சிவா பரமேஸ்வரன் — முன்னாள் மூத்த செய்தியாளர் பிபிசி
இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 225. இவர்களில் 29 பேர் நாடு தழுவிய ரீதியில் அரசியல் கட்சிகள் அல்லது குழுக்களுக்கு கிடைக்கும் வாக்குகளின் அடிப்படையில் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படுகின்றனர்.
சமூகத்தில் நன்மதிப்பைப் பெற்றவர்கள், பல்துறை வல்லுநர்களை நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவந்து அவர்கள் அறிவின் பயனைத் தேசிய நலனுக்கான பெற்றுக் கொள்வதே இதன் நோக்கமாகும்.
நாட்டு நலனுக்காக ஒரு உத்தம நோக்கத்துடன் தேசியப் பட்டியல் கொண்டுவரப்பட்டாலும் காலவோட்டத்தில் அரசியல்மயப்படுத்தப்பட்ட து. சிலர் இந்தக் குறிக்கோளின் அடிப்படையில் நியமிக்கப்பட்டாலும் அவர்களும் அரசியல்வாதிகளாக மாறும் சூழலே காணப்படுகிறது.
தேர்தலுக்கு முன்னர் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் வேளை கட்சிகளின் செயலாளர் அல்லது குழுவின் தலைவர் தேசியப் பட்டியலுக்கான வேட்பாளர் பட்டியலைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். பட்டியலில் 29 பேர்தான் முன்மொழியப்பட வேண்டும் என்பது அவசியம் இல்லை. அதற்கு குறைவான வேட்பாளர்களையும் முன்மொழிய முடியும்.
2020க்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி, ஐ.தே.க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்ற கட்சிகள் 29 பேரை முன்மொழிந்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு -12, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி -23, ஈ.பி.டி.பி -06 எனத் க்ஷ் தமிழ்க் கட்சிகள் பெயர்களை முன்மொழிந்துள்ளன. அநேகமான உதிரிக் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் இதில் ஆர்வம் காட்டுவதில்ல.
தேசியப் பட்டியல் தெரிவு முறை:
2015 தேர்தல்:
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் | 1,50,44,490 |
அளிக்கப்பட்ட வாக்குகள் | 1,16,84,098 |
நிராகரிக்கப்பட்டவை | 5,17,123 |
செல்லுபடியான வாக்குகள் | 1,11,66,975 |
செல்லுபடியான மொத்த வாக்குகளின் அடிப்படையில் தேசியப் பட்டியல் அங்கத்துவம் ஒன்றுக்குத் தேவையான தகுதிகாண் வாக்கு: 1,11,66,975 /29 = 3,85,068 வாக்குகள். அவ்வகையில் நான்கு கட்சிகளே தகுதி பெறுகின்றன.
முதற்சுற்று:
கட்சி | வாக்குகள் | ஆசனம் | மிகுதி |
ஐ.தே.க | 50,98,916 / 3,85,068 | 13 | 93,030 |
ஐ,ம.சு.மு | 47,32,664/ 3,85,068 | 12 | 1,11,846 |
த.தே.கூ | 5,15.963 / 3,85,068 | 01 | 1,30,895 |
ஜே.வி.பி | 5,43.944/ 3,85,068 | 01 | 1,58,876 |
முதலாவது சுற்றில் இவ்வாறு 27 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டன.
இரண்டாம் சுற்று:
கட்சி | மிகுதி | ஆசனம் | இறுதி முடிவு |
ஐ.தே.க | 93,030 | 00 | 13 |
ஐ.ம.சு.மு | 1,11,846 | 00 | 12 |
த.தே.கூ | 1,30,895 | 01 | 01+01=02 |
ஜே.வி.பி | 1,58,876 | 01 | 01+01=02 |
எஞ்சிய இரு ஆசனங்களும் முதல் சுற்றின் முடிவில் மிகுதி வாக்குகளில் கூடுதல் வாக்குகளைக் கொண்டுள்ள ஜே.வி.பி மற்றும் த.தே.கூ ஆகிய கட்சிகளுக்கு கிடைக்கின்றன.
கடந்த காலங்களில் தேசியப் பட்டியல் மூலமே பல்துறை வல்லுநர்கள் லக்ஸ்மன் கதிர்காமர், பேராசிரியர். ஜி.எல்.பீரிஸ், டி.எம்.சுவாமிநாதன், ஜயம்பதி விக்ரமரட்ண, திலக் மாரப்பன, கே.என்.சொக்சி, அலவி மௌலானா உட்பட பல தொழில்சார் வல்லுநர்களும், அரசியல் அனுபவசாலிகளும் நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பைப் பெற்றனர்.
