலிருந்து எவ்வாறு வெளியேறுவது என்ற சிந்தனையை ஆயுதம் ஏந்திப் போராடிய தியாக உள்ளங்களில் மேலும் தீவிரமாக வலுப்பெற்றது.
ஆமாம், கொடிதான ‘கறுப்பு யூலை’ நாளை சாதாரணமாக நினைவு கூர்ந்து விட்டு ஓய்ந்து விட முடியாது. இந்த வருடத்தின் நினைவு நாள் எம்மவர்களின் சிந்தனைகளில் சில மாற்றங்களையாவது கொண்டுவர வேண்டும் என்பதே இவ்வாரக் கதிரோட்டத்தின் அடித்தளமாக தோன்றுகின்றது.
யூலைப் படுகொலை தொடக்கம் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் வரையும் எத்தனை இலட்சம் உயிர்களை நாம் இழந்திருப்போம். அவர்களில் போராளிகள், பொதுமக்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், சமூக அக்கறை கொண்டவர்கள், அன்னையர்கள், தந்தையர்கள், ஆசிரியப் பெருந்தகைகள், கல்விமான்கள் விவசாயிகள் என்று பல பிரிவினர் நாம் முன்னர் சொலலியது போன்று எமது இனம் மற்றும் மொழி ஆகிய எமது அடையாளங்களின் அடிப்படையிலேயே இன்று எங்கள் மத்தியில் இல்லாமல் அழிக்கப்பட்டுள்ளார்கள்.
கறுப்பு யூலை படுகொலைகளுக்கு உள்ளாகி தங்கள் உயிர்களை அர்ப்பணித்தவர்கள் எவ்வளவு கொடிய முறையில் சித்திரவதைகளை அனுபவித்தார்கள் என்று நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். அன்று தொடக்கம் போராடியும் வெற்றியீட்டியும் போராளிகளையும் பொதுமக்களையும் இழந்தும் கடந்த வந்த பாதையில் இறுதியில் முள்ளிவாய்க்கால் என்னும் முற்றத்தில் எண்ணில் அடங்காத வதைகளுக்கு உள்ளாகி வாடி நின்றோம்.
அந்த கொடிதான நாட்களும் கடந்து மேலும் 11 வருடங்கள் வேதனைகளோடு கடந்து சென்றன
எமாற்றங்கள்,துரோகங்கள் என எமக்கு முன்பாக இடம்பெற்றாலும் அனைத்தையும் மௌனமாகவே கடந்து வந்துள்ளோம்.
இந்த வருடத்தில் யூலைப் படுகொலைகளின் நினைவு நாள் இன்று எங்கள் முன்பாக வந்து கண்ணீர் சொரிகின்றது.
நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ளவேண்டும். நாம் செய்ய வேண்டியது 37 வருடங்களுக்கு முன்பாக கொரூரமான முறையில் கொல்லப்பட்டவர்களின் முகங்கள் எம் முன்னே கொண்டு வந்து, அவர்களுக்காக தீபங்களை மட்டும் ஏற்றிவிட்டுப் போவதா?
இல்லை. நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் பல உள்ளன என்பதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். நாங்கள் ஆற்ற வேண்டிய கடமைகள், பணிகள் ஆகியன பல முடங்கிக் கிடக்கின்றன. குறிப்பாக புலம் பெயர் நாடுகளில் மௌனம் ஊசலாடுகின்றது.
ஆனாலும், இன்று யூலை 24ம் திகதி வெள்ளிக்கிழமை. நாம் இந்த கதிரோட்டத்தை பதிவுசெய்து கொண்டிருக்கும் கனடா என்னும் பல்லினங்களை மதிக்கும் ஒரு மண்ணில் எம்மில் பலர் விழித்திருக்கின்றோம். அதற்கு மேலாக இந்த தேசத்தில் இரண்டு முக்கியமான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன என்பதையும் அனைவரோடும் பகிர்ந்துகொள்வதில் உற்சாகமடைகின்றோம்.
எமது தாயக மண்ணின் முன்னாள் மாகாண முதல்வர், எமது இனத்திற்காக தனது முதிர்ந்த வயதிலும் முழங்கால் நோ எடுக்க, மக்களைச் சந்தித்து தேர்தல் வாக்குகள் ‘பிழையானவர்களுக்கு’ சென்றுவிடக் கூடாது என்பதற்காக போட்டியிடுகின்ற நீதியரசர் விக்கினேஸ்வரன் ஐயா அவர்களோடு கனடா வாழ் ஆர்வலர்கள் இணையவழியாக உரையாடுகின்ற சந்தர்ப்பம் அவருக்கும் எமக்கும் கிட்டியுள்ளது. வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் தலைமையும் பிரதிநிதித்துவமும் அவரைப் போன்றவர்களின் கைகளுக்கு கிட்ட வேண்டும் என்ற அவாக் கொண்டவர்கள் அவரோடு தங்கள் மணித்துளிகளை செலவிடவுள்ளார்கள்.இது பயனுள்ள நிகழ்வாகும்.
மற்றுமொரு இணையவழி கலந்துரையாடல் எமது கனடிய மண்ணிலிருந்து தமிழ் உலகை இணைக்கப்போகின்றது. கடந்த வாரம் தமது முதலாவது இணையவழி கலந்துரையாடலை நல்லதோர் தலைப்பில் ஆரம்பித்து இன்று மாலை இரண்டாவது தடவையாக இணையப் போகின்றனர் ஆர்வமும் அக்கறையும் கொண்ட அன்பர்கள். இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ள அமைப்பு ‘கனடியத் தமிழர்களின் குரல்’ (Voice of CanadianTamils) என்பதாகும்.
