– யாழ்ப்பாணத்தில் இருந்து நிலந்தான்
எனது நண்பர் ஒருவர் பகிடியாகக் கேட்டார் “இந்த முறை சுமந்திரனைத் தோற்கடிக்க வேண்டும் என்று புலம்பெயர்ந்ததமிழ்த்தரப்புக்கள்அதிகரித்த அளவில் பாடுபடுவதாக தெரிகிறது. இப்படித்தான் கடந்த நாடாளுமன்றதேர்தலின் போதும் புலம்பெயர்ந்த தமிழ்த்தரப்புகள்சுமந்திரனை தோற்கடிக்க வேண்டும் என்று கடுமையாக உழைத்தன. ஆனால் விளைவு எதிர்பார்த்ததற்கு மாறாக அமைந்தது. இந்தமுறை சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும்எதிராகப் புலம்பெயர்ந்ததரப்பிலிருந்து முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளைத்தொகுத்துப் பார்த்தால் போன முறை மாதிரி இந்த முறையும் சுமந்திரன் வென்று விடுவாரோ என்றுயோசிக்க வேண்டியிருக்கிறது”என்று.
சுமந்திரன் என்ற ஒரு மனிதனுக்கு எதிராக மட்டுமல்ல அதற்கும் அப்பால் தாயகஅரசியலின் மீது புலம்பெயர்ந்ததமிழ்ச்சமூகத்தின்ஈடுபாடுஎனப்படுவது கடந்த பல தசாப்தங்களாகநிர்ணயகரமானஒன்றாகக் காணப்படுகிறது.2009க்குபின்னரான தமிழ் மிதவாதஅரசியலின் மீது புலம்பெயர்ந்ததமிழ்ச் சமூகம் அதிகரித்த அளவில் செல்வாக்கைப் பிரயோகிக்க முற்பட்டு வருகிறது. இதன் விளைவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் இபொழுதுதாயக அரசியலில் புலம்பெயர்தமிழ்ச்சமூகத்தின்பங்கீடுபாடு என்பது ஒரு தவிர்க்கப்பட முடியாத ஒரு பகுதியாகவே மாறிவிட்டது.
கடந்த பதினோரு ஆண்டுகளாக புலம்பெயர்ந்ததமிழ்ச் சமூகம்தாயகத்தின்அரசியலின் மீதுஇரண்டுதளங்களில்செல்வாக்குச் செலுத்தி வருகிறது. முதலாவது ஜெனிவாவைமையமாக கொண்ட ஓர் அரசியற் களம். இனப்படுகொலைக்கு எதிரானபரிகார நீதியை தேடுவதற்கான அரசியலில் அதிகம் பங்களிப்பைச்செய்ததும் அதிகம் துடிப்போடுசெயல்படுவதும் தமிழ் டயஸ்போறாதான். இது விடயத்தில் கடந்த பதினொரு ஆண்டுகளில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவிலான நண்பர்களை தமிழ் டயஸ்போறாஅனைத்துலக அளவில் சம்பாதித்திருக்கிறது. எனினும் இது விடயத்தில் ஒருங்கிணைந்த செயற்பாடு இல்லை என்ற ஒரு விமர்சனம் உண்டு.
இரண்டாவது தளம் தாயகம். கடந்த 11 ஆண்டுகளாக தாயகஅரசியலின் மீது புலம்பெயர்ந்ததமிழ்ச் சமூகம் பல்வேறுபரப்புக்களில் ஈடுபாடு காட்டி வருகிறது.தமிழ்க் கட்சிகளை நிதி ரீதியாக பலப்படுத்துவது; தமிழ்த்தேசியக் கட்சிகளை ஐக்கியப்படுத்துவது ; பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்களுக்குநிதிரீதியாகவும்தார்மீகரீதியாகவும் உதவுவது; பல்கலைக்கழகமாணவர்களின்போராட்டங்களுக்கு நிதி ரீதியாக உதவுவது;தமிழ்க் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்களில்நேரடியாகவும்மறைமுகமாகவும்பங்கெடுப்பது; தமிழ்ச்செயற்பாட்டாளர்களுக்கு நிதி ரீதியாகவும்தார்மீகரீதியாகவும் உதவி செய்வது; தமிழ் மக்கள் மத்தியில் செயற்படும் மக்கள் இயக்கங்களுக்கு உதவி செய்வது…….என்று கடந்த பதினொரு ஆண்டுகளாக தாயகத்தில்முன்னெடுக்கப்படும் அனேகமாக எல்லா அரசியல் நடவடிக்கைகளிலும் புலம் பெயர்ந்ததமிழர்களின்பங்களிப்பு எதோ ஒரு விகிதமாவதுஇருக்கும்.