அ.அமிர்தலிங்கம், சௌமியமூர்த்தி தொண்டமான், முன்னாள் பிரதமர்களான சிறிமாவோ பண்டாரநாயக்க, ரட்ணசிறீ விக்ரமநாயக்க போன்ற மூத்த அரசியல்வாதிகளும் தேசியப் பட்டியல் ஊடாகவும் நாடாளுமன்றம் சென்றனர்.
இதே தேசியப் பட்டியல் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), திரைப்பட நடிகை மாலினி பொன்சேகா, மேர்வின் சில்வா போன்றவர்களும் நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பை வழங்கியது.
அதேவேளை பணபலம் படைத்தவர்கள் தேசியப் பட்டியல் என்ற பின்வாசல் மூலம் நாடாளுமன்றம் சென்ற சம்பவங்களும் உண்டு.
தேசியப் பட்டியலைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட முறையில் தொழில்சார் வல்லுநர்கள் கட்சிகள் மூலம் நியமிக்கப்பட்டாலும் காலவோட்ட த்தில் அவர்கள் பலர் தமது தனித்தன்மையை இழந்து கட்சியின் ஒரு அங்கமாகவே செயல்படுகின்ற தன்மையும் இலங்கை வரலாற்றில் உண்டு.
1989 தேர்தலில் யாழ் மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிட்ட ஈரோஸுக்கு ஒரு ஆசனம் கிடைத்தது பஷீர் சேகு தாவூத் நியமிக்கப்பட்டார். குழுவொன்றுக்கு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்தது அதுவே முதலும் கடைசியும்.
தேசியப் பட்டியல் அறிமுகமான அத்தேர்தலில் நாடாளுமன்றம் சென்றவர்களில் த.வி.கூ தலைவர் அ.அமிர்தலிங்கம், சுதந்திரக் கட்சி சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி வ.ராசரத்தினம் , இ.தொ.கா தலைவர் சௌ.தொண்டமான், ஏ. எச் எம். அஸ்வர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
தேசியக் கட்சிகளைப் பொறுத்தவரை தமது பட்டியலில் தேர்தலுக்கு பிறகு பெரியளவில் மாற்றங்களைச் செய்வதில்லை. ஆனால் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளில் தேர்தலுக்குப் பிறகு அடுத்த தேர்தல் வரை ஆட்களை மாற்றும் பச்சோந்தித்தனம் ஒரு தொடர்கதை.
குறிப்பாகக் கடந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் பரிந்துரையில் ஐ.தே.க பட்டியலில் ரவூப் ஹக்கிமின் சகோதரர் ஏ.ஆர். ஹபீஸ், உறவினர் எச்.எம்.சல்மான் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். பதவியேற்று சில மாதங்களில் திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களின் அழுத்தம் காரணமாக ஹபீஸ் பதவி விலக நேரிட்டது. அம்மாவட்டத்தில் தேர்தலில் தோல்வி கண்ட எம்.எஸ் தௌபீக் நியமனம் பெற்றார். ஓரிரு வருடங்களின் பின்னர் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் அழுத்தங்கள் காரணமாக ஏ.எல். நசீருக்கு ஆசனம் கிடைக்கும் வகையில் சல்மான் பதவி விலகினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழமைபோல் பேராசிரியர் க.சிற்றம்பலம், ஹென்றி மகேந்திரன், சேவியர் குலநாயகம் உட்பட பட்டியலில் பெயரிடப்பட்டிருந்தவர்களைப் புறக்கணித்துவிட்டு வன்னி மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தேர்தலில் போட்டியிட்டுத் தெரிவாகாத சாந்தி சிறீஸ்கந்தராஜா மற்றும் கே.துரைரட்ணசிங்கம் ஆகியோருக்கு தேசியப் பட்டியல் நியமனம் வழங்கியது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனக்குக் கிடைத்த ஒரு ஆசனத்தை இருவரை திருப்திப்படுத்தும் வகையில் சுழற்சிமுறையில் பகிர்ந்தளித்தது.
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி மஹிந்த ராஜபக்ச அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த கருணா அம்மானுக்கு அவ்வேளை பிரதியுபகாரமாக வசந்த சமரசிங்கவை பதவி விலகச் செய்து தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியைக் கைமாறாக வழங்கியது.
