– முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
எந்த காரணமும் இல்லாமல் வட மாகாணத்தில் மட்டும் இராணுவத்தினரை களமிறக்கியிருப்பது எதற்காக என்று அறிந்து கொள்வது முக்கியம் என சுவிஸ் தூதுவரிடம், வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சுவிஸ் தூதுவர் கன்ஸ்பீட்டர் மொக் மற்றும் அரசியல் விடயங்களுக்குப் பொறுப்பான சிடோர்னியா கபிரியேல் ஆகியோர் விக்னேஸ்வரனை இன்று காலை சந்தித்துப் பேசியபோதே இதனை அவர் தெரிவித்தார்.
தற்போதைய களநிலை பற்றி விக்னேஸ்வரன் கூறுகையில், கிராம சேவகர்களுடன் மூன்று இராணுவ வீரர்களையும் சேர்த்து பணிபுரிய வேண்டியிருப்பது வருங்காலத்தில் குடியியல் விடயங்களையும் இராணுவத்தினரே செய்வார்களோ என்று யோசிக்க வைத்துள்ளது.
ஏ – 9 வீதியிலே சுமார் 20 வீதித் தடைகள் இராணுவத்தினரால் போடப்பட்டிருப்பது எதற்காக என்று விளங்கவில்லை. கொரோனாவைக் காட்டி இவ்வாறான செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபடுவது வரும் தேர்தல் காலத்தில் மக்களைப் பயப்படுத்தி தேர்தலுக்குப் போகாமல் வைப்பதற்கோ என்ற சந்தேகத்தை உண்டு பண்ணுகின்றது.
பின்னர் மக்கள் போகாதது கொரோனாவிற்குப் பயந்தே என்று அவர்கள் கூறலாம். அத்துடன் பாதுகாப்பை ஒட்டி தேர்தல் காலத்திலே இராணுவத்தினரை வெளிக் கொண்டு வருவது ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு செயல்.
இம் முறை 5 ஆம் திகதி தேர்தல் நடத்தி 6ம் திகதியே வாக்கெண்ணுதல் நடைபெறவிருக்கின்றது. இரு நாட்களுக்கும் இடையில் இரவிலே பெட்டிகளுக்கு என்ன நடக்குமோ என்று ஒரு சந்தேக நிலை எழுந்துள்ளது. இவற்றிற்கு இராணுவத்தினரைப் பாதுகாப்புக்கு அழைத்தால் கட்டாயம் ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெறும் என்று எண்ண இடமுண்டு.
ஆகவே எந்த ஒரு காரணமும் இல்லாமல் வடக்கு மாகாணத்தில் மட்டும் இராணுவத்தினரை இறக்கியிருப்பது எதற்காக என்று அறிந்து கொள்வது முக்கியம் என்று தெரிவித்தார்.