எமது கடந்த வாரக் கதிரோட்டத்தில் இந்த அமைப்பு நடத்திய முதலாவது இணையவழி கலந்துரையாடல் பற்றி மிகுந்த அக்கறையோடு குறிப்பிட்ட நாம், இந்த வாரமும் இன்று மாலை அந்த ‘கனடியத் தமிழர்களின் குரல்’ அமைப்பு நடத்துகின்ற கலந்துரையாடல் பற்றி குறிப்பிட வேண்டிய கட்டாயம் உள்ளது.
கட்டாயத்திலும் பார்க்க கறுப்பு யூலை நினைவு நிகழ்வோடு தொடர்பான விடயங்களைப் பற்றி இன்று மாலை அவர்கள் உரையாடப் போகின்றார்கள்.
இன்று மாலை ‘கனடியத் தமிழர்களின் குரல்’ நடததுகின்ற இணையவழி கலந்துரையாடல் தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட சில காத்திரமான விடயங்கள் எமது பார்வைக்குக் கிட்டியிருந்தன.
கறுப்பு யூலை போன்ற போன்ற நாம் நினைவு கொள்ள விடயங்களுக்கு இணையாக நாம் எத்தனையோ விடயங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளதை நாம் வலுப்படுத்தவே விரும்புகின்றோம்
கீழே காணப்படும் விடயங்கள் அந்த அமைப்பினால் மிகவும்; தெளிவோடும் நிதானத்தோடும் எமது மக்களுக்காக கீழ்வரும் விடயங்களை அந்த அமைப்பு முன்வைத்துள்ளது
முள்ளிவாய்க்காலில் ஆயுத மௌனிப்பு அறிவிக்கப்படடநாளிலிருந்து இன்றுவரை கிட்டத்தட்ட 11 வருடங்களாக, பல புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் அரசியல்வாதிகள், அரசியல் அமைப்புகள், தனிநபர்கள், குழுக்கள் மற்றும் சில சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் ஆகியவை, ஸ்ரீலங்கா பேரினவாத பௌத்தஅரசுகளினால் அரங்கேற்றப்பட்ட தமிழினப்படுகொலை. போர்க்குற்றம் ,காணாமல் ஆக்கப்பட்டோர், தமிழினத்திற்கு எதிரான மனித உரிமைமீறல்கள், தமிழர்களின் பூர்வீக நிலங்களில் அத்துமீறிய சிங்களகுடியேற்றங்கள் மற்றும் இப்போது புதிதாக ஸ்ரீலங்கா பேரினவாதபௌத்தர்களால் வெளிப்படையாப் பேசப்பட்டு வரும் பண்டைத் தமிழர்களின் மதம் மற்றும் இனம் சார்ந்த வரலாற்றுத் தளங்கள் மற்றும் சான்றுகள் அழிப்பு போன்றவற்றிற்க்கு சர்வதேச சமூகத்திடம் நீதி கேட்டு போராடி வருகின்றோம். ஆனால் ஈழத்தமிழர்களாகிய எமக்கு எந்தவொரு நீதியும் கிடைக்கவில்லை என்பது நாம் யாவரும் அறிந்த உண்மையாகும்.
இன்று ஈழத்தமிழர்களாகிய நாம் உரிமை, உடமை மற்றும் சுதந்திரம் ஆகிய அடிப்படையான அம்சங்களை இழந்து எமது இனத்திடம் எஞ்சியிருந்த தமிழர் அடையாளம் மற்றும் உணர்வுகளையும் அழித்து ஸ்ரீலங்காவிலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழும் ஈழத்தமிழர்களின் அடையாளத்துக்கும், இனஉணர்விற்கும் முடிவுக்கட்டும் செயல்களை ஸ்ரீலங்காபௌத்த இனவாத அரசும் பௌத்த இனவாத அமைப்புகளும் வெற்றிகரமாகவும், தந்திரமாகவும் நிறைவேற்றி வருவதைக் கண்கூடாகப் பார்க்கின்றோம்.
ஆகையினால் இனிமேலும் நாம் தாமதப்படுத்தாமல், நிதானமான முறையில் பின்வரும் விடயங்களில் தீவிர கவனத்தைச் செலுத்த வேண்டும்.
அவையாவன:-
1. இனப்படுகொலைக்கான நீதி
2. காணாமல் ஆக்கப்பட்டோர்க்கான நீதி
3. ஸ்ரீலங்கா அரசின், மனித உரிமை மீறல்களுக்கான நீதி
4. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நீதி
5. வடக்கு, கிழக்கில்அத்துமீறியசிங்களகுடியேற்றத்திற்கான நீதி
6. திட்டமிட்டவகையில் தமிழர் வரலாற்றுத் தடையங்கள் அழிப்பிற்கு எதிரான நீதி
சுருக்கமாக சொன்னால் எமது இனத்தின் நலன் சார்ந்த விடயங்களில் ஒருமித்து எம்மினமக்களுக்கான தெளிவூட்டல் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் புனிதமான செயலில் செயல்பட அனைவரையும் நிபந்தனையின்றி இணையுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்” என்று அந்த ‘கனடியத் தமிழர்களின் குரல்’ அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளதை எமது கனடா உதயன் வரவேற்று அதனை வலுப்படுத்தும் எண்ணத்தோடு கரங்கோர்த்து நிற்கின்றது.
எனவே, இந்த யூலைப் படுகொலை நினைவு நாளில் எமக்கு முன்பாக உள்ள மேற்சொல்லப்பட்ட ஏனைய விடயங்களையும் மிகுந்த அக்கறையோடு கவனத்தில் எடுத்து செயற்படுத்த வேண்டும் என்றும் அனைவரையும் வேண்டுகின்றோம்.