2004 தேர்தலில் த.தே.கூ சார்பில் மட்டக்களப்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ஜோசப் பரராஜசிங்கம் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் சென்றார். அதே ஆண்டு நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது தேவாலயத்துக்குள் ஆயுத்தாரிகளினால் நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அந்த வெற்றிடத்துக்கு லண்டனில் வசித்த சந்திரநேரு சந்திரகாந்தன் விடுதலைப் புலிகளின் பின்புலத்தில் நியமனம் பெற்றார்.
அரசியல் கட்சிகளின் இதுபோன்ற செயல்பாடுகள் தேசியப் பட்டியலின் உன்னத நோக்கத்தைக் குலைத்துவிட்டன. இது முடிந்த கதையல்ல முடிவில்லாத தொடர்கதை.
தேசியப் பட்டியலும் கட்சிகளுக்குள் ஏற்பட்ட குழப்பங்களும்:
முஸ்லிம் காங்கிரஸில் கூடுதல் காலங்கள் இந்தப் பதவியை அனுபவித்த ஹசன் அலி, பஷீர் சேகு தாவூத் ஆகியோர் 2015லும் எதிர்ப்பார்த்தனர். ஆனால் ஏமாற்றமடைந்த நிலையில் முரண்பட்டு கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினர்.
ரிஷாத் கட்சியின் பொதுச் செயலர் வை.எல்.எஸ். ஹமீத் 2015ல் தேசியப் பட்டியலில் முன்மொழியப்பட்டிருந்தாலும் அவருக்கு நியமனம் கிடைக்கவில்லை. இதனால் கட்சியுடன் முரண்பட்டு நீதிமன்றம் சென்று கட்சியைச் சிலகாலம் முடக்கினார்.
ஐ.தே.கட்சியின் மற்றொரு பங்காளிக் கட்சியான தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு ஒரு ஆசனம் கிடைக்கும் வாய்ப்பு இருந்ததும் அதை அவர்கள் ஏற்கவில்லை. மூன்று கட்சிகளைக் கொண்ட அந்தக் கூட்டணி தங்களுக்குள் முரண்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க கையாண்ட உத்தி இது. இருப்பினும் இரண்டாவது கேபினட் அமைச்சு ஒன்றைப் பெற்று தனது அரசியல் இராஜதந்திரத்தை வெளிப்படுத்தியது.
கடந்த தேர்தலில் த.தே.கூக்கு இரண்டு ஆசனங்கள் கிடைத்தன. அவை இரண்டுமே தேர்தலில் தோல்வி கண்ட தமிழரசுக் கட்சியினருக்கு வழங்கப்பட்டது. அப்போது பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் தோல்வியடைந்திருந்தார். தனக்கொரு ஆசனம் கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தாலும் ஏமாற்றமே மிஞ்சியது. இப்போது அவரது கட்சி கூட்டமைப்பில் இல்லை.
தேர்தலுக்கு முன்னர் கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் பட்டியலைக் கேட்கிறது. அதேவேளைத் தேர்தலுக்குப் பின்னரும் ஒரு பட்டியலைக் கோருகிறது. இந்த முரண்பட்ட நிலையே பித்தலாட்டங்களுக்கு வழி வகுக்கிறது.
2015 தேர்தலுக்கு முன்னர் ஐ.ம.சு.முன்னணி மஹிந்த ராஜபக்சவின் தலைமையிலிருந்த போது ஜி.எல்.பிரீஸ், திஸ்ஸ விதாரன, கருணா அம்மான் போன்றவர்கள் அடங்கிய பட்டியல் முன்மொழியப்பட்டிருந்தது. தேர்தலுக்கு பின் ஐ.ம.சு.மு மைத்திரிபால சிறிசேன வசமானது. அவர்களுக்கு 12 ஆசனங்கள் கிடைத்தன. மஹிந்த பட்டியலை தலைகீழாக்கிய மைத்திரி தனது விருப்பப்படி எஸ்.பி.திஸநாயக்க, மஹிந்த சமரசிங்க, டிலான் பெரெரா, ஹிஸ்புல்லாஹ், அங்கஜன் ராமநாதன் உட்பட தேர்தலில் தோல்வியடைந்த 8 பேரை அதில் உள்வாங்கியிருந்தார்.
நேரடித் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் கட்சிக்குள் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி தலைமைக்கு அழுத்தம் கொடுத்து நாடாளுமன்றம் செல்கிறார்கள். இரண்டு பட்டியல்களை அளிப்பது முறையற்ற செயல்பாடுகளுக்கு வழிவகுக்கிறது.