இவ்வாறான ஒரு பின்னணியில்வரும்ஐந்தாம்திகதி நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் புலம்பெயர்ந்ததமிழ்த்தரப்புக்கள்தாயகத்தில் உள்ள கட்சிகள்;வாக்காளர்கள்; கருத்துருவாக்கிகள் மீது எதோ ஒரு விதத்தில் செல்வாக்கைப் பிரயோகிக்க முயல்கின்றன. குறிப்பாக தமிழ்அரசியலில் அதிகம் சர்ச்சைக்குரியவராக மாறியிருக்கும் சுமந்திரனைதோற்கடிப்பதற்கென்றே ஒரு பெரிய அணி புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவரைத் தோற்கடிப்பதற்கான வியூகங்களை கட்சிகளுக்கு வகுத்துக் கொடுப்பது. அது தொடர்பான பிரச்சாரங்களுக்கு நிதி உதவி வழங்குவது. போன்ற இன்னோரன்ன விடயங்களில் சுமந்திரன் என்ற ஒரு மனிதனுக்கு எதிராக டயஸ்போறா அமைப்புகளும் தனிநபர்களும் தனித்தனியாகவும் கூட்டாகவும்செயற்படக் காணலாம். அதேசமயம் சுமந்திரனுக்கு ஆதரவானஓரணியும் வேகமாக இயங்குகிறது. எனினும் ஒப்பீட்டளவில்சுமந்திரனுக்கு எதிரான அணி அதிகம் துடிப்பாக இயங்குகிறது. இந்த அணி கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய இரண்டு கட்சிகள் மீதும் ஏதோ ஒருவிதத்தில்நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தனது செல்வாக்கை பிரயோகித்து வருகிறது.
தமிழ் புலம்பெயர்ந்தசமூகத்தின்மேற்கண்டவாறு முயற்சிகள் வெற்றி பெறுமா இல்லையா என்பது அடுத்த கிழமை தெரியவரும். இதில் கிடைக்கக்கூடிய வெற்றிகளை அல்லது தோல்விகளைகுதிரைப்பந்தயத்தில் பணத்தை முதலீடு செய்து கிடைக்கும் வெற்றி தோல்விகளோடு நாம் ஒப்பிடத் தேவையில்லை. மாறாக மேற்கண்டவாறான புலம் பெயர்ந்ததமிழ்ச்சமூகத்தின் ஈடுபாட்டை மேலும் எப்படி ஆக்க பூர்வமானதாகவும் நாண்டகால நோக்கிலானதாகவும் திட்டமிடுவது என்று சிந்திக்க வேண்டும்.
இம்முறை தேர்தலில் கனடாவுக்குப்புலம்பெயர்ந்து சென்ற குகதாசன் திருமலை மாவட்டத்தில் கூட்டமைப்பின் இரண்டாம் நிலைப்பிரதானியாகபோட்டியிடுகிறார்.அவரை அவ்வாறு பரசூட் மூலம் இறக்கியது குறித்து தமிழரசுக் கட்சியின் உள்ளூர் மட்டங்களில் கடுமையான அதிருப்தி நிலவுகிறது. ஆனால் குகதாசன் தேர்தலில் போட்டியிடுவதுஎனப்படுவது ஒரு செய்தியைக் கூறுகிறது.புலம்பெயர்தமிழ்ச் சமூகம் தாயக அரசியலில் நேரடியாக இறங்கும் ஒரு நிலைமையை இது காட்டுகிறது. இது தவிர்க்க முடியாததும் கூட. ஏனெனில் தமிழ்ச்சனத்தொகையில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதி புலம் பெயர்ந்துவிட்டதாக ஒரு கணிப்பு உண்டு. அல்லது நான்கு பேர்களுக்கு ஒருவர் என்றவிகிதத்தில் தமிழர்கள் புலம்பெயர்ந்துவிட்டதாக ஒரு கணிப்பு உண்டு.அதாவது தமிழ் வாக்காளர்களில்நாலில் ஒரு பகுதியளவுபுலம் பெயர்ந்துவிட்டது. கடந்த ஆண்டின் இறுதியில் நடந்த ஜனாதிபதித்தேர்தலுக்காக ராஜபக்சக்கள்புலம்பெயர்ந்து வாழும் ஒரு தொகுதி சிங்களமக்களைவாக்களிக்கத்தூண்டியதை இங்கு சுட்டிக்காட்டலாம்.
