நக்கீரன்
கோலாலம்புர், ஜூலை30:
சுதந்திர காலத்து மலாயாவில் இருந்து இன்றைய நவீன மலேசியாவரை பெண்களின் வாழ்வில் சன்னமான வளர்ச்சி தொடர்ந்து ஏற்பட்டு வந்த நிலையில் புத்தாயிரத்தாம் ஆண்டு தொடங்கியபின், வேகமான மறுமலர்ச்சியை மலேசியப் பெண்கள் எட்டி வருகின்றனர்.
கல்வி, சமூக, பொருளாதார அளவில் தன்னிறைவு என்ற கட்டத்தை எட்டாவிட்டாலும் அந்நிலையை நோக்கி முன்னேறுகின்றனர். குறிப்பாக, நிருவாக மட்டத்திலும் முடிவெடுக்கும் தலைமைப் பொறுப்பிலும் பெண்கள் செயலாற்றுவதை தேசிய அளவில் பரவலாகக் காணப்படுகிறது.
நாட்டில் உள்ள பல்துறைசார் நிருவனங்களின் மூத்த தலைமை நிருவாகப் பதவிகளில் மலேசியப் பெண்கள் 33 விழுக்காட்டு அளவிற்கு பொறுப்பேற்று திறம்பட பணியாற்றுகின்றனர். இதை, அண்மைய பன்னாட்டு வர்த்தக அறிக்கைகூட சுட்டிக்காட்டியதுடன் மலேசியப் பெண்களுக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தது.
பல இன மக்களாக விளங்கும் மலேசிய கூட்டு சமுதாயத்தில் பாதி அங்கமான இன்றைய பெண்களின் பொதுவான நிலை இவ்வாறு இருந்தாலும் சில உயரிய பதவிகளில் அமர்ந்து பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கின்றனர் ஏராளமான பெண்கள்.
இந்த வரிசையில் அண்மைய புதுமையை நிகழ்த்தியிருப்பவர், மலேசிய நாடாளுமன்ற மக்களவையின் துணை சபாநாயகராகப் பொறுப்பேற்றுள்ள டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான். மலேசிய நாடாளுமன்ற வரலற்றில் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ள முதன் பெண் இவர்தான்.
இதேப்போன்ற இன்னொரு புதுமையை நிகழ்த்தியவர், அண்மைக் காலம்வரை துணைப் பிரதமராக பொறுப்பு வகித்த டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிசா. அடுத்தப் பிரதமராக அடையாளம் காணப்பட்டு ஏறக்குறைய கால் நூற்றாண்டாகக் காத்திருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் துணைவியாரும் மருத்துவருமான வான் அஸிசா, மக்கள் நீதிக் கட்சியை கடந்த 25 ஆண்டுகளாக வழிநடத்தியவரும் ஆவார்.
மலேசிய வரலாற்றில் ஆளுமையும் விவேகமும் நிறைந்தவராகவும் பன்னாட்டு வாணிக அமைச்சராகவும் விளங்கிய டான்ஸ்ரீ ரஃபிடா அஸிஸ், ஒற்றுமைத் துறை அமைச்சராக பொறுப்பேற்றிருந்த டான்ஸ்ரீ டாக்டர் சித்தி சகாரா போன்றோரும் மகளிர் குலத் திலகமாகத் திகழ்ந்தவர்கள்.
பொதுவாக, அரசியல் தலைவர்களாகவும் அமைச்சர்களாகவும் பெண்கள் விளங்குவது உலகெங்கும் காணப்படுவதுதான். ஆனால், மலேசியாவின் தேசிய வங்கியான பேங்க் நெகாராவின் ஆளுநராக நீண்ட காலம் பொறுப்பு வகித்த டான்ஸ்ரீ ஸெத்தி அக்தார் அஸிஸ் என்னும் பெருமாட்டி மலேசியப் பெண்களில் குறிப்பிடத்தக்கவர்; அவரைப்போலவே பேங்க் நெகாராவின் இன்றைய ஆளுநராக இருப்பவரும் ஒரு பெண்தான்; அவர், டத்தோ நோர் ஷம்சியா பிந்தி முகமட் யூனுஸ்.
மலேசியாவின் தலைமை நிதிபதியாக இப்போது இருப்பவர் தெங்கு மைமுன் துவான் மாட். இவர், நாட்டின் பத்தாவது தலைமை நீதிபதி ஆவார். மலேசிய நீதித் துறை வரலாற்றில், கூட்டரசுப் பிரதேச நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இந்தியப் பெண் டத்தோ நளினி பத்மநாதன். மலேசிய அரசாங்கத்தின் இனொரு முக்கிய அமைப்பான ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு அண்மைக் காலம் வரை தலைமைப் பொறுப்பேற்றிருந்தவர் வழக்கறிஞர் லத்திஃபா கோயா.