2020 தேசியப் பட்டியல்:
ஐக்கிய தேசியக் கட்சி: இவர்களுக்கு 4-5 ஆசனங்கள் கிடைக்கக் கூடும். வழக்கமான பங்காளிக் கட்சிகளின் தொல்லை இம்முறை இல்லை. முன்னாள் உறுப்பினர்களான ஜோன் அமரதுங்க, ஆசு மாரசிங்க, திலக் மாரப்பன உட்பட 29 பேர் கொண்ட பட்டியலில் ஒரு தமிழருக்கும் இரு முஸ்லிம்களுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.
எனினும் 2010, 2015ல் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குத் தெரிவான மூத்த உறுப்பினர் டி.எம். சுவாமிநாதனுக்கு இம்முறை வாய்ப்பளிக்கப்படவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தி: சிறுபான்மை கட்சிகள் உட்பட ஏழு கட்சிகளைக் கொண்ட கூட்டணி. இந்தக் கட்சிக்கு 7-8 ஆசனங்கள் கிடைக்கலாம். இக்கட்சியின் பொதுச் செயலர் ரஞ்சித் மத்தும பண்டார, இம்தியாஸ் பாக்கிர் மாகார், திஸ்ஸ அத்தநாயக்க, முன்னாள் உறுப்பினர்களான எரான் விக்ரமரட்ண, மாய திஸநாயக்க, ஹரீன் பெர்ணாண்டோ ஆகியோரின் பெயர்களும் பட்டியலில் உள்ளன.
ஜாதிக ஹெல உறுமய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, தேசிய ஐக்கிய முன்னணி , ஜனநாயாக தேசிய முன்னணி ஆகிய பங்காளிக் கட்சிகளும் கூட்டணியில் உள்ளன.
தேர்தலுக்குப் பிறகு முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு ஆசனத்தையாவது கட்டாயம் கொடுத்தாக வேண்டிய சூழல் நிலவுகிறது.
இக்கட்சி சிறுபான்மை கட்சிகளின் பலத்திலேயே தங்கியுள்ளதால் இதை சஜித் எப்படிக் கையாளப் போகிறார்? அதுமட்டுமின்றி தனிப்பட்ட கட்சிகளும் தமக்குக் கிடைக்கக் கூடிய ஒரு இடத்தையும் யாருக்கு அளிக்கப் போகின்றன என்பதில் பெரும் உட்குழப்பம் ஏற்படுத்தும்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன: தாமரை மொட்டுக் கட்சிக்கு 10-12 ஆசனங்கள் கிடைக்கலாம். கட்சியின் பொதுச் செயலர் சாகர காரியவாசம், அவைத் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், சட்டத்தரணி அலி சப்ரி, பேராசிரியர் திஸ்ஸவிதான, பெ.ராஜதுரை (இ.தொ.கா), சபையின் முன்னாள் கலாநிதி சுரேன் ராகவன் உட்பட 29 பேர் பட்டியலில் உள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் சுதந்திரக் கட்சியும் அங்கம் வகிக்கிறது. மேலும் சில உதிரிக் கட்சிகளும் இதில் உள்ளன. ஆனால் இந்தச் சிறிய கட்சிகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தயவில் தங்கியிருப்பதால் அவர்களால் பெரிய அளவில் இந்த விடயத்தில் பேரம் பேச முடியாது. ராஜபக்சகளின் முடிவே இறுதி முடிவு.
மக்கள் சக்தி இயக்கம் (ஜே.வி.பி): கடந்த தேர்தலில் இரண்டு இடங்களைப் பெற்ற ஜே.வி.பி மேலும் ஒரு ஆசனத்தை இலக்கு வைத்துள்ளது. பொதுவாக அவர்கள் முன்மொழிந்த பட்டியலில் கைவைப்பதில்லை.
தேசியப் பட்டியல் இழுபறிக்கு உள்ளாகும் நிலையில் தேர்தலுக்கு முன்னர் ஒரே பட்டியல் தயாரிக்கப்பட்டு மாற்ற முடியாத வகையில் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட வேண்டும். அதற்கு ரீதியான பாதுகாப்பு தேவை. அதற்கு தேர்தல் சட்டம் சீர்திருத்தப்பட வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே தேசியப் பட்டியலின் நோக்கம் நிறைவேறும்.
தேர்தலுக்கு முன்னர் கொடுக்கப்பட்ட பட்டியலுக்குப் பதிலாக தேர்தலுக்குப் பின் வேறொரு பட்டியலை அளிப்பதோ அல்லது முதல் பட்டியலில் மாற்றம் செய்வதோ ஜனநாயக சீரழிவுக்கே வழிவகுத்துள்ளது என்பது இலங்கையின் வரலாறு.