தமிழர்களில்ஒருதலைமுறையைச் சேர்ந்த துணிச்சலான அர்ப்பணிப்பு மிக்க போராட்ட அனுபவம் உள்ள குறிப்பிடத்தக்க அளவு தொகையினர் புலம் பெயர்ந்து வாழ்கிறார்கள். இவர்களுக்கு ஆயுதப்போராட்டத்தின்அனுபவமும் உண்டு.புலம்பெயர்ந்து வாழும் நாட்டின் ஜனநாயக அனுபவமும் உண்டு.இந்த இரண்டு கொழுத்த அனுபவங்களினதும்தொகுப்பாகக் காணப்படும் அவர்கள் தாயக அரசியலில் ஈடுபடும் பொழுது அது புதிய குருதிச் சுற்றோட்டங்களை ஏற்படுத்தும்.யூதர்களின் அரசியலில் அதுதான் நடந்தது. எனவே புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயக அரசியலில் இறங்குவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று.அவர்கள்பரசூட் மூலம் இறக்கப்படாதவரைஅதை வரவேற்க வேண்டும்.இது முதலாவது.
இரண்டாவது, ஒவ்வொரு தேர்தலின் போதும் புலம்பெயர்ந்த தமிழர்கள் தனிப்பட்டரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் கட்சிகளுக்கு காசை வழங்குகிறார்கள். இது ஏறக்குறைய பந்தயக்குதிரைக்குகாசைக் கட்டுவதுபோலிருக்கக் கூடாது. இந்த பொறிமுறை தவறு. மாறாக தமிழ் அரசியலில் நீண்டகால நோக்கில் எவ்வாறு அறிவையும் காசையும் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் முதலீடு செய்யலாம் என்று புலம்பெயர்தமிழ்ச் சமூகம் சிந்திக்கலாம்.
பெரும்பாலான தமிழ் கட்சிகள் தேர்தல்களின்போது தமது வேட்பாளர்களைமேலிருந்து கீழ்நோக்கி இறக்குகின்றன. இவ்வாறு பரசூட் மூலம் இறக்கப்படும் பிரமுகவேட்பாளர்களை தரையிறக்குவது தவறான ஒரு பொறிமுறை. பதிலாக கீழிலிருந்து மேல் நோக்கித் தலைமைத்துவம் கட்டியெழுப்பப்பட வேண்டும். அதாவது உள்ளூர்த் தலைவர்களை முதலில் உற்பத்தி செய்ய வேண்டும். அவ்வாறு உள்ளூர்த் தலைவர்களை உற்பத்தி செய்யத்தக்க விதத்தில் தமிழ் அரசியற்சூழலை பண்படுத்தி வளப்படுத்த வேண்டும். ஆங்கிலத்தில் சொன்னால்-cultivate-பயிரிடத்தக்க விதத்தில் நிலத்தைப்பண்படுத்துவது ; வளப்படுத்துவது.
நீண்டகால நோக்கில் தமிழ் வாக்காளர்களைவிமர்சனபூர்வமாகசிந்திக்கும் ஒரு மக்கள் தொகுதியாகபண்படுத்த வேண்டும். இது ஒரு தேர்தல் பிரச்சாரக்காலத்துக்குள் செய்து முடிக்கக் கூடிய காரியம் அல்ல.அதற்கு நீண்ட காலம் எடுக்கும். ஒரு பயிரை நட்டு வளர்ப்பதைப்போன்றது. ஒரு தோப்பைஉருவாக்குவதைப்போன்றது. எனவே அவ்வாறு நீண்ட கால நோக்கில் தமிழ் அரசியலில் நிர்ணயகரமானமாற்றங்களைஏற்படுத்தத் தக்க நீண்டகாலத்திட்டங்களை வகுத்து அதில் புலம்பெயர் தமிழ் சமூகம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செயலில் இறங்கலாம். இதுதான் பொருத்தமான ஒரு பொறிமுறையாக இருக்கும்.
ஒவ்வொரு தேர்தலின் போதும் பந்தயக்குதிரைகளில்காசைக்கட்டுவது போல நம்பிக்கைகளையும்எதிர்பார்ப்புக்களையும்முதலீடு செய்வதற்கு பதிலாக நீண்டகால நோக்கில் தமிழ் அரசியலைப்பண்படுத்துவதை நோக்கி புலம் பெயர்ந்ததமிழ்ச் சமூகம் சிந்திக்க வேண்டும்.அதற்குத் தேவையான கொழுத்த அனுபவமும் போதிய வளங்களும் அங்கு உண்டு.தாயகத்தில்செயற்படும் கட்சிகளும்சிவில்அமைப்புகளும் அதற்கு வேண்டிய நீண்டகால நோக்கிலான வழி வரைபடங்களை உருவாக்க வேண்டும்.ஈழத் தமிழர்கள் தமது அடுத்த கட்ட அரசியலைஉலகத்தைத்திரும்பிப் பார்க்க வைக்கும் விதத்தில் திட்டமிடுவது என்பது இதுதான். தாயகம்-தமிழகம்-தமிழ் டயஸ்போறா ஆகிய மூன்றையும்தாயகத்திலிருந்துஒன்றிணைக்கும் ஒரு வழி வரைபடம்.