மலேசிய இந்திய சமுதாயத்தில் குறிப்பிடத்தக்க இன்னொரு பெண் அம்பிகா சினிவாசன். இவர், மலேசிய வழக்கறிஞர் மன்றத் தலைவராக இருந்தவர். அத்துடன் அரசியல்-சமூக தளத்தில் இவர் துடிப்புடன் செயல்பட்டதற்காக அமெரிக்காவின் அந்நாளைய உள்துறை அமைச்சர் கிளாரி கிளிண்டனிடம் இருந்து பாராட்டும் விருதும் பெற்றவர் அம்பிகா.
மலேசிய ஊடக வட்டத்திலும் ஏராளமான பெண்கள் தொடர்ந்து ஈடுபாடு காட்டி வருகின்றனர். தகவல் அமைச்சின் ஒலிபரப்புத் துறை இயக்குநர், நாளேடுகளின் தலைமை ஆசிரியர், செய்தியாளர், பருவ இதழை நடத்துவோர் என்றெல்லாம் ஆண்களுக்கு இணையாகவும் சளைக்காமலும் பெண்கள் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.
மலேசியாவின் முதல் நிலை நாளேடான மலேசிய நண்பனின் தலைமை ஆசிரியராக திருமதி இராஜேஸ்வரி கணேசன் செயல்பட்டது குறிப்பிடத்-தக்கது. அவரைப்போல டத்தின் கோகிலவாணி இராஜன் ‘நாளை நமதே’ என்னும் பருவ இதழை நடத்தி வருகிறார். 1980-களில் தமிழோசை இதழில் அச்சுக் கோப்பாளராக பத்திரிகை உலகில் நுழைந்த இவர், தொடர்ந்து வானம்பாடி, சூரியன், மயில் உள்ளிட்ட பருவ இதழ்களிலும் மலேசிய நண்பன், மக்கள் ஓசை உள்ளிட்ட தின இதழ்களிலும் பணியாற்றி இப்போது தனியாக நாளை நமதே பத்திரிகையை நடத்தி வருகிறார்.
மலேசியத் தமிழ்ப் பெண்களைப் பொருத்தவரை இருவர் மிகவும் குறிப்பிடத் தக்கவர்கள். இவ்விருவரில் ஒருவர் பினாங்கு மாநிலத்தில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி கஸ்துரி பட்டு; மற்றவர் பகாங் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் ‘தமிழச்சி’ காமாட்சி துரைசாமி. இருவருமே, சினர்கள் ஆதிக்கம் நிறைந்த ஜனநாயக செயல் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
இவ்வாறாக, ஏராளமான பெண்கள் பல்துறை சார்ந்து முக்கியப் பொறுப்புகளை ஏற்று சமுதாய விதியில் நடைபயிலுகின்றனர்.
மலேசிய தகவல் துறையின்கீழ் மின்னல் பண்பலை தமிழ் வானொலியின் நிருவாகியும் ஒரு பெண்; திருமதி வே.சுமதி. அதைப்போல தமிழ் வானொலி செய்திப் பிரிவின் பொறுப்பாளர் இராஜேஸ்வரி இராஜமாணிக்கம். தவிர, அரச தொலைக்காட்சியான ‘ஆர்டிஎம் டிவி2’இன் பொறுப்பாளரும் திருமதி ஷாலினி ஆவார்.
திருமதி முனைவர் கவிதா முத்தி ஒரு தனித்து வாழும் தாயான திருமதி மஞ்சுளா தெட்சணாமூர்த்தியால் முத்தைப்போல உருவாக்கப்பட்டவர். படித்துக் கொண்டே பணி புரிந்து இன்று ஓர் அரசுசார் நிறுவனத்தின் தலைமை வியூக அதிகாரியாக சைபர்ஜெயாவில் பணிபுரிகிறார்; மலேசிய இணைய பாதுகாப்பு முனையத்தின் தூதராகவும் செயல்படுகிறார் கவிதா.
எல்லாவற்றுக்கும் மேலாக, மலேசியாவில் உள்ள 530 தமிழ்ப் பள்ளிகளில் பாதிக்கும் மேலானவற்றில் தலைமை ஆசிரியர்களாக இருப்பவர்கள் பெண்கள். நாட்டின் மையப் பகுதியில் உள்ள சிலாங்கூர் மாநிலத்தில் செயல்படும் 96 தமிழ்ப் பள்ளிகளில் 54 பள்ளிகளில் பெண்களே தலைமை ஆசிரியர்களாக விளங்குவதுடன் தமிழ் மாணவர்களை செப்பம் செய்கின்றனர். இப்படிப்பட்ட ஏறக்குறைய 400 தலைமை ஆசிரியர்களில் கிள்ளான் புக்கிட் ராஜா தோட்ட தமிழ்ப் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி மல்லிகா பழனியாண்டி, காப்பார் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி சரசுவதி நாராயணனும் அடங்குவர்.
இதுபோன்றவர்களைத் தவிர, சிறு-குறு தொழில் முனைவர்களாக வணிகம் புரிதல், உணவகத்தை நடத்துதல், அரச உயர் அதிகாரிகள், கலைத் துறை ஈடுபாடு என ஏராளமான ம்லேசியப் பெண்கள் பொதுவாழ்வில் முன்னிலை வகிக்கின்றனர் என்பது பெருமைக்குரியது.
நக்கீரன் – Nakkeeran 013-244 36 24